Tuesday, March 24, 2026

மாஸ்கோ வானொலி: ஒரு காலத்தின் இனிமையான தமிழ் குரல்!

1980களில் மாஸ்கோ வானொலி அனுப்பிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்

இன்று இணையமும், செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளும் உலகை நம் விரல் நுனிக்குக் கொண்டு வந்துவிட்டன. ஆனால், கறுப்பு வெள்ளைக் காலத்தில், ஒரு சிறிய டிரான்சிஸ்டர் ரேடியோவின் 'டியூனிங் நாபைத்' திருப்பி, சிற்றலை இரைச்சல்களுக்கு இடையே "இது மாஸ்கோ வானொலியின் தமிழ் ஒலிபரப்பு..." என்ற கணீரென்ற குரலைக் கேட்ட அந்த சுகமே தனி. சமீபத்தில் கண்டெடுத்த மாஸ்கோ வானொலியின் பழைய நிகழ்ச்சி நிரல் புகைப்படம், பழைய நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டது.

இந்திய நேரப்படி மாலை 18:30 முதல் 19:30 வரை (UTC 13.00 - 14.00) ஒலிபரப்பான அந்த ஒரு மணி நேரம் எங்களுக்கு ஒரு ஜன்னல் போல இருந்தது. அப்போதைய சோவியத் யூனியனின் செய்திகளையும், கலாச்சாரத்தையும் நேரடியாகத் தமிழில் கேட்க முடிந்தது வியப்பான ஒன்று. 16 மற்றும் 19 மீட்டர் அலைவரிசைகளில், 17850 KHz போன்ற அலைவரிசைகளைத் துல்லியமாகப் பிடிக்க நாங்கள் மேற்கொண்ட போராட்டங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கின்றன.

ஒரே சமயத்தில் 12 வெவேறு சிற்றலைவரிசையில் ஒலிபரப்பிய ஒரே தமிழ் வானொலி மாஸ்கோ வானொலி மட்டுமே. இன்று அது போன்று சீன வானொலி ஒலிபரப்புகிறது. ஒரு காலத்தில் அகில இந்திய வானொலியும் ஒலிபரப்பியது.


#

ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி இருக்கும். "செய்தி அறிவிப்பு" மற்றும் "செய்தியும் கருத்தும்" மூலம் உலக அரசியலை வேறொரு கோணத்தில் பார்த்தோம். திங்கள் கிழமைகளில் வரும் "தபால் பை" நிகழ்ச்சிக்குக் கடிதம் எழுதிவிட்டு, நம் பெயர் வாசிக்கப்படுமா என்று காத்துக்கிடந்த நேயர்கள் கோடிக்கணக்கானோர்களில் நானும் ஒருவன்.

செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒலிபரப்பான "பிரச்சினைகளும் மக்களும்" நிகழ்ச்சி சமூகப் பார்வையை வழங்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பான "இசையும் பாட்டும்" மற்றும் "மாஸ்கோவிலிருந்து நற்செய்திகள்" ஆகியவை வார விடுமுறையை முழுமையாக்கின.

குறிப்பாக, மாஸ்கோ வானொலிக்குக் கடிதம் எழுத மாஸ்கோ முகவரி மட்டுமல்லாமல், புது தில்லி, வசந்த் விஹார் (Vasant Vihar) பகுதியில் இருந்த முகவரியும் ஒரு முக்கியத் தொடர்பாக இருந்தது. அங்கிருந்து வரும் அழகான தபால் தலைகளும், காலண்டர்களும் இன்றும் பலரது சேகரிப்பில் பொக்கிஷங்களாக இருக்கும்.

இன்று அந்த அலைவரிசைகள் ஓய்ந்து போயிருக்கலாம், ஆனால் மாஸ்கோ வானொலி வழங்கிய அந்தத் தமிழ் அறிவும், உலகளாவிய நட்புறவும் நம் இதயங்களில் என்றும் நீங்காது. அந்தப் பழைய காகிதத்தில் உள்ள அலைவரிசை எண்களைப் பார்க்கும்போது, மீண்டும் ஒருமுறை அந்த வானொலியைத் தட்டித் தடவி, பழைய நினைவுகளை டியூன் செய்யத் தோன்றுகிறது.

இந்த வானொலியில் பணியாற்றிய பலர் மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், போன்றவற்றில் மொழிப்பெயர்ப்பாளர்களாகவும் பணியாற்றினார்கள். அதேப் போன்று அந்த பதிப்பகப் பணியாளர்கள் பலரும் பகுதி நேரமாக மாஸ்கோ வானொலியில் பணியாற்றினார்கள்.

 

Sunday, March 22, 2026

வானொலி உலகின் வசீகரக் குரல்


விகடன் 'பொக்கிஷம்' பகுதியில் கே.எஸ். ராஜா!

பழைய ஆவணங்களையும், இதழ்களையும் புரட்டிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு அரிய தகவல் கிடைத்தால் அது தரும் மகிழ்ச்சியே தனி. அப்படித் தேடியபோது கிடைத்த ஒரு பொக்கிஷம்தான், ஈழத்து வானொலியின் லெஜண்ட் கே.எஸ். ராஜா அவர்களின் இந்தப் பேட்டி.

19 அக்டோபர் 1986 அன்று 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த இந்தப் பேட்டி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு 4 ஜூலை 2012 அன்று விகடனின் "பொக்கிஷம்" பகுதியில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. பி. இளங்கோவன் மற்றும் ஆர். தேன்மொழி ஆகியோர் இந்தப் பேட்டியை எடுத்திருந்தனர்.



இலங்கை வானொலியின் அலைவரிசைகளில் தனது காந்தக் குரலால் உலகத்தமிழர்களைக் கட்டிப்போட்டவர் கே.எஸ். ராஜா. ஈழப் போராட்டச் சூழலால் நீண்ட காலம் அவரது குரலைக் கேட்க முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு, அவர் மதுரைக்கு வந்த செய்தி ஒரு இனிப்பான அதிர்ச்சியாக அமைந்தது.

மதுரை காந்தி மியூசியம் திறந்தவெளி அரங்கில் ஈழப் போராட்ட நிதி திரட்டுவதற்காக அவர் நேரடி நிகழ்ச்சியைத் தரப்போகிறார் என்றதும், மதுரை மாநகரமே அங்கு திரண்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதியது.

"பராக் சொல்வது போல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்...' என்று அறிவிக்க, கே.எஸ். ராஜா மேடைக்கு வந்தபோது எழுந்த கரகோஷம் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது."



 "சாகுமவரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்!" இந்தப் பேட்டியின் தலைப்பு ஒன்றே போதும், அவருக்கு வானொலித் துறையின் மீது இருந்த தீராத காதலையும் அர்ப்பணிப்பையும் விளக்குவதற்கு. "சாகுமவரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!" என்ற அவரது வரிகள், ஒரு கலைஞன் தனது கலையின் மீது வைத்திருந்த ஆகச்சிறந்த காதலைப் பிரதிபலிக்கிறது.

கே.எஸ். ராஜாவின் சிறப்பம்சங்களில், அதுவரை இருந்த கணீர் என்ற முறையான அறிவிப்புப் பாணியை மாற்றி, நேயர்களுடன் ஒரு நண்பனைப் போல உரையாடும் புதிய பாணியை அறிமுகப்படுத்தியவர்.

"வணக்கம், வணக்கம், வணக்கம்..." என்று அவர் தொடங்கும் போதே வானொலிப் பெட்டியின் முன் ஒரு பெரும் கூட்டமே தவம் கிடக்கும். பாப் இசை மற்றும் திரை இசையின் வல்லுனர். இலங்கை வானொலியின் பொற்காலத்தை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரையுலகைச் சார்ந்த பெரிய நட்சத்திரங்களே கே.எஸ். ராஜாவின் குரலுக்கும், அவர் மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதற்கும் ஆவலாக இருந்த காலம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஆளுமையின் பேட்டியை மீண்டும் வாசிப்பது, நம்மை 80-களின் அந்த வசீகர வானொலி காலத்திற்கே கொண்டு செல்கிறது.

இன்று டிஜிட்டல் ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையிலும், வானொலிப் பித்தர்களிடையே கே.எஸ். ராஜாவின் பெயர் ஒரு மந்திரச் சொல்லாகவே நீடிக்கிறது. ஆனந்த விகடன் இந்தப் பேட்டியை மறுபதிப்பு செய்தது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒரு வரலாற்றுப் பணி.

காலங்கள் மாறினாலும், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் கே.எஸ். ராஜா போன்ற கலைஞர்கள் விட்டுச் சென்ற தடம் அழியாதது. இத்தகைய அரிய பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவது நமது கடமையாகும்.

செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலிகள்

ஊட்டியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் உரையாற்றுகிறார் திரு.ஸ்டாலின்

தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சூழலில், ஊடகங்களின் பங்கு மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில், மார்ச் 14 மற்றும் 15, 2026 ஆகிய தேதிகளில், மலைகளின் அரசியான ஊட்டியில் "செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலிகள்" (Community Radios in the Age of AI) எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஏர்மீடியா (AirMedia) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், வானொலித் துறையின் வல்லுநர்கள், ஆர்வலர்கள் மற்றும் சமுதாய வானொலி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைமை உரை: திரு. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்

இந்த நிகழ்வின் சிகரமாக அமைந்தது கோவை மற்றும் சென்னை அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குனர் திரு. ஸ்டாலின் அவர்களின் தலைமை உரை. வானொலித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சமுதாய வானொலிகளின் இருப்பு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: சமுதாய வானொலியின் தனித்துவத்தை அவர் விரிவாக விளக்கினார். பொது சேவை வானொலிகள் (Public Service Broadcasters) ஒட்டுமொத்த தேசத்திற்கும் அல்லது மாநிலத்திற்கும் பொதுவான செய்திகளை வழங்குகின்றன. ஆனால், சமுதாய வானொலிகள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மொழி, பண்பாடு மற்றும் தேவைகளை மையமாகக் கொண்டு இயங்குபவை.

மக்களுக்கான ஊடகமாக சமுதாய வானொலி திகழ்கிறது. "மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஊடகம்" என்பதே சமுதாய வானொலியின் ஆன்மா என்பதை அவர் வலியுறுத்தினார்.

AI-ன் தாக்கம் பற்றி அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வரும் சூழலில், வானொலி நிலையங்கள் எவ்வாறு தங்களை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும், அதே சமயம் மனித உணர்வுகளையும் உள்ளூர் தொடர்பையும் எவ்வாறு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

ஏர்மீடியாவின் சிறப்பான ஏற்பாடு

ஊட்டியின் இதமான சூழலில் இந்தக் கருத்தரங்கை ஏர்மீடியா நிறுவனம் நேர்த்தியாகத் திட்டமிட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களைச் சமுதாய வானொலிகள் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள் இக்கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன. சமுதாய வானொலியைத் தொடஙக விரும்புபவர்கள் நிச்சயமாக ஏர்மீடியாவைத் தொடர்பு கொள்ளலாம்.

நவீன காலத்தில் வானொலி என்பது வெறும் ஒலிபரப்பு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு சமூக மாற்றத்திற்கான கருவி என்பதை இக்கருத்தரங்கு மீண்டும் உறுதிப்படுத்தியது.

தொழில்நுட்பங்கள் மாறினாலும், அடிமட்ட மக்களின் குரலை உலகிற்கு கொண்டு செல்லும் சமுதாய வானொலிகளின் தேவை என்றும் குறையாது. திரு. ஸ்டாலின் போன்ற அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் இத்துறைக்கு ஒரு புதிய திசையைக் காட்டியுள்ளது.

இந்தக் கருத்தரங்கு குறித்த உங்களின் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிருங்கள்!




Saturday, March 21, 2026

போர்க்கால சூழலில் ஈரானிய வானொலி

1997இல் ஈரான் வானொலி எமக்கு நேரடியாக அனுப்பிய வண்ண அட்டை

இருளில் ஒளிவீசும் அலைவரிசைகள்: போர்க்கால சூழலில் ஈரானிய வானொலியின் முக்கியத்துவத்தை இந்தச் சூழலில் பதிவு செய்தே ஆகவேண்டும். நவீன உலகில் இணையமும் சமூக ஊடகங்களும் தகவல்களை உடனுக்குடன் வழங்கினாலும், போர் மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்படும் காலங்களில் இவை எளிதில் முடக்கப்படலாம். ஈரானில் தற்போது நிலவி வரும் பதற்றமான மற்றும் போர் மேகங்கள் சூழ்ந்த சூழலில், அந்நாட்டு மக்களுக்கு வெளியுலகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக 'ரேடியோ ஈரான் இன்டர்நேஷனல்' (Radio Iran International) உருவெடுத்துள்ளது.

ஈரான் போன்ற நாடுகளில் இணையம் முடக்கப்படும்போது அல்லது கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்படும்போது, செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள்கூட ஜாமிங் (Jamming) தொழில்நுட்பத்தால் முடக்கப்படலாம். ஆனால், சிற்றலை (Shortwave) வானொலி அலைகளைத் தடுப்பது கடினம். 'ஈரான் இன்டர்நேஷனல்' போன்ற வானொலிகள் பாரசீக மொழியில் (Persian) துல்லியமான செய்திகளை வழங்குவதன் மூலம், தணிக்கையற்ற உண்மையான நிலவரங்களை மக்கள் தெரிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால், இந்த ஒலிபரப்பு யாரால் செய்யப்படுகிறது என்பது இங்கு முக்கியமானது.

போர்க்காலங்களில் வதந்திகள் வேகமாகப் பரவும். எப்போது தாக்குதல் நடக்கும், எங்கு பாதுகாப்பு தேடுவது போன்ற முக்கியமான தகவல்களை அதிகாரப்பூர்வ வானொலி அலைவரிசைகள் மூலம் மக்கள் பெற முடியும். இணையத்தைப் பயன்படுத்தும்போது ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டறியும் அபாயம் உண்டு, ஆனால் வானொலியைக் கேட்பவர்களைக் கண்டறிவது கடினம் என்பதால், இது மக்களுக்குப் பாதுகாப்பான ஒரு ஊடகமாகத் திகழ்கிறது.


 பகிர்ந்துள்ள அட்டவணையின்படி, இந்த வானொலி அலைவரிசைகள் சோபியாவில் (பல்கேரியா) உள்ள கொஸ்டின்ப்ரோட் (Kostinbrod) ஒலிபரப்பு நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படுகின்றன. இதன் அலைவரிசை விவரங்கள் புகைப்படத்தில்.

இந்த அலைவரிசைகள் வாரத்தின் ஏழு நாட்களும் இடைவிடாமல் இயங்குகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களுக்கேற்ப அதிர்வெண்கள் மாற்றப்படுவது, தடையற்ற ஒலிபரப்பை உறுதி செய்கிறது ஈரான் வானொலி.

மின்சாரம் இல்லாத சூழலிலும் பேட்டரி மூலம் இயங்கும் சிறிய வானொலிப் பெட்டிகள் போதும். போரின் நடுவே தனிமையில் இருக்கும் மக்களுக்கு, வானொலியில் ஒலிக்கும் மனிதக் குரல்கள் ஒருவித மன வலிமையையும், தாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்ற நம்பிக்கையையும் தருகின்றன.

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், ஒரு நாட்டின் நெருக்கடி நிலையில் வானொலி என்பது வெறும் பொழுதுபோக்குக் கருவி மட்டுமல்ல; அது மக்களின் அடிப்படை உரிமையான 'தகவல் அறியும் உரிமை'யைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகும் என்பதற்கு மீண்டும் ஒரு சான்றாக இந்த சிற்றலை வானொலி அமைந்துள்ளது. ஆனால் நமது ஆகாஸ்வாணி தமிழில் தனது அனைத்து சிற்றலை ஒலிபரப்புகளையும் நிறுத்திவிட்டது. இது போன்ற ஒரு பேரிடர் வந்தால், நம் மக்களைச் சென்றடைய ஒரு சிற்றலை வானொலி கூட தமிழகத்தில் இல்லை!

"எனக்குத் தெரிந்தவரை Radio Iran International என்ற பெயரில் இயங்கும் வானொலி/தொலைக்காட்சி லண்டனிலிருந்து பெர்சியன் மொழியில் ஒலி/ஒளிபரப்பாகி செயற்கைக்கோள், இணையம், வானொலி அலைகள் மூலம் மக்களைச் சென்றடைகிறது. இது லண்டனைச் சேர்ந்த சௌதி அரேபியரான ஒரு வர்த்தகரால் முதலீடு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த அமைப்பை தற்போதைய ஈரானிய அரசு தடை செய்துள்ளது. ஈரானுக்குள்ளிருந்து தற்போது சர்வதேச ஒலிபரப்பு எதுவும் நடைபெறுவதாகத் தகவல் இல்லை," என மூத்த வானொலி ஆர்வலர் திரு.யூ.கே.ஷர்மா கூறுகிறார். 




ஊட்டி சமுதாய வானொலிக் கருத்தரங்கு

சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிய வேலையில் நாங்கள் ஊட்டியில் சமுதாய வானொலித் தொடர்பான கருத்தரங்கில்...


ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தி வரும் வேகமான மாற்றங்களுக்கு மத்தியில், உதகமண்டலத்தில் (ஊட்டி) உள்ள விநாயகா இன் பாப்பீஸ் ஹோட்டலில் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் “செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சமுதாய வானொலி” என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் ஏர்மீடியா ஏற்பாட்டில் நடைபெற்றது. சமுதாய வானொலிகளின் வளர்ச்சி, சமூக பங்களிப்பு மற்றும் வானொலி ஒலிபரப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் புதிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அமைந்தது. மேலும், சமுதாய வானொலி நிலையங்களை தொடங்க ஆர்வம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்நிகழ்வு ஏர்மீடியாவால்  ஒருங்கிணைக்கப்பட்டது



இந்தக் கருத்தரங்கில், யாம்  எழுதிய “சமுதாய வானொலிக் கையேடு” (Community Radio Handbook) என்ற புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஏர்மீடியா பிராட்காஸ்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Airmedia Broadcast Solutions Private Limited) நிறுவனத்தால் பதிப்பிகப்பட்டுள்ள இப்புத்தகம், புதிய வானொலி நிலையங்களைத் தொடங்க விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே இயங்கி வருபவர்களுக்கும் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமையும். இதில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் சமுதாய வானொலி நிலையங்கள் குறித்த தொகுக்கப்பட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.



நிகழ்வில் எளிமையான ஒரு  உரையை ஆற்றினேன். அதில், இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள 'ரெஸ்ட்ரிக்டட் சர்வீஸ் லைசென்ஸ்' (Restricted Service License - RSL) முறையைப் போன்ற ஒரு அமைப்பை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இத்திட்டத்தின் கீழ், “பொங்கல் எஃப்.எம்” அல்லது “ரம்ஜான் எஃப்.எம்” போன்ற சிறப்புச் சேவைகளுக்காக ஒரு மாதம் போன்ற குறுகிய காலத்திற்கு உரிமங்களை வழங்கலாம் என்றும், இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் வானொலி ஒலிபரப்பின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்றும் விளக்கினேன்.



 கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் திரு. பி. விஜயகுமார் பேசுகையில், சமுதாய வானொலி நிலையங்களை நிறுவுவதற்கு மத்திய அரசு தற்போது 12.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குவதைக் குறிப்பிட்டார். இந்த மானியத்தைப் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் எளிதான முறையில் வானொலி நிலையத்தைத் தொடங்குவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். மேலும், ரத்தினம் கல்லூரி (ரத்தினவாணி எஃப்.எம்) மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் (கலசலிங்கம் எஃப்.எம்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், ஏர்மீடியா நிறுவனம் வழங்கி வரும் தொழில்நுட்ப ஆதரவு குறித்தும் விளக்கினர்.

இரண்டாம் நாள் அமர்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 24 மணிநேர தானியங்கி ஒலிபரப்பு மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பை மேம்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதில் குறிப்பாக டி.ஜி.வைணவக் கல்லூரியின் இதழியல் துறைத் தலைவர் முனைவர்.பிரஹதி விரிவானதொரு உரையைக் காட்சிகளுடன் வழங்கினார். மேலும், வரும் டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஊடக மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த முனைவர் சி. பிரவீன்குமார் மற்றும் சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரி இதழியல் துறை பேராசிரியர் முனைவர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஊடக வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, சமுதாய வானொலிகளின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியத் தளமாக அமைந்தது.

Friday, January 30, 2026

வானொலி ஆய்வுச் செம்மல்

மகிழ்ச்சியான செய்தி!

மதுரையில் நடைபெற்ற நேசகானம் வானொலியின் (Nesaganam Radio) 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், இணைய வானொலி இயக்குநர்கள் சங்கம் (Online Radio Directors Association) எமக்கு "வானொலி ஆய்வுச் செம்மல்" (Radio Research Excellence Award) விருதினை வழங்கி கௌரவித்தது.

வானொலி இதழியல், ஊடக ஆய்வுகளில் (Radio Journalism and Media Studies) யாம் ஆற்றிவரும் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை மிகுந்த நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த உயரிய விருதிற்கு எம்மைத் தேர்ந்தெடுத்த சங்கத்தின் நிர்வாகிகளான திரு.கே.பிரபாகரன், முனைவர்.எம்.முஹம்மது அஸ்கர், திரு.இராதகிருஷ்ணன் மற்றும் என்னை என்றும் ஊக்கப்படுத்தும் சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல்  துறைக்கும், என் அன்பிற்குரிய மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வானொலித் துறையின் AI  எதிர்காலம் மற்றும் அதன் ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட இந்த விருது எமக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

#





 

Saturday, January 10, 2026

மதுரக்குரல் மன்னனின் மௌனமான இறுதிப் பக்கம்

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 31

 


Thursday, January 08, 2026


 

ஒரு சில புத்தகங்களை நம் வாழ்க்கையில் மறக்க முடியாது. ஒரு காலத்தில் இந்த புத்தகம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறோம். இன்று அதேப் புத்தகத்தின் அனைத்துப் பதிப்புகளும் நம் கைவசம் இருந்தால் எப்படியிருக்கும். அப்படியான புத்தகம் தான் இந்த WRTH.

உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேடு 2026 (World Radio TV Handbook 2026) என்பது வானொலி மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு ஒரு மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. 1947-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கையேடு, இந்த ஆண்டு தனது 80-வது பதிப்பை வெளியிடுவதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. 832  பக்கங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான புத்தகம், உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் வானொலி நிலையங்கள், அவற்றின் அலைவரிசைகள், ஒலிபரப்பு நேரங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. குறிப்பாக, அச்சு வடிவில் வெளியாகும் கடைசிப் பதிப்பு இது என்பதால், உலகெங்கிலும் உள்ள வானொலி ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த 2026-ஆம் ஆண்டு பதிப்பு முந்தைய ஆண்டுகளை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 96 வண்ணப் பக்கங்கள் இடம்பெற்றுள்ளன, இது வழக்கமான பதிப்புகளை விட 32 பக்கங்கள் அதிகமாகும். இந்த வண்ணப் பக்கங்களில் நார்ஃபோக் தீவு, ஜிப்ரால்டர் மற்றும் டோங்கா போன்ற தீவு நாடுகளின் வானொலி வரலாறு மற்றும் தற்போதைய ஒலிபரப்பு நிலை குறித்த சுவாரசியமான கட்டுரைகள் புகைப்படங்களுடன் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. இது வெறும் தரவுப் பட்டியலாக மட்டுமல்லாமல், ஒரு வரலாற்றுப் புத்தகமாகவும் வாசிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமைகிறது. மேலும், சர்வதேச வானொலி நிலையங்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் இணையதளத் தரவுகள் அனைத்தும் மிகத் துல்லியமாகச் சரிபார்க்கப்பட்டு இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் பொழுது, இந்த கையேடு நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் ரேடியோ மாண்டியல் (DRM) மற்றும் எச்.டி (HD) வானொலி தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான பகுதிகள் இதில் உள்ளன. தற்போதைய சூழலில் டிஜிட்டல் ஒலிபரப்புகள் அதிகரித்து வருவதால், அவற்றைப் பிடிப்பதற்கான வழிமுறைகளும், அலைவரிசைப் பட்டியல்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், எஸ்.டி.ஆர் (SDR) எனப்படும் மென்பொருள் சார்ந்த வானொலி கருவிகள் மற்றும் புதிய ரக ரிசீவர்கள் குறித்த நிபுணர்களின் ஆய்வுகள், புதிய கருவிகளை வாங்கத் திட்டமிடுபவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றன. அலைவரிசைகளின் குறுக்கீடுகள் மற்றும் புவிசார் தகவல் தொடர்புகள் குறித்த நுணுக்கமான தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், இந்த 2026 பதிப்பு ஒரு வருத்தமான செய்தியையும் சுமந்து வந்துள்ளது. காகித விலை உயர்வு மற்றும் கப்பல், பான் அஞ்சல் போக்குவரத்துச் செலவுகள் உலக அளவில் அதிகரித்துள்ளதால், அச்சு வடிவில் வெளிவரும் கடைசிப் பதிப்பு இதுவே என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 80 ஆண்டுகால அச்சுப் பாரம்பரியம் இந்த ஆண்டோடு நிறைவடைகிறது. இனிவரும் காலங்களில் WRTH முழுமையாகத் தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப் (Web App) வழியாகவே தனது சேவைகளைத் தொடர உள்ளது. இதனால், இந்த 2026 அச்சுப் பதிப்பானது ஒரு அரிய சேகரிப்புப் பொருளாக (Collector's Item) மாறியுள்ளது. குறிப்பாக, கையொப்பமிடப்பட்ட மற்றும் வரிசை எண் இடப்பட்ட சிறப்புப் பதிப்புகள் வெளியானதுமே விற்றுத் தீர்ந்தது இதன் மதிப்பை உணர்த்துகிறது.

நிறைவாக, உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி கையேடு 2026 என்பது ஒரு சகாப்தத்தின் நிறைவாகக் கருதப்படுகிறது. வானொலி அலைகளைத் தேடிப் பிடிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கும், உலகளாவிய ஒலிபரப்புத் துறையை ஆய்வு செய்பவர்களுக்கும் இது ஒரு தவிர்க்க முடியாத பொக்கிஷமாகும். அச்சுப் பதிப்பு நின்று போனாலும், அதன் டிஜிட்டல் வடிவம் மற்றும் பி.டி.எஃப் (E-book) பதிப்புகள் மூலம் இந்தத் தகவல்கள் தொடர்ந்து பகிரப்படும் என்பது ஆறுதலான விஷயம். வானொலி ஆர்வலர்கள் தங்களின் நூலகத்தில் பெருமையுடன் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாகவே இந்த 80-வது பதிப்பைப் பார்க்க முடியும்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி WRTH (at) WRTH  (dot) ORG

Tuesday, January 06, 2026

இந்தியாவில் சமுதாய வானொலிகளின் வளர்ச்சி (2020-2024)

 

இந்தியாவில் சமுதாய வானொலி நிலையங்களின் (Community Radio Stations - CRS) வளர்ச்சி மற்றும் பரவல் குறித்த இந்த ஆய்வு, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-2024) ஏற்பட்டுள்ள மாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (MIB) தரவுகளின்படி, சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களுக்கான தகவல் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த ஊடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ஜனநாயகத்தின் குரலாகக் கருதப்படும் சமுதாய வானொலிகள், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 194 வெவ்வேறு மாவட்டங்களில் மொத்தம் 212 புதிய நிலையங்களாக விரிவடைந்துள்ளன

புள்ளிவிவர ரீதியாகப் பார்க்கும்போது, 2020 ஆம் ஆண்டில் 20 நிலையங்கள் தொடங்கப்பட்ட நிலையில், 2021 இல் அது 24 ஆகவும், 2022 இல் 59 ஆகவும் அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் அதன் உச்சத்தை எட்டி, ஒரே ஆண்டில் 81 புதிய நிலையங்கள் நிறுவப்பட்டன. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் இதன் வேகம் சற்று குறைந்து 28 நிலையங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. மாநில ரீதியான ஆய்வில், உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு மட்டும் 35 புதிய நிலையங்கள் 33 மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (26 நிலையங்கள்) மற்றும் ஒடிசா (26 நிலையங்கள்) ஆகிய மாநிலங்கள் சமுதாய வானொலிப் புரட்சியில் முன்னிலை வகிக்கின்றன.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 17 புதிய சமுதாய வானொலிகளைப் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் 5 நிலையங்களும், கர்நாடகாவில் 6 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் (4 நிலையங்கள்) மற்றும் அசாம் (2 நிலையங்கள்) ஆகிய மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக் போன்ற மிகத் தொலைதூர மற்றும் சவாலான புவியியல் அமைப்பைக் கொண்ட பகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டில் தலா ஒரு நிலையம் தொடங்கப்பட்டது, சமுதாய வானொலிகளின் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உறுதிப்படுத்துகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், மத்தியப் பிரதேசம் (7 நிலையங்கள்), பீகார் (7 நிலையங்கள்), மற்றும் சத்தீஸ்கர் (12 நிலையங்கள்) போன்ற மாநிலங்களிலும் சமுதாய வானொலிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த வானொலி நிலையங்கள் பெரும்பாலும் உள்ளூர் மொழிகளிலும் கிளைமொழிகளிலும் தகவல்களைப் பரப்புவதால், கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. 194 மாவட்டங்களைச் சென்றடைந்துள்ள இந்த ஊடகம், இந்தியாவின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது.

 Reference Books

  1. Pavarthan, K. (2018). Community Radio in India: Heritage, Processes and Governance. Routledge.

  2. Ministry of Information and Broadcasting. (2024). Community Radio Policy Guidelines and Impact Reports. Government of India.