Tuesday, August 19, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 3)


சிற்றலை வானொலிகளைக் கேட்க டெலஸ்கோப்பிக் ஆன்டெனா மிகவும் உதவுகிறது. சிலவீடுகளில் ஜன்னல் மூலைகளில் வானொலிப் பெட்டியை வைத்துக் கேட்கும் போது, ஒலியின் தரம்உயர்ந்து காணப்படும். இதனை அட்டெனுவேஷன் (Attenuation) என்கிறோம். எனவே சிற்றலை கேட்பவர்கள் “பேட்டரி” மூலம் வானொலி பெட்டியை இயக்கி, வீட்டின் பல பகுதிகளில் வைத்து சோதனை செய்தால் ஒலியின் தரம் சில மூலைகளில் அதிகமாகவும், தெளிவாகவும் இருக்கும்.

பொதுவாக, நமது நாட்டுக்கு நல்ல திறனுடன் ஒலிபரப்பப்படும் வானொலிகளைக் கேட்க டெலஸ்பிக் ஆன்டெனா போதுமானது. ஆனால் சில வெளிநாட்டு வானொலிகள் சக்தி உள்ளவைகளாக இருந்தபோதும், வெகு தொலைவிலிருந்து எந்த வித அஞ்சல் வசதியில்லாமல் நேரடியாகஒலிபரப்பு செய்யும் போது வெளி ஏரியல் தேவைப் படுகிறது. உதாரணமாக ரேடியோ அர்ஜென்டீனா,பிரான்ஸ், நியூஜிலாந்து, ஈக்வடார், ஸ்வீடன் போன்ற நாடுகளின் வானொலிகளை வெளி ஏரியில் மூலம்தெளிவாகக் கேட்கலாம்.

சிலசமயம் வானொலிகள் மற்ற நாடுகளுக்கான சேவைகளை ஒலிபரப்பு செய்யும்போது அவை நமக்காக இல்லாவிட்டாலும் நாம் வெளி ஏரியல் மூலம் தெளிவாகக் கேட்கலாம். சிற்றலை நேயர்களுக்கு QSL எனப்படும் அத்தாட்சி அட்டை சேகரிக்கும் ஆர்வம்உள்ள அவர்கள் அவசியம் வெளி ஏரியலைத் தேர்ந்தெடுத்து வெகுதொலைவில் உள்ள வானொலிகளைத் தேடலாம். வெளி ஏரியல் டெலஸ்கோப்பிக் ஆன்டெனாவுடன் இணைத்ததும் பல மடங்கு தெளிவாகக் கேட்கும். சிற்றலை நேயர்கள் வானொலி கேட்கும் போது கணினி, தொலைக் காட்சி, ட்யூப் லைட், மிக்ஸி போன்ற சாதனங்களை நிறுத்திவிட்டால் அவை எழுப்பும் மின்காந்த அலைகளின் இடையூறு குறையும்.

வெளி ஏரியல் உபயோகிக்கும்போது ‘எலக்ட்ரானிக் சோக்’ பொருத்தப்பட்ட ட்யூப்லைட்டு களைத் தவிர்ப்பது நல்லது. “எலக்ட்ரானிக் சோக்” வானொலியின் சமிக்ஞைகளை (Signal) அழுத்துவதால், சிற்றலை வானொலிகள் சரிவரக் கேட்பதில்லை,அடிக்கடி மின்னிக்கொண்டு இருக்கும் ட்யூப்லைட்டுகள் ரேடியோ ஒலிகளைப் பெரிதும் பாதிக்கும்.“சோக்” பழுதடைந்தால் “பர்ர்ர்” என்ற “வண்டு பறக்கும்” சத்தம் கேட்கும், பொதுவாக இவைகளை“மனித இடையூறுகள்” என அழைக்கலாம். (தொடரும்..) - சென்னை வி. பாலு

No comments: