Saturday, December 25, 2021

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலிகள்

 


கிருஸ்த்துமஸ் வானொலிகள் 
 
வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலிகள் உலகம் முழுதும் பல உள்ளன. அவை அனைத்தும் சிற்றலையில் மட்டுமே ஒலிபரப்பி வருகின்றன. சமீப காலமாக பல சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதில் குறிப்பாக தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலீனாவில் இருந்து ஒலித்த ‘ரேடியோ செயின்ட் ஹெலீனா’ வானொலியும் அடங்கும். இந்த வானொலி வருடத்தின் டிசம்பர் மாதத்தில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அரைமணி நேரம் மட்டும் ஒலிபரப்பும். அந்த ஒலிபரப்பினைக் கேட்க உலகம் முழுவதும் தீவிரமான வானொலி நேயர்கள் விடிய விடிய காத்திருந்தது ஒரு காலம். 
 
 
 தமிழகத்தில் செயின்ட் ஹெலீனா வானொலியை நள்ளிரவு 12.30 முதல் 1.00 மணிவரை கேட்ட ஞாபத்தினை மறக்கவும் முடியுமா?. இந்த ஒலிபரப்பினை கேட்பதற்காகவே பல்வேறு இடங்களைத் தேடி, கடைசியில் எங்களுக்கு கிடைத்த இடம் தான் தாம்பரம் கிருஸ்த்துவ கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு அருகில், காட்டின் ஓரத்தில் இருந்த திரு.பாலு (எ) பாலசுப்பிரமணியன் அவர்களின் இல்லம். பல வருடங்கள், இவர் வீட்டின் மொட்டைமாடியில் உள்ள Long Wire ஆண்டனாவின் துணை கொண்டு Radio Saint Helena ஒலிபரப்புகளைக் கேட்டதை மறக்க முடியாது. இன்றும் அவர்கள் அனுப்பிய QSL Cards அந்த நினைவுகளின் எச்சத்தினைத் தக்கவைத்துள்ளது. 
 
சமீபத்தில் International DX Club of India (IDXCI) புலனக் குழுமத்தில் ஒரு தகவல். அது வருடத்தின் ஒரு நாள் மட்டும் CW Mode (Morse Code)ல் ஒலிபரப்பும் வானொலியைப் பற்றியது. அந்த வானொலியின் கிருஸ்மஸ் சிறப்பு ஒலிபரப்பின் முழுமையான You Tube பக்கத்தினையும் அதில் பதிவேற்றியிருந்தனர். 
 
அந்த வானொலியின் சிறப்புகளில் ஒன்று, அது யுனஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகின் ஒரே வானொலி ஒலிபரப்பு நிலையமாகும். இந்த க்ரிமெட்டன் வானொலி நிலையம் ஸ்வீடனின் தெற்கு பகுதியில் உள்ள வர்பெர்க் நகரின் வெளிப்புரத்தில் அமைந்துள்ளது. 
 
வர்பெர்க்கில் உள்ள க்ரிமெட்டன் வானொலி நிலையம் 1922-24 கட்டப்பட்டது. ஆரம்பகால வயர்லெஸ் அட்லாண்டிக் தகவல்தொடர்புக்கு இது பெரிதும் பயன்பட்டுள்ளது. தற்பொழுது நன்கு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இது உள்ளது. இங்கு ஆறு 127 மீட்டர் உயரமுள்ள எஃகு கோபுரங்களில் சிற்றலை ஒலிபரப்பிற்கான டிரான்ஸ்மிட்டரை அமைத்துள்ளார்கள். 
 
வழக்கமான பயன்பாட்டில் தற்பொழுது இல்லை என்றாலும், இங்குள்ள ஒலிபரப்பு சாதனங்கள் இயக்க நிலையில் பராமரிக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் இவர்கள் இன்றும் ஒலிபரப்புகிறார்கள். 109.9 ஹெக்டேர் தளத்தில் அலெக்சாண்டர்சன் டிரான்ஸ்மிட்டரைக் கொண்ட கட்டிடங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. கட்டிடக் கலைஞர் கார்ல் அகெர்ப்லாட் அவர்கள் நியோ கிளாசிக்கல் பாணியில் இந்த கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். கட்டமைப்பு பொறியாளர் ஹென்ரிக் க்ரீகர் ஆண்டெனா கோபுரங்களை வடிவமைத்துள்ளார். 
 
அந்த காலகட்டத்தில் ஸ்வீடனில் கட்டப்பட்ட மிக உயரமான கட்டமைப்பாக இதனைக் கருதலாம். இந்த சிற்றலை ஒலிபரப்பு நிலையம், தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் எனலாம். 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த சிற்றலை ஒலிபரப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பெரிய டிரான்ஸ்மிட்டர் நிலையமாக இது உள்ளது. உலகில் எஞ்சியிருக்கும் ஒரே உதாரணமாக இந்த வானொலி இன்றும் அமைந்துள்ளது. 
 
இந்த ஆண்டு 24 டிசம்பர் 2021 இந்திய நேரம் மதியம் 2.00 மணி முதல் 2.30 வரை சிற்றலைவரிசை 17,200 கிலோ ஹெர்ட்ஸில் (16 மீட்டர்) மோர்ஸ் குறியீட்டின் ஊடாக ஒலிபரப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் மகிழ்ச்சியான செய்தி, இந்த ஒலிபரப்பு முழுவதையும் யூடியூப்பிலும் ஒளிபரப்பினார்கள். ஒலிபரப்பினைத் தவரவிட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று இப்பொழுதும் கேட்கலாம். வானொலி ஒலிபரப்பில் தான் எத்தனை சுவாரஸ்யமான தகவல்கள்.
 
இந்த வானொலியைத் தொடர்புகொள்ள:
World Heritage Grimeton Radio Station
Grimeton 72
SE-432 98 Grimeton
Sweden

Email: info@grimeton.org
Phone: (+46) 0340-67 41 90

 
 

Wednesday, December 22, 2021

வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் 2022 நாள்காட்டி

A Free Press Matters: VOA@80


சர்வதேச வானொலி நேயர்களுக்கு டிசம்பர் மாதம் எப்பொழுதுமே கொண்டாட்டமான மாதம். நேயர்களும் அனைத்து வானொலிகளுக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்புவர். அதே போல அந்த வானொலி நிலையங்களும் தனது நேயர்களுக்கு  வாழ்த்து மடல்கள், நாள்காட்டிகள், டைரிகள், Year End Gifts என பல நினைவுப் பரிசுகளை அனுப்பிவைக்கும்.


சிற்றலை வானொலிகளின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்த பிறகு இந்த மாதிரியான நினைவுப் பரிசுகளும் குறைந்துவிட்டன.


நீண்ட இடைவெளிக்கு பிறகு, இன்று பல்கலைக்கழக முகவரிக்கு அமெரிக்காவின் பொதுத் துறை வானொலியான "வாய்ஸ் அஃப் அமெரிக்கா" வானொலியின் 2022ஆம் வருடத்திற்கான மிக அழகான மாதாந்திர நாள்காட்டியை அனுப்பியிருந்தனர்.


இந்த நாள்காட்டியின் சிறப்புகளில் ஒன்று வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒலிபரப்பி வரும் 47 மொழிகளின் ஒலிபரப்பாளர்களை ஆவணப்படுத்தியது. பழைய மொழிப்பிரிவின் புகைப்படங்களையும் இதில் வெளியிட்டுள்ளார்கள். 


இந்த ஆண்டு VOA தனது 80ஆவது ஆண்டினைக் கொண்டாடுகிறது. 1 பிப்ரவரி 1942ல் இந்த வானொலி தொடங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தமிழ் மொழி  ஒலிபரப்பினையும் இது செய்தது. நிலவில் மனிதன் இறங்கியதை வாஷிங்டன்னில் இருந்து நேரலையில் அன்று அறிவிப்பு செய்த திரு.நல்லதம்பி அவர்களை மறக்கவும் முடியுமா?


வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவைத் தொடர்பு கொள்ள


To request a VOA calendar or information about VOA programming or frequencies: audiencemail [ at ] voanews.com

Voice of America
Public Relations
330 Independence Ave., S.W.
Washington, D.C. 20237

Phone: 1 (202) 203-4959

E-mail: askvoa@voanews.com

Web: www.voanews.com, www.insidevoa.com
FB: voiceofamerica, insidevoa
Twitter: @voanews, @insidevoa
Insta: voanews, insidevoa

Monday, December 20, 2021

உலக வானொலி தொலைக்காட்சி கையேடு - WRTH 2022

 


சிற்றலை வானொலி நேயர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியமாகத் திகழும் “உலக வானொலி தொலைக்காட்சி கையேடு” தனது 76 ஆண்டுக்கால பயணத்தினை இந்த 2022 ஆண்டுடன் நிறைவு செய்வது, எங்களைப் போன்ற வானொலி ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் வருத்தம் கொடுக்கக்கூடிய ஒரு செய்தி. 
 
76 ஆண்டு மலர்களில், ஒரு சில வருடங்களைத் தவிரப் பெரும்பான்மையான வருடங்களின் பதிப்பு என்னிடம் உண்டு. அந்த புத்தகங்கள் அனைத்தும் அடங்கிய ஐந்து அட்டைப்பெட்டிகள், ஒவ்வொரு முறை வீடு மாறுதல்களின் போதும் குடும்பத்தாரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியுள்ளது. 
 
நாங்கள் 15 வருடங்கள் மாத இதழாக வெளியிட்ட “சர்வதேச வானொலி” இதழாகட்டும், 16 வருடம் காலாண்டு இதழாக வெளிவந்த “Dxers Guide” இதழுக்கும், 54 வாரங்கள் அகில இந்திய வானொலியின் திரை கடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் ஒலிபரப்பான “வானொலி உலகம்” நிகழ்ச்சிக்கும், NCBH வெளியிட்ட எனது முதல் தமிழ்ப் புத்தகமான “உலக வானொலிகள்” எனும் புத்தகத்திற்கும், பேருதவியாக இருந்தது தான் இந்த WRTH எனும் World Radio TV Handbook. 
 
எனக்கே எனக்கான முதல் WRTH கிடைத்தது, 1999ல் திரு.அட்ரியன் பீட்டர்ஸன் AWR நேயர் சந்திப்புக்காக ஈரோடு வந்த போது, நேரடியாக 2000ஆம் ஆண்டு பதிப்பினைக் கைகளில் கொடுத்தார்கள். அந்த முதல் புத்தகத்தின் வாசனை இன்னும் நினைவுகளில் ஊசலாடுகிறது. 
 
என்னிடம் உள்ள WRTH ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு கதை உண்டு. இந்தத் தருணத்தில் ஜெர்மன் நாட்டின் தேசிய வானொலியான DW எனும் Deutsch Welleவின் Technical Monitor பணியிலிருந்த போது கிடைத்த புத்தகங்களே அதிகம் என்பதைப் பதிவு செய்தே ஆகவேண்டும். 
 
அதனை அடுத்து நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பது திரு.அரசு (VU2UR) அவர்கள். 30 வருடங்களுக்கும் அதிகமான புத்தகங்களை வாஞ்சையுடன் கொடுத்து உதவினார். 
 
திரு.சண்முக சுந்தரம்(VU2FOT), திரு. இளம்பூரணன், திரு. ஜோஸ் ஜேக்கப்(VU2JOS), திரு. அலோக்கேஷ் குப்தா(VU3BSE), திரு.சந்திபன் பாசு (VU3JXD) ஆகியோர் எனக்கும் WRTHக்கும் பாலத்தினை அமைத்தவர்களில் முக்கியமானவர்கள். 
 
வானொலிகளில் AWR, BBC, CRI, DW, RN, RV, RVA, SLBC, RTI, RFA, VOA, NHK மற்றும் TWR ஆகியவை ஏதேனும் ஒரு விதத்தில் WRTH பெற உதவியுள்ளது.
சென்னையின் மழை வெள்ளத்திலும் தப்பித்து, இன்றும் என் பொக்கிஷங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இவ்வளவு தகவல்களையும் தாங்கிய புத்தகம் இனி வெளிவராது என்று சொன்னது, நெருங்கிய நண்பன் ஒருவன் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திச் செல்வது போன்றதே!
😢

Sunday, December 19, 2021

கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் திரு.தாமரைசந்திரன் காலமானார்


Inline image

கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சி தலைவர் திரு.தாமரைசந்திரன்@ராமச்சந்திரன் மாரடைப்பால்  இன்று மாலை காலமானார். 'நேயர் நெஞ்சம்', நேயர்களைத் தேடி வானொலி போன்ற நிகழ்ச்சிகளை 1997லேயே சிறப்பாக நடத்தியவர். 
😢
தகவல்: Kovai Media WG

A Special cover on "Voice of Liberation"


A Special cover on "Voice of Liberation" on Goa's Freedom Struggle was released by the Department of Posts Goa Division on 17 December, 2021 as a part of the Goa@60 Diamond Jubilee Celebrations of Goan Liberation Movement. These secret radios were operated by Late Vaman Sardesai and Ms Libia Lobo Sardesai, continuously from November, 1955 till December,1961.

Courtesy: Dr Ramesh, Goa Via SIPA WG