கூத்தபிரானுடன் வானொலியில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். எளிமையானவர், சூதுவாது தெரியாதவர். 1945-இல் கூத்தபிரான் பெற்றோருடன் சென்னை வந்தார். நாடு சுதந்திரம் பெற்ற அன்று நள்ளிரவில் ஒரு பூங்காவில் மூவர்ணக்கொடி ஏற்றியபோது அவரும் இருந்தார்.
இந்த உணர்வு பிற்காலத்தில், "மூவர்ணக்கொடி ஏற்றுவோம்' எனும் சிறுவர் தொடர் நாடகம் சென்னை வானொலியில் ஒலிபரப்ப கருவாக அமைந்தது. அந்த நாடகத்தை காஞ்சிப் பெரியவர் முழுமையாகப் படித்துப்பார்த்து, "சன்மார்க்கப் பிரகாசமணி' விருது வழங்கினார்.
வானொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகத்தான் சேர்ந்தார் என்றாலும், அப்போதே அன்றைய வானொலி அண்ணா, ரா. அய்யாசாமிக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். அவர் ஓய்வு பெற்ற பின், மழலை அமுதம், பாப்பா மலர், சிறுவர் சோலை ஆகியவற்றை கூத்தபிரானே தயாரித்து நடத்தினார்.
பெரியசாமி தூரனின் சிறுவர் கலைக் களஞ்சியத்தை முழுமையாகப் படித்து ஜீரணித்து, தொடராக ஒலிபரப்பினார்.
ராஜாஜி, அழ. வள்ளியப்பா, தூரன், பூவண்ணன், ராமகிருஷ்ண மடத்தின் அண்ணா ஆகியோரது குரலிலேயே, பாப்பாவுக்கு ஒரு கதை எனும் தொடரை ஒலிபரப்பச் செய்தார்.
"பாதி சொல்வோம் மீதி என்ன' போன்ற நிகழ்ச்ச்சிகளையும், "சொப்பனக் குழந்தை' போன்ற தொடர் நாடகங்களையும் தயாரித்தளித்தார். இவற்றில் எல்லாம் குழந்தைகளே கதாபாத்திரங்கள்.
வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி என்றாலே விழாக்கோலம் பூணும். குழந்தைகளை வாயிலுக்கே சென்று அவர் வரவேற்பார். பிழையறப் பேசுங்கள் எனும் தொடர் மூலம் தமிழைச்சரியாக உச்சரிக்கக் கற்றுத்தந்தார்.
1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி, அழ. வள்ளியப்பா ஏற்பாடு செய்து, ராஜாஜி கலந்துகொண்ட சிறுவர் நாடக விழாவில் கூத்தபிரான் முதல் பரிசு பெற்றார். ராஜாஜியின் ஆசி கிடைத்ததைப் பெரும் பாக்கியமாக அவர் கருதினார்.
1952-இல் டி.கே.எஸ்ஸின் கள்வனின் காதலி நாடகம் பார்த்தபோது, மேடையேறி, டி.கே. ஷண்முகத்தைப் பாராட்டினார். அன்று துவங்கியது அவரது நாடக வாழ்க்கை. 1953-இல் ரசிக ரஞ்சனி சபாவில் அவர் எழுதித் தயாரித்த "அவள் நினைவு' அரங்கேறியது.
1954-இல் துக்ளக் ஆசிரியர் சோ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் துவக்கியபோது, முதல் நாடகம், தேன் மொழியாள், கூத்தபிரான் எழுதியது. பகீரதன் கல்கியில் எழுதிய நாவலை நாடகமாக்கியது தான் இது. பின்னர், சோ எழுதிய ஒருசில நாடகங்களிலும் நடித்தார்.
கல்கி ஃபைன் ஆர்ட்ஸ் துவக்கினார். பின்னர் நவ பாரத் எனும் குழுவைத் துவக்கி 26 ஆண்டுகள் நடத்தினார். கூத்தபிரானின் கதாபாத்திரப் படைப்பு, இயற்கையாக இருக்கும் என்று சோ சொல்வார். அவர்களுக்கிடையே இருந்தது, வாடா நட்பு. ஆம், வாடா போடா என்றுதான் பேசிக்கொள்வார்கள்.
அவரது இயற்பெயர் நடராஜன். அவரது மனைவி லலிதாவின் யோசனையை ஏற்று, கூத்தபிரான் என்று மாற்றிக்கொண்டார். பெயர் மாற்றம் நடந்தது, வைத்தீஸ்வரன் கோயிலில்.
கூத்தபிரான், 26 நாடகங்களையும், குழந்தைகளுக்காக 20 நூல்கள் எழுதியுள்ளார். ஆறாயிரம் நாடகங்களில் நடித்துள்ளார். 80 வயதிலும், "காசிக்குப் போன கணபதி' நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
குழந்தைகளைப் பார்க்கும்போதும், அவர்களுடன் சரிசமமாகப் பேசும்போதும், கதைகளுக்குக் கரு கிடைப்பதாக அவர் சொல்வார்.
ஒவ்வொரு குழந்தைக்கு உள்ளேயும் நூற்றுக்கணக்கான கதைகள் புதைந்திருக்கும், என்பார். இவற்றைக் கூர்ந்து கவனித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி ஒலிபரப்பினார்.
குழந்தைகளே உலகம் என்று உறுதியாக எண்ணினார். அதை எடுத்துச்சொல்வதற்காகவே தாம் பிறந்ததாக நினைத்தார். குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களே தெரியும். அவர்களிடம் தீய எண்ணங்களை அண்டவிடக்கூடாது, என்பார்.
குழந்தைகளுக்காக ஒரு சிறுவர் சங்கத்தை, இறுதி மூச்சு வரை நடத்திவந்தார். குழந்தைகள் நாடகக்குழு வைத்திருந்தார். குழந்தை உள்ளம் படைத்த அவரும் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டிருந்தார்.
First Published : 25 December 2014 02:30 AM IST
நன்றி / தினமணி
No comments:
Post a Comment