Monday, December 30, 2013

வானொலி வளர்த்த தமிழ்வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், வானொலி வளர்த்த இசைத்தமிழ், வானொலி வளர்த்த நாடகத் தமிழ், வானொலி வளர்த்த அறிவியல் தமிழ் என விரிந்து செல்கிறது இந்நூலின் ஆய்வுப் பரப்பு.
தில்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ, சென்னை, திருச்சி ஆகிய   ஆறு வானொலி நிலையங்களே நாடு சுதந்திரமடைந்த செய்தியை ஒலிபரப்பின என்பது போன்ற சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வானொலியில் ஒலிபரப்பான  உரைகள், கல்வி ஒலிபரப்பு, சிறுகதைகள், வானொலிக் கவியரங்கங்கள், வாசிக்கப்பட்ட கவிதைகள், நேர்முகங்கள் ஆகியவை இயற்றமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின என்பதை இந்நூல் விளக்குகிறது.
கர்நாடக - ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள், வாத்திய விருந்தா எனும் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசையை வானொலி பயன்படுத்திக் கொண்டவிதம் ஆகியவற்றை "வானொலி வளர்த்த இசைத் தமிழ்' கட்டுரை விளக்குகிறது.
அகில பாரத நாடகங்கள், சரித்திர நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள் உட்பட வானொலியில் ஒலிபரப்பான நாடக வகைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.
விவசாயம், மருத்துவம் பற்றி வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவின என்கிறார் நூலாசிரியர்.
வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய நூலாக இருந்தாலும், இதழியல் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் தனித்தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
வானொலி வளர்த்த தமிழ் - இளசை சுந்தரம்; பக்.260; ரூ.150; 
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 
0452- 2560517.

'காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம்' என, மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது.
தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் என, தனித்தனி அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் வருகைக்கு பின், வானொலி வாழுமா என்ற கேள்விக்கு இளசையின் பதில் சிந்திக்க தூண்டுவது. இந்த புத்தகம் ஒரு வானொலி ஆவணம்.
-ஜிவிஆர் 

Wednesday, December 04, 2013

தமிழ் ஒலி - இதழ் தொகுப்பு

இலங்கையில் இருந்து திரு. உமா காந்தன் அவர்கள் 1980களில் வானொலிக்கென வெளியிட்ட தமிழ் ஒலி இதழ் தொகுப்பு இப்பொழுது இணையத்தில் பதிவு இறக்கம் செய்து படிக்க வசதி செய்யப் பட்டுள்ளது.

அனித்து இதழ்களையும் பதிவு இறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

நெல்லை வானொலி நிலையப் பொன் விழா

திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழாவில் நிகழ்த்தப்பட்ட கிராமிய கலைஞரின் காவடியாட்ட நிகழ்ச்சி நேயர்களை பெரிதும் கவர்ந்தது.
திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையம் 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திருச்சி வானொலி நிலையத்தின் துணை வானொலி நிலையமாக நிகழ்ச்சி ஒலிபரப்பைத் தொடங்கியது. பின்னர், 1977ஆம் வருடம் ஜனவரி 12-ம் தேதிமுதல் தனது முழுநேர ஒலிபரப்பு சேவையைத் தொடங்கியது.
50 ஆண்டு நிறைவு பெறுவதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சங்கீத சபாவில்  பொன் விழா நிறைவு நிகழ்ச்சி பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் பிரிகேடியர் வி.ஏ.எம்.  ஹுசேன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய வானொலி நிலைய  தென்மண்டல தலைமை இயக்குநர் க.பொ. ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி. சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார்.
ஓய்வுபெற்ற திருநெல்வேலி வானொலி நிலைய இயக்குநர் பாலக்காடு எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் வி. அப்பாக்குட்டி, முதல்  அறிவிப்பாளர் வி. நல்லதம்பி ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் க. தெட்சிணாமூர்த்தி, தூர்தர்சன் தொழில்நுட்ப உதவி இயக்குநர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான நேயர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடக்கமாக கிராமிய கலைஞர் கே.பி. முத்துலட்சுமி குழுவினரின்  வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடைபெற்றது. காவடியாட்டம் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தது.
முடிவில் உமா, ராதிகா குழுவினரின் பாட்டு, உஷாராஜகோபாலன் வயலின், ஆர். ரமேஷ் மிருதங்கம், ஆர். ராமன் முகர்சங்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியை வானொலி அறிவிப்பாளர்கள் கரைசுற்றுபுதூர் குருசாமிகவிபாண்டியன், சந்திரபுஷ்பம், உமாகனகராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
 
நன்றி: http://dinamani.com

நெல்லை வானொலி நிலைய பொன் விழா

திருநெல்வேலி : நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவை குறிக்கும் விதமாக நெல்லை சங்கீத சபாவில் விழா நடந்தது. பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர் ஹூசேன் தலைமை வகித்தார். நிலைய இயக்குனர் பாலச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் வக்கீல் சுப்பிரமணியன், சென்னை வானொலி நிலையத்தின் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர்(பொறுப்பு) சீனிவாசன் ஆகியோர் பேசினர். விழாவில், நெல்லை வானொலி நிலையத்தின் ஓய்வுபெற்ற முதல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, முதல் ஒய்வுபெற்ற தலைமைபொறியாளர் அப்பாக்குட்டி, வானொலி நிலையத்தின் முதல் அறிவிப்பாளர் நல்லதம்பி ஆகியோருக்கு பிரசார் பாரதி உறுப்பினர் ஹுசேன் பாராட்டி பொன்னாடி போர்த்தி பாராட்டினார்.
நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் தெட்சிணா மூர்த்தி, தூர்தர்ஷன் தொழில்நுட்ப உதவி இயக்குனர் நவநீதன் உட்பட முக்கிய பிரமுகர்கள், வானொலி நேயர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக,முத்துலட்சுமி குழுவினரின் வில்லுப்பாட்டு, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடந்தன. தொடர்ந்து, உமா, ராதிகா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தன.நிகழ்ச்சிகளை குருசாமி கவிப்பாண்டியன், சந்திர புஷ்பம், உமா கனகராஜ் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை நெல்லை வானொலி நிலைய நிர்வாகத்தினர் செய்தனர்.
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013,01:55 IST
நன்றி: http://www.dinamalar.com