ஹாம் வானொலி என்பது ஒரு அறிவுப்பூர்வமான ஊடகம். இதன் துணைகொண்டு நாம் நம் பொது
அறிவினை மட்டுமல்லாது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.
உலக அளவில் ஹாம் வானொலித் தொடர்பாக பல போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றில் கலந்து கொள்வதன்
மூலம், உலக அளவில் புகழ்பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஹாம் வானொலிப் போட்டிகள்
ஹாம் வானொலிப் போட்டிகளில் ஹாம்கள் கலந்து கொள்வது என்பது ஒரு வகையில் அவர்கள்
தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கானது என்று வைத்துக்கொள்ளலாம். காரணம், வெறுமனே, ஹாமாக
இருப்பதில் ஒன்றும் சுவாரஷ்யம் இல்லை. ஹாம் போட்டிகளில் உடனுக்குடன், அவரவர்களின் அடையாளக்
குறியீடுகள் பகிர்ந்துகொள்ளப்படுவதுடன், குறுகிய வாக்கியங்களாக தகவல்களையும் பகிர்ந்து
கொண்டு அடுத்த தொடர்புக்கு சென்று விடுவர். காரணம் போட்டிகளில் யார் அதிக ஹாம்களை ஒரு
குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்பு கொள்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி பெரும் வாய்ப்புகள்
அதிகம்.
ஒரு சில போட்டிகளில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக தொலைதூர
நாடுகளில் இருந்து வரும் ஹாம் வானொலிகளைப் பிடிப்பது அனைவருக்குமே சவாலான ஒன்று தான்.
அதுவும் குறைந்த சக்தியில் ஒலிபரப்பும் ஹாம் வானொலிகளைப் பிடிப்பது என்பது யாருக்குமே ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு
தான். பொதுவாகவே இது போன்ற ஹாம் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொழுது ஒரு சில சட்ட திட்டங்களை
கொண்டு செயல்படுவது இன்றியமையாததாகும். அவை,
ஹாம் வானொலிகளோடு உரையாடும் பொழுது சுருக்கமாக முடித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக
ஹாம்களின் அழைப்பு குறியீடுகளை (Call Sign) தெளிவாகக் கேட்டுக்கொண்டு, உங்களின் சிக்னல்
எப்படி அவருக்கு கிடைக்கிறது என்பதனையும் தெரிந்து கொண்டு தொடர்பினை துண்டிப்பது நல்லது.
காரணம், இது போன்ற அரிதான ஹாம் நிலையத்தினை தொடர்பு கொள்ள நம்மைப் போன்றே பலரும் ஆவலுடன்
இருப்பர். மேலும், நமக்கும் கூடுதலாக நேரம் கிடைப்பதால், இன்னும் இரண்டு ஹாம்களை அந்த
நேரத்தில் பிடித்துவிடலாம். எனவே போட்டிகளின் போது சுருக்கம் மிக அவசியம். காலமும்
காலநிலையும் பின்பொரு சமயத்தில் கைக்கொடுக்கும் பட்சத்தில் அந்த தொடர்பினை மீண்டும்
ஏற்படுத்திக் கொள்ளலாம்.
போட்டியில் கலந்துகொள்ளும் பொழுது, உங்களிடம் தொடர்பு கொள்ளும் நிலையம் முதலில்
என்ன சொல்லவருகிறது என்பதைத் தெளிவாகக் கேளுங்கள், அதன் பின், அந்த நிலையம் எங்கே இருந்து
ஒலிபரப்புகிறது. பொதுவாக இது போன்ற போட்டிகளில், ZONE-களின் எண்கள் பறிமாற்றம் செய்துகொள்ளப்படும்.
மேலும் போட்டி நடத்துபவர்கள், ஒரு சில எண்களைக் கொடுத்திருப்பர். அப்படியான சமயத்தில்,
அந்த எண்களை மனதில் பதிய வைத்துக்கொள்வது நலம் தரும்.
போட்டிகளுக்கு நுழைவதற்கு முன் போட்டியின் நிபந்தனைகளைத் தெளிவாக படித்துக்கொள்வது
நலம். காரணம், தேவையற்ற குழப்பத்தினை போட்டியின் போது தவிர்க்கலாம். என்ன விதமான தகவல்களை
போட்டியாளர்கள் கேட்கிறார்கள் என்பதனைப் பொருத்து, உங்களின் உரையாடலில் அவை இருக்க
வேண்டும். பொதுவாக சிக்னல் ரிப்போர்ட்களும், இடங்களும் மட்டுமே பறிமாற்றம் செய்துகொள்ளப்படும்.
ஒரு சில சமயங்களில் வரிசை எண்கள் பறிமாற்றம் செய்து கொள்ளப்படும். நீங்கள், எத்தனையாது
தொடர்பாளர் என்பதனை எதிர்புறம் இருந்து உங்களுக்கும், உங்களின் தொடர்பில் அவரின் வரிசை
எண்ணையும் தெளிவாக பறிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பொதுவான ஒரு சில சட்ட திட்டங்களை
சர்வதேச அமெச்சூர் சொசைட்டிகள் வடிவமைத்துள்ளன. அவற்றை பல மன்றங்கள் தங்களின் இணைய
தளங்களில் தெளிவாக வெளியிட்டுள்ளன. குறிப்பாக ஏ.ஆர்.ஆர்.எல் மன்றம்
www.arrl.org/contest-calendar எனும் முகவரியில் இதனை விரிவாக பதிவேற்றம் செய்துள்ளது.
மற்றொரு குழுவான ஹார்னுகோஃபியா www.hornucopia.com/contestcal எனும் முகவரியில் சற்றே
விரிவாக விளக்கியுள்ளது. அது மட்டுமல்லாது, QST மாத இதழும்,Contest Corral எனும் தலைப்பில்,
ஹாம் போட்டிகளை மையப்படுத்திய தொடரை வெளியிட்டு வருகிறது.
மிக முக்கியமாக ஹாம் வானொலி போட்டியில் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவர்
என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். பல நாடுகளில் உள்ள ஹாம்களுக்கு தங்களின் இருப்பிடம்,
அழைப்புக் குறியீடு, சிக்னல் ரிப்போர்ட் மட்டுமே ஆங்கிலத்தில் கொடுக்கத் தெரியும்,
மற்றவற்றை அவர்களிடம் கேட்டாலும் பதில் கிடைக்காது. அதனால் தான் பொதுவான மொழியாக ‘க்யூ’
குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த க்யூ குறியீடுகள் துணை கொண்டு மொழி தெரியாத
நாட்டினருடனும் எளிதாக தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.