வணக்கம் கூறி விடைபெறுவது
இராஜேஸ்வரி சண்முகம் என்று
கணீரென்று காற்றலையில் நிறைவுசெய்வாயே
இன்று-
உலகத்தைவிட்டு விடைபெற்றும்
உன் வாழ்கையை நிறைவு செய்தும்
வானலையில் கரைந்து விட்டாயே அக்கா!
எழுபதுகளில் நீ புகழின் உச்சத்தில் இருந்தபோது
நான் வானொலிக்குள் வந்தேன்.
உன்னோடு சேர்ந்து பணிபுரிந்தபோது ஏற்பட்ட
உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை அக்கா..
ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் என்னுடன் எல்லோரும் அன்புதான்
ஆனால் உனது அன்பு அளப்பெரியது..
வானொலி அறிவிப்போடு மட்டுமல்லாமல்
நாடகம், இலக்கியம் என்றெல்லாம் நீ
நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி பல லட்ச
நேயர்கள் நெஞ்சில் நின்று....
நீங்காத இடத்தைப் பெற்றீர்...
'பிரியா பாட்டி' என்ற தலைப்பில்
வரிவரியாய் நான் எழுதித்தர...
பிரதி சனி தோறும் பிரமாதமாய் நடித்து
நேரடி ஒலிபரப்பு செய்த ஒருத்தி என்றால்
அது நீதான் என்பேன்....
உகந்தைமலை முருகன் பக்திப்பாடல்...
இலங்கையில் முதல் வெளிவந்த தனிக்கோவில் பாடல்
நான் இசையமைத்து பாடியபோது...
கோவில் வரலாற்றையும், பாடல்பற்றிய குறிப்பாக
உனது ஈரடி கவிகொண்டு உன் கம்பீரக் குரலினால்
முன்னுரையும், முடிவுரையும் முன்னின்று தந்தாயே..அக்கா
கோவிலூர் என்று சொல்லி கொள்ளை ஆசையுடன் அழைப்பாய்
நீவி வகுடெடுத்து நெற்றியில் போட்டுவைத்து
ஆடம்பரமில்லாமல் அழகாக நீ இருப்பாய்...
எண்ணிப்பார்க்கின்றேன் இதயம் கனக்கிறது..
சொல்லில் அடங்காத துயரம் வருகிறது...
உன் குரலில், உன் குணத்தில், உன் அன்பில்
நான் கரைந்தவன்...
இன்று உன் இழப்பில் நான் என்னையே மறந்தவன்...
அக்கா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்...
ஓம்.சாந்தி.
(http://www.koviloor.com/2012/03/blog-post_23.html)
No comments:
Post a Comment