Tuesday, August 27, 2013

ரேடியோ முருகேசனும் கே.எஸ்.ராஜாவும்

ரேடியோ முருகேசன் என்ற முருகேசனை சந்தித்ததை உங்கள் நம்பிக்கை சார்ந்து, தற்செயல் அல்லது ஊழ் அல்லது வேறு ஏதொன்றுமாக நீங்கள் வைத்துக் கொள்ளலாம். கதையின் முடிவில் அதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். முருகேசனை நான் சந்திக்க வேண்டியிருந்தது என்ற எளிய உண்மை இப்போதைக்குப் போதுமானது.

                சிங்கப்பூர் மாமா, அம்மாவிற்கு சீதனமாகக் கொடுத்த சோனி டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று எங்கள் வீட்டில் நீண்ட காலமாக பாடிக்கொண்டு இருந்தது என்று சொன்னால், பக்கத்து வீட்டு சுப்பையா தாத்தா அடிக்க வருவார். அவரைப் பொறுத்தவரை அது கத்திக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமென்ன எங்கள் தாத்தாவிற்கும்தான். எங்கள் என்றால், எனக்கும் என் அக்காவிற்கும்.

                அக்கா நன்றாகப் பாடுவாள், அம்மா அப்படித்தான் சொல்கிறாள். அப்பா உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வாணி என்று பெயர் வைத்திருப்பாரா?! வாணிஜெயராம் என்றால் போதும் அவருக்கு. "மல்லிகை என் மன்னன் மயங்கும்' - என்று ரேடியோவில் காதோடு மயங்கிடுவார் மனுசன் என்பாள் அம்மா, அம்மாவுக்கு வாணிஜெயராம் குரல் இல்லை என்பதில் அப்பாவுக்கு வருத்தம் ஏதும் உண்டா என்று தெரியாது. ஆனால் அம்மாவுக்கு உண்டு என்றாலும் அம்மா பாடி பார்த்ததில்லை, என்றால் கேட்ட தில்லை. சின்ன முணுமுணுப்பாகக்கூட, ஆனால் அப்பா பாடுவார். அது மெலிசாக, குண்டுமணி உருள்வது போல இருக்கும். ஆனால் அது வாணிஜெயராம் போல இருக்காது. எப்படி இருக்க முடியும்...! ஆனால் பெண்குரல் பாடலை ஆண்கள் பாடினால் ஏன் நன்றாக இருக்கக் கூடாது?! "வசந்தகால நதிகளிலே'... பாடலை ஜெயச்சந்திரனும் கூடத்தான் அதே நளினத்தோடு பாடுகிறார். இதை நான் சொல்லவில்லை அப்பாதான் சொன்னார். அப்படிச் சொல்லும் அவர் வாணிஜெயராம் பாடலை ஹம்மிங் அல்லது சீழ்க்கையில் தான் ஏனோ பாடுவார்.

                இதற்கெல்லாம் குறையில்லாமல் தான் அக்கா பாட ஆரம்பித்தாள். முதலில் ரேடியோவோடு ரேடியோவாக என்றால் விவிதபாரதி இல்லை இலங்கை வானொலி. விவிதபாரதி இரவில்தான் சற்று தெளிவாகக் கேட்க இயலும். பகலென்றால் பாடலும் இரைச்சலாக இருக்கும். கேட்க காதுவலிதான் மிஞ்சும். இலங்கை வானொலி அப்படி அல்ல; கழுவி விட்டதுபோல சுத்தமாக இருக்கும். அவர்களது தமிழும் அப்படித்தான். அதில் வரும் பாடலோடு பாடலாகச் சேர்ந்து பாடுவாள். பாடல், சங்கீதம் என்ப தெல்லாம் சினிமா பாட்டுதான். கர்நாடக சங்கீதம், அது இது என்பதெல்லாம் யாருக்கும் இங்கு விளங்குவதில்லை. பரிச்சயமுமில்லை. தாத்தாவிற்கு, அப்பாவின் அப்பாவிற்கு, சினிமா பாடல் என்பதும் அப்படித்தான்.

                அவர் உண்டு, அவர் நெல் மூட்டை மொத்த வியாபாரம் உண்டு, தூரத்தில் களைத்துப்போய் தாத்தா வீட்டிற்கு வரும் போதே ரேடியோவை நிறுத்தி வைத்து விடுவாராம் அப்பா.

                தாத்தா அப்படி ஒன்றும் சங்கீதத்திற்கு எதிரியில்லை. சினிமா பிடிப்பதில்லை... அவர் காலத்து படம் கூட அவருக்குப் பிடிப்பதில்லையாம். பார்ப்பதில்லையாம். "என்ன கூத்து! ஊரில் இல்லாத கூத்து" என்பாராம் அடிக்கடி. சினிமா பற்றிய பேச்சுக்கு அதுதான் முற்றுப் புள்ளி. ஏதாவது கோவில் கச்சேரி விசேச வீடுகளில் நாதசுரம் முடியும் மட்டும் இருந்து இரசிப்பார் அவ்வளவுதான்.

                தன் ஒரே மகன் வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளத்தில் ரேடியோ வாங்கி வந்ததைப் பார்த்து "இவன் எங்கே உருப் படப்போகிறான்" என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கடை வாசலுக்குப் போனவர்தான் பிறகான காலங்களில் அங்குதான் படுக்கை, வியாபாரம் என்று ஆகிவிட்டது. எப்போதாவது காலை அல்லது இரா சாப்பாட்டிற்கு நினைத்துக்கொண்டால்தான் உண்டு. அதெல்லாம் மகனின் திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச நாள் போல நடந்தது.

                இவர் வீட்டிற்கு வந்து வாசல் சொம்பில் கால் நனைக்கவும், அப்பா வைத்திருந்த ரேடியோ அபசகுனமான, துக்கிரியான வார்த்தையில் பாடுவதற்கும் சரியாக இருந்ததாம். வந்த வேகத்திலேயே ரேடியோ பெட்டியை நடுக் கூடத்தில் வைத்து வீசி அடித்தாராம். பிறகேதும் பேசாமல், சாப்பிடாமல் கிளம்பிப் போய் விட்டாராம். அது நடந்து மூன்றாவது நாள் தாத்தா நெல் மூட்டை கோடவுனில் இறந்து கிடந்தாராம். எப்பவும் தாத்தாவுக்கு தேத்தண்ணி வாங்கிவரும் ரெங்கையா மாமா எழுப்பியும் அவர் எழும்பியதாய் இல்லையாம். பிறகே வீட்டில் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். அக்கா தேம்பி அழுதது நன்றாக நினைவிருக்கிறது.

                ஒருமுறை ரேடியோவோடு சேர்ந்து அக்கா பாடிக்கொண்டிருந்தாளாம்... "வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்' என்று... தாத்தா வராந்தையில் வந்ததை எவரும் கவனித்திருக்கவில்லை. அது, அந்த நேரத்திற்கு அவர் வருகிறவர் இல்லை என்பதாக இருக்கக்கூடும். அக்காவும் நிறுத்தவில்லை. ரேடியோவும் நிறுத்தவில்லை. ஆனால் அம்மா ஓடிப் போய் நிறுத்தினாள் அக்காவை, ரேடியோவை. தாத்தா எதிரே நின்றார். எதுவும் சொல்லவில்லை. சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பெட்டி கேட்டு வாங்கிக் கொண்டு போகையில் அம்மாவிடம் சொன்னாராம். "இவனைப்போல மகளையும் குட்டிச்சோறா (சுவர்) ஆக்கிற போறான்" என்று. "அது அந்த காலம் இப்பல்லாம் இதுகள ஏதும் சொல்ல முடியுமா' என்பாள் அம்மா.

                அப்பா அப்படியில்லை பாடல் கேட்பார், இடையிடையே என்ன படம், இசை யார், யார் பாடினார் என்பதெல்லாம் நாம் கேட்காமலேயே சொல்வார். அக்கா தான் அதற்கெல்லாம் சரி. பொறுமையாகக் கேட்பாள் பாடுவாள்.

                ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்படித் தான் ஆயிற்று, அப்பா வீட்டில் இருந்தார். பின்னேரம் இலங்கை வானொலியில் ஒலிச்சித்திரம் இருக்கும். ஒலிச்சித்திரம் என்றால் திரைப்படத்தின் தொகுக்கப்பட்ட ஒலி வடிவம். (இதெல்லாம் வெகு பின்னால் தெரிந்து கொண்டவை) அக்கா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வருவாள். அம்மாவுக்கும் ரேடியோவில் பிடித்தது அந்த ஒன்றுதான். என்ன ஆயிற்று என்றால், திடீரென்று நிகழ்ச்சியின் இடையே கரகரத்துப் பின் ஒரே அடியாக அடக்கமாகி விட்டது ரேடியோ. அதிலிருந்து எந்த சப்தமும் பிறகு வரவேயில்லை. பிறகென்றால், ரேடியோ முருகேசனிடம் எடுத்துப்போகும் வரை அப்படித் தானாயிற்று. அப்பா, ரேடியோவிற்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அக்காவை அதன் தலையில் தட்டச் சொன்னார். ம்கூம்! பிறகு அவரே ஈசி சேரை விட்டு எழுந்து வந்து தட்டோ தட்டென்று தட்டிப் பார்த்தார். அதுவோ சர்ரென்று உறுமி அடங்கியது. அக்காவிற்கு ஒலிச்சித்திரம் கேட்கும் ஆவலில், நின்று போனதால், கண்ணீர் முட்டிற்று. அவசரமாக கோடிவீட்டு ரேடியோவிற்கு ஓடினாள். அம்மா எரிச்சலோடு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். அப்பா ஒரு திருப்புளி வைத்து ஏதேதோ திருகிப்பார்த்தார். சுவிட்சைப் போட்டார். பிறகும் ஏதும் ஆகவில்லை.

                ஆனால் ஒன்று ஆனது. அது சிங்கப்பூர் சோனி கம்பெனி டிரான்சிஸ்டர் என்று முன்பே சொன்னேன். ஆகையால் அதன் வோல்டேஜ் டிவைசை கழற்றியதால் அதாவது, அந்த ஊர் மின்சார அளவிற்கு தகுந்தாற்போல மாற்றும் விசையை மாற்றி விட்டதால் (தெரியாத்தனமாய் அப்பா) அதன் டிரான்ஸ்பார்மர் புகைந்துவிட்டது. இதை முருகேசன்தான் சொன்னான். அப்படி சொல்லும்போதே அவன் ரேடியோ பெட்டியை பலவிதங்களில் திருப்பி ஆராய்ந்தான். ஒரு தேர்ந்த விஞ்ஞானி போன்ற அவனது பாவ்லா எனக்கு எரிச்சலூட்டியது. அது மட்டுமல்ல இது நான் விளையாடப்போகிற நேரம். கையோடு சரிசெய்து எடுத்துவரச் சொல்லி வீட்டில் உடனே முருகேசனிடம் அனுப்பி விட்டார்கள்.

                முருகேசனின் கண்கள் மின்னின. "அருமையான செட்' என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டான். பிறகு என்னைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான். இது முதல்நாள் மட்டுமல்ல, ஏறக்குறைய ஒருமாதம் வீட்டுக்கும் அந்த அடைசல் கடைக்குமாக அலைந்திருந்தபோதும் முருகேசன் இதைத்தான் செய்தான்.

                அப்பா பாட்டு கேட்கும் ஓய்வு நேரம் வந்தால் எரிச்சலடைவார். விடுமுறை நாட்களில் இது இன்னும் அதிகமாயிற்று. ஒலிச்சித்திர நேரத்தில் அக்கா, கோடி வீட்டிற்குப் போனாள். அம்மா பேன் குத்தினாள். ஆனால் என் பொழுது முருகேசன் கடையில், அவன் உதட்டுப் பிதுக்கத்தில் போயிற்று. அதில் மட்டுமா அவன் கண் பார்வையின் சாடையிலும் போயிற்று.

                அந்தப் பார்வை தெருவைக் கடந்து எதிர்வீட்டு மஞ்சுளாவுக்காக - மஞ்சுவுக்காக ஆவலுடன் நின்றது. அவன் சொல்லாதது அது. சொன்னது மற்றொன்று. அது செவி நோக்கு அவனுக்கு கே.எஸ்.ராஜா என்றால் போதும். முருகேசன் ரேடியோ முருகேசன் ஆனதே கே.எஸ்.ராஜாவால்தான்.

                முதலில் முருகேசன் குடும்பம் எங்கள் தெருவில்தான் இருந்தது. குடும்பம் என்றால் முருகேசன், அவனது தங்கை, தாய் இவ்வளவுதான். அப்பா இல்லை. ஆனால் அவனது காதோடு ஒரு சின்ன டிரான்சிஸ்டர் இருக்கும் வெண்மை நிறத்தில். முருகேசன் என்னைவிட சில வயது மூத்தவன். கொஞ்சநாள் எங்களுடன் பள்ளிக்கூடம் வந்துகொண்டிருந்தவன், பிறகு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு ஏதேதோ வேலைகளுக்கு போய்க் கொண்டிருந்தான்.

                ஆரம்பத்தில் ஒரு மளிகைக் கடையில் இருந்தான். வேலை நேரத்திலும் அவன் ரேடியோ கேட்டுக் கொண்டிருப் பதாக வாடிக்கையாளர்களிட மிருந்து புகார் வந்ததால் முதலாளி துரத்தி விட்டுவிட்டார்.

                ரேடியோ காதோடு இருக்கும் வரை அவனால் எதுவும் செய்வதாக இருக்கவில்லை. ரேடியோ, என்பதைவிட கே.எஸ்.ராஜா என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது அல்ல, ஒரு காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டம் முழுமைக்கும் ஏன் தென்கடலோர மெங்கிலும் இலங்கைத்தீவு வானொலியும் அதன் நிகழ்ச்சிகளும் ஏன் அதன் அறிவிப் பாளர்களும் சினிமா கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்களைக் கொண்டிருந் தார்கள், பேசப்பட்டார்கள்.

                முருகேசனும் அதற்குத் தப்ப வில்லை என்றாலும், இது விடயத்தில் அவனுக்கு கூடுதல், அதிஆர்வம், வெறி. வானொலி நிகழ்ச்சிகளைவிட, பாடல், இசை என்பதை யெல்லாம்விட வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் மதுரக் குரல் ஒன்றே போது மென்பான்.

                எங்களோடு கில்லி விளையாடிக் கொண்டிருப்பவன் திடீரென்று காணாமல் போய்விடுவான். மறுநாள், பிள்ளையார் கோவில் அரசமரத்தடியில் நின்று மறித்தால், "உங்கள் விருப்பம் நிகழ்ச்சிடா. மூன்று மணிக்கு மறந்தே போச்சு. மதுரக்குரலோன்ங் கறதே தோணல, கோவிச்சுக்காதடா' என்பான்.

                முருகேசன் ரேடியோ முருகேசன் ஆனது இப்படித்தான். ரேடியோ திருத்தம் செய்ய, ரேடியோ கூடவே இருந்து விடுவது என்று இந்தத் தொழிலை அவன் விரும்பி தேர்ந்திருக்கலாம். சொந்தக்கடை. முருகேசன்தான் இங்கு ராஜா. இங்கிருந்து அவனை யாரும் துரத்திவிட முடியாது. அவன்தான் துரத்திவிடுவான். ராஜாவின் குரல் வானொலியில் வரும்போது ரிப்பேருக்கு வரும் ரேடியோவில் ஏதாவதொன்றை சத்தமாகப் பாட வைப்பான். தவறு, அவனது அறிவிப்பாளர் பேசும்போது கை தானாகவே சென்று விசையைக் கூட்டும். அதுமட்டுமல்ல, முருகேசன் இன்னொன்றும் செய்வான். தனக்கு விருப்பமான பாடலை ஒலிபரப்பக் கேட்டு வானொலிக்கு எழுதிப்போடுவான். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அல்ல. அவனது அறிவிப்பாளர் பேசும் நாளுக்கு தகுந்தாற் போல அனுப்பி வைப்பான்.

                அப்படி ஒருநாள் முருகேசன் பெயரை அவனது ராஜா ஒரு பாடலை விரும்பிக் கேட்டதாக குறிப்பிடும்போது அது, பத்தோடு பதினைந்தாக இருந்தது என்றாலும், முருகேசன் முகத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஏதோ தன் பெயரை மட்டுமே விசேடமாக குறிப்பிடுவதைப்போல குதூகலித்தான்.

                அறிவிப்பாளர் திலகமாக அன்றைக்கு கே.எஸ்.ராஜா உலாவந்தது உண்மைதான். சனி, ஞாயிறு காலை, மாலை நேரங்களில் ராஜா நடத்தும் "திரை விருந்து' கடல்கடந்தும் தமிழகக் கரையோரங்களில் பிரபலம். முருகேசன் பல்துலக்கி குளிக்கிறானோ இல்லையோ... தவறாமல் ரேடியோ முன்னால் இருப்பான். "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் குழுமி இருக்கும் அன்பு இரசிக பெருமக்களுக்கு அன்பு வணக்கம்!" என்று ராஜா உற்சாகக் குரலில் ஆரவாரமாக ஆரம்பிக்கும் போதே உஸ் என்று உதட்டில் கைவைத்து எச்சரித்து விடுவான். தொந்தரவு அதிகமானால் ரேடியோவை எடுத்துக் கொண்டு தொலைவுக்குப் போய்விடுவான்.

                மூச்சு விடாமல் திரிசூலம் அல்லது மீனவநண்பன் வெளியாகும் இலங்கை திரையரங்குகளின் பெயரை ராஜா கடகடவென உச்சரிக்கும்போதே கேட்டுக் கொண்டிருக்கும் முருகேசன் திரும்பி நம்மை ஒருவித பெருமிதத்துடன் பார்ப்பான், பாருங்கள்... ஆனால் அதை யெல்லாம் குலைத்து சிதைப்பதுபோல அவனது கடைக்கு எதிரே வழமையாக தூங்கிக்கொண்டு நிற்கும் கழுதைகளில் ஒன்று சமயம் தெரியாமல் கத்தி தொலைக்குமானால், அப்படியொரு ஜென்ம வெறியோடு துரத்திக் கொண்டோடுவான்.

                கழுதைகள் எல்லாம் ஏதோ ஒன்று சேர்ந்து கே.எஸ்.ராஜாவின் குரலுக்கு பொறாமை கொண்டு கத்துவதாகவே முருகேசன் ஆவேசப்பட்டிருக்கலாம். எனினும் அதுபோல முருகேசன் ஆச்சரியமாக கோபப்படாத தருணங்கள் இருப்பதையும் இத்தனை நாளில் நான் அறிந்து கொண்டிருந்தேன். அது அவனது ராஜா ரேடியோவில் வந்து தென்றலாக வருடிக்கொண்டிருக்கும்போது. மஞ்சு தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு தனது வளர்ப்பு நாய்க்கு சாப்பாடு வைக்க கர்ண கொடூரமாக கத்தி கூப்பாடு போடும் போது. நினைத்துக்கொள்ளும் நேர மெல்லாம் அந்த நாய் குமுறி குலைக்கும் போது முருகேசன் கோபப்படுவதாய் இல்லை. ராஜாதான் அப்போது அருகில் யாருமில்லாத ரேடியோவிலிருந்து அபத்தமாக பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றும்.

                எனினும் ராஜா மீது முருகேசனுக்கு அபாரமான பிடிப்பு இருந்தது. ரேடியோவைவிட ராஜா மீது இருந்த காதலே அவனுக்கு, ரேடியோவையும், அதன் உள் உறுப்புகள் மீதான ஆர்வத்தையும் உருவாக்கியிருக்கலாம். முருகேசனின் ராஜா மீதான ஆர்வத்தை பல மணிநேரங்கள் ஒருவித வாதையுடன் அவன் உடனிருந்து அவதானித்திருக்கிறேன்.

                திரைவிருந்தாகட்டும், நீங்கள் கேட்டவையாக இருக்கட்டும் முருகேசனுக்கு சினிமாவிலெல்லாம் அவ்வளவு விருப்பம் இருப்பதாகச் சொல்ல இயலாது. ராஜா வந்து பேசிவிட்டு ஒரு படச்சித்திரத்தையோ, பாடலையோ போட்டுவிட்டுப் போனாரென்றால் அவர் வந்து மீண்டும் பேசும் வரை இடையே முருகேசனும் விலகி வேறு வேலைகளில் இறங்கிவிடுவான். ஆனால் ராஜா செய்யும் விளம்பரங்களைக்கூட பாடலைப்போல தலையாட்டி ரசிக்கக்கூடியவன் நம்ம முருகேசன்.

                ராஜாவின் பாணியில், பேசிப் பார்க்கவும், பல நாட்களாக முயற்சி செய்து பார்த்திருந்தான், "என்ன சொல்கிறீர்கள் திருப்தியா?!" என்பான். அதையே கடைக்கு வரும் தனது கஸ்டமரிடமும் மாற்றி போட்டுக் கேட்பான். (உங்கள் ரேடியோ பற்றி) "என்ன சொல்கிறீர்கள் கண்ணையா" என்பான். வரும் நபர்கள் திருதிருவென்று முழிக்க கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கோ எரிச்சல் பற்றிக்கொண்டு வரும்.

                ரேடியோவை சரிபண்ணித்தராது அலையவிடும் கடுப்பில், அவனிடம் ஒருநாள் அன்பு அறிவிப்பாளர் அப்துல் அமீது போல உங்கள் ராஜாவுக்கு உதயாவின் (பிறகான காலங்களில் லலிதா, அம்பிகா) பாட்டுக்குப் பாட்டு போல நடத்த வருமா என்று கேட்டுவிட்டேன், ஏதோ என்னுடைய கொஞ்சம் ரேடியோ கேட்கும் அறிவைக் கொண்டு. அவ்வளவுதான் மறுநாளே ரேடியோ திருத்தப்பட்டு வீட்டுக்கும் வந்து விட்டது.

                பிறகு முருகேசனை சந்திக்க வாய்த்தது, அது 83 ஆம் ஆண்டின் ஜ÷லை கலவரத்துக்குப் பிறகு என்று நினைக்கிறேன். (இலங்கையில்) மிதி வண்டியில் வேகமாக வந்து என் வீட்டில் கால் ஊன்றி நின்றிருந்தான். பதட்டத்தில் அவனது உடல் லேசாக நடுங்கிய வாறிருந்தது. "உனக்குத் தெரியுமா? கொஞ்ச நாளாகவே ராஜா ரேடியோவில் வார தில்லை. உடம்புக்கு ஏதும் பிரச்சனை யோன்னுயிருந்தேன்... நடந்தது தெரியுமா?! ராஜாவை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல வெச்சிருக்காங்களாம்...! எல்லாம் உங்க அப்துல்அமீது பண்ற வேலை" என்று பல்லை நறநறத்தான் கோபம் குறையாமல்.

                "எங்கள் அமீது!' எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அன்றைக்கு நான் விளையாட்டாகச் சொன்னதையிட்டு என்னை அமீது அணிக்கு பிரித்துவிட்டான் நினைவு வைத்திருந்து முருகேசன். உண்மையில் ராஜாவின் குரல் இப்போதெல்லாம் இலங்கை வர்த்தக சேவையில் வருவதாகத் தெரியவில்லை. முருகேசனை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருந்தது. முன்புபோல் அவன் உற்சாகமாக இல்லை. அதற்குக் காரணம் மஞ்சு. வீட்டை காலிப்பண்ணி போனதாக இருக்கலாம் என்றே நினைத்தேன். ஆனால் அது முற்றிலுமான உண்மை அல்ல.

                இப்போதெல்லாம் முருகேசன் கடை கூட்டம் குறைந்திருந்தது. திருத்த வேலைகளுக்கான ரேடியோ பெட்டிகளும் நிறைய இல்லை. ஒரு வேளை இலங்கை வர்த்தக சேவை ஒலிபரப்பு நிறுத்தப் பட்டதனால் இருக்கலாம் அல்லது முருகேசனின் முன்புபோல ஆர்வ மில்லாமையுமாக இருக்கலாம்.

                அது 86ஆம் ஆண்டு பிப்ரவரியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு பொழுதுபோகாமல் டிரான்சிஸ்டரை திருப்பிக் கொண்டிருந்தேன். ஒரு வினோதமாக, விவிதபாரதியின் பலகீனமான வர்த்தக ஒலிபரப்பில், திடீரென்று ராஜாவின் குரல் ஒலித்தது.

                முருகேசனைத் தேடி ஓடினேன். இப்போது கடையை ஒரேயடியாக மூடி விட்டதாகச் சொன்னார்கள். முருகேசன் ராஜாவைத்தேடி ஊர்ஊராகத்தான் போய்க் கொண்டிருந்தான்... போய்க் கொண்டிருக் கிறான். இங்கிருந்து கரியாப்பட்டினம் அல்லது தில்லைவிளாகம் என்று தேடிப் போய் கோயில் ஆர்க்கெஸ்ட்ராவில் நள்ளிரவுவரை உட்கார்ந்திருப்பான். பாடகர்கள் சினிமா பாடல்களை பழசு, புதுசு என்று கலந்து பாடிவிட்டு ஒரு சிறு இடைவேளையாக, மிமிக்கிரிக்காரர்கள், பலகுரல் மன்னன்கள் வருவார்கள். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர். போல என்று பேசுவார்கள். இதில் ராஜாவுக்கும் நிச்சயமான இடம் ஒன்று உண்டு. பல குரல் மன்னர்களுக்கு, மதுரக் குரலோனின் குரலில் பேசுவதென்பதே ஒரு சவால்தான். முருகேசன் அந்தக் குரலில் ராஜாவை சந்திப்பதற்கென்றே போகத் துவங்கி யிருந்தான். அவர்களும் வருவார்கள்; ராஜா போல ஏதேதோ பேசுவார்கள். ஆனால் இது எதுவும் முருகேசனை திருப்திப் படுத்து வதாய் இருப்பதில்லை. "அவன் என்னடா மூஞ்சூரு போல இருந்துகிட்டு ராஜா மாதிரின்னு பேசுறான். மூஞ்சில அப்பனும் போல வந்துச்சுடா!" என்பான். அப்படி சொன்னாலுமே, மறுபடியும் ராஜா குரலுக்குக் கிளம்பிவிடுவான்.

                இப்படியான நாளில்தான் ராஜா சிறையிலிருந்து விடுபட்டு, பறந்து வந்து தமிழகத்தில் கால் பதித்திருந்தார். அவரது பேட்டியும், புகைப்படமும் "ராணி' வாரந்தரியில் வந்திருந்தது. ராஜாவின் தோற்றத்தை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். முருகேசனும் இப்போதுதான் பார்த்திருப்பதாகக்கூடும். ஒரு ரவிச் சந்திரனைப் போன்றோ, ஜெய்சங்கரைப் போன்றோ ராஜாவின் தோற்றத்தை கற்பனை செய்திருந்த பலரில் முருகேசனும் இருந்திருக்கலாம். அவனோ "குயிலுக்கு குரல்தான் அழகு" என்பான். தமிழ் நாட்டில் இருக்கும் ராஜாவை சந்தித்து கைகுலுக்கும் புகைப்படம் ஒன்றை அவருடன் எடுத்து விடவேண்டும் என்பதே அவனது மூர்க்கமான திட்டமாக இருந்தது.

                பிறகான காலங்களில் அது நிறை வேறியதா என்று தெரிவதற்கு முருகேசன் ஊரில் இல்லை. அவனது கடை இருந்த இடத்தில் டெலிவிசன் ரிப்பேர் கடை ஒன்று வந்துவிட்டது. மஞ்சு இருந்த வீடும் பலமாடி குடியிருப்பாக மாறி விட்டிருந்தது. கழுதைகளும், ரேடியோ டிரான்சிஸ்டர் களும், இலங்கை வானொலி ஒலிபரப்பு களும் அரிதாகிவிட்ட காலம் ஒன்றில்தான், ராஜாவின், அந்த மதுரக்குரலோனின், இறப்புச் செய்தியை கேள்விப் பட்டிருந்தேன். முருகேசன் நினைவை தவிர்க்க இயலவில்லை.

                ராஜாவின் இறப்பு ஒரு செய்தியாக வெளிவந்து வெகு காலங்களுக்குப் பிறகே அவரும், அவரது மதுரக்குரலும் அது வெளிப்பட்ட குரல்வளையும் எப்படி நசுக்கி நெறித்து இறுக்கி நிறுத்தப்பட்டது என்பதை அறிந்து வருத்தப்பட நேர்ந்தது. இலங்கையில் இனக் கலவரங்களில் முற்றிய தீவிரவாத குழுக்களால் ராஜாவின் குரல் அலைக்கழிக்கப்பட்டதும், போட்டி குழு மோதல்களின்போது சகபோராளிகளின் சரணடையும் அறிவித்தலுக்கும், எச்சரிக் கைக்குமாக தெரு, தெருவாக ராஜாவின் குரல் சிராய்ப்புடன் இழுத்துச் செல்லப் பட்டதும், இயக்க மோதல்களில், யுத்த இரைச்சலின் நடுவே மதுரக் குரலோனின், சிறகடித்துப் பறந்த வானலையின் வசீகரக் குரல் ஒரு மெல்லிய சிறகு போன்றே பிய்த்து உதறப்பட்டதுமாக அலை கடலோரம் கேட்பாரற்று ஓய்ந்து ஒதுங்கி யதுமாக... ராஜாவை முருகேசன் பிறகெப் போதும் ஒரு இயல்பான புன்னகையோடே கூட கண்டிருக்க இயலாது என்றே தோன்றிற்று.

நன்றி: http://www.keetru.com

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விறுவிறுப்பகச் சென்று சோகமாக முடிந்தது...
முருகேசனின் கதையும் ராஜாவின் கதையும்.

இந்த எனது பதிவையும் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்:

http://www.nizampakkam.blogspot.com/2010/08/67radiocw.html