Tuesday, August 27, 2013

ஊரில், ரேடியோவுக்கு முன், மைக் கட்டி, ஊரே கேட்கும்

கதிர் பாரதியின் கவிதை நூலுக்கு "யுவ புரஸ்கார்'
 சாகித்ய அகடமியின் விருதுகள் (புரஸ்கார்) நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், யுவ விருதுக்கு கதிர் பாரதியும், பால சாகித்ய விருதுக்கு ரேவதியும், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின், சாகித்ய அகடமி, ஒவ்வொரு ஆண்டும், சிறந்த எழுத்தாளர்களுக்கு, விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. இதில், சாகித்ய அகடமி இலக்கிய விருது, பால சாகித்ய விருது, சாகித்ய அகடமி மொழிபெயர்ப்பு விருது, சாகித்ய யுவ விருது உள்ளிட்ட, பல விருதுகள் வழங்கப்படும். அந்தந்த மொழியில் உள்ள, சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். இந்நிலையில், 2013ம் ஆண்டுக்கான, யுவ விருது, பால சாகித்ய விருது பெறுபவர்களின் பட்டியலை, சாகித்ய அகடமியின் செயலர், சீனிவாச ராவ் நேற்று வெளியிட்டார். சிந்து மொழியைத் தவிர்த்து, மற்ற, 23 மொழிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ் மொழியில், யுவ விருது, கதிர் பாரதியின், "மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்ற கவிதை நூல், தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே போல், பால சாகித்ய விருதுக்கு, ரேவதியின், "பவளம் தந்த பரிசு' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஊக்கம் தந்த தாய்மாமன்கள்:

இது குறித்து, "யுவ புரஸ்கார் விருது' பெறும் கதிர் பாரதி கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் உள்ள, முத்து வீர கண்டியன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன் நான்; இமானுவேல், உதயகுமார், ஹென்றி, ராஜ்குமார் ஆகிய, என் நான்கு தாய்மாமன்கள், எனக்கு இலக்கிய தாயாக விளங்கினர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால், சிறுவயதில் இருந்தே நிறைய வாசித்தேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, ஜெயகாந்தனின், "சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்தை வாசிக்க வைத்தனர். நான், சென்னை, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில், கவிதை வாசிக்கும் போதெல்லம், ஊரில், ரேடியோவுக்கு முன், மைக் கட்டி, ஊரே கேட்டும் வகையில், எங்கள் மாமன்கள் செய்தனர். இது, அதீத அன்பின் உச்சம். அந்த அளவு கடந்த அன்பே, என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது. "நீ இலக்கியத்தில், யாருடைய முகத்தில் விழிக்கிறாயோ, அதுவே உனக்கு இலக்கிய வாழ்வு' என, என் நண்பர் ஒருவர் கூறினார். நான் யூமா வாசுகி முகத்தில் விழித்தேன். அதனாலேயே, விருது பெறும் அளவுக்கு என், எழுத்துகள் தேர்வாகி உள்ளது. "மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள்' என், முதல் கவிதை தொகுப்பு. தொகுப்பு வெளியாகியவுடன், "காலச்சுவடு'வில், ம.அரங்கநாதனும், "காக்கை சிறகினிலே'வில், ஆதவன் தீட்சண்யாவும், விமர்சனம் எழுதி, என்னை ஊக்கப்படுத்தினர். சேலத்தில் உள்ள, "தக்கை' அமைப்பும், கோவையில் உள்ள, "இலக்கிய சந்திப்பு' அமைப்பும், என் நூலுக்கான விமர்சன கூட்டங்கள் நடத்தி, என்னை ஊக்குவித்தனர். நூல்கள் எதுவும் என் கைவசம் இல்லாத நிலையில், இளங்கோ கிருஷ்ணன் என்ற என் நண்பரும், வெளியீட்டாளரும் அறிவுறுத்தினர். நண்பரிடம் இருந்து வாங்கி, சாகித்ய அகடமிக்கு அனுப்பி வைத்தேன்; இப்போது, விருதுக்கு தேர்வானதில், மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

60 ஆண்டுகள்:

சாகித்ய அகடமியின் பால புரஸ்கார் விருது பெற்ற, சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் ரேவதி கூறியதாவது: கடந்த, 60 ஆண்டுகளாக குழந்தைகள் குறித்தும், அவர்கள் வளர்ச்சி குறித்தும் எழுதி வருகிறேன். இது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. எதிர்கால தலைமுறையை, ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும் என்பதால், குழந்தை இலக்கியங்களை மட்டுமே, அதிகம் கவனம் எடுத்து எழுதி வருகிறேன். மத்திய, மாநில அரசு வழங்கும் விருதுகள் உட்பட, 30க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளேன். தமிழகத்தில், குழந்தை இலக்கியம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. தமிழக அரசு இப்பிரச்னையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து குழந்தை இலக்கியங்களை எழுதி வருவதால், ஒவ்வொரு நாளும் எனக்கு வயது குறைவதாகவே நினைத்துக் கொள்கிறேன். இவ்வாறு ரேவதி கூறினார்.

No comments: