Saturday, March 31, 2018

மோர்ஸ் ஒலிபரப்பு




தொடர்பியலின் வகைகள் இன்று பல்கிப் பெருகிவிட்டது. ஹாம் வானொலியில் மோர்ஸ் குறியீட்டில் இன்றும் தொடர்புகொள்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். மோர்ஸ் குறியீடு தெரியாதவர்கள் கூட மோர்ஸ் குறியீட்டில் தனது ஹாம் வானொலியை ஒலிபரப்ப விரும்புகின்றனர். அதற்கு இன்று பல்வேறு மென்பொருட்கள் உதவுகின்றன.

 மோர்ஸ் ஒலிபரப்பு 

மோர்ஸ் குறியீட்டு ஒலிபரப்பானது சிற்றலையில் மட்டுமே செய்யப்படுகிறது. அதற்கு காரணம், இதன் மூலம் பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு குறைந்த சக்தியிலேயே செய்ய முடியும் என்பதே. அடிப்படையில் இந்த ஒலிபரப்பினை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வது அவசியம்.

  1. அழைப்புக் குறியீட்டை குறித்துக் கொள்ளல்: மோர்ஸ் குறியீட்டில் உங்களை யாரே “CQ CQ CQ DE VU3UOM    K” என்று யாரே அழைக்கிறார்கள் என்றால், உடனடியாக நாம் அந்த அழைப்புக் குறியீட்டினை குறித்துக் கொள்ள முடியாது. எனவே இரண்டாவது முறை அழைக்கும் பொழுது முழுமையான கவனத்தினை செலுத்தி குறித்துக்கொள்ள வேண்டும். இதில் DE என்பது from அதாவது இந்த இடத்தில் இருந்து உங்களை நான் அழைக்கிறேன் என்று பொருள். அதே போன்று K என்ற எழுத்திற்கான பொருள் “end of transmission, go ahead” அதாவது “இத்துடன் இந்த ஒலிபரப்பு நிறைவு பெறுகிறது” என்பதையே குறிக்கும். பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்று மோர்ஸ் குறியீட்டில் கிடையாது, எனவே DE, K போன்றவை பெரிய எழுத்துக்களில் இருக்கிறதே என்று குழப்பிக்கொள்ள வேண்டாம்.

  2. வரிசையாக பதில் அளிக்கவும்: குறிப்பாக நீங்கள் மோர்ஸ் ஒலிபரப்பில் ஒரே நேரத்தில்  இரண்டு அல்லது மூன்று நபர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் எப்படி அழைப்பீர்கள்? அந்த மாதிரியான சூழலில் “VU3UOM DE VU2FOT VU2SVF VU3LJX K” என்று அழைக்கலாம்.

  3. கவனியுங்கள்: மோர்ஸ் குறியீட்டில் உங்களுக்கான பதில் இப்படி வரலாம், “VU2FOT DE VU3UOM TKS FOR THE CALL MY NAME IS ….” இதில் TKS என்பது thanks என்பதன் சுருக்கமாகும். UR என்பது your  என்பதன் சுருக்கமாகும்.

  ஹாம்கள் எந்த ஒரு எழுத்தினையோ வார்த்தையையே அனாவசியமாக உபயோகிக்க மாட்டார்கள். தேவையான இடத்தில் தேவையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவர். இப்படியான சுருக்கக் குறியீடுகளை விரிவாக அறிந்துகொள்வதும் அவசியம். அவற்றை விரிவாக http://ac6v.com/moreaids.htm#CW எனும் இணையதளம் வழங்குகிறது. எந்த வித பதிலும் உங்களுக்கு மோர்ஸ் அழைப்பில் கிடைக்கவில்லை என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை விரிவாக இனி காணலாம்.

  தொடர்பியல் சிக்கல்

  நீங்கள் மோர்ஸ் குறியீட்டில் ஒலிபரப்பும் பொழுது, யாரும் உங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால், அதற்கு முக்கியக் காரணம், உங்கள் ஒலிபரப்பானது அவர்களைச் சென்று சேரவில்லை என்று அர்த்தம். உங்களின் சிக்னல் மிகக் குறைவாக இருந்திருக்கலாம். அல்லது ஒரு சில சமயம் சத்தம் அல்லது இடையூறுகள் காரணமாக உங்கள் சிக்னல் சென்று சேராமல் இருக்கலாம். எனவே அதற்கு தகுந்தாற்போல் வேறு ஒரு நிலையத்தினை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். வேறு எந்த மாதிரியான இடையூறுகள் உங்கள் மோர்ஸ் ஒலிபரப்பினை கேட்கவிடாமல் செய்யலாம் என்பதை இதள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

  ஒரே சமயத்தில் பலர் தொடர்பு கொள்ளுதல்: பொதுவாக மோர்ஸ் குறியீடுகளை ஒலிபரப்புவதிலும், கேட்பதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரே சமயத்தில் உங்கள் அலைவரிசையில் வேறு ஒருவரும் தொடர்பு கொள்கிறார் எனில், அவரின் ஒலிபரப்பானது முடிவடையும் வரை பொறுமையாக இருந்து, நீங்கள் ஒலிபரப்ப வேண்டும்.

  நீங்கள் கேட்க முடியவில்லை, உங்களைக் கேட்கிறார்கள்: உங்கள் வானொலிப் பெட்டியில் எதிர்புறம் ஒலிபரப்பும் நிலையத்தினை உங்களால் கேட்க முடியவில்லை. ஆனால் உங்களின் ஒலிரப்பினை எதிர்புறம் உள்ளவர்கள் கேட்க முடிகிறது எனில் அதற்கு என்ன காரணமாக இருக்கும்? இந்த மாதிரியான சூழலில், எதிர் புறம் ஒலிபரப்பும் நிலையத்தினை மீண்டும் ஒரு முறை ஒலிபரப்ப சொல்லி “Station calling, please come again” or “QRZed?” or “Who is the station calling?” போன்ற கேள்விகளில் ஏதேனும் ஒன்றைக் கேட்கலாம்.

  ஏற்கனவே QRZ என்றால் என்ன என்று பார்த்துள்ளோம். சர்வதேச Q சிக்னல் அமைப்பானது இதற்கான விளக்கத்தினை கூறியுள்ளது. “Who is Calling me?” அதாவது “என்னை அழைப்பது யார்?” என்று அர்த்தம். பொதுவாக பிரிட்டிஷ் முறையிலான ஆங்கில ஒலிப்பு முறையே ஹாம் வானொலி ஒலிபரப்பில் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள், உங்கள் அழைப்புக் குறியீட்டினை ஒரு முறைக்கு மூன்று முறை நிதானமாக சொல்வது அவசியம். இதன் மூலம் நீங்கள் யார் என்பதை எதிர்புறத்தில் உள்ளவர் அறிந்து கொள்வார். ஒவ்வொரு தொடர்பின் முடிவிலும் ‘ஓவர்’ (Over) என்று சொல்லி உங்கள் ஒலிபரப்பினை அவருக்கு வழிவிட்டு நிறுத்த வேண்டும்.

  உங்கள் நிலையத்தின் பெயர் தவறாக பெறப்பட்டால்: எதிர் புறம் உள்ள நிலையம் உங்களின் அழைப்புக் குறியீட்டை தெளிவாக அறிந்து கொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சில சமயங்களில் உங்களின் அழைப்புக் குறியைப் போன்றே வேறு ஒரு நிலையமும் அதே ஒலிபரப்பில் இருந்தால், இந்த குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக உங்களின் அழைப்புக் குறி cஎன்று இருந்தால், மற்றும் ஒருவர் VU2UOM என்ற அழைப்புக் குறியில் வந்துவிட்டால், இது போன்ற குழப்பம் ஏற்படுவது இயற்கை தான். அது போன்ற சமங்களில் பொறுமையாக கேட்டுவிட்டு ஒலிபரப்பினைத் தொடர்வது உத்தமம்.

  பல முறை நீங்கள் ஒலிபரப்பியும் உங்கள் ஒலிபரப்பு போகவில்லை எனில், அதற்கான காரணங்களை இதுவரை பார்த்தோம். இதில் முக்கியமாக நாம் சோதிக்க வேண்டியது, நமது வானொலிப் பெட்டி. உங்கள் பகுதியில் உள்ள வேறு ஒரு ஹாமை ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் நிறுத்திவிட்டு, நீங்கள் அந்த அலைவரிசையில் ஒலிபரப்பி சோதிக்கலாம்.  இதன் ஊடாக உங்களின் வானொலி பெட்டியானது, சரியாக ஒலிபரப்பப்படுகிறதா? உங்களின் குரல் தெளிவாக புரிந்துகொள்ளப்படுகிறதா? போன்றவற்றை நீங்கள் சோதிக்கலாம். உங்கள் பகுதியில் ஹாம் உரிமம் இல்லாத நண்பர்கள் இருக்கும் பட்சத்தில், இது போன்று சோதிக்கலாம்.

சரியான அலைவரிசையில் தான் ஒலிபரப்புகிறீர்களா? உங்கள் வானொலிப் பெட்டியில் உள்ள மைக்கையோ அல்லது மோர்ஸ் கீயையோ ஒலிபரப்பும் பொழுது டிஸ்பிளேவை கவனமாக பாருங்கள், அதில் உள்ள இண்டிகேட்டர்கள், நீங்கள் சரியான அலைவரிசையில் தான் ஒலிபரப்புகிறீர்களா என்பதை சுட்டிக்காட்டும். அப்படி இல்லை எனில்,  நீங்கள் வேறு ஏதேனும் ஒரு அலைவரிசையில் ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

சரியான சக்தியில் ஒலிபரப்புகிறீர்களா? நீங்கள் செய்யும் ஒலிபரப்பானது எவ்வளவு சக்தியில் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வது மிக அவசியம் ஆகும். உங்கள் வானொலிப் பெட்டி எவ்வளவு சக்தியில் ஒலிபரப்பும் திறன் கொண்டது என்பதை நீங்கள் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அந்த குறிப்பிட்ட சக்தியில் முழுமையாக உங்கள் வானொலிப் பெட்டி செயல்பட வேண்டியது அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் அதனை உடனே சரி செய்ய வேண்டியது அவசியம்.

ஆண்டனா சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? நீங்கள் பெரும் அனைத்து ஒலிபரப்புகளும் தெளிவாகவோ, ஓரளவு தெளிவாகவோ இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, எதிர் புறம் ஒலிபரப்பும் வானொலிக்கு பதில் கொடுக்க முடியும். இதனை தொழில்நுட்ப மொழியில் 4 முதல் 9 வரை சிக்னல் இருக்கும். உங்களுக்கு கிடைக்கக் கூடிய சிக்னல் மிகவும் சக்தி குறைவாக இருந்தால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக ஆண்டனா அல்லது கேபிளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம்.  உங்கள் வானொலிப் பெட்டியில் இருந்து அனுப்பும் ஒலிபரப்பு முழுமையான சக்தியில் ஆண்டனாவிற்கு செல்கிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு SWR மீட்டர் உங்களுக்கு உதவுகிறது.