Thursday, December 15, 2016

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ


நவீன தொழில்நுட்பத்தில் ‘ஹாம் ரேடியோ’!


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ, டிவி, டெலிபோன், செல்போன் என்று பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் இருந்தாலும், இவை அனைத்திலும் தனித்துவம் பெற்ற ஒரு விஞ்ஞான படைப்பு உண்டென்றால் அது நிச்சயம் ஹாம் ரேடியோவாகத்தான் இருக்கும். ஹாம் ரேடியோவைப் பற்றிய ஒரு சமீபத்திய நிகழ்வை சொன்னால் சட்டென உங்கள் நினைவுக்கு வரும்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி அலை, வழியில் இருந்த அந்தமான் தீவை அடியோடு நாசம் செய்தது. செல்போன், ரேடியோ சேவை, சேட்டிலைட் தகவல் தொடர்பு எல்லாம் பணால் ஆனது. அந்த நேரத்தில் கை கொடுத்தது ஹாம் ரேடியோ மட்டும்தான். ஆம், அந்தமானில் ஒரே ஒரு நபர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஹாம் ரேடியோவின் உதவியதால்தான் அங்கு சுனாமி தாக்கியதும், அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆந்திரா, தமிழகம், கேரளா மாநிலங்களை சுனாமி அலைகள் அடுத்தடுத்து புரட்டிப் போட்டதும் தெரியவந்தது. அன்று ஹாம் ரேடியோ என்ற ஒரு சேவை இருந்திருக்காவிட்டால், அந்தமானில் நிகழ்ந்தது பலருக்கும் மிகமிக தாமதமாகவே தெரியவந்திருக்கும்.

ஹாம் ரேடியோ என்பதற்கு பெரிய அர்த்தம் எதுவும் இல்லை. ஒலியை அளவிடும் ஹெர்ட்ஸ், நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் ரேடியோவைக் கண்டுபிடித்த மார்கோனி ஆகிய மூன்று பெயர்களின் முதல் எழுத்தை சுட்டு, ஹாம் ரேடியோ என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோவின் தலைமையகம் வாஷிங்டனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த ஹாம் ரேடியோவுக்கும் நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். சச்சின், முன்னாள் பிரதமர் ராஜீவ், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோர் ஹாம் ரேடியோ விஐபிகளில் குறிப்பிடத்தகுந்த சிலர். இந்த ரேடியோ உதவியால் உலகம் முழுவதும் உள்ள ஹாம் ரேடியோ உறுப்பினர்களுடன் எந்தவித கட்டணமும் இல்லாமல் எளிதில் பேசிக் கொள்ளமுடியும்.

பேஸ்புக், வாட்ஸ் அப் என்று இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள இந்த ஹாம் ரேடியோ உறுப்பினர்கள், தங்கள் பகுதிகளின் புதிய கண்டு பிடிப்புகள், நூதன சம்பவங்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதால், இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோ பயன்பாடு சுறுசுறுப்பாகத்தான் உள்ளது. ஆனாலும், ஹாம் ரேடியோவைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல், அதன் கடுமையான விதிமுறைகள் கேட் போட்டு விடுகின்றன.

தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் ஹாம் ரேடியோ பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் அமெச்சூர் ரேடியோ சங்கத்தினரால் ஹாம் ரேடியோ உறுப்பினர்கள் ஆவதற்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இருந்து ஹாம் ரேடியோ தேர்வுக்கு இரண்டு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் இந்த ஹாம் ரேடியோவில் உறுப்பினர் ஆகலாம். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் இருந்தால் போதும், எளிதாக ஹாம் ரேடியோ உறுப்பினர் ஆகலாம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல், இப்போதைய ஹாம் ரேடியோ தொழில்நுட்பம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு, இயக்கப்படுகிறது. ஆனால் இன்டர்நெட் தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் வெற்றிகரமாக செயல்படும். மற்றபடி, டிஜிட்டல் இல்லாமல் சாதாரணமாகவும் இயங்க முடியும்.

இதுகுறித்து மானாமதுரையைச் சேர்ந்த ஹாம் ரேடியோ எக்ஸ்பர்ட் துரைராஜ் கூறும்போது, “நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. 1975ம் ஆண்டு முதல் ஹாம் ரேடியோ உறுப்பினராக உள்ளேன். இந்த ரேடியோவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது ஆபத்து காலங்களில் காத்து ரட்சிக்கும் ஒரு ரட்சகன் என்றே சொல்ல வேண்டும். உலகில் பல பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் ஹாம் ரேடியோ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதை இப்போது கொஞ்சம் அப்டேட் செய்துள்ளோம். ஒலியை டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில் நாம் பேசுவது தெளிவாக இருக்கும். செல்போனில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப வசதி இருந்தால், இதை கம்ப்யூட்டருடன் இணைத்து எக்கோ லிங்க் எனப்படும் சாப்ட்வேர் மூலம் ஆண்டெனா இல்லாமலே பேச முடியும்.

மதுரை மற்றும் மானாமதுரையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, மதுரையில் வைத்து பயிற்சி கொடுத்து, அவர்களை ஹாம் ரேடியோவின் உறுப்பினராக்குகிறேன். இதில் உறுப்பினர் ஆவதற்கு வயர்லெஸ் பிளானிங் கோட் என்ற அமைப்பு மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசுகள் மூலம் உரிமம் வழங்கப்படுகிறது.

ஹாம் ரேடியோவைப்பற்றி இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரியவில்லை. ஹாம் ரேடியோ மூலம் தன்னலமற்ற சேவைகள் செய்யலாம். இப்போதைய சந்தையில் 7ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கிடைக்கிறது. சாதாரண ஹாம் ரேடியோ மூலம் பேசும்போது இரைச்சல் சத்தம் அதிகமாக இருக்கும், டிஜிட்டல் தொழில்நட்பத்தில் சப்தம் மிகவும் தெளிவாக இருக்கும். தொழில் நுட்ப கல்லூரிகளில் கூட ஹாம் ரேடியோ பற்றி கற்றுக் கொடுப்பது இல்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். ஹாம் ரேடியாவைப் பற்றி கற்றுக் கொள்வதும், அதை கற்றுக் கொடுப்பதும் பெருமைக்குரிய விஷயம். அடுத்தத் தலைமுறையினரும் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய கலை இதுவாகும்” என்றார்.

உங்கள் மனதில் ஒரு முறை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளை ரீவைன்ட் செய்து பாருங்கள்... ஹாம் ரேடியோ செய்த சேவையும், அதைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் தன்னாலேயே ஏற்பட்டுவிடும்...

நன்றி- ஜன்னல் சார்பாக சாய் ஷிவானி

No comments: