சமுதாயத்தில் நேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் வழிகாட்டியாக, அறிவு புகட்டும் கருவிகளாகப் பண்பலைகள் செயல்படுத்தல் அவசியமாகின்றது. அதனைக் கருத்தில் கொண்டு ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில் சிந்தித்து நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்குதல் வேண்டும்.
வணிகமயமாகிவிட்ட பண்பலைகள் மொழி, பண்பாடு, சமூகக் கண்ணோட்டம், இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் யதார்த்த வாழ்க்கை உறவுகள் ஆகியவற்றைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. ஆனால் இனிமேலாவது தன்னம்பிக்கையை வளர்க்கும் சிந்தனையின் புதிய பரிமாணங்களை இளைஞர்களுக்கு உணர்த்திடும் வகையிலும், உணர்வுகளை, உறவுகளைக் கொச்சைப்படுத்தா நிலையிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தன் நிகழ்ச்சிகளை மாற்றியமைக்கவேண்டும்.
அந்த வகையில் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக திரைப்படப் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பாமல் மாற்றாக பொதுவிவாத மேடை, இலக்கிய நிகழ்வுகள், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள், பொது அறிவு போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கிடும் வேலையில் இடையிடையே பொழுது போக்கு நிகழ்வுகளும் இருப்பதில் தவறில்லை.
பண்பலைகளின் பண்பாட்டுச் சிதைவுகளைத் தடுத்து நிறுத்தி சமூக அரங்கில் அதன் மீதான மதிப்பும், பார்வையும் சரித்திரமாகப் பதிவு செய்யப்படவேண்டுமானால் பண்பலை ஒலிபரப்பைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்திடவும் ஒருகட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். அதற்கென ஒழுங்கு முறை அமைப்போ தனி வாரியமோ அமைப்பது சாத்தியமா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும் பண்பலைகள் தன்னளவில் சமூகக் கட்டுப்பாட்டுணர்வுடன் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுதல் கட்டாயமாக்கப்படவேண்டும்.
“பசுமை பண்பலை” போல கருத்தாழமிக்க நிகழ்ச்சிகளை, இளைஞர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் நிகழ்ச்சிகளை வழங்கிட முன் வருமானால் பொழுதுபோக்கிற்காக பண்பலை கேட்கும் நேயர்களைக் குறிப்பாக இளைஞர்களை அறிவுசார் நிகழ்ச்சிகளையும் கேட்க வைத்த பெருமை பண்பலைகளுக்கு உண்டு என்று எதிர்காலச் சமூகம் பாராட்டினை நல்குவதோடு மக்கள் மத்தியில் பண்பலைகளின் செல்வாக்கும், மதிப்பும் நாளும் உயரும் என்பதில் ஐயமில்லை.
- ரா. வெங்கடேஷ். (ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...)
No comments:
Post a Comment