வானொலிகளுக்கு இன்று பல்வேறு வகைகளில் போட்டி உள்ளது. இது பற்றி தங்களின் கருத்து?
என்னைப் பொருத்தவரையில், இதனை இரண்டு கோணங்களில் பார்க்க விரும்புகிறேன். ஒன்று, நான் ஏற்கனவே சொன்னது போன்று எதிர்வரும் 50 அல்லது 100 நூறு ஆண்டுகளில் பிரச்சனைகள் தீரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சுதந்திரமான தேசிய வானொலிகள் அல்லது தள வானொலிகள் எனப்படும் Local Radios சென்று சேர முடியாத இடங்களுக்கு சிற்றலை சென்று சேர முடியும்.இதற்கு இராணுவத் தடைகள் மட்டு மல்லாது எல்லாத் தடைகளையும் ஊடுறுவிக் கொண்டு போகும் ஆற்றல் இதற்கு உண்டு.
அந்தக் களத்தில் சிற்றலை தொடர்ந்து வாழும். உதாரணமாக தமிழ் ஈழ நிலப்பரப்பினை எடுத்துக் கொள்ளலாம். அங்கே உள்ள அரசு ஊடகங்களும் பொய் சொல்கிறது. இங்கே உள்ள இந்திய ஊடகங்களும் பொய் சொல்லும் போது, இந்த சிற்றலை வானொலிகள் உண்மையின் உரைகல்லாகத் திகழ்கிறது. இந்த பணியைச் செவ்வனேச் செய்தால் நிச்சயமாக வரும் காலத்திலும் அதற்கு ஒரு இடம் இருக்கிறது.
இரண்டாவது, எளிதாக அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றால், பண்பலை வானொலிகளோடு ஒரு புரிந்துணர்வு அவசியம் தேவைப்படுகிறது. சிற்றலையினுடையத் தரமான உள்ளீடுகளை (Content) இது போன்ற பண்பலை மற்றும் மத்திய அலை வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யலாம். உதாரணமாக வேரித்தாஸின் நிகழ்ச்சிகளும், பிபிசியின் நிகழ்ச்சிகளும் சூரியன் எப்ஃஎம்மில் ஒலிபரப்பலாம். இது போன்றதொரு ஒப்பந்தம் விரைவில் வரும், அப்படி பண்பலை வானொலிகளோடு கைகோர்த்துச் செல்லாவிடில், வரும் காலம்,சிற்றலை வானொலிகளுக்கு ஒரு கேள்விகுறியாக ஆவதற்கு வாய்ப்பு உண்டு.
வேரித்தாஸ் தமிழ்பணியில் பெற்ற அனுபவம் ‘தமிழ் மையத்திற்கு’ எந்த அளவில் பயன்படுகிறது?
வேரித்தாஸில் பணியாற்றியபோது எனக்கு கிடைத்தப் பரந்து விரிந்த அறிவு, உலகத்தைப் பார்கின்ற விதம், மானுடப் பிரச்சனைகளை அனுகுகின்றவிதம், என்னுடைய உலகப் பார்வையையே மாற்றிப்போட்டது என்றால் அது மிகையில்லை. தமிழ் மக்களினுடையப் பிரச்சனைகளைக் கூட, உலக அரங்கிலே நின்று கொண்டு பார்க்கின்ற பொழுது, புதிய பரிமாணங்கள் நமக்கு கிடைக்கிறது. அந்த வகையில் என்னைக் கேட்டால் வேரித்தாஸ் அனுபவம் என்பது, எனக்கு விலைமதிக்க முடியாதஅனுபவமாகத் தான் உள்ளது.
தமிழ்பணியில் பணியாற்றிய காலந்தொட்டு இன்று வரைத் ஏதேனும் நேயர்கள் உங்கள் தொடர்பில் உள்ளனரா?
நேயர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க எனக்கும் ஆசை இருந்தது. ஆனால் வாழ்க்கை என்பது புதிய பணிகளை நம் மீது சுமத்துகிறது. அவற்றை நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது, மனித உறவுகளைப் பேணுவதில் ஒரு பின்னடைவு வரத்தான் செய்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இப்பொழுது யாருடனும் தொடர்பு இல்லை. ஆனால் மானசீகமாக நினைக்கையில், இப்படியெல்லாம் நல்ல நேயர்கள் அப்பொழுது இருந்தார்கள், இன்றைக்கும் கூட போடிப்பட்டிபுதூர்செல்வராஜ், மோப்பிரிபாளையம் தங்கராஜ் போன்றவர்கள் நினைவில் நிற்கிறார்கள், பத்தாண்டுகள் கடந்து விட்டாலும் கூட ஒரு சில நேயர்கள் எழுதியக் கடிதங்களை இன்றும் என்னால் மனப்பாடமாகச் சொல்ல முடியும். உதாரணமாக கழுவாஞ்சிக்குடி ஒந்தாச்சி மடம் காந்தகுமார் ஆகட்டும், அண்மையில் படுகொலைச் செய்யப்பட்ட தர்மரத்தினம், வவுனிக்குளத்தில் இருந்துஎழுதிய பேதுரு பிள்ளை ஆகியோர் எழுதிய கடிதங்கள் இன்றும் எனது மனதில் நிழலாடுகிறது. (தொடரும்..)
No comments:
Post a Comment