Tuesday, May 26, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 1


அன்பான நண்பர்களே!
சர்வதேச வானொலி இதழின் மூலம் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் கட்டுரைகள் எழுதிய அனுபவம் அதிகம் இல்லாததனால் என் கட்டுரையில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். வானொலி சம்பந்தமான பல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்.

நம்மில் பலருக்கு நம் பூமி, மற்ற கோள்கள், சூரியன், விண்மீன்கள் எவ்வாறு தோன்றின என்று அறிவியல் அடிப்படையில் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐந்து (பஞ்சம்) க்கும் அப்பாற்பட்டு விரிந்திருக்கும் ஒன்றை விஸ்வம் - பிரபஞ்சம் என்கிறார்கள். இந்த சொல் பிரபஞ்சம் அறிவியலிலும் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பனிக்காலங்களில் காலையில் வீட்டின் சன்னல் கதவுகளைத் திறந்து சூரிய ஒளியை அனுமதிக்கும் போது புகைபோன்று காற்றில் உள்ள புழுதி எழுதுவது போல தோன்றும் காலியான ஒரு அறையில், காற்றில் தூசிகள் அந்தரத்தில் நிற்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த தூசிகளில் ஒன்றுதான் நமது சூரியன். பூமி, நிலா ஆகிய கோள்களும் மற்ற தூசிகள் பிற நட்சத்திரங்கள் அதாவது வேறு சூரியன்களாகும். இந்த தூசிகளைத் தவிர்த்து மீதி இருக்கும் காலி இடத்தை பிரபஞ்சம் என்கிறோம். அறைக்கு நான்கு சுவர்கள் என்ற எல்லை வரம்பு உள்ளது. ஆனால் பிரபஞ்சத்துக்கு அம்மாதிரி எல்லை ஏதுமில்லை. அது எப்போதும் விரிந்து சென்று கொண்டே இருக்கிறது.

அமாவாசை இரவில் நாம் வானத்தில் காண்பது பல்லாயிரம் நட்சத்திரங்கள். ஆனால் அவை அனைத்தும் நமது ஆகாய வெளியில் அண்டையிலிருக்கும் ஒரு சிறு பகுதியே. இன்னும் பல கோடி தாரகைகள் ஆகாயமெங்கும் பல பில்லியன் ஒளியாண்டுகள் பரப்பளவுக்கு பரவி உள்ளது. அவற்றை நம்மால் பார்க்க முடியாது. சிறந்த தொலைநோக்கி மூலமும், ஹப்புள் போன்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் நாம் பல புதிய நட்சத்திரக் குவியல்களைக் கண்டு பிடித்துள்ளோம். இந்தக் குவியல்களைத்தான் கேலக்ஸி (உடு மண்டலம்) என்கிறோம்.

வைரங்களை வாரி இரைத்தது போல் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் அடங்கிய நமது ஆகாயம் ஒரு காலத்தில் இருண்டு கிடந்தது. கிட்டத்தட்ட 12 அல்லது 15 பில்லியன் (10 அல்லது 100 கோடி) அதாவது 1200 முதல் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஒட்டுமொத்த ஆகாயமும் அதில் நிரம்பியுள்ள சகல ஒளி ஒளியற்ற பொருட்களும் ஒரு புள்ளியிலிருந்து பெரு வெடிப்பால் வெடித்துக் கிளம்பின என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த பெருவெடிப்புக்குப்பின் விரிந்த ஆகாயம் 100 மில்லியன் அல்லது நூறு கோடி ஆண்டுகளுக்கு இருண்டு கிடந்தது. தொடரும்...


- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

No comments: