தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும்
மதுரை ஆகிய
ஊர்களில் மொத்தம் நான்கு ஞானவாணி நிலையங்கள் செயல்பட்டு வந்தன. மற்ற நிலையங்களை
விட திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து செயல்பட்டு
வந்த ஞானவாணிக்கு ஒரு முக்கியச் சிறப்பு உண்டு. அது, நேயர்களின் எண்ணிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் அது நேயர் சந்திப்பினை ஏற்பாடு செய்து நேயர்களை ஊக்குவித்தது.
இதனால் நேயர் கடிதங்களின் எண்ணிக்கை கூடியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அதிக
நேயர்களைக் கொண்ட ஞானவாணி நிலையமாக முன்னேறியது.
ஞானவாணி செயல்படுவதற்கான நிதியானது மத்திய
அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப்
பல்கலைக்கழத்தின் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டின்
இறுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த ஒலிபரப்பானது இந்தியா முழுவதும்
நிறுத்தப்பட்டது. சோகம் என்னவெனில் கடந்த பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியில்
இருந்தப்போது தொடங்கப்பட்டதுதான் இந்த வானொலி. மீண்டும் ஆட்சி கட்டிலில்
அமர்ந்தவுடன் முதல் வேலையாக ஞானவாணியை நிறுத்த உத்தரவு இட்டுள்ளது ஆளும் கட்சி.
வழக்கமாக கடந்த ஆட்சியில் துவங்கப்பட்டவை தான் நிறுத்தப்படும். ஆனால் ஞானவாணி
விடயத்தில் இது வேறு மாதிரி நடந்துள்ளது. ஒரு வேலை ஆளும் அரசிற்கு இவர்கள் ஆட்சி
காலத்தில்தான் தொடங்கப்பட்டது என்று எடுத்துச் சொல்ல யாறும் இல்லையோ என்னவோ?!
உலக வானொலி தினத்தில் ஒரே சோகமான செய்தி
வேண்டாம். எனவே அடுத்த வானொலித் தகவலுக்கு செல்லலாம். இது வானொலி நேயர்களுக்கு
மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான். அதுவும் தமிழகத்தில் உள்ள இலங்கை வானொலியின்
நேயர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை நிச்சயம் வழங்கும். அதற்கு முன் ஒரு சிறு
பிளாஷ் பேக். இலங்கை உள்நாட்டு போரின் போது இலங்கை வானொலியின் தமிழ் சேவைகள் தமிழக
நேயர்களுக்கு நிறுத்தப்பட்டன. முதலில் மத்திய அலையில் ஒலிபரப்பப்பட்ட கொழும்பு
சர்வதேச வானொலியின் வர்த்தகச் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் சிற்றலை வரிசையில்
ஒலிபரப்பப்பட்ட தேசியச் சேவை நிறுத்தப்பட்டது. பிற்பாடு தமிழில் ஒலித்துவந்த
முஸ்லிம் சேவையையும் தமிழக நேயர்கள் கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. முடிவில் மாலை மட்டுமே
ஒலித்து வந்த ஆசியச் சேவையில் தமிழ்ச் சேவையும் நிறுத்தப்பட்டு
மற்ற இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் மற்றும் மலையாளச் சேவைகள் மட்டுமே
ஒலிபரப்பப்பட்டு
வந்தது.
இப்படியாக உள்நாட்டுப் போர் காலகட்டத்தில்
நிறுத்தப்பட்ட போது இலங்கை வானொலியைத் தமிழத்தில் கேட்டுவந்த நேயர்கள் உண்மையிலேயே
தவித்துத்தான் போய்விட்டனர். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி இந்த உலக
வானொலி தினத்தின் போது கிடைத்துள்ளது. ஆம், மீண்டும் தான் ஒலிபரப்பிவந்த ஆசிய
சேவையில் தமிழ் ஒலிபரப்பினையும் இணைத்துள்ளது. இதன் காரணமாக இனி தமிழக நேயர்கள்
பெரிய பெரிய ஏரியல்களையும், சக்திவாய்ந்த பூஸ்டர்களையும் பயண்படுத்தி இலங்கை
வானொலியைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் சாதாரண சிற்றலை வானொலிப்
பெட்டியிலேயே இலங்கை வானொலியைக் கேட்கலாம். எனவே இதுநாள் வரை பரணில் தூங்கிய
சிற்றலை வானொலிப் பெட்டிகளைத் தூசி தட்டி எடுத்து பயண்படுத்துவோமாக.
சிற்றலை வானொலி என்று கூறியவுடன், இன்னொரு
தகவலையும் இங்கு இணைத்து சொல்ல வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக
இந்தியாவில் வானொலிப் பெட்டிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிலும்
குறிப்பாக இந்தியத் தயாரிப்புகள் அறவே கிடைப்பதில்லை. இன்று சந்தையில் கிடைக்கும்
பெரும்பாலான வானொலிப் பெட்டிகள் சீனத் தயாரிப்புகளாவே இருக்கின்றன. கடந்த
ஐந்தாண்டுகளுக்கு முன்பு கிடைத்த சீனத் தயாரிப்புகளில் சிற்றலைவரிசைகள் இருந்தன.
ஆனால் இப்பொழுது சந்தையில் கிடைக்கும் வானொலிப் பெட்டிகளில் சிற்றலை என்பது ஒரு
வாசத்திற்குக் கூட இல்லை. ஏன் மத்திய அலை ஒலிபரப்புகளையும் கூட இனி கேட்பது சிரமம்
தான்.
1 comment:
Great News.But Frequency and Timing is not mention in the article.
Post a Comment