Tuesday, December 30, 2014

WhatsAppல் Dxers Guide

WhatsAppல் Dxers Guide  எனும் நமது ஆங்கில வானொலி தொடர்பான இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி தினமும் வானொலித் தொடர்பானத் தகவல்களை உங்களின் கைப்பேசியிலேயே உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். உங்களுக்கும் இந்தத் தகவல்கள் வேண்டுமாயின் உடனே உங்களைப் பற்றிய விபரங்களை ardicdxclub [at] yahoo [dot] co [dot] in எனும் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

வானொலி அண்ணா' கூத்தபிரான் காலமானார்


"வானொலி அண்ணா' என்று அழைக்கப்படும் நாடகக் கலைஞர் கூத்தபிரான் (84) ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய அவர், "வானொலி அண்ணா' என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
எண்ணற்ற வானொலி நாடகங்களை எழுதி இயக்கியுள்ள கூத்தபிரான், 7,000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) சென்னை தியாகராய நகர் ராமாராவ் கலா மண்டபத்தில் "ஒரு ரோபோவின் டைரி' என்ற நாடகத்தில் அவர் கடைசியாக நடித்தார். இந்த நாடகத்தை இயக்கியவர் அவரது மகன் என். ரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றவர் அங்கேயே மாரடைப்பால் காலமானார். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
புதன்கிழமை (டிச. 24) பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மறைந்த கூத்தபிரானுக்கு கணேஷ், ரத்தினம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் நாடகக் கலைஞர்கள்.
தொடர்புக்கு: 94447 43084.
நன்றி தினமணி 24 December 2014

Monday, December 29, 2014

புலிகளின் வானொலி ஒலிக்குமா?

வழக்கமாகவே நவம்பர் மாத கடைசி என்பது ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சி பூர்வமாக கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27-ம் தேதி புலிகள் அமைப்பின் முதல் களப்போராளியான கேப்டன் சங்கர் மரணம் அடைந்த நாள். அதற்கு முந்தைய நாள் நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள்.

எனவே, 25,26,27 ஆகிய மூன்று நாட்களையும் மாவீரர் தினங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டாடும். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரன், நவம்பர் 27–ந்தேதிதான் வானொலியில் பேசுவார்.
அதற்காக உலகம் முழுவதும் தமிழர்கள் அந்த நாளுக்காக காத்திருப்பார்கள். 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு, புலிகளின் வானொலி செயல்படவில்லை. அதனால் மாவீரர் தின உரைகளும் இடம்பெறவில்லை....
தொடர்ந்து படிக்க: http://www.maalaimalar.com/2014/11/26160143/prabhakaran-lives-or-not-myste.html
நன்றி: மாலை மலர் 2014/11/26

Monday, December 22, 2014

தருன் விஜய் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு பேட்டி

தமிழ் வளர்ச்சிக்கு உதவ பெய்ஜிங் பல்கலை. குழுத் தலைவரிடம் தருண் விஜய் வேண்டுகோள்


தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து தமிழ் மொழித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று சீனாவில் உள்ள பெய்ஜிங் (பீகிங்) பல்கலைக்கழகக் குழுத் தலைவர் ஜூ ஷான்லுவிடம் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.
இந்தியா சீனா இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக பகத் சிங் கோஷ்யாரி தலைமையில் 13 பாஜக எம்.பி.க்கள் கடந்த சனிக்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் இடம் பெற்றுள்ளார்.
வட மாநிலத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருகிறார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், வாராணசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தை தேசிய நினைவிடமாக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி வருகிறார்.
இதையடுத்து, தருண் விஜயை கௌரவிக்கும் வகையில் அண்மையில் சென்னையில் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்றுள்ள தருண் விஜய், அங்குள்ள பழைமையும் பாரம்பரியமும் மிக்க பெய்ஜிங் (பீகிங்) பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். உலகின் பன்னாட்டு மொழிகளும் அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுவது குறித்து அவர் கேட்டறிந்தார். அந்தப் பல்கலைக்கழகக் குழுத் தலைவர் ஜூ ஷான்லுவிடம் பன்னாட்டு மொழிகளைப் பயிற்றுவிக்கும் போது உலகின் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியையும் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து "தினமணி' நிருபரிடம் தருண் விஜய் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியின் விவரம்:
"சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மேற்குப் பகுதியில் உள்ள ஹைதியான் மாவட்டத்தில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கலை, அறிவியல், உலகப் பொறியியல், பல்துறை ஆராய்ச்சி ஆகியவற்றில் அந்தப் பல்கலை. தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. சீனாவின் பழைமையான, முதலாவது பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது. அதன் குழுத் தலைவர் ஜூ ஷான்லு, மொழி வளர்ச்சியில் பெய்ஜிங் பல்கலைக்கழகம் ஆற்றி வரும் சேவைகளை விளக்கினார்.
அப்போது, அவரிடம் இந்தியாவிலும் உலகின் பழைமையான மொழியான தமிழ் உள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளை தமிழ் மொழி அளித்துள்ளது. உலக நெறிகள் பலவற்றுக்கும் தமிழ் முன்னுதாரணமாக உள்ளது என்று கூறினேன். அதைக் கேட்ட அவர், தமிழ் மொழியின் சிறப்பை நாங்களும் அறிவோம். சீன அரசால் தமிழ் மொழி வானொலி சேவை வழங்கப்படுகிறது. சீனாவில் வசிக்கும் தமிழர்களிடையே சீன வானொலிக்கு வரவேற்பு உள்ளது என்றார்.
இதையடுத்து, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மொழியை சீனாவில் வளர்க்க நடவடிக்கை எடுங்கள் என்று ஜூ ஷான்லுவிடம் கேட்டுக் கொண்டேன். இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட அவர், விரைவில் இது தொடர்பாக பல்கலைக்கழக கவுன்சிலில் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்' என்று தருண் விஜய் கூறினார்.
சீனப் பயணத்தையொட்டி அந்த நாட்டு வானொலியின் தமிழ் சேவைக் குழுவினர் தருண் விஜயை பேட்டி எடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள வைரமுத்துவிடமும் சீன தமிழ் வானொலி சேவைக் குழுவினர் பேட்டி கண்டனர்.

நன்றி: தினமணி 21-Nov-2014

Tuesday, December 16, 2014

இலங்கையில் செரண்டிப் பத்திரிக்கை, வானொலி தொலைக்காட்சி ஆரம்ப

இலங்கையின் இஸ்லாமிய ஊடக நிறுவனமான “தேசிய நியுஸ் ஏஜென்சி ” இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கௌரவ அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம், உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், விஷேட அதிதியாக சர்வதேச மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் இந்திய உப கண்டத்திற்கான பொறுப்பாளர்  அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், இலங்கையில் உள்ள தூதுவராலயங்களின் தூதுவர்கள், பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
“செரண்டிப்” எனும் பெயரில் தமது ஊடகத்தை ஆரம்பித்துள்ள “தேசிய நியுஸ் ஏஜென்சி ” இன்று முதல் செரண்டிப் தினசரி பத்திகை ஒன்றை வெளியிடவிருக்கும் அதேவேளை “செரண்டிப் கேர்பில் தொலைக்காட்சி மற்றும் செரண்டிப் இணைய வானொலி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனும் தலைமை உரையை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் நிகழ்த்தினர்.
இதன்போது இணைய தொலைக்காட்சி சேவையை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், இணைய வானொலி சேiவையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவும், பத்திரிகை வெளியீட்டினை உலக முஸ்லிம் முன்னணியின் தலைவர் அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் ஆகியோரும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைத்தனர். (ஸ)
தகவல்/ http://dailyceylon.com/ 16/12/2014

Monday, December 15, 2014

'வானொலி' என்று ஒரு பத்திரிகை

''அந்தக் காலத்தில் 'வானொலி' என்று ஒரு பத்திரிகையைச் சென்னை வானொலி நிலையம் வெளியிட்டு வந்தது. தேதி வாரியாக நிகழ்ச்சிகள் அதில் பிரசுரமாகும். முக்கியமான கச்சேரிகளில், என்னென்ன ராகங்களில் என்னென்ன பாடல்கள் இருக்கும் என்ற விவரங்களும் அதில் இருக்கும். அந்தத் தகவலை படித்து வைத்துக்கொண்டு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியைக் கேட்காமலேயே கேட்ட மாதிரி எழுதிவிட்டார் விமர்சகர்!

அவருடைய தவறை வாசகர்கள் பலரும் சுட்டிக் காட்டினார்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் எல்லாக் கடிதங்களையும் பிரசுரித்தார். அதன் இறுதியில் 'இந்த சங்கீத விமரிசனப் பகுதி போரடிக்கிறது, யாரும் படிப்பதில்லை என்று சிலர் சொன்னார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டறிவதற்காக, வேண்டுமென்றே அப்படிப் போட்டோம். ஏராளமான வாசகர்கள் படிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறது. ரொம்ப சந்தோஷம்' என்ற குறிப்பு எழுதி விட்டார்!

(இது நான் கேள்விப்பட்ட விஷயம்.)

- இசை விமர்சனம் எனும் கட்டுரையில் திரு. வாதுலன்  அப்புசாமி டாட் காம் இணைய தளத்தில் எழுதியது

மேலும் படிக்க: http://www.appusami.com/v267vathoolan.asp
நன்றி: appusami.com

என்.எல்.சி., பள்ளியில் வானொலி ஒலிப்பதிவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் வானொலி ஒலிப்பதிவு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி வானொலி நிலையம் சார்பில் சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்கு, மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் முன்னிலை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் சீதாராமன் வரவேற்றார். அதில், "தூய்மையான இந்தியா விழிப்புணர்வு நாடகம், பாடல்கள், திருக்குறள் காட்டும் தூய்மை நெறி, ஆற்றல் சேமிப்பு, வினாடி - வினா' உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி வரும் 14ம் தேதி பகல் 2:30 மணிக்கு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

நன்றி / தினமலர் 15/12/2014

Monday, December 08, 2014

வானொலியும் ஜிசாட்-16 செயற்கைக்கோளும்

ஜிசாட்-16 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா

தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த வகை செய்யும் இந்தியாவின் ஜிசாட்-16 செயற்கைக்கோள் நேற்று அதிகாலை 2.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரூ ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 32-வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமான நிலைநிறுத்தப்பட்டது.
3,181 கிலோ எடை கொண்ட ஜிசாட்-16 செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கான 48 டிரான்ஸ்பான்டர்களை கொண்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் இதுவே மிகப்பெரியது.
ஜிசாட்-16 விண்ணில் ஏவப்பட்ட பிறகு, கர்நாடக மாநிலம், ஹாசனில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறை, இந்த செயற்கைக்கோளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. முதற்கட்ட சோதனையில் இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.
மேலும் செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து முதல்முறையாக உயர்த்தும் பணி திங்கள்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு நடைபெறும் என்றும் இஸ்ரோ கூறியது.
ஜிசாட்-16 செயற்கைக்கோளை கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இதன் பயணம் 1 நாள் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இப்பயணம் வானிலை காரணங்களுக்காக மேலும் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு, இறுதியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 46 டிரான்ஸ்பாண்டர்களின் உதவியால் தொலைக்காட்சி, வானொலி சேவைகள், பெரிய அளவிலான இணையப் பயன்பாடு, தொலைபேசி இயக்கங்கள் மேம்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சுமார் ரூ.880 கோடி செலவிலான ஜிசாட்-16 செயற்கைக்கோளுடன் டைரக் டி.வி. என்ற அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோளையும் ஏரியான் 5 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் விண்ணுக்குப் புறப்பட்ட 28-வது நிமிடத்தில் அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோளும், 4 நிமிடங்களுக்குப் பிறகு இந்திய செயற்கைக்கோளும் ஏவப்பட்டன.
ஜிசாட்-16-ஐயும் சேர்த்து இதுவரை 18 செயற்கைக்கோள்கைளை இஸ்ரோவுக்காக ஏரியான் விண்ணில் செலுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
இதனிடையே ஜிசா-16 செயற்கைக்கோள் வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஜிசாட்-16 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு நமது விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். இந்த செயற்கைக்கோள் நமது விண்வெளித் திட்டத்தின் முக்கிய சொத்தாக மாறும்” என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி: தி இந்து

கனடிய தமிழ் வானொலி

கனடிய தமிழ் வானொலி முன்னெடுத்த மலையக மக்களுக்கான நிதி சேர் நிகழ்வு


மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனேடிய தமிழ் வானொலியூடாக கனடியத் தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்டு மலையக மக்களது அவலத்திலும் ஆழ்ந்த இழப்பிலும் தமது துயர் பகிர்வை செய்தனர். எமது மலையக உறவுகளுக்கான ஆறுதலை தெரிவித்த கனடியத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்ளுக்கு உடனடியாக உதவ நிதி சேகரிப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டனர். எமது தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் 'மண்வாசனை" அமைப்பினரும் கனடியத் தமிழ் வானொலியும் இணைந்து நடாத்திய ' எம் மலையக உறவூகளின் துயர் துடைப்போம்" நிகழ்வில் பெருமளவு கனடியத் தமிழ் மக்களும் கனடிய தமிழ் வானொலியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு உறவுகளும் பங்கு பற்றினர்.
   
அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தமது உறவுகள் பலரை இழந்தும் தமது இருப்பிடங்களை தொலைத்தும் நிற்கும் எம் மலையக உறவுகளுக்காக கனேடிய தமிழ் வானொலியூடாக பங்கு கொண்ட எம்மக்கள் குறுகிய நேரத்துக்குள் இருபத்தைந்து ஆயிரம் டொலர்களை முன்வந்து வழங்கினர்.
சில மணி நேரங்களே நடைபெற்ற இவ்வானொலி நிகழ்ச்சியூடாக தமது உறவுகளுக்காக குரல் கொடுத்த எம்மக்கள் மலையக உறவுகள் நீண்டகாலமாக எதிர் கொண்டு வரும் அநீதிகளையூம் அரச அடக்குமுறைகளையும் பேசியதோடு மலையக தமிழர் சமூகமாக அவர்களது வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் எமது தொடர்ச்சியான பங்களிப்பும் ஆதரவூம் இருக்க வேண்டும் எனவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர் . கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சமூகமாக எமது உரிமைகளுக்காகப் போராடிவரும் நாம் அதுவும் குறிப்பாக அதே 'சிறிலங்கா நாட்டின்" இன்னொரு சமூகமாக இருந்துவரும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளிற்காக குரல் கொடுப்பதன் மூலமே அவர்களது போராட்டத்தைப் பலப்படுத்தவும் அதனுடாக எமது போராட்டத்திற்கான ஆதரவை வலுப்படுத்தவும் முடியூம் என்னும் வகையிலான காத்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குமான களமாக இவ்வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வாறான வகையில் ஆரோக்கியமான உரையாடல்களையும் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களையும் உருவாக்கும் ஒரு ஊடகமாக எம்மை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில் கனடியத் தமிழ் வானொலி எம் மக்களுடன் சேர்ந்து பெருமை கொள்கின்றது. இந் நிகழ்ச்சியில் இணைந்து செயற்பட்ட மண்வாசனை அமைப்பிற்கும் மற்றும் இதில் இணைந்து பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

செய்தி - கனடிய தமிழ் வானொலி