Monday, December 26, 2016

விகடனில் ஹாம் வானொலி

புயல், பூகம்பம், சுனாமி...  பேரிடர்களில் கைகொடுக்கும் ஹாம் ரேடியோ! - என்ற தலைப்பிலான பேட்டி விகடனில்  வெளிவந்துள்ளது.




Friday, December 16, 2016

ரேடியோ தைவான் இண்டர்நேசனலின் நேயர் சந்திப்பு



சென்னை அம்பாசிடர் பல்லவாவில் 3 டிசம்பர் 2016, ரேடியோ தைவான் இண்டர்நேசனலின் நேயர் சந்திப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் தமிழகம் மற்றும் ஆந்திரா நேயர்கள் பலர் கலந்துகொண்டனர். தைவான் வானொலியில் இருந்து சிறப்பு விருந்தினராக ஆங்கிலப் பிரிவின் கார்ல்சன் வோங் மற்றும் பவுலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Thursday, December 15, 2016

ஹாம் ரேடியோ அல்லது அமெச்சூர் ரேடியோ என்பது என்ன?

செல்லிடைப்பேசிகள், தொலைபேசிகள், இணையம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து போகும் நிலைகளில் தகவல் தொடர்புக்கு பெரிதும் உதவுவது ‘ஹாம் ரேடியோ’ அல்லது ‘அமெச்சூர் ரேடியோ’ எனப்படுகிறது.

பொதுவாக பொழுதுபோக்குக்காக சர்வதேச அளவிலான உரிமம் பெற்ற, சமூகத்தின் பல்வேறுதரப்பட்ட நபர்களால் ஒருங்கிணைந்த குழு இது எனலாம். இவர்கள் வெறும் கம்பியில்லா தொழில்நுட்பம் தெரிந்த நுகர்வோர் மட்டுமல்ல. மிகச் சிறந்த படைப்பாளிகள். 

நமது நாட்டின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற ராஜீவ் காந்திகூட ஒரு ஹாம் ஆபரேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களால் தெருவுக்கு தெரு தகவல் தொடர்பை பறிமாறிக் கொள்ள முடியும். கண்டங்களைத் தாண்டி செய்திகளை பகிர்ந்து கொள்ள இயலும். அவ்வளவு ஏன்? விண்வெளி வீர்ர்களோடுகூட இவர்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இயற்கை பேரிடர்களின் போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையில் ஒரு சாதாரண மின்கலம், ரேடியோ சாதனம், சில கம்பிகள் இவை மட்டும் இருந்தால் போதும்.. உலகின் எல்லா மூலைகளுக்கும் தகவல் அனுப்பலாம்; தகவல் பெறலாம்.

இத்தகைய மிக முக்கிய பொறுப்பு கொண்ட ஹாம் இளைஞர் VU3YFD T.S.பிரசாத் திருப்பூரைச் சேர்ந்தவர். சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர். விழிகள் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடி வழங்கும் பதிவு இது. 
https://www.youtube.com/watch?v=tb0NsVJTxcM

அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம்!


உலகை எச்சரிக்க இதோ புது ரேடியோ சேவை


இந்த உலகில் மாற்ற முடியாத ஒன்றே ஒன்று இயற்கை சீற்றங்கள் தான், இதை எந்த சக்தியாலும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் இயற்கைச் சீற்றம் நமக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுக்கிறது. அவ்வப்போது கடலோர மாவட்டங்களில் ஏற்படும் புயல் மற்றும் கடல் சீற்றங்களின்போது மட்டுமே நாம் ஆபத்துகால மேலாண்மை குறித்துச் சிந்திக்கிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இணைந்திருப்பது "இமாலய சுனாமி'.

பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதிகளில் நிகழ்ந்துள்ள சேதத்தைப் பார்க்கும்போது நமக்கே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. மிகப்பெரிய காட்டாற்றின் அருகிலேயே பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வைத்துள்ளனர். கங்கையின் முழு வேகத்தினை ஹரித்வார் சென்றால் பார்க்கலாம். அப்படியான அசுர வேகத்தில் பெருவெள்ளம் வரும்பொழுது தடுப்பது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலில் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதன்பின் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயலற்றுப் போகும்.

இப்படியான சமயங்களில் மீட்புப் பணிகளே ஸ்தம்பித்துவிடும். இதனால் அந்தப் பகுதிகள் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். நாம் என்னதான் தொழில்நுட்பங்களில் முன்னேறி இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றைச் சார்ந்தே இருக்கின்றன. உதாரணமாக கம்ப்யூட்டர் இணைய வசதி இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. கைப்பேசிக்கு "சிக்னல்' தேவை. வெள்ள பாதிப்பு ஏற்படும்போது "டவர்களும்' அடித்துசெல்லப்படுவது இயற்கையே. ஆக, கைப்பேசிகளும் இயங்காது. தொலைபேசி நிலையங்களுக்கும் இதே கதிதான். தொலைக்காட்சிகளையும் மின்சாரம் இன்றி பார்க்க முடியாது. வானொலியை "பேட்டரி' கொண்டு கேட்கலாம். ஆனால் அதுவும் நீண்ட நேரத்துக்கு உழைக்காது. ஆக அனைத்து தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் செயலற்றுப் போகும் போதெல்லாம் ஆபத்துக்கு கைகொடுப்பவனாக வந்து சேர்வது "அமெச்சூர் வானொலி' எனப்படுகின்ற "ஹாம்' வானொலிதான்.

அமெச்சூர் வானொலி மட்டும் எப்படி இந்தச் சமயத்தில் செயல்படும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவதுதான். இதற்கும் மின்சாரம் தேவைதானே? அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம் இருந்தால் போதுமானது. இதனைக் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக மின்சாரமே கிடைக்காவிட்டாலும் இந்த "ஹாம்' வானொலியை சூரிய சக்தி கொண்டும் இயக்க முடியும்.

அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது "ஹாம்' வானொலி உபயோகிப்பாளர்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மின்சாரமே இல்லாதபோது அங்கு அவர்கள் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி பல்வேறு உயிர்களைக் காப்பாற்றினார்கள். "ஹாம்' வானொலியானது சிற்றலைவரிசை மற்றும் மிக உயர் அதிர்வெண்ணில் ஒலிபரப்பப்படுவதால் அதிக தொலைவிற்குச் செல்கிறது. இதனால் எளிதாக உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது. ரிபீட்டர்களின் துணைகொண்டு மிக உயர் அதிர்வெண்ணில் இந்தியா முழுவதும் ஒலிபரப்ப முடியும். "ஹாம்' வானொலியாளர்கள் உத்தரகண்டிலும் அரிய சேவைகளைப் புரிந்துள்ளனர். "ஹாம்' வானொலியை அனைவரும் பயன்படுத்த முடியாது.

இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. மாறாக இதற்கென மத்திய அரசு வைக்கும் தேர்வினை எழுதுபவர்களுக்கு முறையான உரிமத்தினை வழங்குகிறார்கள். இந்தத் தேர்வினை எழுத விரும்புபவர்களுக்கு முக்கிய ஊர்களில் "ஹாம் கிளப்'புகள் உள்ளன. இந்தியாவில் புகழ்பெற்ற கிளப்பானது ஹைதராபாதில் உள்ளது. "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அமெச்சூர் ரேடியோ' என்ற அந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் "ஹாம்' தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு பாடதிட்டத்தினை வழங்கி தேர்விற்கு தயார்செய்கிறது. இப்பொழுது உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்பே தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 20,000 பேர் மட்டுமே "ஹாம்' வானொலி உரிமம் பெற்றுள்ளனர். முதல் "ஹாம்' வானொலி உரிமம் 1921-இல் வழங்கப்பட்டது. 1930 வரை இந்தியாவில் 30 "ஹாம்' உரிமங்களே வழங்கப்பட்டன. 1984 வரை "ஹாம்' வானொலிப் பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், அந்த வானொலிப் பெட்டியின் விலையை விட சுங்க வரி அதிகமாக கட்டவேண்டி இருந்தது. . மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். "ஹாம்' வானொலி உரிமம் பெற, 12 வயது நிரம்பிய அனைவரும் தேர்வினை எழுதலாம். "ஹாம்' தேர்வினை எழுதி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனித்துவமான அடையாளக் குறியீடு வழங்கப்படுகிறது.

இதனை ஆங்கிலத்தில் "கால்-சைன்' என்று கூறுகிறார்கள். ஹாம் வானொலிக்கான தகுதித் தேர்வில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் கோட்பாடுகள் மட்டுமல்லாமல் "மோர்ஸ்' குறியீடுகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்தலாம். இரண்டாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட சக்தியில், குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே ஒலிபரப்ப அனுமதிக்கப்படுவர். இந்தியாவின் சார்பாக சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களுக்கும், இந்தியாவில் "ஹாம்' வானொலியின் பங்கினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஓர் அமைப்பாக இந்திய அமெச்சூர் வானொலி சொசைட்டி உள்ளது. "ஹாம்' வானொலியில் இணைந்து நாமும் நாட்டிற்குச் சேவையாற்றலாமே!

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். எது எப்படியோ நாட்டிற்க்கு நன்மை நடந்தால் சரிதான் என்கிறீர்களா.

Written By: Keerthi for http://tamil.gizbot.com/

ஏன் வர்தா புயலின் போது ஹாம் வானொலி வேண்டும்?


ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது? கேள்விக்கான பதில் இதோ


வயதான தாயை நினைத்து ஏங்கும் மகள். கர்ப்பமாக உள்ள மனைவியை நினைத்து வருத்தப்படும் கணவன். வேலைக்கு சென்ற தாயை தொடர்பு கொள்ள முடியாமல் கையறு நிலையில் உள்ள குழந்தைகள் என எல்லோரும் அகதிகளாக தொடர்பற்று தனித்துவிடப்பட்டோம். இப்போது சரி. தொலைபேசி, செல்பேசி, இணையம் எல்லாம் நமக்கு கை கொடுக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் நம் கையின் ஆறாவது விரலாக இருந்த செல்பேசி அதற்குள்ளே இருந்த இணையம், டார்ச் லைட், எஃப்.எம், என எல்லாவுமாய் இருந்தது நம்மை கைவிட்டது. அப்போது மட்டும் செய்திகளை தெரிந்துக் கொள்ள நமது தாத்தா, பாட்டி பயன்படுத்திய வானொலி பெட்டி, தொடர்பு கொள்ள ஹாம் ரேடியோ இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

“சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் ஊடகத்தில் பணிபுரிபவர்களிடமே ஹாம் ரேடியோ இல்லை. ஹாம் ரேடியோ இருந்திருந்தால் மக்களுக்கு சொல்கிறோமோ இல்லையோ பிரச்சனைகள அரசுக்காவது உடனடியாக தெரிவித்திருக்கலாம். அரசே இந்த வெள்ளத்தில் செயலற்று போனதற்கு காரணம் தொடர்புகள் அறுந்து போனதுதான்.”, என சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியரும் வானொலி மற்றும் ஹாம் ரேடியோ ஆராய்ச்சியாளருமான டாக்டர்.தங்க ஜெய்சக்திவேல் கூறுகிறார்.

ஏன் முக்கியம் ஹாம் ரேடியோ?

மொபைல் கம்யூனிகேஷனை எப்பவும் நம்ப முடியாது. மின்சார பிரச்சனைகள் இருக்கும். சென்னையில் இருக்கின்ற 4,500 டவர்களில் 4,000 டவர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அப்புறம் எப்படி செல்லில் தொடர்பு கொண்டு பேச முடியும்? இதை எல்லோரும் பயன்படுத்த முடியும். அவசரமான காலங்களில் முக்கியமாக சுனாமி ஏற்பட்ட நேரத்தில் அகில இந்திய வானொலிக்கு தொடர்பு கொள்ள உதவியதே ஹாம் ரேடியோக்கள் தான்.

“சென்னையில் 50 பேர் ஹாம் ரேடியோ பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து எங்கெல்லாம் தொடர்பில்லாமல் உதவி தேவைப்பட்டதோ அங்கெல்லாம் அவர்கள் நன்றாக செயல்பட்டார்கள்”, என்று இந்த வெள்ளத்தில் ஹாம் ரேடியோ எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார், பேராசிரியர்.

வானொலி கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன ஹாம் வானொலி? போலீஸ்லாம் கையில வச்சிக்கிட்டு “ஓவர், ஓவர்”னு சொல்லுவாங்களே அதுவா? அது வாக்கி டாக்கியாச்சே? என்கிறீர்களா! இல்லை ஹாம் வானொலி என்பது வேறு. பூவரசம் பீப்பி படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதில் அந்த நான்கு குழந்தைகளும் ஒரு பெரிய விசயத்தை ஹாம் ரேடியோ மூலம்தான் சாதிப்பார்கள்.

வாக்கி டாக்கி என்பது 500 மீட்டர் முதல் 1 கி.மீ வரை உள்ள சுற்றளவில் தனது சக்தியை பொருத்து மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் சாதனம். ஆனால், ஹாம் ரேடியோ என்பது 10 கி.மீ வரை செயல்படக்கூடியது. போலீசார் வைத்திருப்பதன் பெயர் வாக்கி டாக்கி அல்ல. வயர்லஸ் வானொலி. இந்த வயர்லஸ் வானொலி போன்றதுதான் ஹாம் ரேடியோ.

ஹாம் ரேடியோவை வாங்க உடனேயே புறப்படுறீங்களா? கொஞ்சம் இருங்கள். அதை எப்படி வாங்குவது என்பதையும் பேரா.ஜெய்சக்திவேல் கூறுகிறார்.

“எல்லோரும் ஹாம் ரேடியோவை வாங்கி உபயோகிக்கலாம். ஆனால், அதற்கு உரிமம் வாங்க வேண்டும். ஹாம் ரேடியோ மற்றும் அதற்கான லைசென்ஸையும் பெறுவதற்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு துறை நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாக வேண்டும். இதற்கான பயிற்சி மையங்கள் சென்னையில் இலவசமாக நடத்தப்படுகின்றன. ஆனால், ஆட்கள் குறைவாகத்தான் வருகிறார்கள். இப்பொழுது கூட கோபாலபுரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முடிந்த அளவுக்கு இதனை ஊடகவியலாளர்களும் அது சார்ந்து படிக்கும் தொடர்பியல் மாணவர்களும் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.”

வானொலி இந்த வெள்ளக்காலத்தில் எப்படி செயல்பட்டது?

நம்முடைய அகில இந்திய வானொலி வெள்ள காலத்தில் நன்றாக செயல்பட்டது. தங்களது உடைமைகளை இழந்தவர்கள், அதை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்களை ஒன்றைணைத்து ஒரு பாலமாக வானொலி செயல்பட்டது. இப்பொழுது நீங்கள் வானொலி மார்க்கெட்டுக்கு சென்று வானொலி வாங்க வேண்டும் என்றால் கூட வானொலி பெட்டியே இல்லை. ஏனென்றால், நாம்தான் வானொலி பெட்டியே வாங்காமல் உற்பத்தியாளர்களை ஓட ஓட விரட்டி விட்டோமே.

இனி என்ன செய்வது? உடனடியாக ஹாம் ரேடியோ பெறுவதற்கான முயற்சிகளை எடுங்கள். தாத்தா, பாட்டி உபயோகித்த வானொலியை தூசு தட்டுங்கள்.

எழுதியவர் - இப்போது டாட் காமிற்காக  நந்தினி வெள்ளைச்சாமி
நன்றி - http://ippodhu.com/

உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் ஹாம்!


அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில்,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள், சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony), மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

Letter Morse
A di-dah
B dah-di-di-dit
C dah-di-dah-dit
D dah-di-dit
E dit
F di-di-dah-dit
G dah-dah-dit
H di-di-di-dit
I di-dit
J di-dah-dah-dah
K dah-di-dah
L di-dah-di-dit
M dah-dah


N dah-dit
O dah-dah-dah
P di-dah-dah-dit
Q dah-dah-di-dah
R di-dah-dit
S di-di-dit
T dah
U di-di-dah
V di-di-di-dah
W di-dah-dah
X dah-di-di-dah
Y dah-di-dah-dah
Z dah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ்,  ஸ்டார்  மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

நன்றி - http://vovalpaarvai.blogspot.in/

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ


நவீன தொழில்நுட்பத்தில் ‘ஹாம் ரேடியோ’!


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்பத்தில் ரேடியோ, டிவி, டெலிபோன், செல்போன் என்று பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் இருந்தாலும், இவை அனைத்திலும் தனித்துவம் பெற்ற ஒரு விஞ்ஞான படைப்பு உண்டென்றால் அது நிச்சயம் ஹாம் ரேடியோவாகத்தான் இருக்கும். ஹாம் ரேடியோவைப் பற்றிய ஒரு சமீபத்திய நிகழ்வை சொன்னால் சட்டென உங்கள் நினைவுக்கு வரும்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி அலை, வழியில் இருந்த அந்தமான் தீவை அடியோடு நாசம் செய்தது. செல்போன், ரேடியோ சேவை, சேட்டிலைட் தகவல் தொடர்பு எல்லாம் பணால் ஆனது. அந்த நேரத்தில் கை கொடுத்தது ஹாம் ரேடியோ மட்டும்தான். ஆம், அந்தமானில் ஒரே ஒரு நபர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஹாம் ரேடியோவின் உதவியதால்தான் அங்கு சுனாமி தாக்கியதும், அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆந்திரா, தமிழகம், கேரளா மாநிலங்களை சுனாமி அலைகள் அடுத்தடுத்து புரட்டிப் போட்டதும் தெரியவந்தது. அன்று ஹாம் ரேடியோ என்ற ஒரு சேவை இருந்திருக்காவிட்டால், அந்தமானில் நிகழ்ந்தது பலருக்கும் மிகமிக தாமதமாகவே தெரியவந்திருக்கும்.

ஹாம் ரேடியோ என்பதற்கு பெரிய அர்த்தம் எதுவும் இல்லை. ஒலியை அளவிடும் ஹெர்ட்ஸ், நிலவில் கால் வைத்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் ரேடியோவைக் கண்டுபிடித்த மார்கோனி ஆகிய மூன்று பெயர்களின் முதல் எழுத்தை சுட்டு, ஹாம் ரேடியோ என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோவின் தலைமையகம் வாஷிங்டனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த ஹாம் ரேடியோவுக்கும் நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். சச்சின், முன்னாள் பிரதமர் ராஜீவ், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி ஆகியோர் ஹாம் ரேடியோ விஐபிகளில் குறிப்பிடத்தகுந்த சிலர். இந்த ரேடியோ உதவியால் உலகம் முழுவதும் உள்ள ஹாம் ரேடியோ உறுப்பினர்களுடன் எந்தவித கட்டணமும் இல்லாமல் எளிதில் பேசிக் கொள்ளமுடியும்.

பேஸ்புக், வாட்ஸ் அப் என்று இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள இந்த ஹாம் ரேடியோ உறுப்பினர்கள், தங்கள் பகுதிகளின் புதிய கண்டு பிடிப்புகள், நூதன சம்பவங்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதால், இன்றைக்கும் இந்த ஹாம் ரேடியோ பயன்பாடு சுறுசுறுப்பாகத்தான் உள்ளது. ஆனாலும், ஹாம் ரேடியோவைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல், அதன் கடுமையான விதிமுறைகள் கேட் போட்டு விடுகின்றன.

தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் ஹாம் ரேடியோ பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் அமெச்சூர் ரேடியோ சங்கத்தினரால் ஹாம் ரேடியோ உறுப்பினர்கள் ஆவதற்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இருந்து ஹாம் ரேடியோ தேர்வுக்கு இரண்டு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் இந்த ஹாம் ரேடியோவில் உறுப்பினர் ஆகலாம். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் இருந்தால் போதும், எளிதாக ஹாம் ரேடியோ உறுப்பினர் ஆகலாம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல், இப்போதைய ஹாம் ரேடியோ தொழில்நுட்பம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு, இயக்கப்படுகிறது. ஆனால் இன்டர்நெட் தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் வெற்றிகரமாக செயல்படும். மற்றபடி, டிஜிட்டல் இல்லாமல் சாதாரணமாகவும் இயங்க முடியும்.

இதுகுறித்து மானாமதுரையைச் சேர்ந்த ஹாம் ரேடியோ எக்ஸ்பர்ட் துரைராஜ் கூறும்போது, “நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. 1975ம் ஆண்டு முதல் ஹாம் ரேடியோ உறுப்பினராக உள்ளேன். இந்த ரேடியோவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது ஆபத்து காலங்களில் காத்து ரட்சிக்கும் ஒரு ரட்சகன் என்றே சொல்ல வேண்டும். உலகில் பல பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும்போதெல்லாம் ஹாம் ரேடியோ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதை இப்போது கொஞ்சம் அப்டேட் செய்துள்ளோம். ஒலியை டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில் நாம் பேசுவது தெளிவாக இருக்கும். செல்போனில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப வசதி இருந்தால், இதை கம்ப்யூட்டருடன் இணைத்து எக்கோ லிங்க் எனப்படும் சாப்ட்வேர் மூலம் ஆண்டெனா இல்லாமலே பேச முடியும்.

மதுரை மற்றும் மானாமதுரையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, மதுரையில் வைத்து பயிற்சி கொடுத்து, அவர்களை ஹாம் ரேடியோவின் உறுப்பினராக்குகிறேன். இதில் உறுப்பினர் ஆவதற்கு வயர்லெஸ் பிளானிங் கோட் என்ற அமைப்பு மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசுகள் மூலம் உரிமம் வழங்கப்படுகிறது.

ஹாம் ரேடியோவைப்பற்றி இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரியவில்லை. ஹாம் ரேடியோ மூலம் தன்னலமற்ற சேவைகள் செய்யலாம். இப்போதைய சந்தையில் 7ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கிடைக்கிறது. சாதாரண ஹாம் ரேடியோ மூலம் பேசும்போது இரைச்சல் சத்தம் அதிகமாக இருக்கும், டிஜிட்டல் தொழில்நட்பத்தில் சப்தம் மிகவும் தெளிவாக இருக்கும். தொழில் நுட்ப கல்லூரிகளில் கூட ஹாம் ரேடியோ பற்றி கற்றுக் கொடுப்பது இல்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். ஹாம் ரேடியாவைப் பற்றி கற்றுக் கொள்வதும், அதை கற்றுக் கொடுப்பதும் பெருமைக்குரிய விஷயம். அடுத்தத் தலைமுறையினரும் கற்றுக் கொள்ள வேண்டிய அரிய கலை இதுவாகும்” என்றார்.

உங்கள் மனதில் ஒரு முறை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளை ரீவைன்ட் செய்து பாருங்கள்... ஹாம் ரேடியோ செய்த சேவையும், அதைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் தன்னாலேயே ஏற்பட்டுவிடும்...

நன்றி- ஜன்னல் சார்பாக சாய் ஷிவானி

'ஹாம் ரேடியோ' வாங்குவது எப்படி?


ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என, மக்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு 'ஹாம் ரேடியோ' உரிமம் வைத்திருக்க வேண்டும் என்கிறார், சென்னை பல்கலை இதழியல் துறை பேராசிரியர் தங்க.ஜெய்சக்திவேல், 37. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'ஹெல்ப் ஆல் மேன்கைண்டு' என்பதன் சுருக்கம் தான், 'ஹாம்'. போலீசார் பயன்படுத்தும் 'வாக்கி டாக்கி' போன்றவையும் 'ஹாம் ரேடியோ'க்கள் தான். இதில், ஒரு நேரத்தில், ஒருவர் பேச, உபயோகத்தில் உள்ள அனைவரும் கேட்க முடியும். இதன் ஒலிபரப்பு, துார, எல்லைகளைக் கடந்தது. இதற்காக, பேசும் கருவி, ஆன்டனா உள்ளிட்ட கருவிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து 'ஹாம் ரேடியோ' உபயோகிப்பாளர்களையும் இணைத்து, தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால், இக்கருவியை வாங்கவும், பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை, அரசு விதித்திருக்கிறது. அதற்கான தேர்வெழுதி வெல்வோர், கருவியை வாங்கவும், அவர்களுக்கான, அடையாள எண், உரிமத்தை பெறவும் முடியும். தேர்வு குறித்த விளக்கங்களை, மூத்த அமெச்சூர் வானொலி பயனாளர்கள் இலவசமாக வழங்குகின்றனர்.

பயன்கள் :வானொலியைப் போலவே, அனைத்து இடங்களுக்கும், இதை எளிதாக எடுத்து செல்ல முடியும். இதனை இயக்க, குறைந்த அளவு மின்சாரம் போதும். அதிக நாட்கள் பயனளிக்கும். எத்தனை மணி நேரம் பேசினாலும், கட்டணம் கிடையாது. ஒருமுறை கருவிகளை வாங்கும் செலவு மட்டும் தான். பூகம்பம், மண்சரிவு, புயல், வெள்ளம், தீ, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில், அனைவரையும் தொடர்பு கொள்ள சிறந்த சாதனம் இது தான். சர்வதேச அளவில், உடனடியான உதவிகளை பெறவும், அளிக்கவும் இது உதவும். கடந்த காலங்களில், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்கள், தகவல் தொடர்பிலும், மீட்பு பணியிலும் பெரும்பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


உரிமம் பெறும் நடைமுறை :இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் இயங்கும், 'ஒயர்லெஸ் மானிட்டரிங் ஸ்டேஷன்', 'ஹாம் ரேடியோ' பயன்பாட்டாளருக்கான உரிமம் வழங்கும் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை எழுத, ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்க வேண்டும். இணையத்தில், ஆங்கிலத்தில் நடக்கும் இந்த தேர்வை எழுத, 'மோர்ஸ் கோடு' எனப்படும், ஒலிபரப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகள், தொடர்பு வழிமுறைகள், அடிப்படை மின்னணுவியல் துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 8 மோர்ஸ் வார்த்தைகளை பதியும் திறமை உள்ளவர்கள், பொது உரிமம் பெற முடியும். இத்தேர்வு, கிரேடு 1 மற்றும் கிரேடு 2 ஆகிய நிலைகளில் உள்ளது. தனது நிலைக்கேற்ப, ஒலிபரப்பு துாரமும், தரமும் இருக்கும். ஒவ்வொரு கிரேடு தேர்வுக்கும், ௧௦௦ ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 
தேர்வில் வெற்றி பெற்ற பின், 'கால் சைன்ஸ்' எனப்படும், உரிம எண் வழங்கப்படும். அந்த எண்ணைக் கொண்டே, உரிமம் பெற்றவரின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும். டபிள்யூ.பி.சி., எனப்படும், 'தி ஒயர்லெஸ் பிளானிங் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' என்ற இணையத்தின் வழியாக, 'ஹாம் ரேடியோ' பயன்பாட்டுக்கான தகவல்கள் விண்ணப்பங்கள், புத்தகங்களை பெறலாம்.
தற்காலத்தில், இணையத்தோடு ஹாமை இணைக்கும் மென்பொருட்களும் உள்ளன. அலைபேசிகளோடு இணைக்கும் செயலிகளும் உள்ளன.
நன்றி-தினமலர்

Thursday, December 01, 2016

சென்னையில் தைவான் வானொலி நேயர் சந்திப்பு


2008 RTI Listeners meet in Chennai

தைவான் வானொலியின் ஆங்கிலப் பிரிவானது  தென்னிந்தியாவில் உள்ள தைவான் வானொலி நேயர்களை ஒன்றிணைக்கும் வைகையில் வரும் சனிக்கிழமை 3 டிசம்பர் 2016 அன்று எழும்பூரில் உள்ள ஹோட்டல் அம்பசிட்டர் பல்லவாவில் காலை 10.30 மணிக்கு நேயர்களைச் சந்திக்க உள்ளது. அனைவரையும் ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றம் அன்புடன்  அழைக்கிறது.