Thursday, June 26, 2008

பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது

69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.
உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.
ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.

Monday, June 02, 2008

கொழும்பு சர்வதேச வானொலி நிறுத்தப்பட்டது.

80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையைச் செய்து வந்த கொழும்பு சர்வதேச வானொலி தன து மத்திய அலை ஒலிபரப்பை (873 கி.ஹெ) நேற்று 01 ஜூன் 2008 முதல் நிறுத்தி விட்டது. இதற்கு விளம்பர வருவாய் குறைந்ததேக் காரணமாக இருக்கலாம் என அறியப்படுகிறது. தமிழக வானொலிகளில் கூட இல்லாத பாடல்களைக் கொண்ட ஒலிக்களஞ்சியம் இந்த வானொலியில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வானொலி நிறுத்தப்பட்டதற்கு மற்றும் ஒரு காரணமாக தமிழக தனியார் பண்பலை வானொலிகள் உள்ளன. கொழும்பு சர்வதேச வானொலியில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்தும் தற்பொழுது தமிழக தனியார் பண்பலை வானொலிகளில் ஒலிபரப்பாகிறது.

ஒரு காலகட்டத்தில் தமிழக நேயர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த வானொலியின் சகாப்தம் முடிந்துவிட்டது. மயில்வாகணன், சிவபாத சுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம், கே.எஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் ஹமீது போன்ற ஜாம்பவான்களின் குரல் ஒலித்த இந்த வானொலி மீண்டும் உயிர் பெற நேயர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?!
-தங்க. ஜெய்சக்திவேல், சென்னை.