குத்தகை நிலத்தில் இருந்து அகில இந்திய வானொலி நிலையத்தை வெளியேற்ற தமிழக அரசுக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கத்துக்கு எதிரே அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது. இந்த நிலையம், 1954-ஆம் ஆண்டு தமிழக அரசுக்குச் சொந்தமான 54 கிரவுண்ட் நிலத்தில், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.
பின்னர், 1983-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மேலும் 30 ஆண்டுகளுக்கு புதுப்பிக்ககப்பட்டது.
இந்த நிலையில், இந்த இடத்தில், பத்திரப்பதிவு, வணிக வரித்துறை அலுவலகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலத்தை திரும்ப பெற அரசு முடிவு செய்தது. இதுகுறித்து 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானமும் இயற்றியது.
இதன் அடிப்படையில், சென்னை மாவட்ட ஆட்சியர், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அகில இந்திய வானொலி நிலையத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை அகில இந்திய வானொலி நிலையம் மீறியுள்ளது. அனுமதியின்றி, தனியார் வானொலி நிலையத்துக்கு சொந்தமான ஒலிபரப்பு கோபுரத்தை வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ளது.
கட்டடமும் சேதமடைந்துள்ளது. வளாகம் முழுவதும் முள்புதர்கள் நிரம்பி உள்ளன. எனவே, குத்தகை நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசார்பாரதி தலைமைச் செயல் அதிகாரி, அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் ஜெனரல் உள்பட 4 அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், தமிழக அரசு சுமத்தும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. கட்டடம், வளாகமும் ஒப்பந்த நிபந்தனைகளின்படி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், அகில இந்திய வானொலி நிலையம் அமைந்துள்ள இடத்தின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினால், அகில இந்திய வானொலி நிலையத்தை, குத்தகை நிலத்தில் இருந்து வெளியேற்ற தடை ஏற்பட்டுள்ளது.
Source: Dinamani, First Published : 03 April 2015
No comments:
Post a Comment