Monday, February 16, 2009

வானொலியை காதலிப்பவர்கள் ஒன்று கூடிய நாள்

மாமல்லபுரம் ஹாம் சந்திப்பு - 2009
கடந்த 14 பிப்ரவரி 2009 காலை காதலர் தினம்... வானொலியை காதலிப்பவர்களும் ஒன்று கூடிய நாள் என்றால் அது மிகையில்லை. திரு. சவ்ஹான் அவர்களின் நினைவாக இந்த வருட கூட்டம் வெகு சிறப்பாக ஹோட்டல் வீராஸில் நடந்து முடிந்தது. கலந்து கொள்ள முடியாதவர்கள் காண அன்றைய நிகழ்வுகளின் புகைப்படங்களை கீழ்கண்ட தொடுப்பினில் காணலாம்...இங்கே சொடுக்கவும்...

Thursday, February 12, 2009

சமுதாய வானொலி: சென்னை பயிற்சிப் பட்டறை


சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள அண்ணா பண்பலை வானொலியில் கடந்த பிப்ரவரி 10,11ஆகிய நாட்களில் இந்தியாவில் உள்ள சமுதாய வானொலி நிலைய இயக்குனர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்கு இந்திய ஒலிபரப்பு அமைச்சகம் செம்காவுடன் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தது. இந்த பயிலரங்கிற்கு 42 வானொலி நிலையங்களில் இருந்து வந்திருந்தனர்.

Tuesday, February 10, 2009

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு இடை நிறுத்தப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அல்லது பகுதிகளை இடையில் வெட்டுவது என்பது, பிபிசியின் நிகழ்ச்சிகளின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாக அமைகிறது என்பதை பிபிசி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு தெளிவாக்கியது.

பிபிசியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பிபிசி நிகழ்ச்சிகளை வெட்டிய சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடந்தன.

இந்த ஒலிபரப்பு இடை நிறுத்தம் குறித்து கருத்துக் கூறிய பிபிசியின் இயக்குநர் நைஜல் சாப்மன், தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இந்த வெட்டும் நடவடிக்கைகள் தொடர்வது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி நிகழ்ச்சிகள் மீது ஏதும் புகார்கள், குறைபாடுகள் குறிப்பாக இருந்தால் அது குறித்து பிபிசி விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நைஜல் சாப்மன், ஆனால் இது வரை இந்த மாதிரி எந்தப் புகாரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து எமது நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.
(Source: http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml)

Friday, February 06, 2009

நாகபட்டிணம் அருகில் ஒரு சமுதாய வானொலி

நாகபட்டிணம் விழுந்தமாவடி அருகில் உள்ள கீழயூரில் 'தானம்' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஒரு சமுதாய வானொலி தொடங்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை சமீபத்தில் இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த அமைப்பானது ஏற்கனவே காரைக்கால் அகில இந்திய வானொலி மூலம் தனது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வானொலி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு...
DHAN Foundation
18, Pillaiyar Koil Street
S.S. Colony, Madurai - 625 016.
Tamil Nadu, INDIA
Tel: +91 - 452 - 2610794, 2610805
Fax: +91 - 452 - 2602247
Email: dhan@md3.vsnl.net.in
களஞ்சியம் வானொலி பற்றிய விபரங்களுக்கு..

Friday, January 16, 2009

அமெச்சூர் வானொலி சந்திப்பு


ஒவ்வொரு ஆண்டும் மாமல்லபுரத்தில் நடைபெரும் அமெச்சூர் வானொலி சந்திப்பு இந்த ஆண்டும் வரும் 14 பிப்ரவரி சனிக்கிழமையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தெல்லாம் ஹாம் வானொலி உபயோகப்படுத்துவோர் கலந்து கொள்ள உள்ளனர். மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் வீராஸில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் ஹாம் வானொலிப்பெட்டிகள், உதிரிப்பாகங்கள், ஆண்டெனாக்கள் என இன்னும் பல பொருட்கள் விற்பனையும் செய்யப்பட உள்ளது. நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லாத இந்த நிகழ்வில் நீங்களும் உங்களது நண்பர்களுடன் கலந்து கொள்ளலாம். சிற்றலை வானொலிகளைக் கேட்கும் நேயர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதன் மூலம் ஹாம் வானொலிப் பற்றி ஏறாளமானத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு திரு. விட்டல் – 094453 30505, 044-22312420

Thursday, January 08, 2009

சாரு நிவேதிதாவின் நிர்வாணப் புத்தகங்கள்


கடந்த ஜனவரி 7ஆம் தேதி மாலை சென்னை புக்பாயிண்ட் அரங்கம் நிரம்பி வழிய.. அதில் ஒரு மூலையில் நானும்.. பேசிய அனைவருக்கும் தனது பாணியில் புத்தகங்களை சாரு அனுப்பியதாக ஒவ்வொருவரும் சிலாகித்து கொண்டனர். "மினியாண்டி" மீண்டும் வேண்டும் என்றார் சுதேச மித்திரன், ஆண் நிர்வாணமா, பெண் நிர்வாணமா என்று கேட்டார் கூத்துப்பட்டரை முத்துசாமி. 'ஆசாதி' (மூன்று முறை சொல்லவும்) பற்றி சிவகாமியின் விமர்சனம்...?! இவர் ஒரு பெண் அராத்து.. என பட்டமும் தந்தார் சாரு. இ.பா விமர்சனம் தூக்கல். துரோகத்தின் காவியம் என 'சுப்ரமணியபுரத்தினை' சிலாகித்த சாருவை ஓ..ஹோ எனப் புகழ்ந்தார் சசி... இன்னும் நிறைய... அடுத்த பதிவில்..
வானொலி பற்றி தகவல் இல்லையா எனக் கேட்பவர்களுக்கு...தமிழச்சி தங்கபாண்டியன் கூறிய தகவல்... அடுத்த பதிவில்...

Monday, December 29, 2008

சீன வானொலி: 20-வது கருத்தரங்கம்


சீன வானொலி நேயர்மன்றத்தின் 20-வது கருத்தரங்கம் வெகு சிறப்பாக நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் (28-12-2008) நடைபெற்றது. இதில் சீன வானொலியின் நிபுனர்கள் சிவகுமார், கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் பங்கேற்றனர். சீன வானொலி கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக நான்கு நிபுனர்கள் ஒரே மேடையில் சந்திப்பது இதுவே முதல் முறை. விழாவில் 'சீன வானொலி மன்றம்' எனும் காலாண்டு இதழ் வெளியிடப்பட்டது. மேலும் 20 நேயர்களுக்கு சிறந்த நேயர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து நேயர்களுக்கும் நினைவுப் பரிசாக 3டி ஒலிம்பிக் வண்ண அட்டை வழங்கப்பட்டது.


'சீன வானொலி மன்றம்' காலாண்டு இதழ்


கருத்தரங்க புகைப்படங்களை காண, கீழகண்ட தொடுப்பினை சொடுக்கவும்
http://picasaweb.google.co.in/bbcsakthi/CRI20thMeet?feat=directlink