Showing posts with label தனியார் பண்பலைகள். Show all posts
Showing posts with label தனியார் பண்பலைகள். Show all posts

Wednesday, September 07, 2011

புதிதாக 806 தனியார் பண்பலைகள்

தனியார் பண்பலை வானொலிக்கான மூன்றாவது கட்ட ஏலத்தினை விட்டுள்ளது மத்தியஅரசு. இதன் மூலம் புதிதாக இன்னும் 806 தனியார் பண்பலை வானொலிகள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட உள்ளன. இந்த முறை ஏலத்தினை இணையம் மூலமாகவே விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ,1733 கோடி ரூபாய் வருவாய் வரகவுள்ளது.

மேலும் இந்த முறை அந்நிய முதலீடும் 20ல் இருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 31 புதிய தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அனுமதியை வழங்கியுள்ளது அமைச்சகம். தற்சமயம் 653 தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அம்பிகா சோனி பிடிஐ-க்கு
வழங்கிய ஒரு செவ்வியில் தெரிவித்து உள்ளார். (பொள்ளாச்சி விஜயன் உதவியுடன்)

Monday, August 11, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 3

முதாயத்தில் நேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் வழிகாட்டியாக, அறிவு புகட்டும் கருவிகளாகப் பண்பலைகள் செயல்படுத்தல் அவசியமாகின்றது. அதனைக் கருத்தில் கொண்டு ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில் சிந்தித்து நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்குதல் வேண்டும்.

வணிகமயமாகிவிட்ட பண்பலைகள் மொழி, பண்பாடு, சமூகக் கண்ணோட்டம், இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் யதார்த்த வாழ்க்கை உறவுகள் ஆகியவற்றைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. ஆனால் இனிமேலாவது தன்னம்பிக்கையை வளர்க்கும் சிந்தனையின் புதிய பரிமாணங்களை இளைஞர்களுக்கு உணர்த்திடும் வகையிலும், உணர்வுகளை, உறவுகளைக் கொச்சைப்படுத்தா நிலையிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தன் நிகழ்ச்சிகளை மாற்றியமைக்கவேண்டும்.

அந்த வகையில் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக திரைப்படப் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பாமல் மாற்றாக பொதுவிவாத மேடை, இலக்கிய நிகழ்வுகள், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள், பொது அறிவு போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கிடும் வேலையில் இடையிடையே பொழுது போக்கு நிகழ்வுகளும் இருப்பதில் தவறில்லை.

பண்பலைகளின் பண்பாட்டுச் சிதைவுகளைத் தடுத்து நிறுத்தி சமூக அரங்கில் அதன் மீதான மதிப்பும், பார்வையும் சரித்திரமாகப் பதிவு செய்யப்படவேண்டுமானால் பண்பலை ஒலிபரப்பைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்திடவும் ஒருகட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். அதற்கென ஒழுங்கு முறை அமைப்போ தனி வாரியமோ அமைப்பது சாத்தியமா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும் பண்பலைகள் தன்னளவில் சமூகக் கட்டுப்பாட்டுணர்வுடன் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுதல் கட்டாயமாக்கப்படவேண்டும்.

“பசுமை பண்பலை” போல கருத்தாழமிக்க நிகழ்ச்சிகளை, இளைஞர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் நிகழ்ச்சிகளை வழங்கிட முன் வருமானால் பொழுதுபோக்கிற்காக பண்பலை கேட்கும் நேயர்களைக் குறிப்பாக இளைஞர்களை அறிவுசார் நிகழ்ச்சிகளையும் கேட்க வைத்த பெருமை பண்பலைகளுக்கு உண்டு என்று எதிர்காலச் சமூகம் பாராட்டினை நல்குவதோடு மக்கள் மத்தியில் பண்பலைகளின் செல்வாக்கும், மதிப்பும் நாளும் உயரும் என்பதில் ஐயமில்லை.
- ரா. வெங்கடேஷ். (ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...)

Monday, August 04, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை

உலகை உள்ளங்கைக்குள் அடக்கும் உன்னதக் கணிப்பொறித் தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சியில் வியத்தகு முன்னேற்றம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகின்றஊடகத்துறையில் எத்தனையோ மாற்றங்கள்.
இவற்றிற்கிடையில் இன்றும் வானொலியின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது வானொலிக்குக்கிடைத்த வெற்றியாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிரான விடுதலைப் போராட்டத்தில் மண்ணின் மைந்தர்களிடையே தேசப்பற்றை, விடுதலை வேட்கையை ஊட்டி உணர்வு பெறச் செய்ததில் வானொலிக்கு அளப்பரிய பங்கு உண்டு.
அந்த வகையில் ஏழை, எளிய மக்களின் உயிர்மூச்சாக, செய்திப் பெட்டகமாக விளங்கிய வானொலி அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப புரட்சி காரணமாக தன் உண்மை முகத்தை இழந்து அல்லது மறைத்து பொழுதுபோக்கு எனும் முகமூடி அணிந்து ‘பண்பலை’ என்னும் புதிய அவதாரம் எடுத்துள்ளது.
வானொலியின் புதிய அவதாரமான பண்பலைகளின் எண்ணிக்கை கிராமங்கள், நகரங்கள்,பெருநகரங்கள் என்ற வேறுபாடின்றி பல்கிப் பெருகிய தோடு மட்டுமன்றி ‘வானொலி ஒலிக்காதவீடே இல்லை’ என்ற நிலையை மாற்றி ‘பண்பலை ஒலிக்காத வீடே இல்லை’ என்ற சூழல் தற்போதுஉருவாக்கி உள்ளது.
இதன் காரணமாகவோ என்னவோ, எப்படி கடிவாளம் இல்லாத குதிரை தாறுமாறாக ஓடுகின்றதோ அதைப் போல கட்டுப்பாடு எனும் கடிவாளம் இல்லாமல் தனியார் பண்பலைகள் சமூகத் தளத்திலிருந்து விலகி இளைஞர்கள் மத்தியில் சிந்தனைச் சிதறல்களை உருவாக்கி பண்பாட்டுச் சிதைவுகளைப் பதியவைக்கும் வரம்பு மீறிய நாகரிக மோசடியை நாளும் நிகழ்த்தி வருவது வானொலியின் உண்மை நேயர்களை வேதனைக்குள்ளாக்குகின்றது.
கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, இசை, இலக்கியம், நாடகம், நாட்டியம், பொழுதுபோக்கு என்று பல்துறை நிகழ்ச்சிகள் பண்பாட்டு, கலாச்சார சீரழிவின்றி வானொலியால் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் எந்த அளவிற்குப் புதிது, புதிதாக பண்பலைகள் (தனியார்) உருவாகின்றதோ அதேபோல்எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுவதால் பண்பாடும், கலாச்சாரமும் இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளன.
மக்களின், இளைஞர்களின் பொழுதை எவ்வாறேனும் போக்கடிப்பது குறிக்கோள் என்ற ரீதியில் 24 மணி நேரமும் பண்பலைகளின் குரல் ஓய்வின்றி ஒலித்து வருகின்றது. புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் ஆர்வத்தில் மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளை அப்படியே தங்களுக்கேற்ற பாணியில் மாற்றம் செய்து ஒலிபரப்புகின்றனர்.
மேலும் வணிக ரீதியிலான போட்டி, ஒலிபரப்பில் முன்னணி பெற்றிட முயலும் துடிப்பு காரணமாகபண்பலைகள் அடிக்கும் லூட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது கவலையளிப்பதாகஉள்ளது.
எந்த பண்பலையானாலும் இளைஞர்கள்தான் அதன் மையப்புள்ளி. இளைய சமுதாயத்தைச் சுற்றியேஅனைத்து நிகழ்ச்சிகளும் உருவாக்கப் படுகின்றன. இளைஞர்களைக் கவர்வதற்காகப் பொருந்தாத நிகழ்ச்சிகளைக்கூடப் பண்பலைகள் ஒலிபரப்பத் தயங்குவதில்லை,
கேலிக்கூத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் ‘ரேடியோ ஜாக்கிகள்’ எனும் தொகுப்பாளினிகளின் புன்னகை கலந்த புரிதலற்ற பேச்சு, ஆங்கிலக்கலப்புடன் கூடிய வார்த்தை ஜாலம், சிந்திக்கத்தூண்டாதபுதிர் வினாக்கள் பொது அறிவிற்குப் பொருந்தாக் கேள்விகள்...இப்படிப்பல!
பேசுபவர்க்கும் கேட்பவர்க்கும் என்னவென்று புரியாமல் போகும் நிகழ்ச்சிகளால் சமூகத்திற்கு என்ன பயன் கிட்டும் என்பது தெரியவில்லை. இளைஞர்களைத் தங்கள் பண்பலை நோக்கி கவரஇப்படிப்பட்ட பண்பாட்டுச் சீர்குலைவு நிகழ்ச்சிகளை வழங்கிட இவர்களிடம் யார் கேட்டது?
(தொடரும்...)
- ரா. வெங்கடேஷ் ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...