அகில இந்திய வானொலி நிலையத்தின் விவித் பாரதி சேவைகளின் பண்பலை ஒலிபரப்பு, தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தில்லி, அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நேயர்களுக்கு, இனி செல்லிடப்பேசியிலும் இச்சேவை கிடைக்கும்.
மத்திய நிதியமைச்சரும், தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அருண் ஜேட்லி, இந்த பண்பலை ஒலிபரப்பை தொடக்கி வைத்தார். அப்போது, "விவித் பாரதி சேவைகள், 60-65 கி.மீ. சுற்றளவுக்குள், அனைத்து காலநிலைகளிலும் அதிக துல்லியத்துடன் மக்களைச் சென்றடையும்' என்று நேயர்களிடம் அவர் பேசினார்.
விவித் பாரதி, திரைப்பட இசை, குறு நாடகங்கள், கலந்துரையாடல் என கலவையான நிகழ்ச்சிகளை வழங்குகிறது. நாட்டிலேயே அதிக அளவிலான திரைப்படப் பாடல்களையும், இதர பாடல்களையும் விவித் பாரதி வைத்திருக்கிறது.
தொடக்க நிகழ்ச்சிக்கு பின்னர், அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய வானொலியின் பல்வேறு சேவைகளின் செல்லிடப்பேசி பயனுருக்களும் (அப்ளிகேஷன்ஸ்) விரைவில் கிடைக்கும். விவசாயிகளுக்காக, தூர்தர்ஷனின் கிஷான் தொலைக்காட்சியை அடுத்த மாதம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர், பிரசார் பாரதி தலைவர் சூர்ய பிரகாஷ், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பிமல் ஜுல்கா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Source: Dinamani, 15 April 2015
No comments:
Post a Comment