Friday, May 29, 2015

அகில இந்திய வானொலி சேவைக்கு முகநூலில் அதிகரிக்கும் வரவேற்பு

அகில இந்திய வானொலி சேவையை விரும்புவோரின் எண்ணிக்கை முகநூலில் (ஃபேஸ் புக்) அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப இச்சேவையை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அகில இந்திய வானொலி செய்திப்பிரிவு, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 நம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற உடன், அகில இந்திய வானொலி சேவையை பயன்படுத்தி ஜன் தன் யோஜனா சேவை, மான் கி பாத் நிகழ்ச்சிகளுக்காக உரையாற்றி வருகிறார்.
 இது நேயர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதுடன், சமூக இணையதள ஊடகங்களான முகநூல், சுட்டுரை (டுவிட்டர்) போன்றவற்றிலும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் அகில இந்திய வானொலியின் சேவை இந்தியா மட்டுமின்றி நேபாளம், பாகிஸ்தான், சவூதி அரேபியா, வங்கதேசம், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்பட சர்வதேச நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தன.
 இதேபோல இந்திய மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, மற்ற பெருநகரங்களான ஸ்ரீநகர், போபால், ஜெய்ப்பூர், பாட்னா, இந்தூர், கான்பூர், கோவை, சூரத், டேராடூன் போன்ற இடங்களில் உள்ள நேயர்களும் அகில இந்திய வானொலி சேவை விரும்புவதாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 தற்போது முகநூலில் அகில இந்திய வானொலி பக்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு கோடி பேர் தங்களின் பதிவிட்டு வருகின்றனர். எந்தவொரு வணிக ஈடுபாடுகள் இன்றி நேயர்கள் இடையே அகில இந்திய வானொலி சேவை சென்று அடைந்துள்ளது.
Source: Dinamani, 16 March 2015 

Friday, May 22, 2015

தில்லியில் விவித் பாரதி பண்பலை ஒலிபரப்பு தொடக்கம்

அகில இந்திய வானொலி நிலையத்தின் விவித் பாரதி சேவைகளின் பண்பலை ஒலிபரப்பு, தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தில்லி, அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நேயர்களுக்கு, இனி செல்லிடப்பேசியிலும் இச்சேவை கிடைக்கும்.
மத்திய நிதியமைச்சரும், தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அருண் ஜேட்லி, இந்த பண்பலை ஒலிபரப்பை தொடக்கி வைத்தார். அப்போது, "விவித் பாரதி சேவைகள், 60-65 கி.மீ. சுற்றளவுக்குள், அனைத்து காலநிலைகளிலும் அதிக துல்லியத்துடன் மக்களைச் சென்றடையும்' என்று நேயர்களிடம் அவர் பேசினார்.
விவித் பாரதி, திரைப்பட இசை, குறு நாடகங்கள், கலந்துரையாடல் என கலவையான நிகழ்ச்சிகளை வழங்குகிறது. நாட்டிலேயே அதிக அளவிலான திரைப்படப் பாடல்களையும், இதர பாடல்களையும் விவித் பாரதி வைத்திருக்கிறது.
தொடக்க நிகழ்ச்சிக்கு பின்னர், அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய வானொலியின் பல்வேறு சேவைகளின் செல்லிடப்பேசி பயனுருக்களும் (அப்ளிகேஷன்ஸ்) விரைவில் கிடைக்கும். விவசாயிகளுக்காக, தூர்தர்ஷனின் கிஷான் தொலைக்காட்சியை அடுத்த மாதம் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர், பிரசார் பாரதி தலைவர் சூர்ய பிரகாஷ், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பிமல் ஜுல்கா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Source: Dinamani, 15 April 2015 

Wednesday, May 20, 2015

ஆஸ்திரேலியாவில் தாயகம் தமிழ் ஒலிபுரப்பு தொடங்கம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 24 மணி நேர தமிழ் வானொலியாக "தாயகம் தமிழ் ஒலிபுரப்பு' சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிட்னியில் கடந்த 16-ந் தேதியன்று தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவையின் தொடக்க விழா நடைபெற்றது. நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் விஜய் இராஜகோபால் எனும் தமிழ் இளைஞர் இந்த வானொலியைத் தொடங்கியுள்ளார்.
இந்த வானொலிச் சேவையினை www.thayagam.net இணைய தளம் வாயிலாக தற்போது கேட்கலாம். Android apps, Tunein radio apps, Apple apps மூலமாகவும் விரைவில் கேட்கலாம் என்று வானொலி நிர்வாகத்தின் தெரிவித்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/new-tamil-radio-launch-from-australia-227088.html

Sunday, May 17, 2015

அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி

புதுதில்லியில் உள்ள All India Radio நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NSD (AIR) 20 (9) 2015-S

பணி: News Reader-cum-Translator (Tamil)

காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 30.03.2015 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000

தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கம்ப் யூட்டர் அப்ளிகேசனில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருப்பது விரும்பத்தக்கது.

பணித்தன்மை: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Friday, May 15, 2015

சென்னை பல்கலைக்கழகத்தில் பொது வானொலி சேவை

சென்னை பல்கலைக்கழகத்தில் பொது வானொலி சேவை: மக்கள் ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவர்கள் முயற்சி


பொது வெளிகளில் வானொலி கேட்கும் பழக்கத்தை மீண்டும் உயிர்பிக்க சென்னை பல்கலைக் கழகத்தில் பொது வானொலியை மாணவர்கள் அமைத்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேனீர் கடைக்கு அருகில் வானொலிப் பெட்டி ஒன்றை வைத்து, அதன் மூலம் சிற்றலை யில் செய்திகள், நிகழ்ச்சிகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதன் தொடக்க விழா உலக வானொலி தினத்தையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேநீர் கடையை நடத்தும் கார்த்திக் மற்றும் ராஜா வானொலி சேவையை தொடக்கி வைத்தனர்.
இதில் அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ‘வானொலி அண்ணா’ சி.ஞான பிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: இன்று எத்தனை ஊடகங்கள் வந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் தாய் வானொலிதான். நல்ல செய்திகளை கேட்க இளைய தலைமுறையினர் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். அரசு நடத்தும் வானொலி நிலைய செய்திகளில் நம்பகத்தன்மை இருக்கும். நாங்கள் தவறு செய்தால் அதை கண்ணியமாக ஒப்புக் கொள்வோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த இதழியல் துறையின் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும், கண்ணகி சிலை அருகிலும்தான் சென்னையின் முதல் வானொலிகள் பொது மக்கள் கேட்பதற்காக வைக்கப் பட்டிருந்தன. அதன் பிறகு நரிக்குறவர்கள் வானொலிப் பெட்டிகளை தங்கள் உடையுடன் அணிந்து கொண்டு வானொலி கேட்பதை பிரபலப்படுத்தினர். காலப்போக்கில் வானொலியை மறந்து விட்டோம். அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி அனைத்து தரப்பிலும் தேவை,” என்றார்.
தமிழ் ஒலி வானொலி மன்றத்தை சேர்ந்த எஸ்.உமாகாந்தன், வானொலி நேயர் வட்டங்களை சேர்ந்த கு.மா.பா.கபிலன், மயிலை பட்டாபி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தோடு இணைந்து இணையதள வானொலி நிலையத்தை சோதனை முறையில் நடத்தி வருகின்றனர்.
Source: Dinamani, February 14, 2015

Thursday, May 14, 2015

சன் குழும பண்பலை சேவைக்கு அனுமதி மறுப்பு

சன் குழும நிறுவனங்களின் தலைவர் கலாநிதி மாறனின் நிறுவனம் நடத்தி வரும் சுமார் 50 பண்பலை (எஃப்.எம்) வானொலி சேவைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்க மத்திய உள்துறை மறுத்துள்ளது. 
 ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்புடைய விவகாரத்தில் கலாநிதி மாறன், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், உள்துறையின் இந்நடவடிக்கை, சன் குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
 இது தொடர்பாக மத்திய உள்துறை வட்டாரங்கள் கூறியதாவது: "கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறியதற்கு கைமாறாக கலாநிதி நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், அதன் சார்பு நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு உள்ளது. 
 இது தொடர்பாக கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி, தயாநிதி மாறன், அவர்களின் குடும்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் சொத்துகளில் வழக்குடன் தொடர்புடைய ரூ.742 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 
 இப்பின்னணியில் சன் குழும நிறுவனங்கள் சார்பில் பண்பலை வானொலி சேவையைப் புதுப்பிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது' என்று அந்த வட்டாரங்கள் கூறின.
 ஜேட்லி தலையீடு: இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி மத்திய நிதியமைச்சரும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லியிடம் சன் குழும நிறுவனங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த மாதம் முறையிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, மத்திய உள்துறையின் நடவடிக்கை பண்பலை வானொலி சேவையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜேட்லி கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 இதைத் தொடர்ந்து, "ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கையும், பண்பலை வானொலி சேவை உரிமத்தை புதுப்பிக்கக் கோரி சன் குழும நிறுவனங்கள் அளித்துள்ள விண்ணப்பங்களையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலித்து உரிய பதிலை அனுப்பி வைக்க வேண்டும்' என்று அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்கவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலர் பிமல் ஜுல்கா உறுதிப்படுத்திய போதும், மேற்கொண்டு தகவலைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
 விதிகள் கூறுவது என்ன?: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விதிகளின்படி பண்பலை வானொலி சேவைகளுக்கு உரிமம் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படும் முன்பு, அதில் இடம் பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் பின்னணி குறித்து மத்திய உள்துறை விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். இதேபோல, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிதி ஆதாரம், நிதிப் பின்புலம் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்படும். இதில் திருப்திகரமான பதிலை உள்துறை அளித்தால் மட்டுமே விண்ணப்பங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும். 
 இந்நிலையில், ஏற்கெனவே பண்பலை வானொலி சேவை வழங்கி வரும் சன் குழும நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது உரிமையாளர்கள் தரப்பில் செய்யப்பட்ட முதலீடு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ மட்டும்தான் உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரும் விண்ணப்பத்தை மத்திய உள்துறை பரிசீலித்து அறிக்கை அளிக்க அதிகாரம் உள்ளது. 
 ஆனால், "சன் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் நிலையில் எத்தகைய மாற்றம் செய்யப்பட்டது? அதன் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளன' என்ற விவரத்தை வெளியிட மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Source: http://www.dinamani.com/ 14-5-2015

Friday, May 08, 2015

IBC தாசீசியஸ் மாஸ்டர் தாவல்

தாசீசியஸ் மாஸ்டர் தாவல்: தவித்த IBC நிறுவனம் தலையில் கை வைத்தது ஏன் ?


லண்டனில் ஐ.பி.சி வானொலி தனது தொலைக்காட்சி சேவையின் ,ஆரம்ப நிகழ்வை விமர்சையாக கொண்டாடியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய தாசீசியஸ் மாஸ்டரின் தாவல் ,ஏற்பாட்டாளரை பெரும் தவிப்பில் கொண்டுபோய் விட்டுள்ளது. கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல ,செல்லிக்கொடுத்து மேடைக்கு அனுப்பினாலும், கிளி குரங்காக மாறிய கதை தான். இந்த சுவாரசியமான விடையம் என்ன என்பதனை பார்க முன் , இன்னொரு விடையத்தைப் பார்ப்போம் !
ஊரில் , 60 மற்றும் 70வதுகளில் "சிங்கன்" என்னும் நாடகத்தை மேடையில் அரங்கேற்றி வந்தார்கள். யாழில் இந்த நாடகத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது எனலாம். சிங்கன் என்னும் பெயரை விட "மயிரச் செத்தான் சிங்கன்" என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அப்படியா ? அது என்ன ? என்று நீங்கள் கேட்ப்பீர்கள். அது என்னவென்றால் , சிங்கன் ஒரு மன்னன். அவன் இறுதியில் ஒரு போரில் ,எதிரி நாட்டு மன்னனோடு போர் புரிந்து , வாளால் குத்துண்டு இறக்கிறான். அத்துடன் நாடகம் முடிவடையும். ஆனால் ஒரு நாள் சிங்கனாக நடிக்கும் நபர் , சற்று வெறியைப் போட்டுவிட்டு வந்துவிட்டார். குடிபோதையில் சிங்கன் இருக்கிறார் என்று தெரிந்தும் நாடக கம்பெனி அவரை நடிக்க அனுமதித்தார்கள். இறுதிவரை நன்றாக நடித்த சிங்கன் , எதிரி நாட்டு மன்னனுடன் வாள் சண்டை வரும்போது மட்டும் ,விடாமல் சண்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
இதனால் எதிரி நாட்டு மன்னனாக நடித்தவரால் சிங்கனை கத்தியால் குத்துவது போன்று நடிக்க முடியவில்லை. ஏன் என்றால் சிங்கன் நிஜமான போர் நடப்பதுபோல விடாமல் அடிபட ஆரம்பித்துவிட்டார். இன் நிலையை புரிந்துகொண்ட நாடக கம்பெனி ஆட்கள் ,முன்னால் உள்ள திரைச் சீலையை இழுத்து மூடி, "இவ்வாறு நடந்த போரில் சிங்கன் உயிரிழந்தார்" என்று அறிவித்தார்கள். ஆனால் அதனைக் கேட்ட சிங்கன், அப்படியே திரைச் சீலையை விலக்கி மக்கள் மத்தியில் தோன்றி "மயிரைச் செய்த்தான் சிங்கன்" என்று கூறி நின்றார். அது அன்று நடந்த மாபெரும் பகிடி. இதனைக் கூறி இன்று கூட பலர் சிரிப்பார்கள் என்றால் பாருங்களேன் ! அந்த அளவு அவர் அன்று வெறியில் இருந்துள்ளார். சரி விடையத்திற்கு வருவோம் ,
லண்டனில் புதிதாக ஐ.பி.சி என்னும் TV ஐ ஆரம்பிக்கிறோம் என்று கூறி அன் நிறுவனம் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. ஐ.பி.சி வானொலி மற்றும் TV க்குப் பின்னால் லிபரா மோபைல் நிறுவனமே நின்று நிதி உதவியைச் செய்கிறது என்பது ஊரறிந்த விடையம். ஆனால் கேட்டால் , அவர்கள் வேறு நாம் வேறு என்று சொல்வார்கள் அங்கே வேலைசெய்யும் ஆட்கள். இதனை வெளிக்காட்ட லிபரா மோபைல் நிறுவனமும் விரும்பவில்லை. ஞாயிற்றுக் கிழமை அன்று , மேடையில் பேச தாசீசியஸ் மாஸ்டர் தயாராக இருந்தார். அந்த நேரத்தில் அவரை அணுகிய சிலர், அண்ணா "லிபரா" பற்றி வாய் திறக்க வேண்டாம். ஐ.பி.சி யைப் பற்றி மட்டும் பேசுங்கள். தயவு செய்து லிபரா பற்றி பேசவேண்டாம் என்று பாடம் நடத்தினார்கள்.
அவரும் ஓம் .. ஓம் என்று தலையசைத்துவிட்டு மேடைக்குச் சென்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மீறி அவர் பேசிக்கொண்டு இருக்க , உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்ற வாசகம் அடங்கிய சிறிய துண்டுகளை சிலர் கொண்டுபோய் ,அவரது மைக்கிற்கு முன்னால் வைத்தார்கள். ஆனால் மனுஷன் பேச்சை நிறுத்திய பாடாக இல்லை. கடைசியில் எதனைச் சொல்லவேண்டாம் என்று சொல்லி அனுப்பினார்களோ அதில் கை வைத்துவிட்டார் போங்கள். "லிபரா" தான் ஐ.பி.சியை இயக்குகிறது. அவர்களுக்கு பூ போட்டு கும்பிடவேண்டும் என்று எல்லாம் அலட்டி , இறுதியாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார். மேடைக்கு பின்னால் நின்ற ஏற்பாட்டாளர்கள் பலர் தலையில் கைவைத்துக்கொண்டு ,முக்காடு போடாத குறையாக இருந்துள்ளார்கள்.
இதில் இன்னும் ஒரு விடையம்... இனி என்ன பேசப்போகிறார் என்பது தெரியாமல் அவர்கள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். உள்ளக விடையங்களை , அல்லது சீக்கிரெட்டான விடையங்களை இவர் எங்கே மோடையில் சொல்லிவிடுவாரோ என்று , ஏற்பாட்டாளர்கள் திணறியுள்ளார்கள். சில தமிழர்களிடத்தில் ஒரு பழக்கம் உள்ளது. மைக் (ஒலி வாங்கியை) கொடுத்தால் போதும் , மணித்தியாலக் கணக்கில் பேசுவார்கள். இந்த ரகத்தை சேர்ந்த தாசீசியஸ் மாஸ்டரை , விழாவுக்கு அழைத்து அவர் வாயால் வாங்கிக் கட்டியுள்ளார்கள். ஏன் மக்களுக்கு விடையங்களை மறைக்கவேண்டும் ? அப்படி மறைக்க முற்பட்டால் உண்மை ஏதோ ஒரு ரூபத்தில் வெளியாகும் என்பார்கள். அது இவர் ரூபத்தில் நின்று நேற்று கோர தாண்டவம் ஆடியுள்ளது.
அதிர்விற்காக ,
வல்லிபுரத்தான். 
Source: http://www.athirvu.com/, Apr 21, 2015

Friday, May 01, 2015

அகில இந்திய வானொலி நிலையத்தை வெளியேற்ற தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை

குத்தகை நிலத்தில் இருந்து அகில இந்திய வானொலி நிலையத்தை வெளியேற்ற தமிழக அரசுக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கத்துக்கு எதிரே அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது. இந்த நிலையம், 1954-ஆம் ஆண்டு தமிழக அரசுக்குச் சொந்தமான 54 கிரவுண்ட் நிலத்தில், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.
பின்னர், 1983-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மேலும் 30 ஆண்டுகளுக்கு புதுப்பிக்ககப்பட்டது.
இந்த நிலையில், இந்த இடத்தில், பத்திரப்பதிவு, வணிக வரித்துறை அலுவலகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலத்தை திரும்ப பெற அரசு முடிவு செய்தது. இதுகுறித்து 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானமும் இயற்றியது.
இதன் அடிப்படையில், சென்னை மாவட்ட ஆட்சியர், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அகில இந்திய வானொலி நிலையத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை அகில இந்திய வானொலி நிலையம் மீறியுள்ளது. அனுமதியின்றி, தனியார் வானொலி நிலையத்துக்கு சொந்தமான ஒலிபரப்பு கோபுரத்தை வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ளது.
கட்டடமும் சேதமடைந்துள்ளது. வளாகம் முழுவதும் முள்புதர்கள் நிரம்பி உள்ளன. எனவே, குத்தகை நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசார்பாரதி தலைமைச் செயல் அதிகாரி, அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் ஜெனரல் உள்பட 4 அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், தமிழக அரசு சுமத்தும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. கட்டடம், வளாகமும் ஒப்பந்த நிபந்தனைகளின்படி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், அகில இந்திய வானொலி நிலையம் அமைந்துள்ள இடத்தின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினால், அகில இந்திய வானொலி நிலையத்தை, குத்தகை நிலத்தில் இருந்து வெளியேற்ற தடை ஏற்பட்டுள்ளது.
Source: Dinamani, First Published : 03 April 2015