ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
தபால் இலாகாவின் 'தந்தி' (டெலிகிராம்) சேவையை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதியில் இருந்து நிறுத்திவிட முடிவு செய்து இருப்பதாக பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் அறிவித்து உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நல்லது, கெட்டது என எல்லாவித தகவல் பரிமாற்றத்துக்கும் “தந்தி" (டெலிகிராம்) சேவைதான் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
160 ஆண்டுகளைக்கடந்த இந்த சேவை, கடந்த 1850-ம் ஆண்டுவரையில் தபால்-தந்தி துறை என்று இருந்தது. பின்னர் தனித்தனியே பிரிக்கப்பட்டது. செல்போன், இ.மெயில், ஸ்மார்ட் போன் என்று காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், தந்தி மூலம் தகவல் அனுப்புவதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டனர்.
எந்தவொரு தகவலையும், செல்போனில் எஸ்.எம்.எஸ்.மூலமாக தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். இதனால், டெலிபோன் துறைக்கு வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது. எனவே, கடந்த சில ஆண்டுகளாக, தந்தி அலுவலகங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.
சமீபகாலமாக பெயரளவுக்கு ஒரு சில தபால் நிலையங்களில் மட்டுமே தந்தி சேவை உள்ளது. இதற்கிடையே, தந்தி சேவையை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடலாம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, பி.எஸ்.என்.எல்.தந்தி சேவை பிரிவின் மூத்த பொது மேலாளர் சமீம் அக்தர் அனைத்து தந்தி அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
“வரும் ஜூலை 15-ந் தேதியில் இருந்து தந்தி சேவையை முற்றிலுமாக நிறுத்திவிடவேண்டும். பொதுமக்கள் தரும் தந்தியை பெறவோ, டெலிவரி செய்யவோ வேண்டாம்" என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தந்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில், தபால் துறையிடம் ஆலோசனை நடத்தியபின்னரே, தந்தி சேவையை ஜூலை மாதம் 15-ந் தேதியில் இருந்து முற்றிலுமாக நிறுத்திவிடுவது என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.
பி.எஸ்.என்.எல்.எடுத்துள்ள இந்த முடிவுக்கு தேசிய டெலிகிராப் ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.பட்டாபிராமன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். இதேபோல் பல்வேறு சமூக சேவை அமைப்புகளும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment