பாளையங்கோட்டை தங்க.ஜெய்சக்திவேல், சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.
கலைமகள்----க்ளீட்டஸ், நீங்கள் சரியாக பதிலளிக்க முடியுமா?
க்ளீட்டஸ்----சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் கண்டிப்பாக பெய்ஜிங்கில் தான் அமைந்துள்ளது இல்லையா, கலைமகள்?
கலைமகள்----ஆமாம். பெய்ஜிங் பல்கலைக்கழகம், சிங்ஹுவா பல்கலைக்கழகம் ஆகியவை பெய்ஜிங்கில் அமைந்துள்ளன. ஆனால், சீனாவில் நான்கு பல்கலைக்கழகங்கள் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. மேற்கூறிய இரண்டு பல்கலைக்கழகங்களைத் தவிர, தியன்சின் மாநகரிலுள்ள நான்கேய் பல்கலைக்கழகம், ஷாங்காய் மாநகரிலுள்ள புஃதான் பல்கலைக்கழகம் ஆகியவை மற்ற இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகும்.
க்ளீட்டஸ்----அப்படியா!இந்த நான்கு புகழ்பெற்ற சீனப் பல்கலைக்கழங்களை நாம் அறிமுகப்படுத்தலாம்.
கலைமகள்----சரி, முதலில், பெய்ஜிங் பல்கலைக்கழகம் பற்றி நீங்கள் சொல்லுங்கள். உலகில் மிகவும் புகழ்பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
க்ளீட்டஸ்----நிச்சயமாக! பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டுள்ளேன். அதன் வளாகத்திலுள்ள அழகான ஏரி, இந்தப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வண்ணத்தைக் கூட்டுகிறது. 1898ம் ஆண்டில் பெய்ஜிங் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சீனாவின் புதிய பண்பாட்டு இயக்கத்தின் மையமாகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்பு நடவடிக்கை நடத்திய தளமாகவும் இது உள்ளது.
கலைமகள்----நீங்கள் சொன்னது சரிதான். வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சீர்திருத்தத்துக்குப் பிறகு, பெய்ஜிங் பல்கலைக்கழகம் முன்னெப்பொழுதும் கண்டிராத வளர்ச்சிக் காலத்தில் நுழைந்தது. இப்பொழுது, 47 சீன அறிவியலகத்தின் உறுப்பினர்கள், 15 நாட்டு முக்கிய ஆராய்ச்சிக் கூடங்கள், 120 ஆய்வகங்கள் முதலியவற்றை பெய்ஜிங் பல்கலைக்கழகம் கொண்டு விளங்குகிறது.
க்ளீட்டஸ்----பெரிய அளவிலான திறமைசாலிகள் பலர் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்தனர்!உலகளவில் பெய்ஜிங் பல்கலைக்கழகம், சீனாவின் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது.
கலைமகள்----ஆமாம். பெய்ஜிங் பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், 1911ம் ஆண்டில் நிறுவப்பட்ட சிங்ஹுவா பல்கலைக்கழகமும் மிகவும் புகழ்பெற்றது ஆகும். துவக்கக்காலத்தில், மேலை நாட்டுப் பண்பாட்டின் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும், சீனாவின் தலைசிறந்த பண்பாட்டை ஆராய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் கவனம் செலுத்தியது. சீனாவின் பாரம்பரிய பண்பாட்டு ஆய்வகத்தின் புகழ்பெற்ற நான்கு பேராசிரியர்களை பிரதிநிதிகளாக கொண்ட நிபுணர்கள், சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினர்.
க்ளீட்டஸ்----கலைமகள், சிங்ஹுவா பல்கலைக்கழகம், பொறியியல் தொழில் நுட்ப திறமைசாலிகளை முக்கியமாக பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கிறது. அல்லவா?
கலைமகள்----ஆமாம். பொறியியல், இப்பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக் கல்வியியலாகும்.
க்ளீட்டஸ்----சீனாவின் ஏவுகணைத்தந்தை என்று அழைக்கப்பட்ட அறிவியலாளர் சின் சியேசன், சீனாவின் முதலாவது செயற்கைகோளை ஆராய்ந்தவர் சாவ் ச்சியுசாங், சீனாவின் ஏவூர்திக்கு வித்திட்டவர் லியாங் சாவ்பாங் முதலியோர், சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் படித்தபட்டதாரிகளாவர்.
கலைமகள்----ஆமாம். க்ளீட்டஸ், சிங்ஹுவா பல்கலைக்கழகம் பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருக்கின்றீர்கள்!
க்ளீட்டஸ்----நிச்சயமாக. பெய்ஜிங் பல்கலைக்கழகமும், சிங்ஹுவா பல்கலைக்கழகமும் மிகவும் புகழ்பெற்றவையே. கலைமகள்----சரி, சற்று முன், சீனாவில் நான்கு பல்கலைக்கழங்கள் புகழ்பெற்று விளங்குவதாகக் குறிப்பிட்டேன். பெய்ஜிங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைப் பற்றி, நீங்கள் நன்றாக அறிந்துகொண்டீர்கள். இனி, இதர இரண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பற்றிக் கூறுகின்றோம்.
க்ளீட்டஸ்----சொல்லலாம். சீனாவின் முன்னாள் தலைமையமைச்சர் சூ என்லாய் படித்துப் பட்டம் பெற்றதால், நான்கேய் பல்கலைக்கழகம் புகழ்பெற்றது. அதன் பட்டதாரிகள் வெளிநாடுகளில் வெகுவாக வரவேற்கப்படுகின்றனர்.
கலைமகள்----ஆமாம். 1919ம் ஆண்டு, சீனாவின் சமகால புகழ்பெற்ற நாட்டுப்பற்று கல்வியலாளர் சாங் போலிங்கும், யேன் சியுவும் நான்கேய் பல்கலைக்கழகத்தை நிறுவினர். மானிடப் பண்பாட்டியல், இயற்கையியல், தொழில் நுட்ப அறிவியல், நிர்வாகம், மருத்துவம், கலை உள்ளிட்ட பல துறைகள் இங்கு உள்ளன. குறிப்பாக, புகழ்பெற்ற கணிதவியலாளர் சென் சிங்சான் முதலிய அறிவியலாளர்களைக் கொண்டிருந்ததால், இப்பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
க்ளீட்டஸ்----அதேவேளை சியன்சின் என்னும் துறைமுக நகரத்தில் அமைந்துள்ளதால், நான்கேய் பல்கலைக்கழகம், திறப்பு மற்றும் புத்தாக்க கல்வியல் தனிச்சிறப்பியல்களைக் கொண்டுள்ளது. உண்மையில் புகழ்பெற்ற சகமாணவர்களால், ஒரு பல்கலைக்கழகத்தின் புகழ் பெரிய அளவில் விரிவாக்கப்படலாம்.
கலைமகள்----ஆமாம். க்ளீட்டஸ், ஷாங்காய் மாநகரிலுள்ள பூஃதான் பல்கலைக்கழகம் பற்றி அறிமுகப்படுத்திக் கூறுகின்றேன். பூஃதான் என்றால், சீன மொழியில் மறுமலர்ச்சி என்று பொருளாகும்.
க்ளீட்டஸ்----நல்ல பெயர் தான். பூஃதான் பல்கலைக்கழகம், அறிவியல் துறையை முக்கியமாகக் கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அது இருப்பதாகக் கருதுகின்றேன். அதற்கு காரணம், கடந்த நூற்றாண்டின் 80வது ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் துறையின் மாணவர்கள் பலர் வெளிநாட்டுக்குச் சென்று பாடம் கற்றுக்கொண்டனர் என்பதைக் கேட்டறிந்தேன்.
கலைமகள்----ஆமாம். உயிரினவியல், கணிணி, இயல்பியல் ஆகிய துறைகள், பூஃதான் பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பான துறைகளாகும். க்ளீட்டஸ், தங்க.ஜெய்சக்திவேல் இடம் இருந்து இன்னும் மற்றொரு கேள்வி உண்டு.
க்ளீட்டஸ்----சொல்லுங்கள். பல்கலைக்கழகம் பற்றிய கேள்வி இருக்கிறதா?
கலைமகள்----ஆமாம். இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் படிப்பு படிக்க, சீனாவில் எந்தக் கல்வி நிறுவனம் புகழ்பெற்றது என்று அவர் கேட்டார்.
க்ளீட்டஸ்----இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்கலாம். சீனப் பரவல் மற்றும் செய்தி ஊடகப் பல்கலைக்கழகம், சரி தானே?
கலைமகள்----ஆமாம். ஆனால், பெய்ஜிங் பல்கலைக்கழம், சீன மக்கள் பல்கலைக்கழகம், பூஃதான் பல்கலைக்கழகம் முதலிய பல்கலைக்கழகங்களிலும் இதழியல் துறை சிறப்பாக உள்ளது.
க்ளீட்டஸ்----அப்படியா! இதழியல் அல்லது மக்கள் தொடர்பியலில் விருப்பம் கொண்டால், இந்த பல்கலைக்கழங்களுக்குச் சென்று படிக்கலாம்.
கலைமகள்----நல்ல முன்மொழிவு. கடைசியாக, சீனாவின் தேசிய செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி நிறுவனம் எப்பொழுது துவங்கப்பட்டது என்பதற்கு பதிலளிக்கலாமா?
க்ளீட்டஸ்----இது பற்றிய சரியான விடை எனக்குத் தெரியாது, நீங்கள் சொல்லுங்கள்.
கலைமகள்----சரி. சின்ஹுவா செய்தி நிறுவனம் 1931ம் ஆண்டின் நவம்பர் திங்கள் சியாங்சீ மாநிலத்தில் நிறுவப்பட்டது. சீனப்புரட்சியின் வெற்றிக்கு ஆற்றிய பங்கை அலட்சியம் செய்யக்கூடாது.
க்ளீட்டஸ்----கலைமகள், இன்றைய நிகழ்ச்சி மூலம், சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை பற்றியும் தொடர்புடைய இயல்களை பற்றியும் நன்றாக புரிந்துகொண்டுள்ளேன்.
கலைமகள்----தங்க.ஜெய்சக்திவேல் நல்ல கேள்விகளை வழங்கியதற்கு மிக்க நன்றி. தமிழ்ப்பிரிவின் நேயர் தொடர்பு குழு விரைவில் உங்களுக்கு சிறப்பான அன்பளிப்பு அனுப்பும்.
க்ளீட்டஸ்----சரி. நேயர்களே இத்துடன், இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகிறது. சீனா, சீன வானொலி, தமிழ்ப்பிரிவு முதலியவை பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால், மின்னஞ்சல், கடிதம், மற்றும் தொலைபேசி மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள். (ஒலிபரப்பான நாள் 13 பிப்ரவரி 2012)
No comments:
Post a Comment