Saturday, October 26, 2013

ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...

நவீன மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள் பல வந்துவிட்ட இக்காலத்திலும் கூட செய்திகளை வானொலியில் கேட்பது என்பதே அலாதி தரும் அனுபவம். அதிலும், ஆகாசவாணி செய்திகள் என்றால் அதன் உச்சரிப்பு, வார்த்தைப் பிரயோகம் யாவுமே தனித்துவமிக்கவை.
 தில்லியில் 1939-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது அகில இந்திய வானொலி எனும் ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவு. தற்போது பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் பவள விழா தொடக்க நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. வசீகரமான குரலால் நேயர்களைக் கட்டிப் போட்ட பழம்பெரும் செய்தி வாசிப்பாளர்கள் பலரும் அங்கு கூடினர்.
 குறிப்பாக முதுபெரும் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் ஆர்.எஸ். வெங்கட்ராமன், சரோஜ் நாராயணசாமி, ராஜாராம் உள்பட தெலுங்கு, குஜராத்தி, மராத்தி என பல்வேறு பிராந்திய மொழி செய்திவாசிப்பாளர்கள் இவ்விழாவில் கெüரவிக்கப்பட்டனர்.
 தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களாகப் பணியாற்றியபோது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆர்.எஸ். வெங்கட்ராமன், சரோஜ் நாராயணசாமி, காலம்சென்ற எம்.ஆர்.எம். சுந்தரம் குறித்து அவரது மகள் ரமாமணி சுந்தர் ஆகியோர் பகிர்ந்துகொண்டவை:
 ஆர்.எஸ். வெங்கட்ராமன்: எனது சொந்த ஊர் தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம். 1945-ஆம் ஆண்டு, பிப்ரவரி முதல் தேதி தில்லியில், ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் செய்தி வாசிக்கும் பணியைத் தொடங்கினேன். 1947-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதுகுறித்த செய்தியை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 5.30 மணிக்குத் தொடங்கிய செய்திநேரத்தில் நாடு சுதந்திரம் பெற்ற செய்தியை வாசித்தேன். இதற்காக அன்று அதிகாலை 3.30 மணிக்கே அலுவலகம் வந்துவிட்டேன். அந்த நிகழ்வு உணர்வுப்பூர்வமானது.
 ஆகாசவாணியில் இருந்து 1985-ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்றேன். அதன்பிறகு 20 ஆண்டுகள் கேஷுவல் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றி 2007-ஆம் ஆண்டில் விடைபெற்றேன். தமிழ்ச் செய்திப் பிரிவின் பொறுப்பாளராக மட்டும் 20 ஆண்டுகள் பணி
 புரிந்துள்ளேன். 
 அப்போதெல்லாம் செய்தியின் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். பிற மொழிப் பெயர்கள் குறித்த உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள பல்வேறு மொழிகளின் செய்திப் பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ள வாசிப்பாளர்களிடம் உச்சரிப்பைக் கேட்டு வருவோம். உச்சரிப்புப் பிரிவு உண்டு. அங்கு முக்கியமான வார்த்தைகளுக்கு பெயர்கள் மற்ற செய்திப் பிரிவுகளுடன் பரிமாறிக் கொள்ளப்படும். கூடுமான வரை சரியான வார்த்தை உச்சரிப்பு பிரயோகிக்கப்படும். செய்தி வாசிப்பின்போது சார்புத் தன்மையோ, கோபதாபமோ இருத்தல் கூடாது. நான் செய்தி வாசித்தபோது இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தேன்.
 நான் பணியாற்றிய காலத்தில் தலைவர்கள் லால்பகதூர் சாஸ்திரி மரணம், அண்ணாதுரை மரணம் ஆகிய செய்திகளை எழுதித் தந்துள்ளேன். செய்தியை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டும். அது முக்கியப் பணிகளில் ஒன்று.
 ஆகாசவாணி தமிழ்ச் செய்திப் பிரிவில் முதல்முதலில் நடேச விஸ்வநாதன் பொறுப்பாளராக இருந்தார். அவர்தான் காந்தி மரணம் குறித்த செய்தியை வாசித்தார். அவர்தான் என் குரு. என்னை உருவாக்கியவர். நான் கஜமுகன் என்ற பெயரில் நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளேன்
 சரோஜ் நாராயணசாமி : எங்களது பூர்விகம் தமிழகத்தின் தஞ்சை ஜில்லா. நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். எனது கணவர் நாராயணசாமியைத் திருமணம் செய்த பிறகு, தில்லிக்கு வந்தேன். வானிலை ஆய்வு மையத்தில் கணவர் பணியாற்றினார். 
 நாடாளுமன்றச் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை ஒட்டி இருந்த யூகோ வங்கியில் நான் பணியாற்றினேன். எனக்கு வானொலி செய்தி அறிவிப்புப் பணியில் சேர ஆர்வம் ஏற்பட்டது. முறைப்படி தேர்வெழுதி 1963-இல் பணியில் சேர்ந்தேன். 35 ஆண்டுகள் பணியாற்றினேன். அதன் பிறகு என்டிடிவி நிறுவனத்தில் பணியாற்றினேன்.
 அன்றைய காலத்தில் செய்தி வாசிக்கும்போது எனது குரலைக் கேட்டு பலரும் ஆகாசவாணிக்கு கடிதம் எழுதுவார்கள். குரலின் ஏற்ற இறக்கம், உச்சரிப்புமுறை, எடுத்துச்சொல்லும் விதம் ஆகியவை தனித்துவமாக இருப்பதாக நேயர்கள் கூறுவார்கள்.
 எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த அச்சமயத்தில் தில்லியில் திட்டக் குழு கூட்டத்திற்கு வருவார். அப்போது, கூட்டத்தில் அவரது உரையை அங்குள்ள மற்றவர்கள் அறியும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்குவேன். இதற்காக எம்.ஜி.ஆர். என்னிடம் ""பிரமாதம்'' என்று பாராட்டினார். 
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டபோது, இரங்கல் செய்தியை தயாரித்து, வாசித்தேன். இது உருக்கமாக இருந்ததாகக் கூறி பலரும் கடிதம் மூலம் தெரிவித்தனர்.
 இந்திரா காந்தி அம்மையார் என முக்கிய வி.ஐ.பி.கள் பலரையும் பேட்டி கண்டு பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். 2009-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆகாசவாணி வானொலியில் செய்தியில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 
 பவள விழாவில் பங்கேற்க வந்த என்னை நண்பகல் நேர செய்தி வாசிக்குமாறு வானொலி நிலையத்தினர் கேட்டுக் கொண்டனர். பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் செய்தி வாசித்தேன். இச்செய்தியைக் கேட்ட தமிழ் நேயர்கள் பலர் அடுத்த சில நிமிடங்களிலேயே நீங்கள் மீண்டும் வானொலிப் பணியில் சேர்ந்துவிட்டீர்களா என்று தொலைபேசி வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் ஆர்வத்துடன் வினவினர். 79 வயதாகிவிட்டபோதிலும் எனது குரலுக்குக் கிடைத்த வெகுமதியாக இதைக் கருதுகிறேன். 
 எம்.ஆர்.எம். சுந்தரம் குறித்து அவரது மகள் ரமாமணி சுந்தரின் நினைவலைகள்:
 இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் அது. தில்லியில் ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவு தொடங்கப்பட்டது. இப்பணிக்காக திருச்சி வானொலியில் பணிபுரிந்த எனது தந்தை எம்.ஆர்.எம். சுந்தரம் தில்லிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
 சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். 1957-இல் பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லண்டனுக்குச் சென்று இரண்டரை ஆண்டு காலம் அங்கு பணி புரிந்தார். அதன் பிறகு, மீண்டும் தில்லி அகில இந்திய வானொலிக்கு திரும்பி பணியைத் தொடர்ந்தார். 1971-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற அவர், "சுந்தா' என்ற புனைப்பெயரில் தமிழ் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். 
 தில்லியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றிய காலத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்த பெருமை அவருக்கு உண்டு. ஆரம்ப காலத்தில் அவருடன் பணிபுரிந்தவர்களில் முக்கியமான நபர்களில் ஒருவர் நடேச விஸ்வநாதன் என்ற எம்.என்.விஸ்வநாதன். இவர், தீரர் சத்தியமூர்த்தியின் மருமகன். வானொலிச் செய்தியில் அக்காலக்கட்டத்தில் வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அச்சூழலில் வடமொழிச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தந்தார். உதாரணமாக அஸ்திவாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக அடிக்கல் நாட்டுதல் என்ற சொல் அவர் உருவாக்கியதுதான். 
 } வே. சுந்தரேஸ்வரன்,  படங்கள் -டி. ராமகிருஷ்ணன்
Source: http://dinamani.com 20 October 2013

தமிழர்களைப் புறக்கணித்த டெல்லி

தமிழ் நேயர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றிருக்கும் 'ஆகாசவாணி'யின் தமிழ்ச் செய்திகள் தொடங்கப்பட்டு 74 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. பவள விழா கொண்டாட்டம் தொடங்கி விட்டது. அதன் தொடக்க விழாவில்தான் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றிய பலரும் புறக்கணிக்கப்பட்டனர்.   பிரசார் பாரதி அமைப்பின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலியின் ஆகாசவாணி செய்திகளுக்கு நாடு முழுக்க கோடிக்கணக்கான நேயர்கள் இருக்கின்றனர். 'ஆகாசவாணி' என்றால் 'வானத்தின் குரல்' என்று அர்த்தம். மைசூரில் வசித்த தமிழரான கோபாலசுவாமி என்பவர்தான் அந்தப் பெயரில் ஒரு வானொலி நிலையத்தை நடத்தி வந்தார். பிற்காலத்தில் அரசும் இந்தப் பெயரையே பயன் படுத்திக்கொண்டது. 1939-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் குஜ ராத்தி ஆகிய நான்கு மொழிகளில் ஆகாசவாணியின் செய்திப் பிரிவு தொடங்கப்பட்டு டெல்லியிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதன்முதலில் தமிழில் செய்தி வாசித்தவர்கள் பி.கே.ராமானுஜம், வி.கிருஷ்ணசாமி ஆகிய இரண்டு பேர். இந்த நான்கு செய்திப் பிரிவுகளும். . .விரிவாக படிக்க...காணவும் ஜூனியர் விகடன் 13 Oct, 2013
  • /

செய்திகளுக்கு இப்போது என்ன அவசியம்?

தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகளை அனுமதிக்கும்போது, ஏன் தனியார் வானொலியில் செய்திகள் வாசிப்பதை அனுமதிக்கக் கூடாது? என்று ஒரு வழக்கில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், தனியார் வானொலி நிலையங்களின் நிர்வாகிகள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைச் செயலரை சந்தித்து இதே கேள்வியைக் கேட்டார்கள். அப்போது அவர் சொன்ன பதில்: முதலில் அகில இந்திய வானொலி நிலைய பண்பலை வரிசையில் தொடங்குவோம். பிறகு படிப்படியாக தனியார் வானொலி நிலையங்களுக்கும் செய்தி வாசிக்க அனுமதி அளிக்கப்படும். அத்தகைய அனுமதி அளிக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறது என்று மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று வாரியம் (டிராய்) ஏற்கெனவே மிகத் தெளிவாக இது பற்றி கூறியிருக்கிறது. 3வது திட்ட காலத்தில், எப்எம் ரேடியோக்களில் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை ஒலிபரப்ப அனுமதிக்கப்படும். ஒரு மாவட்டத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வானொலி சேவைகள் இருக்குமெனில் கூடுதலாக ஒரு வானொலிக்கு செய்தி ஒலிபரப்ப அனுமதிக்கலாம் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இதன் நோக்கம், மாவட்ட அளவிலான உள்ளூர் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான். தனியார் தொலைக்காட்சி செய்திகள் பெரும்பாலும் மாநில அல்லது தேசிய அளவிலான செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. மிகவும் அரிதான சம்பவங்களில் மட்டுமே மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன. அந்தந்த மாவட்டம், உள்ளூர் தகவல்களுக்கான செய்திகள் கிடைக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவையும்கூட.
இப்போது எப்எம் ரேடியோக்களில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான செய்திகளை, தேர்தல் முடிவுகள் தொடர்பான சிறு தகவல்களை இடையிடையே ரேடியோ ஜாக்கிகள் பேசுகிற பேச்சோடு சொல்லிவிடுகிறார்கள். முழுமையான செய்தி என்று இல்லாத நிலையிலும்கூட, கேட்போருக்கு இந்த செய்திகள் கிடைத்து விடுகின்றன.
மற்றொரு விதத்தில் செய்தியை ஒலிபரப்பும் கலையையும் இந்த எப்எம் ரேடியோக்கள் கற்று வைத்திருக்கின்றன. அதாவது, அந்த தனியார் வானொலியின் துணை நிறுவனமாக இருக்கும் பத்திரிகைக்கு விளம்பரம் கொடுப்பதைப்போன்று, சில செய்திகளை வரிசையாக சொல்லிவிட்டு, மாலையில் அல்லது நாளை இந்த செய்திகளைப் பத்திரிகையில் பாருங்கள் என்கிறார்கள்.
இவ்வாறு செய்திகளை ஒலிபரப்பினாலும் அதில் வருவாய் காண முடியவில்லையே என்பதுதான் எப்எம் ரேடியோக்களின் இன்றைய ஆதங்கம். செய்திகளுக்கு இடையே விளம்பரங்களைப் பெற்று, அதற்கென தனி கட்டணங்களை நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே சட்டப்படி தங்களுக்கும் செய்தி ஒலிபரப்ப அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தற்போது அகில இந்திய வானொலி நிலையம் மட்டுமே செய்திகளை ஒலிபரப்பி வருகிறது. இது அரசு நிறுவனமாக இருப்பதால் அரசு சார்ந்த செய்திகள் மட்டுமே ஒலிபரப்பாகிறது. நாங்கள் செய்திகளை சுவையாகக் கொடுப்போம் என்பதுதான் தனியார் வானொலிகளின் வாதம்.
அகில இந்திய வானொலியின் செய்திகள் சுவை இல்லாததாக இருக்கலாம். ஆனால் உண்மைக்கு மாறானவை அல்ல. மிகவும் கட்டுப்பாட்டுடனும் சமூகப் பொறுப்போடும் செய்திகளை ஒலிபரப்புகிறார்கள். ஆனால் தனியார் வானொலிகளில் இத்தகைய சுயகட்டுப்பாடு இருக்குமா? செய்திக்காக பயன்படுத்தும் சொற்களில் கவனம் செலுத்துவார்களா? சுவை கூட்டுவதற்காக கொச்சையான மொழிநடையைக் கலக்கும் அபாயம் ஏற்படாதா?
இந்தியாவில் 240 தனியார் வானொலிகள் உள்ளன. 3வது திட்ட காலத்தில் இதன் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாகும். இத்தனை பேரும் சரியாக ஒலிபரப்புகிறார்களா என்பதை கண்காணிக்க இயலாது.
தற்போதே தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முழுநேர செய்தி சானல்களில் பல நேரங்களில், தணிக்கையாகாத விபத்து காட்சிகள், தகவல் முழுமை பெறாத செய்திகள் குறித்து மக்கள் கருத்து என்று உடனுக்குடன் போட்டிப்போட்டுக்கொண்டு ஒளிபரப்பும்போது, சமூக வலைதளங்கள் போலவே, கொந்தளிப்புக்கு வழியேற்படுகிறது. இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பிலும் ஒரு சுயகட்டுப்பாட்டுக்கான வழிகாட்டுதல், நிபந்தனை உருவாக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உள்ளது.
அதிகமான கல்வி அறிவும், குறைந்த மக்கள் தொகையும் உள்ள மேலைநாடுகளைப்போல இங்கேயும் தனியார் வானொலிகளை செய்தி ஒலிபரப்ப அனுமதிப்பதில் நிதானமாக, நிபந்தனைகள் தீர்மானித்து பின்பு செயல்படலாம். இதற்கு இப்போது என்ன அவசியம், அவசரம்?
நன்றி: http://dinamani.com 19 அக்டோபர் 2013

Thursday, October 17, 2013

செய்திகளை வெளியிடுவது எப்படி? பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது சீனா

பீஜிங்:சீன அரசு தனது சட்ட திட்டங்கள் மற்றும் தணிக்கை விதிகளுக்கு ஏற்ப ஊடகங்களை வழிநடத்துவது தொடர்பாக அந்நாட்டை சேர்ந்த 2.5 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது.

சீன அரசு பத்திரிகை தொடர்பாக புதிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும், தணிக்கை விதிகளையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தனது நாட்டில் உள்ள அனைத்து வகை ஊடகங்களையும் புதிய விதிமுறையின் கீழ் செயல்பட வைப்பதற்காக அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை சீன அரசின் செய்தி ஊடக துறை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி சீனாவின் இரும்பு திரை நாடு என்ற முத்திரை விலகி மேலும் சுதந்திரமாக எழுதவும், செய்திகளை வெளியிடவும் வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்த பயிற்சிக்காக சீன நாட்டில் செயல்படும் முக்கியமான வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அவர்கள் அனைவருக்கும் ராணுவ சீருடை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி 2013ம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் சீன கலாசாரம், கம்யூனிஸ்ட் பார்வையில் செய்திகளை எவ்வாறு வெளியிடுவது, சமூகவியல் பார்வை, பத்திரிகை தர்மம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்திகளை எவ்வாறு தணிக்கை செய்வது, தவறான தகவல்களை மற்றும் அரசுக்கு எதிரான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் அதன்பிறகு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர பத்திரிகையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmurasu.org

தனியார் வானொலிகளில் செய்தி : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஏற்கனவே தனியார் தொலைக்காட்சிகளுக்கு செய்திகளை வெளியிட அனுமதித்துள்ள போது, தனியார் வனொலிகளில் செய்திகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்திருப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தனியார் வானொலி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

நன்றி: தினமணி, 17 October 2013

வானொலி நிலைய அதிகாரி இடமாற்றம்: ரத்து செய்தது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்

சென்னை: அகில இந்திய வானொலி நிலையத்தின் அதிகாரியை இடமாற்றம் செய்ததை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

சென்னையில் உள்ள, வானொலி நிலையத்தில், அதிகாரியாக பணியாற்றியவர், விஜயகிருஷ்ணன். நிர்வாக காரணங்களுக்காக, காரைக்காலுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு, கடந்த, பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை அலுவலகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இடமாற்றத்தை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், விஜயகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இடமாற்றத்துக்கு காரணம் தெரிவிக்கவில்லை என்றும் தண்டனை விதிக்கும் விதமாக, இடமாற்றம் நடந்து"ள்ளது என்றும், மனுவில் கூறப்பட்டது. வானொலி நிலையம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'விஜயகிருஷ்ணனின் நடத்தை பற்றி, பெண் ஊழியர்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள் அனைத்தும், விசாரணைக்காக, ஐவர் குழுவுக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில், பெண் ஊழியர்களை அவர் சமமாக நடத்தவில்லை என, தெரிய வந்தது' என, கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர் வெங்கடேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவில், 'வானொலி நிலையத்தின் பெண்கள் பிரிவு அளித்த அறிக்கையின் விளைவாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்தவர்களை, ஐவர் குழு விசாரிக்கவில்லை. இடமாற்ற உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர், அக்டோபர் 09,2013