சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Thursday, December 15, 2016
ஏன் வர்தா புயலின் போது ஹாம் வானொலி வேண்டும்?
ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது? கேள்விக்கான பதில் இதோ
வயதான தாயை நினைத்து ஏங்கும் மகள். கர்ப்பமாக உள்ள மனைவியை நினைத்து வருத்தப்படும் கணவன். வேலைக்கு சென்ற தாயை தொடர்பு கொள்ள முடியாமல் கையறு நிலையில் உள்ள குழந்தைகள் என எல்லோரும் அகதிகளாக தொடர்பற்று தனித்துவிடப்பட்டோம். இப்போது சரி. தொலைபேசி, செல்பேசி, இணையம் எல்லாம் நமக்கு கை கொடுக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் நம் கையின் ஆறாவது விரலாக இருந்த செல்பேசி அதற்குள்ளே இருந்த இணையம், டார்ச் லைட், எஃப்.எம், என எல்லாவுமாய் இருந்தது நம்மை கைவிட்டது. அப்போது மட்டும் செய்திகளை தெரிந்துக் கொள்ள நமது தாத்தா, பாட்டி பயன்படுத்திய வானொலி பெட்டி, தொடர்பு கொள்ள ஹாம் ரேடியோ இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
“சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் ஊடகத்தில் பணிபுரிபவர்களிடமே ஹாம் ரேடியோ இல்லை. ஹாம் ரேடியோ இருந்திருந்தால் மக்களுக்கு சொல்கிறோமோ இல்லையோ பிரச்சனைகள அரசுக்காவது உடனடியாக தெரிவித்திருக்கலாம். அரசே இந்த வெள்ளத்தில் செயலற்று போனதற்கு காரணம் தொடர்புகள் அறுந்து போனதுதான்.”, என சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியரும் வானொலி மற்றும் ஹாம் ரேடியோ ஆராய்ச்சியாளருமான டாக்டர்.தங்க ஜெய்சக்திவேல் கூறுகிறார்.
ஏன் முக்கியம் ஹாம் ரேடியோ?
மொபைல் கம்யூனிகேஷனை எப்பவும் நம்ப முடியாது. மின்சார பிரச்சனைகள் இருக்கும். சென்னையில் இருக்கின்ற 4,500 டவர்களில் 4,000 டவர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அப்புறம் எப்படி செல்லில் தொடர்பு கொண்டு பேச முடியும்? இதை எல்லோரும் பயன்படுத்த முடியும். அவசரமான காலங்களில் முக்கியமாக சுனாமி ஏற்பட்ட நேரத்தில் அகில இந்திய வானொலிக்கு தொடர்பு கொள்ள உதவியதே ஹாம் ரேடியோக்கள் தான்.
“சென்னையில் 50 பேர் ஹாம் ரேடியோ பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து எங்கெல்லாம் தொடர்பில்லாமல் உதவி தேவைப்பட்டதோ அங்கெல்லாம் அவர்கள் நன்றாக செயல்பட்டார்கள்”, என்று இந்த வெள்ளத்தில் ஹாம் ரேடியோ எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார், பேராசிரியர்.
வானொலி கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன ஹாம் வானொலி? போலீஸ்லாம் கையில வச்சிக்கிட்டு “ஓவர், ஓவர்”னு சொல்லுவாங்களே அதுவா? அது வாக்கி டாக்கியாச்சே? என்கிறீர்களா! இல்லை ஹாம் வானொலி என்பது வேறு. பூவரசம் பீப்பி படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதில் அந்த நான்கு குழந்தைகளும் ஒரு பெரிய விசயத்தை ஹாம் ரேடியோ மூலம்தான் சாதிப்பார்கள்.
வாக்கி டாக்கி என்பது 500 மீட்டர் முதல் 1 கி.மீ வரை உள்ள சுற்றளவில் தனது சக்தியை பொருத்து மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் சாதனம். ஆனால், ஹாம் ரேடியோ என்பது 10 கி.மீ வரை செயல்படக்கூடியது. போலீசார் வைத்திருப்பதன் பெயர் வாக்கி டாக்கி அல்ல. வயர்லஸ் வானொலி. இந்த வயர்லஸ் வானொலி போன்றதுதான் ஹாம் ரேடியோ.
ஹாம் ரேடியோவை வாங்க உடனேயே புறப்படுறீங்களா? கொஞ்சம் இருங்கள். அதை எப்படி வாங்குவது என்பதையும் பேரா.ஜெய்சக்திவேல் கூறுகிறார்.
“எல்லோரும் ஹாம் ரேடியோவை வாங்கி உபயோகிக்கலாம். ஆனால், அதற்கு உரிமம் வாங்க வேண்டும். ஹாம் ரேடியோ மற்றும் அதற்கான லைசென்ஸையும் பெறுவதற்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு துறை நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாக வேண்டும். இதற்கான பயிற்சி மையங்கள் சென்னையில் இலவசமாக நடத்தப்படுகின்றன. ஆனால், ஆட்கள் குறைவாகத்தான் வருகிறார்கள். இப்பொழுது கூட கோபாலபுரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முடிந்த அளவுக்கு இதனை ஊடகவியலாளர்களும் அது சார்ந்து படிக்கும் தொடர்பியல் மாணவர்களும் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.”
வானொலி இந்த வெள்ளக்காலத்தில் எப்படி செயல்பட்டது?
நம்முடைய அகில இந்திய வானொலி வெள்ள காலத்தில் நன்றாக செயல்பட்டது. தங்களது உடைமைகளை இழந்தவர்கள், அதை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்களை ஒன்றைணைத்து ஒரு பாலமாக வானொலி செயல்பட்டது. இப்பொழுது நீங்கள் வானொலி மார்க்கெட்டுக்கு சென்று வானொலி வாங்க வேண்டும் என்றால் கூட வானொலி பெட்டியே இல்லை. ஏனென்றால், நாம்தான் வானொலி பெட்டியே வாங்காமல் உற்பத்தியாளர்களை ஓட ஓட விரட்டி விட்டோமே.
இனி என்ன செய்வது? உடனடியாக ஹாம் ரேடியோ பெறுவதற்கான முயற்சிகளை எடுங்கள். தாத்தா, பாட்டி உபயோகித்த வானொலியை தூசு தட்டுங்கள்.
எழுதியவர் - இப்போது டாட் காமிற்காக நந்தினி வெள்ளைச்சாமி
நன்றி - http://ippodhu.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment