மார்ச்சு 16 1940 தொடக்கம் மார்ச் 23 2012 வரை வாழ்நாள் காலத்தைக்கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார்.
1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர்.
ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு - அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையில் முதலில் படித்தார். பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்கும் போது நடித்த "கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் "சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்.
கலைக்குடும்பம் - இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும் மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி மேடை நாடகங்களில் நடித்தவர்.
வானொலி நிகழ்ச்சிகள் - சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி.விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். வானொலியில் ´பொதிகைத் தென்றல்´ என்ற இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர்.
மேடை நாடகங்கள் - சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்", முருகையனின் ":விடியலை நோக்கி", சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்", சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு".
மறைவு - இராஜேசுவரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். (http://www.adaderana.lk/tamil/news.php?nid=23980)
No comments:
Post a Comment