சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Tuesday, November 28, 2023
ஹாம் மீட் 1985
வானொலி என்ற இதழை அகில இந்திய வானொலி வெளியிட்டு வந்தது. 1985ல் வெளிவந்த இதழ் ஹாம் வானொலி சிறப்பிதழாக மலர்ந்தது. அதில் வெளியான ஒரு கவிதை ஹாம் வானொலியைப் பற்றி புகழ்கிறது.
Saturday, November 11, 2023
ஆஸ்திரேலிய வானொலி: நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை
$1.20க்கு ஆஸ்திரேலிய அஞ்சல் துறையானது பொது ஒலிபரப்பு வானொலி சேவையின் நூற்றாண்டுக்காக புதிய அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்டாம்ப்பில் ஒரு பெண் தனது வரவேற்பு அறையில் உள்ள வானொலிப் பெட்டியில் காதுகளை வைத்து ரேடியோவை ட்யூன் செய்து Music Lovers Hour எனும் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
ரேடியோ 2BLஆனது ஆஸ்திரேலாவில், 21 நவம்பர் 1923 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதுவே பொது சேவை ஒலிபரப்பு செய்யும் ஆஸ்திரேலியாவின் முதல் வானொலி நிலையமாகும்.
ஸ்டாம்பில் இடம்பெற்றுள்ளது AWA ரேடியோவாகும், இது 1949இல் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வானொலிப் பெட்டியாகக் கருதப்படுகிறது. இந்த அஞ்சல் தலையை வடிவமைத்தவர் Harry Slaghekke. 1940ல் Max Dupain அவர்கள் AWA Radiolaவின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அஞ்சல் தலையை வடிவமைத்துள்ளார்.
"Music Lovers Hour” என்ற நிகழ்ச்சியானது 2BL எனும் பெயர் கொண்ட வானொலியில் அன்றைய காலகட்டத்தில் ஒலிபரப்பானது. இன்று அந்த வானொலியின் பெயர் ABC Radio Sydney என மாற்றப்பட்டுள்ளது.
தொடக்க காலத்தில் 2SB என்றும், பிறகு 2BL என்றும் இந்த வானொலி பெயர் மாற்றம் கண்டது. சமீபத்தில் வெளியான இந்த அஞ்சல் தலையை நேரடியாக ஆஸ்திரேலிய அஞ்சல் துறைக்கு எழுதிப் பெற்றேன்.
அஞ்சல் தலையுடன், முதல் நாள் கடித உறை (First Day Cover), அஞ்சலட்டை (Maxi Card), Folder ஆகியவையும் அடங்கும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், அதன் Cancellation முத்திரை. அழகான ஒலி வாங்கியை மையாமகக் கொண்டு அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது வானொலி ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள், ஆய்வாளர் மத்தியில் இருக்க வேண்டிய முக்கியமான அஞ்சல் தலையாகும்.சொல்லப்போனால், இந்தியாவிலும் வானொலித் தொடங்கப்பட்டு ஜூன் 2023டன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
மும்பையில் Radio Club of Bombay என்றப் பெயரில் ஜூன் 1923 அன்று வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய அஞ்சல் துறையும் இணைந்து "இந்தியாவில் வானொலியின் 100 ஆண்டுகள்" எனும் கருப்பொருள் கொண்ட அஞ்சல் தலையை விரைவில் வெளியிட வேண்டும்.
#
Saturday, November 04, 2023
அகில இந்திய வானொலிக்காக ஒரு ஆய்வுப் புத்தகம்
பிபிசி, சீன வானொலி, வேரித்தாஸ் வானொலி மற்றும் இலங்கை வானொலிகளைத் தொடர்ந்து தற்பொழுது அகில இந்திய வானொலிக்காக மற்றும் ஒரு ஆய்வுப் புத்தகம்.
நேயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகளை வரவேற்கிறோம். கட்டுரையை 30-11-2023 முன் அனுப்பி வைக்கலாம்.
தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் ISBN குறியீட்டுடன் வெளியிடப்படும்.
Research Book on All India Radio:
We are now publishing a book on All India Radio, following our success with BBC, China Radio International, Radio Veritas Asia, and Sri Lankan Broadcasting Corporation. We invite articles from radio listeners, journalists, and researchers. Submit articles by November 30, 2023, for publication in a book with an ISBN code.
Friday, July 07, 2023
ஆஸ்திரேயாவின் அடிலெய்டில் இருந்து தமிழில் ஒலிப்பரப்பும் 5EBI 103.1 FM.
தெற்கு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும் ஒரே முழுநேர பன்முக கலாச்சார சமூக வானொலி 5EBI நிலையமாகும். 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடனும், உறுப்பினர் இனக்குழுக்கள், மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல உள்ளூர் ஆதரவாளர்களின் ஆதரவுடனும் ஒவ்வொரு வாரமும் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்பை செய்து வருகிறது 5EBI. இதில் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் ஒருவராக இணைந்துள்ளார் RJ நாகா.
ஆஸ்திரேயாவின் அடிலெய்டில் இருந்து ஒலிப்பரப்பாகிறது 5EBI 103.1 FM.
மாதத்தில் இரன்டு வாரம். இரண்டு மற்றும் நான்காவது வாரங்களில் நாகா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒலிப்பரப்பாக இருக்கிறது.
நாகாவுடன் சேர்ந்து ஸ்ரீராமா, ஹேமா இருவரும் வாரம் ஒரு நிகழ்ச்சி என தங்கள் பங்களிப்பையும் கொடுக்க இருக்கின்றனர்.
இணையம் வழியாகவும் அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்தால் நேரடியாகவோ நீங்கள் கேட்கலாம்.
இணைப்பு சுட்டி : https://5ebi.com.au/
Tuesday, June 13, 2023
முதல் பெண் உளவு ரேடியோ ஆபரேட்டர்
சமீபத்தில் வானொலித் தொடர்பாக ஒரு புத்தகத்தினை படிக்க வாய்ப்பு கிடைத்தது. வெப் சீரீஸ்க்கு தகுந்த உண்மைக் கதை இது. புத்தகத்தின் பெயர் Spy Princes: The life of the Noor Inayat Khan. மிகவும் சுவாரஷ்யமான ஆங்கிலப் புத்தகம் இது. எழுதியவர் Shrabani Basu. 230 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தினை Roli Books ரூ.495க்கு வெளியிட்டுள்ளது.
உளவு இளவரசி என்ற இந்தப் புத்தகம் இரண்டாம் உலகப் போரின்போது ரகசிய முகவராக மாறிய திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கானின் உண்மைக் கதைதான் இது. இவர் 1943இல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சுக்குள் ஊடுருவிய முதல் பெண் ரேடியோ ஆபரேட்டராகப் பணியாற்றினார். இவர் பயன்படுத்திய வானொலிப் பெட்டி மற்றும் ஏரியல்கள் இன்றும் இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
'மேடலின்' என்ற குறியீட்டு பெயரில் நூர் இராணுவத்தில் பணிபுரிந்தார். இவர் பணியாற்றிய படை தோல்வியை நோக்கி தள்ளப்பட்டது. இவர்தான் லண்டனுடன் வானொலி ஊடாக செய்தியை அனுப்பும் கடைசி இணைப்பாக இருந்தார். உயிர் ஆபத்துகள் இருந்தபோதிலும் தனது பணியை கைவிட மறுத்து, போர் களத்தில் இருந்து ரகசிய வானொலி ஒலிபரபினைச் செய்து செயல்பட்டார்.
இருப்பினும், இவர் ஜெர்மனியர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அந்த நாட்டின் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு டச்சாவ் வதை முகாமில் சுடப்பட்டு 30 வயதில் இறந்தார்.
இவரது அசாதாரண துணிச்சலுக்காக பிரிட்டன் இவருக்கு மரணத்திற்குப் பின் ஜார்ஜ் கிராஸ் விருதை வழங்கியது, மேலும் பிரான்ஸ் இவருக்கு குரோயிக்ஸ் டி குரே விருது வழங்கியது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் பெண் உளவு ரேடியோ ஆபரேட்டராக இருந்துள்ளார் என்பது ஒரு வகையில் நமக்கெல்லாம் பெருமையே. நூர் இனாயத் கான் புகழ் ஓங்கட்டும்.
புத்தகம் வாங்குவதற்கான சுட்டி முதல் கமெண்டில்.
Limited-time deal: Spy Princess: The Life of Noor Inayat Khan https://amzn.eu/d/aPaop03
#வானொலி #சர்வதேசவானொலி #ரேடியோ #நூர்இனாயத்கான் #SpyPrinces #NoorInayatKhan #புத்தகம் #ShrabaniBasu #RoliBooks
Friday, June 02, 2023
Sunday, May 28, 2023
Sunday, March 19, 2023
Sony ICF SW1ம் முஹம்மது ராஃபியும்
நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை, நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில், நமக்கு அனுப்பி வைக்கும் அன்புள்ளங்களை என்னவென்று சொல்வது.
சென்னைப் புதுக்கல்லூரியில் மாணவராக அறிமுகமாகி, இன்று தமிழின் முக்கிய நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றிவரும் அன்பு நண்பர் முஹம்மது ராஃபி (Rameswaram Rafi) சமீபத்தில் ஒரு கைப்பேசி அழைப்பில், "உங்களுக்கு ஒரு பரிசுப்பொதி வரும், வந்ததும் தெரியப்படுத்துங்கள்" எனப் பீடிகைப் போட்டார்.
அடுத்த நாளே வந்துவிட்டது. நான் சற்றும் எதிர்பாராதது அந்தப் பொதியில் இருந்தது. 1990களில் ரேடியோ ஜப்பான் அனுப்பிய அலைவரிசை விபரப்புத்தகத்தின் அட்டையில் மட்டுமேப் பார்த்த வானொலிப் பெட்டி அது.
நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அந்த சோனி வானொலிப் பெடிக்குத் தான் எவ்வளவு பாதுகாப்பு, மட்டுமல்ல இணைப்புகள்.
உலகை நம் உள்ளங்கைக்குள் அன்றே கொண்டுவந்தது இந்த சோனி வானொலிப் பெட்டி. கூடவே ஒரு அருமையான ஆக்டிவ் ஆண்டனாவையும் கொடுத்துள்ளனர். அவ்வளவு துள்ளியமாக தொலைத்தூர ஒலிபரப்புகள் கிடைக்கிறது.
உடனே ராஃபியை அழைத்து, "எங்கே பிடித்தீர்கள்? விலை எவ்வளவு?" எனக் கேட்டேன். "நீங்களேக் கூறுங்கள், எவ்வளவு இருக்கும்?" என்றார். "இன்று சோனி நிறுவனம் இந்த வானொலிப் பெட்டியின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. எனவே, இதற்கு மதிப்பீடு இல்லை" என்றேன்.
ஆம், இது போன்ற வானொலிப் பெட்டிகள், நல்ல நிலையில் கிடைப்பதே அரிது. அப்படியிருக்க, எப்படி விலையை நிர்ணயம் செய்ய!
சற்றும் எதிர்பாராத நேரத்தில் வரும் அன்புப் பரிசுக்குத்தான் விலையேது?! அதுவும் நம் மாணவர்கள் கொடுக்கும் பரிசுக்கு நிச்சயம் விலை நிர்ணயம் செய்துவிட முடியுமா என்ன!
நன்றி ராஃபி! வானொலி மீது தீராப்பற்றுதல் கொண்டமைக்கும், அது தொடர்பான தொடர் செய்திக் கட்டுரைகளுக்கும்.
For more details about this radio,
https://www.cryptomuseum.com/spy/sony/icfsw1/index.htm#:~:text=ICF%2DSW1%20is%20a%20miniature,the%20reception%20of%20Numbers%20Stations.