Thursday, January 22, 2015

MahaMeet -2015 @ Mahabalipuram


Register you name for MAHA Meet at Mahabalipuram 

VU2INA
9445779232
VU2KBX
9282424151


VU3PJT / Rajendran
__._,_.___


அவரும் ஒரு குழந்தையே

கூத்தபிரானுடன் வானொலியில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். எளிமையானவர், சூதுவாது தெரியாதவர். 1945-இல் கூத்தபிரான் பெற்றோருடன் சென்னை வந்தார். நாடு சுதந்திரம் பெற்ற அன்று நள்ளிரவில் ஒரு பூங்காவில் மூவர்ணக்கொடி ஏற்றியபோது அவரும் இருந்தார்.
இந்த உணர்வு பிற்காலத்தில், "மூவர்ணக்கொடி ஏற்றுவோம்' எனும் சிறுவர் தொடர் நாடகம் சென்னை வானொலியில் ஒலிபரப்ப கருவாக அமைந்தது. அந்த நாடகத்தை காஞ்சிப் பெரியவர் முழுமையாகப் படித்துப்பார்த்து, "சன்மார்க்கப் பிரகாசமணி' விருது வழங்கினார்.
வானொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகத்தான் சேர்ந்தார் என்றாலும், அப்போதே அன்றைய வானொலி அண்ணா, ரா. அய்யாசாமிக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். அவர் ஓய்வு பெற்ற பின், மழலை அமுதம், பாப்பா மலர், சிறுவர் சோலை ஆகியவற்றை கூத்தபிரானே தயாரித்து நடத்தினார்.
பெரியசாமி தூரனின் சிறுவர் கலைக் களஞ்சியத்தை முழுமையாகப் படித்து ஜீரணித்து, தொடராக ஒலிபரப்பினார்.
ராஜாஜி, அழ. வள்ளியப்பா, தூரன், பூவண்ணன், ராமகிருஷ்ண மடத்தின் அண்ணா ஆகியோரது குரலிலேயே, பாப்பாவுக்கு ஒரு கதை எனும் தொடரை ஒலிபரப்பச் செய்தார்.
"பாதி சொல்வோம் மீதி என்ன' போன்ற நிகழ்ச்ச்சிகளையும், "சொப்பனக் குழந்தை' போன்ற தொடர் நாடகங்களையும் தயாரித்தளித்தார். இவற்றில் எல்லாம் குழந்தைகளே கதாபாத்திரங்கள்.
வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி என்றாலே விழாக்கோலம் பூணும். குழந்தைகளை வாயிலுக்கே சென்று அவர் வரவேற்பார். பிழையறப் பேசுங்கள் எனும் தொடர் மூலம் தமிழைச்சரியாக உச்சரிக்கக் கற்றுத்தந்தார்.
1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி, அழ. வள்ளியப்பா ஏற்பாடு செய்து, ராஜாஜி கலந்துகொண்ட சிறுவர் நாடக விழாவில் கூத்தபிரான் முதல் பரிசு பெற்றார். ராஜாஜியின் ஆசி கிடைத்ததைப் பெரும் பாக்கியமாக அவர் கருதினார்.
1952-இல் டி.கே.எஸ்ஸின் கள்வனின் காதலி நாடகம் பார்த்தபோது, மேடையேறி, டி.கே. ஷண்முகத்தைப் பாராட்டினார். அன்று துவங்கியது அவரது நாடக வாழ்க்கை. 1953-இல் ரசிக ரஞ்சனி சபாவில் அவர் எழுதித் தயாரித்த "அவள் நினைவு' அரங்கேறியது.
1954-இல் துக்ளக் ஆசிரியர் சோ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் துவக்கியபோது, முதல் நாடகம், தேன் மொழியாள், கூத்தபிரான் எழுதியது. பகீரதன் கல்கியில் எழுதிய நாவலை நாடகமாக்கியது தான் இது. பின்னர், சோ எழுதிய ஒருசில நாடகங்களிலும் நடித்தார்.
கல்கி ஃபைன் ஆர்ட்ஸ் துவக்கினார். பின்னர் நவ பாரத் எனும் குழுவைத் துவக்கி 26 ஆண்டுகள் நடத்தினார். கூத்தபிரானின் கதாபாத்திரப் படைப்பு, இயற்கையாக இருக்கும் என்று சோ சொல்வார். அவர்களுக்கிடையே இருந்தது, வாடா நட்பு. ஆம், வாடா போடா என்றுதான் பேசிக்கொள்வார்கள்.
அவரது இயற்பெயர் நடராஜன். அவரது மனைவி லலிதாவின் யோசனையை ஏற்று, கூத்தபிரான் என்று மாற்றிக்கொண்டார். பெயர் மாற்றம் நடந்தது, வைத்தீஸ்வரன் கோயிலில்.
கூத்தபிரான், 26 நாடகங்களையும், குழந்தைகளுக்காக 20 நூல்கள் எழுதியுள்ளார். ஆறாயிரம் நாடகங்களில் நடித்துள்ளார். 80 வயதிலும், "காசிக்குப் போன கணபதி' நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
குழந்தைகளைப் பார்க்கும்போதும், அவர்களுடன் சரிசமமாகப் பேசும்போதும், கதைகளுக்குக் கரு கிடைப்பதாக அவர் சொல்வார்.
ஒவ்வொரு குழந்தைக்கு உள்ளேயும் நூற்றுக்கணக்கான கதைகள் புதைந்திருக்கும், என்பார். இவற்றைக் கூர்ந்து கவனித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி ஒலிபரப்பினார்.
குழந்தைகளே உலகம் என்று உறுதியாக எண்ணினார். அதை எடுத்துச்சொல்வதற்காகவே தாம் பிறந்ததாக நினைத்தார். குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களே தெரியும். அவர்களிடம் தீய எண்ணங்களை அண்டவிடக்கூடாது, என்பார்.
குழந்தைகளுக்காக ஒரு சிறுவர் சங்கத்தை, இறுதி மூச்சு வரை நடத்திவந்தார். குழந்தைகள் நாடகக்குழு வைத்திருந்தார். குழந்தை உள்ளம் படைத்த அவரும் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டிருந்தார்.
First Published : 25 December 2014 02:30 AM IST
நன்றி / தினமணி

Thursday, January 15, 2015

வானொலி அண்ணாவுக்கு தினமணியின் அஞ்சலி

நன்றி / திரு.எச்.ராமகிருஷ்ணன், தினமணி 25/12/2014

Monday, January 05, 2015

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சீன வானொலி பிரதிநிதிக் குழுவின் பயணம்

சீன வானொலி தெற்காசியா மையத்தின் துணைத் தலைர் சட்வௌ ஜியௌ, தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவர் வாணி உள்ளீட்ட மூவர் குழு, 2015ஆம் ஆண்டு 2ஆம் நாள் வெள்ளிக்கிழமை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரிமாற்றப் பயணம் மேற்கொண்டுள்ளது. இப்பயணத்தின் போது, சீன வானொலிக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கும் இடையேயான 'கன்ஃபூசியஸ் வகுப்பு' தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்விழாவில் பங்கேற்றுள்ள பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் ஜி.ஜேம்ஸ் பிச்சை 'கன்ஃபூசியஸ் வகுப்பினை' அமைக்க தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, இந்த வகுப்பின் எதிர்காலம் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளார். 
பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவர் முனைவர் ஆர்.சரவணன் செல்வனுடன் வகுப்பை உருவாக்கும் விவரங்களை விவாதித்தது சீன வானொலி பிரதிநிதிக் குழு. சீன வானொலி கன்ஃபூசியஸ் வகுப்பை உருவாக்கும் பணிகளை சட்வௌ ஜியௌ அம்மையார் அறிமுகம் செய்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாவது 'கன்ஃபூசியஸ் வகுப்பானது', சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பார்ந்த பரிமாற்றத்திற்கு பாலமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன், இப்பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவர் முனைவர் ஆர்.சரவணன் செல்வனுடன் வகுப்பை உருவாக்கும் விவரங்களை விவாதித்தது சீன வானொலி பிரதிநிதிக் குழு. பாரதியார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும் சீன மொழி வகுப்பறையையும் பார்வையிட்டன குழுவினர். 
நன்றி: சீன வானொலி தமிழ் பிரிவு

வானொலிகளின் வசந்தகாலம்

தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.

 என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்தப்பா. வலது பக்கத்தில் இருக்கும் குட்டி பல்பு எரிந்து ‘சொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய படிப் பாட ஆரம்பிக்கும்போது அநேகமாக எங்களுக்குத் தூக்கம் கலைந்திருக்கும். வானொலியில் துணி காயப்போடும் கம்பி மாதிரி நீண்ட ஏரியல் அதில் இருக்கும்.

 அறியாமையின் அழகு!
‘இந்தப் பொட்டியிலிருந்து எப்படி சித்தப்பா பாட்டுக் கேக்குது?’ என்று கேட்ட போது சித்தப்பா சொன்ன விளக்கத்தை மறக்கவே முடியாது. மிகப் பெரிய ரகசியத்தை எங்களிடம் மட்டும் சொல்வது போன்ற பாவனையுடன் மெதுவாகச் சொல்வார், “பாட்டுப் பாடுறவங்க மொத நாளே இந்தப் பொட்டிக்குள்ள போய் உக்காந்துக்குவாங்க… பாடி முடிச்சவுடனே காத்துல ஏறிக் காணாமப் போய்டுவாங்க.” சிறுவர்கள் எங்களுக்கு என்ன தெரியும், நம்பித்தொலைத்தோம். ஆனால், அந்த அறியாமை பல கற்பனை களைத் தூண்டிவிட்டது தனிக் கதை.
வானொலியைப் பொக்கிஷம் போல் பாதுகாத்தார் சித்தப்பா. வானொலிப் பெட்டியைச் சுற்றி மரத்தாலான காப்புப் பெட்டியைப் பொருத்தி வைத்திருந்தார். மேலிருந்து கீழே இறக்கி மூடும் கண்ணாடிக் கதவு உண்டு அதற்கு. சிறுவர்கள் எங்கள் கைபடாத உயரத்துக்கு வானொலியை வைத்திருப்பார் சித்தப்பா. அவருக்குத் தெரியாமல் யாரேனும் தொட்டால் தொலைத்துவிடுவார். “நூறு ரூபா குடுத்து வீராவரத்தில் வாங்கினதுடா” என்பார்.
டெல்லி அஞ்சலில் ஒலிபரப்பாகும் இந்துஸ்தானி இசையை அதில் கரகரப் பாய் கேட்கும்போது வித்தியாசமாய் இருக்கும். அப்பாவும் வானொலி விசிறிதான். அவரால் வந்தே மாதரம் கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால் நாளைத் தொடங்க முடியாது. சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும் அந்தக் கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கல இசை கேட்கும்போது, உலகமே கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமாவதாய்த் தோன்றும்
  
நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை அப்பாவுக்குப் பிடித்தமானது. நாகூர் ஹனிபாவின் பாடல்கள், பி.சுசீலா வின் ‘தாமரைப்பூவில் அமர்ந்தவளே..’ பாடல், ‘ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?’ பாடல் என்று காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனசை லேசாக்கிவிடும். தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலும் மறக்க முடியாதது.

 இலங்கை எனும் பூங்காற்று
இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிபிசியின் தமிழோசை, ஆல் இந்தியா ரேடியோ என்று பல வானொலி நிலையங்கள் எங்கள் காதுகளுக்குச் சாமரம் வீசின. இலங்கை வானொலியின் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஷ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, விமல் சொக்கநாதன், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், கமலினி செல்வ ராஜன், எழில்வேந்தன் ஆகியோரின் குரல்களுக்குக் கடல் கடந்தும் ரசிகர்கள் இருந்தார்கள்.

‘பிறந்தநாள்… இன்று பிறந்தநாள்’ என்ற பாடலுடன் தொடங்கும் வாழ்த்து நிகழ்ச்சியை என்றுமே மறக்க முடியாது. வாழ்த்துபவர்களின் பட்டியலில் ‘அப்பப்பா, அம்மம்மா’ என்று சொல்லும்போது உறவுமுறைப் பெயர்கள்குறித்து ஆச்சரியம் ஏற்படும். நமக்கே பிறந்தநாள் வந்ததைப் போல் அறிவிப்பாளர்களின் குரல்கள் ஆனந்தப் படுத்தும். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் பற்றிய தகவல்களை எந்தக் குறிப்பும் இல்லாமல் நினைவில் இருந்தே எடுத்துச் சொல்வார்கள். அந்த அளவுக்கு ரசனை மிகுந்த அறிவிப்பாளர்கள் அவர்கள்.

செய்திகள் வாசிப்பது…
அகில இந்திய வானொலியும் சளைத்ததல்ல. ‘செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண் சுவாமி’ என்ற அந்தக் கரகரப்பான காந்தக் குரலை மிகவும் நேசித்தோம். இடையிடையே நிறுத்தி மூச்சு வாங்க எடுத்துக்கொள்ளும் அவர் பாணி வித்தியாசமானது. சில நாட்களில் அவர் செய்தி வாசிக்கும்போது தாள்களை நகர்த்தும் சத்தம்கூடத் தெளிவாய்க் கேட்கும். கோபால் பல்பொடி, பொன்னான புதிய ரக்சோனா, பாண்ட்ஸ் என்று பல்வேறு பொருட்களின் விளம்பரங்களைக் கேட்பதே ஆனந்தமாக இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளைப் பற்றி வானொலியில் சொல்கிறார்களே என்று ஒரு சின்ன குதூகலம் இருக்கும்.

இன்றும் வானொலிக்கான தனி ரசிகர்கள் உண்டு. ஆனால், காதுகளுக்காக மட்டும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான காலம் முடிந்துவிட்டது. பண்பலையில் பாட்டும் பேச்சும் என்று பல விஷயங்கள் ஒலிபரப்பாகின்றன. என்னவோ அவற்றில் மனம் லயிப்பதில்லை. இளமைக் காலத்தில் வானொலியில் கேட்ட பாடல் களைக் கேட்கும்போது, அந்தக் கால நினைவுகளின் இனிமையை இன்றும் உணர முடிகிறது. 

- முனைவர் சௌந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்,தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com​
 நன்றி: தி இந்து http://tamil.thehind...e?homepage=true

Thursday, January 01, 2015

கூத்தபிரான் அவர்களுக்கு அஞ்சலி

பழம்பெரும் நாடக நடிகர் கூத்தபிரான் காலமானார். தனது வாழ்க்கையை, ஆல் இந்தியா ரேடியோவில், அறிவிப்பாளராக துவக்கிய கூத்தபிரான், குழந்தைகளுக்காக அவர், நாடகங்களை எழுதி இயக்கி நடிக்கச் செய்தார். 1970ம் ஆண்டுவாக்கில், இளைய தலைமுறையினரிடையே, 'வானொலி அண்ணா' என்று அன்போடு அழைக்கப்பட்டார். கூத்தபிரான், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்பிக்கும் பொருட்டு, 800க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சினிமா மற்றும் டிவிக்களின் வருகையால், ஒருபோதும் நாடகக்கலை பாதிக்கப்படாது என்றும், மற்ற ஊடகங்களை விட, நாடகங்களில் தான், பார்வையாளர்களின் பங்கு பெருமளவு இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஐந்து தலைமுறை மக்களை மகிழ்வித்த கூத்தபிரான், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2003ம் ஆண்டில், மாநில அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மியூசிக் அகாடமி, நாடக கலா சிரோன்மணி விருது வழங்கி கவுரவித்தது.
நன்றி / தினமலர் 23டிச 20142

வானொலி அண்ணா காலமானார்

பிரபல நாடகக் கலைஞரும் வானொலியில் நாடகங்கள் நடத்தி வானொலி அண்ணா என புகழ்பெற்றவருமான கூத்திபரான் நேற்று மரணமடைந்தார்.   நாடகங்களின் மீத தணியாத காதல் கொண்ட அவர் தம் இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அக்காலத்து வானொலியில் குழந்தைகளுக்கான நாடகங்களை தம் குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசி குழந்தைகள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தார்.  நாடக உலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர்.  கூத்தபிரான் இதுவரை 1000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி. அவரது இழப்பு நாடக உலகிற்கும் நகைச்சுவை விரும்பிகளுக்கும் ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையில்லை.  சென்னையில் நேற்று முன்தினம் நாடகம் நடித்து விட்டு ஒரு நிகழ்சிக்காக நேற்று ஹைதரபாத் சென்றவர் இரவு தூங்கும் போது மரணமடைந்தார்.அவருக்கு வயது 84 .அவரது உடல் ஐதராபாத்திலிருந்த்து இன்று சென்னை அடையாரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப் படுகிறது. அவரது உடலுக்கு பிரபலங்கள் மரியாதை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. -
See more at: http://www.thinakkural.lk/


வானொலி அண்ணா காலமானார்

3
டிச
2014