ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 உலக வானொலி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2011 முதல் இது யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு உலகெங்கும் உள்ள வானொலிகளால்
கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் இரண்டு முக்கிய வானொலித் தொடர்பான நிகழ்வுகளை
நினைவூட்ட வேண்டியுள்ளது. ஒன்று இந்திய வானொலி பற்றியது, மற்றது இலங்கை வானொலி
பற்றியத் தகவல்.
முதலில் இந்திய வானொலி பற்றிய செய்தியைக் காண்போம். இந்தியா முழுவதும் 37க்கும்
மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த
ஞானவாணி வானொலியை மத்திய அரசு சமீபத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி
நிறுத்திவிட்டது. இது முற்றிலும் கல்விக்காக மட்டுமே செயல்பட்டு வந்த வானொலி
என்பது, இதில் குறிப்பிட்டு கூறவேண்டிய செய்தி. சமுதாய வானொலிகள் போல் அல்லாமல்
தனியார் துறை பண்பலை வானொலிகளுக்கு என்ன சக்தியில் ஒலிபரப்ப அனுமதிக்கப்பட்டதோ அதே
சக்தியில் கல்வி ஒலிபரப்புக்காக
தொடங்கப்பட்டதுதான் இந்த ஞானவாணி.
முதலில் அலகாபாத், பெங்களூர், போபால், விசாகப்பட்டிணம், லக்னோ மற்றும்
கோவையில் தனது ஒலிபரப்பினைத் தொடங்கியது ஞானவாணி. அதன் பின் படிப்படியாக நாட்டின்
முக்கிய நகரங்களில் ஒலிக்கத் துவங்கியது. தமிழகத்தில் முதலில் கோவை ஜி.ஆர்.டி. கலை
அறிவியல் கல்லூரியில் ஒலிக்கத் துவங்கியது ஞானவாணி. சென்னையில் அகில இந்திய வானொலியின் கலையகத்தினையே தொடக்க
காலத்தில் ஞானவாணி பயன்படுத்தி வந்தாலும், பிற்பாடு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு
மாற்றிக் கொண்டது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம், ஏற்கனவே அண்ணா
பல்கலைக்கழகத்தில்
அண்ணா எப்.எம்
செயல்பட்டு வந்தது. இந்தியாவிலேயே முதல் சமுதாய வானொலி என்ற பெருமை அண்ணா
எப்.எம்முக்கு என்றுமே உண்டு. ஒரே கல்வி வளாகத்தில் இரண்டு வானொலிகள்
செயல்பட்டதும் இந்தியாவில் வேறெங்கும் நடக்காத ஒன்று. அந்தப் பெருமையும்
தமிழகத்திற்கு தான்.
உலக வானொலி தினத்தினில் வானொலித் தொடர்பாக
இன்னும் ஒரு சிலவற்றையும் நாம் நினைவில் வைக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் முதல்
பண்பலை ஒலிபரப்பும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தான் 23 ஜுலை 1977இல்
தொடங்கப்பட்டது. அது மட்டுமல்ல, இந்தியாவின் முதல் உள்ளூர் வானொலி சேவையும் முதன்
முதலில் தமிழகத்தின் தென்கோடி நகரமான நாகர்கோவிலில் (1984) தான் தொடங்கப்பட்டது.
இப்படி வானொலித் துறையில் பல முதன்மைகளைக்
கொண்டது தமிழகம். ஆக, உலக வானொலி தினத்தினை மற்றவர்களை விட நாம்தான் சிறப்பாக
கொண்டாட வேண்டும்.
No comments:
Post a Comment