Thursday, April 11, 2024

வானொலிப் பெட்டிகளைக் கொண்ட அருங்காட்சியகம்

 


















சமீபத்தில் எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு ஆச்சர்யம், அங்கு ஏராளமான VHF, HF வானொலிப் பெட்டிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் வால்வ் வானொலி பெட்டி மற்றும் கிராமபோன் பெட்டியும் உள்ளடக்கம்.

மிக முக்கியமாக நம்நாட்டிலேயேத்  தமிழகப் போலீஸாரால் தயாரிக்கப்பட்ட "வான்தந்தி" வானொலிப் பெட்டியும் இதில் அடங்கும். வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

#வான்தந்தி

Friday, March 22, 2024

ஹாம் வானொலி நிலையம்

 

ஹாம் வானொலி வகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைக் களத்திற்கு அழைத்துச் சென்று, எப்படி அவை இயங்குகின்றன என்பதை நேரடியாக காட்டுவதை  வழக்கமாகக் கொண்டுள்ளோம். 


அந்த வகையில் இந்த ஆண்டும் மாணவர்களை அழைத்துச் சென்ற இடம் VU2OW ஹாம் ஸ்டேசன். எப்பொழுது அழைத்துக் கூறினாலும், அன்போடு வாருங்கள் என்பார் திரு.ராஜேஷ் (VU2OW). இந்த முறையும் கடைசி நிமிடத்தில் தான் அவரை அழைத்து மாணவர்களோடு வருவதாகக் கூறினேன், அன்போடு வாருங்கள் என்றார்.


மற்ற ஹாம் நிலையத்தை விட இவரின் நிலையம் தனித்துவமானது. ஒரே இடத்தில் வால்வ் வானொலிப் பெட்டியில் இருந்து DMR உட்பட அனைத்து செயற்கைக்கோள் ஒலிபரப்புகளை கேட்கவும், ஒலிபரப்பைச் செய்யவும் கூடிய ஒரே நிலையமாக VU2OW உள்ளது.


மேலும் ஒவ்வொரு முறை இவரது இல்லத்திற்கு செல்லும் போதும், அவர்களின் குடும்பத்தார் கொடுக்கும் வரவேற்பு, மாணவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரக்கூடியதாக இருக்கும். 


Homebrewங்கிலும் அசத்தி வரும் திரு.ராஜேஷ், இந்த முறையும் பல்வேறு சோதனை முயற்சிகள் செய்து வருவதாகக் கூறினார். குறிப்பாக அவரது மகன் செய்த அழகான கீ போர்ட் ஒன்றினைப்  பார்த்து அசந்தே விட்டோம். அதிக உழைப்பினைத் தாங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.


அவரது வீட்டின் மாடியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டனாக்கள் தனித்துவமானவை. பத்துக்கும் மேற்பட்ட ஒலிபரப்பிகளைப் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. உண்மையிலேயே இன்றைய நாள் மாணவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தினைக் கொடுத்திருக்கும் எனலாம்.


#ஹாம் #ரேடியோ #வானொலி #ham #radio #vu2ow #feildvisit

Tuesday, February 13, 2024

உலக வானொலி நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

 





அனைவருக்கும் உலக வானொலி நாள் வாழ்த்துகள்.

இன்றும் நாளையும் பல்வேறு ஊடகங்களில் உலக வானொலி நாள் சிறப்புப் பேட்டியை வழங்கியுள்ளேன்.

இதில் என்ன விஷேசம் எனில், convention ரேடியோவில் இருந்து (அகில இந்திய வானொலி), சமுதாய வானொலி (ஆலயம் எஃப்.எம், சேனா எஃப்.எம்), இளந்தென்றல் (இணைய வானொலி), வாட்ஸப் வானொலி மற்றும் பாட்காஸ்ட் வானொலி என அனைத்து விதமான வானொலிகளிலும் இந்த முறை பேட்டியை வழங்கியுள்ளேன்.

ஒலியின் வடிவங்கள் மாறலாம்!
ஆனாலும் வானொலி, வானொலிதானே?!



Monday, February 12, 2024

அகில இந்திய வானொலிக்கு ஒரு மணி மகுடம்!



பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தகம் வெளியிட முடிவானதும், அதில் எழுத வேண்டியவர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்தோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், 128 பேர் வந்தார்கள்.

யாரையும் விட்டுவிடக்கூடாது என்று அனைவரிடமும் தொடர்ந்து கட்டுரையைக் கேட்டு வந்தோம். அப்படிக் கேட்டவர்களில் ஒரு சிலர் உடனடியாகக் கொடுத்தனர். இன்னும் ஒரு சிலர் எழுதியும் கொடுக்க முடியாமல் போனது.

அப்படியானவர்களுக்காகவே தொகுதி-2 வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். யாரேனும் எழுத விரும்பினாலும் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

இதோ 44 முக்கியக் கட்டுரைகளுடன் நூல் நாளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் வெளியிடப்பட உள்ளது. கட்டுரை தலைப்பு மற்றும் எழுதியவர்களின் விபரங்கள்...








Sunday, February 11, 2024

இவுங்க தா சார் இன்னைக்கும் ரேடியோ கேட்குறாங்க!






 உலக வானொலி நாளினையொட்டி "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க? தொகுப்பில் சென்னையின் 16 முக்கிய நேயர்களை ஆவணப்படுத்தியுள்ளோம்

இயந்திர கதியில் இயங்கும் சென்னை போன்ற மெட்ரோ நகரத்தில், இன்றும் லட்சக்கணக்கான வானொலி நேயர்கள் உள்ளனர், அவர்களில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் தான் இந்த நேயர்கள்!

யார், யார் அந்தப் பட்டியலில்...
இந்த வலைப்பூவில் (blog) அவர்களின் பெயர் பட்டியலைக் காணலாம்.

வரும் 13 பிப்ரவரி 2024, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் காலை 10.00 மணிக்கு இந்த நூல் அந்த நேயர்களின் முன்னிலையிலேயே  வெளியிடப்படுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Wednesday, February 07, 2024

இன்னைக்கு யார் சார் ரேடியோ கேட்குறாங்க?



முதல் முறையாக உலக வானொலி நாளில் இரண்டு புத்தகங்களை வெளியிடுகிறோம் என எற்கனவே பதிவிட்டிருந்தேன்.

இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே சுவரஷ்யமானது. "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க? இது பல வானொலி நேயர்களும் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. அந்த கேள்விகளுக்கு பதில் தான் இந்த புத்தகம். இன்றும் இத்தனை நல்லுள்ளங்கள் வானொலியைக் கேட்கிறது.

இந்த புத்தகத்தில் முக்கிய வானொலி நேயர்களை ஆவணப்படுத்தி உள்ளார்கள் எங்களின் இதழியல் துறை மாணவர்கள். மிக முக்கிய புத்தகமாக நான் இதைக் கருதுகிறேன்.

இரண்டாவது புத்தகத்தினை வெளியிட இந்தியாவின் முதல் சமுதாய வானொலியின் இயக்குநர் முனைவர் ஆர்.ஸ்ரீதர் அவர்களும், பெற்றுக்கொள்ள கோடைப் பண்பலையின் மேனாள் நிகழ்ச்சித் தலைவர் முனைவர் பழ.அதியமான் அவர்களும் இசைவு தந்துள்ளார்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக சென்னைப் பகுதி வானொலி நேயர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. மறவாமல் வந்துவிடுங்கள்.


Monday, February 05, 2024

பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தக வெளியீடு

 

உலக வானொலி தினத்தில் இந்த ஆண்டு பன்முகப் பார்வையில் வரிசையில் அகில இந்திய வானொலிக்கான தொகுப்பு வெளிவர உள்ளது. இது வரை பன்முகப் பார்வையில் வரிசையில் சீன வானொலி, இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை, வேரித்தாஸ் வானொலியை அடுத்து தற்பொழுது அகில இந்திய வானொலிக்கான புத்தகம் வெளிவருகிறது.

இது வரை வெளிவந்த புத்தகங்களை விட, இது 450 பக்கங்கள் கொண்ட பெரும் தொகுப்பாக வெளிவருகிறது. அதுவும் தொகுதி - 1 மட்டுமே இது. இன்னும் நிறையக் கட்டுரைகள் வந்த வண்ணமே உள்ளது. அவற்றைத் தொகுதி - 2இல் தான் கொண்டு வரவேண்டும்.

இத்தனை பேர் அறிவிப்பு வந்தவுடன் எழுதித் தள்ளுவார்கள் எனக் கொஞ்சமும் நினைக்கவில்லை.  பத்து பாகங்கள் வெளியிட்டாலும், எழுதித் தீராத வரலாற்றினைக் கொண்டது அகில இந்திய வானொலி.

பன்முகப் பார்வை வரிசையைத் தொடங்கும் போது 15 வெளிநாட்டுச் சிற்றலை வானொலிகளை ஆவணப்படுத்தத் திட்டமிட்டு இருந்தோம். அதில் ஐந்து வானொலிகளுக்கான தொகுப்பு வெளிவந்துவிட்டது.

இனி வெளிவர இருப்பவை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, மாஸ்கோ வானொலி, வத்திகான் வானொலி, சிங்கப்பூர் வானொலி, மலேசிய வானொலி, அட்வண்டிஸ்ட் உலக வானொலி (AWR), TWR வானொலி, HCJB வானொலி, பாகிஸ்தான் வானொலி, ஃபீபா வானொலி ஆகிய தமிழ் ஒலிபரப்பு செய்த, செய்துவரும் சிற்றலை  வானொலிகளை ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. விரைவில் அவையும் வெளிவரும்.

இது தவிர, புலிகளின் குரல், ஃபேமிலி ரேடியோ, எஸ்.பி.எஸ்.ஆஸ்ரேலியா போன்ற சிறப்பு நிலை வானொலிகளையும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. பார்ப்போம், காலமும், சூழலும் ஒத்துழைத்தால், அனைத்தும் சாத்தியமே.

வாருங்கள் இணைந்து, இந்த வருடத்திற்கான உலக வானொலி தினத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடுவோம்.


Sunday, February 04, 2024

உலக வானொலி தினம் 2024

 


உலக வானொலி தினத்தினை ஒட்டி, இந்த வருடம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறையில் "பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி" எனும் நூலினை வெளியிட உள்ளோம்.

அத்துடன் "இன்னைக்கு யார் சார் ரேடியோ கேட்குகிறாங்க?' என்ற நூலினையும் வெளியிட உள்ளோம்.

இது தவிர இன்னும் பல நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்ச்சிக்கு
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...


Thursday, January 25, 2024

மறைந்தார் NCG

நம் வாழ்வில் ஒரு சில மனிதர்களை நாம் மறக்க முடியாது. அப்படியானவர்களில் ஒருவர் தான் மறைந்த N.C.ஞானபிரகாசம்  (NCG) ஐயா அவர்கள். என் வானொலி பயணத்தில் மிக முக்கியமானவர், என்றால் அது மிகையில்லை.


 

அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தோடு எட்டு வருடங்கள் பயணிக்க உதவியவர். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் துறையில் படிக்கும் போது பகுதி நேரமாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்து, படிப்பிற்கும் உதவியவர். 

வெளிநாட்டு ஆங்கில வானொலிகளில் மட்டுமே ஒலித்து வந்த DX PROGRAM, போன்று தமிழில் ஒன்று தொடங்க நினைத்த போது, முதலில் நினைவுக்கு வந்தவர் திரு. NCG அவர்கள் மட்டுமே. அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுச் சேவையான திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் அப்பொழுது அவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார்.

"வானொலி உலகம்" எனும் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து வழங்க வேண்டும் என்று கூறினேன். எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக அனுமதி கொடுத்தார். 54 வாரங்கள் ஒலித்த அந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். காரணம், அந்த நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு கடிதம் மற்றும் Reception Report அனுப்பும் நேயர்களுக்கு World Smallest QSL Cardனை அனுப்பினோம். 

ஒரு சில வெளிநாட்டு நேயர்கள் அவர்கள் எழுதும் கடிதங்களோடு அமெரிக்க டாலர்களையும் வைத்து அனுப்புவர். அது வான் அஞ்சலுக்காக அஞ்சல் தலை வாங்குவதற்கு எனக் குறிப்பிட்டு அனுப்புவர். அன்று அவர் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது, "என்னப்பா, ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு டாலர் எல்லாம் அனுப்பி வைக்குறாங்க, எனக்கு தெரிஞ்சு தமிழில் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படி நேயர்கள் உலகம் முழுக்க இருந்து காசு அனுப்பியது இந்த நிகழ்ச்சிக்கா தான் இருக்கும்" என்றார்! 

பிற்பாடு அந்த நிகழ்ச்சி புத்தகமாக NCBHல் "உலக வானொலிகள்" என்ற தலைப்பில் வெளிவந்த போதும் முதல் மனிதராக வந்து வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

"வானொலி உலகம்" நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு ஒரு நேயர் பத்து பக்கங்களுக்குப் பாராட்டி ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தைப் படித்த அன்றைய இயக்குநர், திரு.ஸ்ரீநிவாசராகவன், "அப்படியென்ன அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்புகிறீர்கள்" என்று NCGயிடம் கேட்டுள்ளார். 

உடனடியாக என்னை அழைத்து, உடனே புறப்பட்டு வாருங்கள். உங்கள் நிகழ்ச்சிக்கு யாரோ பத்து பக்க கடிதத்தை இயக்குநருக்கு எழுதிவிட்டார்களாம் என்று கூறியதும், பயந்தே போனேன்.

நேரில் சென்றவுடன், பயப்பட வேண்டாம், கடித விபரத்தைக்  கூறியதோடு, அந்த கடிதத்தினையும் காண்பித்தார். அந்த கடிதத்தை எழுதியவர் திரு.பாலசுப்பிரமணியம். மூத்த Dxer, பிற்பாடு நெருங்கிய நண்பராக இன்று வரை எனது நட்பு வட்டத்தில் தொடர்கிறார். 

இப்படி பலரின் நட்பும் கிடைக்கக் காரணமானவர். பத்திரிகையில் நான் எழுதிய ஏதேனும் ஒரு கட்டுரை வெளிவந்தால், முதல் அழைப்பு இவரிடம் இருந்து தான் வரும். ஒரு கட்டத்தில் காலை அழைப்பு வந்தாலே, ஓ, பத்திரிகையில் நாம் எழுதியது ஏதோ வெளிவந்துவிட்டது என்று நினைக்கும் அளவிற்கு எம் மீது பாசமும் அன்பும் வைத்தவர்.

அவருடன் இணைந்து FM RAINBOWல் பணியாற்றிய "சினிமா நேரம்" நிகழ்ச்சியாகட்டும், "நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சியாகட்டும், இரண்டையும் இன்று எழுத்தாக்கினால், பல தொகுப்புகளாக வெளியிடலாம் சினிமா துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் அதில் ஆவணப்படுத்தினோம். இன்று ஒரு நிகழ்ச்சி கூட ஆவண காப்பகத்தில் இல்லை என்பது மிக வருத்தமான ஒரு செய்தி. காரணம் அன்று அனைத்து ஒலிப்பதிவுகளும் Spool Tapeல் செய்யப்பட்டது.

ஒரு முறை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தோம். சிம்ரன் சிறப்பு விருந்தினர். நான் ஒலிப்பதிவு பொறுப்பிலிருந்தேன். ஸ்பூல் டேப் போதவில்லை. அவசரத்தில் ஒலிப்பதிவு செய்த முதல் டேப்பை அழித்துவிட்டேன். நிகழ்ச்சி முடிந்து சிம்ரனும் சென்றுவிட்டார். பிறகு திரும்பப் போட்டுப்பார்த்த போதுதான் தெரிந்தது, முதல் டேப் அழிந்துவிட்டது என்று. கொஞ்சமும் பதட்டமில்லாமல், சிம்ரனை மீண்டும் அழைத்து ஒலிப்பதிவு செய்தோம். இதில் அவர் நம்மைக் கடிந்துகொள்ளாமலேயே, ஒரு பாடத்தினை கற்றுக்கொடுத்ததை இன்றும் மறக்க முடியாது.

இப்படி இன்னும் ஏராளமான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது. அனைத்தையும் இங்கு எழுத இயலாது. காரணம் எனது வாழ்வில் தொடர்ந்து பயணித்த ஒரு வழிகாட்டி. இனி யார் அழைத்துச் சொல்வார்கள், உனது கட்டுரை இதில் வெளிவந்துள்ளது என்று!

தான் எந்த ஒரு பணியைத் தொடங்கினாலும், சிறியவன் என்றும் பாராமல் அது பற்றி ஒரு கருத்தினைக் கேட்பார். அவரது இந்த செயல் நம்மையும் கற்றுக்கொள்ளச் சொல்லும். 

பைப்பாஸ் அறுவை சிகிச்சைக்குப்பின் சேலம் கோகுலம் மருத்துவமனையில்    பின் ஓய்விலிருந்தார். வியாழன் 25-1-24, அதிகாலை 12.30க்கு நம்மைவிட்டுப் பிரிந்தார். இன்று இரவு அன்னாரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நாளை மாலை மூன்று மணி வரை லாயிட்ஸ் காலனியில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.

அவரது இழப்பு எமக்கே ஈடுசெய்ய முடியாத ஒன்று. இந்த சமயத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எப்படி வருத்தத்தினை தெரிவிக்க! ரேவதி மேடம், தோழர் கற்பகம், சபரி மற்றும் திரு.ராஜாமணி சாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, January 16, 2024

புத்தக அறிமுகம்: வானொலி ஒலிபரப்பும் உத்திகளும்

 


இந்த சென்னைப் புத்தகக் காட்சிக்கு வானொலித் தொடர்பாக என்ன புத்தகம் வாங்களாம்  என்று கேட்பவர்களுக்கு நான் பரிந்துறைக்கும் புத்தகம் நடா இராஜ்குமார் எழுதிய "வானொலி ஒலிபரப்பும், உத்திகளும்".

கனடாவின் புகழ்பெற்ற தமிழ் வானொலியான East FM 102.7ன் தலைவரும் கனடா தமிழ் ஊடகத்துறையின் முன்னோடியுமான நடா இராஜ்குமாரின் மிக முக்கிய படைப்பு இது.

இந்த புத்தகத்தில் வானொலி வரலாறு, தமிழ் வானொலியின்  தொடக்கம், வானொலிக் கலை, அடிப்படை தகுதிகள், தொழில் நுட்பங்கள், தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி தயாரிப்பு போன்ற அடிப்படை தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாது இந்த துறையில் வருபவர்களுக்காக உரை எழுதுதல், பேட்டி காணுதல், கலையகம், வானொலி நெறிமுறைகள், சவால்கள் மற்றும் உத்திகள், தற்போதைய தொழில்நுட்பம், நிலையத்தின் நிலைத்தன்மை, வானொலியின் எதிர்காலம் போன்ற தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்.

"வானொலியில் தமிழ் ஆட்சி, வானமெங்கும் நமது ஆட்சி" என்ற முத்திரை சொற்றொடருடன் தொடங்கும் இந்த புத்தகம், வானொலித் தொடர்பாக இந்த வருடம் வெளிவந்துள்ள முக்கிய புத்தகமாகும்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
East FM 102.7
151, Nashdene Road
Unit 17,18 Scarborough
Ontario M1V2T3
Canada


Sunday, January 14, 2024

சென்னைப் புத்தகக் காட்சியில் உலக வானொலிகள்

 

நண்பர்களும் வானொலி ஆர்வலர்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்,
எதை?

உங்களது புத்தகங்கள் புத்தகக் காட்சியில் எந்த அரங்கில் கிடைக்கும்?

இந்த ஆண்டு எனது புத்தகங்களில் "உலக வானொலிகள்" புத்தகம் மட்டுமே நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [NCBH (அரங்கு எண் F49)] அரங்கில் கிடைக்கும்.


இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து வானொலிகளும் பண்பலை, சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகள் மட்டுமல்லாது, பாட்காஸ்டிலும் ஒலிபரப்பத் தொடங்கிவிட்டன. இந்த நூலில் அந்த வானொலிகளின் இணைய முகரிகளோடு விரிவாகத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சர்வதேச ஊடகங்களை, குறிப்பாக வானொலிகளை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பயனுள்ள புத்தகமாக இது இருக்கும்.

மற்ற புத்தகங்கள் அனைத்தும் அமேசானில் கிடைக்கும். 



Saturday, January 13, 2024

சென்னைப் பல்கலைகழகத்தில் கனடா EAST FM தலைவர் நடா இராஜ்குமார்

 













சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல் துறையில் கடந்த 10 ஜனவரி 2024ல் ஒரு முக்கிய கருத்தரங்கினை நடத்தினோம்.

"சர்வதேச கண்ணோட்டத்தில் தமிழ் வானொலிகள்" என்ற தலைப்பினில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கனடாவின் புகழ்பெற்ற வானொலியான EAST FMன் தலைவர் திரு.நடா இராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும்  தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வழங்கினார்கள்.

குறிப்பாக கனடாவில் பணியாற்ற தேவையான தகுதி, என்ன மாதிரியான வேலை வாய்ப்பு உள்ளது, அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் போன்றவற்றை சுவைப் பட தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, குரல் வளம் மிக்க மாணவர்களுக்கு தனது வானொலியில் வாய்ப்பினைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கியவர் Siva Parameswaran . இந்த சமயத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எம்மோடு இணைந்து ஆய்வு மாணவர்கள் தீப்தி சுரேஷ் மற்றும் மெளலி பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்!