Sunday, November 25, 2012

விமான நிலையத்தில் சோனி ஐ.சி.எப்.7600 ஜி.அர்

வணக்கம், இன்றைய நாள்  பல திரில் அனுபவங்களுடன்  இலங்கையில் சென்றது. நமது சீன வானொலி பயணத்தில் முதல் நாள். நான் ஏற்கனவே கூறியபடி இன்றைய தினம் ஒரு முக்கிய இடத்திற்கு திரு.விக்டர் குனதிலகே  அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தர்கள். அனால்  அந்த இடத்திற்கு செல்ல முதலில் நான் விமான நிலையத்தினைவிட்டு  வெளியே வர வேண்டும். அப்படி வரும் போது நடந்த முக்கிய நிகழ்வினை உங்களோடு பகிர்வது  அவசியம். காரணம் இது போன்ற அனுபவம் வருங்காலத்தில் உங்களுக்கு ஏற்படாமல் தவிர்க்க அது வசதியாக இருக்கும்.


எங்கு சென்றாலும் முதலில் வானொலிப் பேட்டிகள் எங்காவது விற்கப்படுகிறதா என்று ஆராய்வது எனது வழக்கம். அதே போன்று இந்த முறை நான் கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்த பிரத்தியோக சோனி கடைக்கு சென்றேன். சோனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே அங்கு விற்கப்பட்டது. அங்கு இருந்த பணியாளரிடம் சோனி ஐ.சி.எப்.7600 ஜி.அர்  மாடல் எண்  கொண்ட வானொலி பெட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் வாங்க விரும்பினால் சிறப்பான விலையில் தருகிறேன் என்றார். ஆனால், அதற்கான பணத்தினை நீங்கள் அமெரிக்க டாலரில் மட்டுமே தர வேண்டும் என்றார்.

சரி என்று கூறி  வானொலிப் பெட்டியைக் காட்டுமாறு கூறினேன். அதன் பின் அவர் காட்டிய வானொலி பெட்டி நான் கேட்ட மாடல் அல்ல. அவர் காட்டியது ஐ.சி.எப்.30 எனும் மாடல் எண்  கொண்ட டிஜிட்டல் வானொலிப் பெட்டி. விலை 109 அமெரிக்க டாலர் எனக் கூறினார்.   இந்திய ரூபாயில் 5600 வருகிறது. ஆனால்  நான் கேட்ட வசதிகள் அதில் இல்லாததால் வாங்கவில்லை. இன்னும் ஒரு சில பழைய மாடல் கொண்ட ஒரு சில வானொலிப் பெட்டிகளை காட்டி வாங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அவற்றின் விலை தான் சற்று அதிகாமாக இருந்தது.

விமான நிலையத்தினை விட்டு வெளியே  வரும் போது ஏற்பட்ட அனுபவத்தினை இன்னும் கூறவில்லையே. நான் இலங்கைக்காக  தனியான விசா எடுக்கவில்லை. காரணம் எனக்கு இலங்கை வழியாக விமானம் என்பதால் அவர்களே விமான நிலையத்தில் டிரான்சிட் விசா வழங்குவார்கள். அனால் என்னிடம் முதலில் அவர்கள் கேட்டது. நீங்கள் விமான நிலையத்தினை விட்டு வெளியே செல்வதானால் மட்டுமே உங்களுக்கு டிரான்சிட் விசாவினை வழங்குவோம். அதுவும் உங்களுக்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் ரசீதை காண்பித்தால் மட்டுமே அதுவும் சாத்தியம் என்று கூறிவிட்டனர்.

இது என்ன புது குழப்பம் என்று எண்ணி நொந்து போனேன். காரணம் விக்டர் அவர்களை காலை 9.30க்கு விமான நிலையத்தின் வெளியே உள்ள தபால் அலுவலகம் முன் சந்திப்பதாக கூறியிருந்தேன். பொதுவாக இந்த மாதிரியான டிரான்சிட் விசாவின் பொது அவர்களே நமக்கான ஹோட்டலை  பதிவு செய்துவிடுவதுதான் வழக்கம். அனால் அன்று அப்படி அவர்கள் செய்யவில்லை. இதனால் அவர்கள் என்னை வெளியில் விடவேண்டும் என்றால் நான் ஹோட்டல் பதிவு செய்த விபரத்தினைக் கூற வேண்டும். என் நிலைமையை யோசித்து பாருங்கள். 

வெளியில் செல்ல முடியாவிட்டால், விக்டர் அவர்கள் எனக்காக செய்த ஏற்பாடுகள் அனைத்தும் வீண்! ஒரே குழப்பத்தில் இருந்த எனக்கு மற்றும் ஒரு பிரச்சனை தயாராக காத்து இருந்தது. அது என்ன? வெளியில் சென்றேனா! விக்டரை சந்தித்தேனா? அடுத்த பதிவில் அதனைக் கூறுகிறேன். காரணம் விமானம் பீஜிங் செல்ல வந்துவிட்டதாக அறிவிப்பு ஒலித்துக்கொண்டு இருக்கிறது.




No comments: