Sunday, February 12, 2017

ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது...

காதோடுதான் நான் பேசுவேன்!

"ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி. அமெரிக்காவில், ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., பூரண குணமடைந்து, ஓரிரு நாளில், சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...' இந்த வார்த்தைகளை கேட்டவுடன், மனதுக்குள் வந்து செல்வது, வானொலியும், அந்த கணீர் குரலில் ஒலிக்கும் வசீகரமும் தான்.

வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் என, நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், அது காட்டும் மாயஜால காட்சிகளில், எந்தவிதமான ஆச்சரியங்களும் அற்றுப்போன மனிதர்களாக, நாம் மாறி வருகிறோம். 

"அட' என, எதையும் பார்த்து வியக்காத அளவுக்கு, மனித மனங்கள் மரத்து போய்விட்டன. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் ஒலிக்கும் வானொலி பாடல்களும், உரையாடல்களும், கேட்க இனிமையானவை. வானொலிக்குள் இருந்து வரும் உரையாடல்களை, பேச்சுகள், "வானொலிக்குள் யாரோ இருந்து கொண்டு பேசுகிறார்கள்,' என, அசட்டுத்தனமாக நினைத்த அப்பாவி மக்கள், நிறைய பேர் உண்டு.
இன்றைக்கு, 40 வயதை தாண்டிய பலருக்கும், வானொலி கேட்ட அனுபவங்கள், எப்போது நினைத்தாலும், பசுமையான நினைவுகளாக நெஞ்சில் நிழலாடி கொண்டிருக்கும். கம்ப்யூட்டர், "டிவி', மொபைல் போன் என, நாள் முழுவதும் ஏராளமான நேரத்தை, நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அன்று வானொலி கேட்டதால் எந்த வேலையும் கெட்டதில்லை. வீட்டு வேலைகளை பெண்கள் செய்தனர்; உணவு சமைத்தனர்; கால்நடைகளை மேய விட்டனர். பாடல்களை கேட்டபடி, பூக்கடைகளில் பூத்தொடுத்தனர்; ஆண்கள், தங்களது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே, வானொலியை ரசித்து வ(ச)ந்த காலம் அது. கிரிக்கெட் போட்டிகளின் போது, வானொலியில், "ஸ்கோர்' கேட்பது என்பது, அலாதியான சுகம்.

இன்று, பண்பலை எனப்படும் எப்.எம்., வானொலிகள் இருந்தாலும், பெரும்பாலும் பேச்சும், இரைச்சலான பாடல்களும் மட்டுமே கேட்க முடிகிறது. அந்நாளில், காலை, மாலை நேரங்களில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள், செய்திகள், பழைய, புதிய சினிமா பாடல்கள், நாடகம், புதினம் வாசித்தல், ஞாயிறு தினங்களில் திரைப்பட ஒலிச்சித்திரம், சிறுவர் பூங்கா, இசை நிகழ்ச்சிகள், கர்நாடக கச்சேரிகள், கல்வி நிகழ்ச்சி என, வானொலியில் கேட்டவை ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது தவறு என, அந்த காலத்திலேயே அறிவுறுத்திய ஊடகம் வானொலி.தென்கச்சி சுவாமிநாதன் போன்றவர்களின் உரை, நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவை. மக்களை சிந்திக்க வைப்பதோடு, கற்பனை வளத்தை அதிகரிக்க செய்ததில், அன்றைய வானொலியின் பங்கு அளப்பரியது. தேவையான தகவல்களை தருவது, தேச பக்தி, விழிப்புணர்வு என்பதே, வானொலியின் தலையாய கடமையாக இருந்தது.

தகவல் தொடர்பு துறையில் தாயாக விளங்கியது, வானொலி என்ற முதல் ஊடகம்தான்; ஆனால், "டிவி', கம்ப்யூட்டர், மொபைல்போன்கள், மக்களை நல்வழிப்படுத்துவதை காட்டிலும், தவறான பாதைக்கே, வழிநடத்துகிறது. வாழ்க்கை சீரழிவுகளை, காதில் கேட்க முடியாத, கண்ணில் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம் காட்சிப்படுத்தி, மக்களை ரசிக்க செய்கிற ஒரு அவல நிலையை பார்க்க முடிகிறது.
வரும் 13ல், வானொலி தினம் கொண்டாடுகிறோம். வாரத்தில் ஓரிரு தினங்கள், ஆண்டுக்கு ஓரிரு மாதங்களாவது வானொலியை மட்டுமே கேட்பது, வீட்டில் வானொலியை ஒலிக்க செய்வது என்று, இந்நாளில் நாம் முடிவெடுக்க வேண்டும். பழுதுபட்ட நம் கண்களுக்கும், பாழடைந்த நம் செவிகளுக்கும் அருமருந்தாக, வானொலி அமையும் என்பதில் சந்தேகமில்லை. (நன்றி: தினமலர், 12 பிப். 2017)

மகா மீட் (ஹாம் சந்திப்பு)

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று நடைபெரும் மகா மீட் ஹாம் சந்திப்பு, இந்த வருடம் 11 பிப். 2017 அன்று ஹோட்டல் மகாப்-பில் சிறப்பாக நடைபெற்றது. விழா நிறைவில் எடுக்கப்பட்ட குழு புகைப்படம் (உதவி: கிரிஷ்டி)

உலக வானொலி தினம் 2017

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உலக வானொலி தினம் வெகு சிறப்பாக 8 பிப். 2017 அன்று கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப். 13ஆம் நாளை உலக வானொலி தினமாக ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன் கூட்டியே இந்த ஆண்டுக்கான உலக வானொலி தினம் இதழியல் துறையில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிபிசி உலக சேவையின் தயாரிப்பாளர் திரு.எஸ்.சம்பத்குமார், ஐபிசி தமிழின் மூத்த செய்தியாளர் அப்துல் ஜப்பார் மற்றும் 'தமிழ் வானொலி வரலாறு நூலின் ஆசிரியர்' முனைவர்.கு.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'சர்வதேச வானொலி' வெளியீடு

திரு.சம்பத்குமார்

திரு.அப்துல் ஜப்பார்

முனைவர்.கு.பிரகாஷ்

மாணவர்கள் மற்றும் நேயர்களுடன்

Thursday, February 09, 2017

வானொலி மூலம் போக்குவரத்து தகவல்கள்

தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை வானொலி மூலம் உடனுக்குடன் ஒலிபரப்பும் வகையிலான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் வியாழக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து நிதின் கட்கரி பேசியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள், வாகன நெரிசல்களால் ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக வானொலி சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து நிலவரம், வானிலை, விபத்துகள், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் உள்பட அனைத்து விவரங்களும் இச்சேவையின் கீழ் ஒலிபரப்பப்படும். இந்த தகவல்களை அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் "நெடுஞ்சாலை வானொலி சேவையை' அரசு தொடங்கவுள்ளது. இத்திட்டத்துக்கு உலக வங்கியின் தொழில்நுட்பப் பிரிவு நிதி வழங்குகிறது. முதல்கட்டமாக, 13 நெடுஞ்சாலைகளில் இந்த சேவைகள் தொடங்கப்படும். பின்னர், மற்ற தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டத்தின் சோதனை ஓட்டமாக, தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இந்தச் சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்றார் நிதின் கட்கரி. (நன்றி: தினமணி 9.2.2017)

Sunday, February 05, 2017

தனியார் வானொலிகளில் செய்திகள்

தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பும் காலம் வரும்: ப. சிதம்பரம்


அலைவரிசை அரசுக்கு மட்டும் சொந்தமானது என்றில்லாமல், தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பும் காலம் விரைவில் வரும் என, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
ராமேசுவரம் தீவு பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் மீனவர்களின் நலனுக்காக "கடல் ஓசை' என்னும் சமுதாய வானொலி நிலையத்தை சிதம்பரம் சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து பேசியதாவது:

அகில இந்திய வானொலி மட்டுமே செய்திகளை ஒலிபரப்ப வேண்டும் என்ற விதி உள்ளது. இது ஒரு பழமையான விதியாகும். அலைவரிசை அரசுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது மக்களுக்கும் சொந்தமானது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அலைவரிசைகளை வகைப்படுத்தக்கூடிய அதிகாரம் மட்டுமே அரசுக்கு உள்ளது. எனவே, தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பலாம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆதலால் தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பும் காலம் விரைவில் வரும். நாட்டில் முதன்முதலாக பாம்பனில் இந்த எஃப்.எம். வானொலி நிலையம் திறக்கப்பட்டு, 24 மணி நேர சேவை செய்ய முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

விழாவில், வானொலி நிலைய இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சிறிய அளவிலான பாய்மரக்கப்பல் ஒன்றை ப. சிதம்பரத்துக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். கார்த்தி ப. சிதம்பரம், இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல்ஹமீத், தமிழ்ப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், முனைவர் ரா. குறிஞ்சிவேந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (நன்றி: தினமணி, 4 பிப். 2017)

Saturday, February 04, 2017

மீனவர்களுக்கான முதல் வானொலி


உலகிலேயே மீனவர்களுக்கான முதல் பிரத்யேக வானொலி 'கடல் ஓசை' : வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது தகவல்

உலகிலேயே மீனவர்களுக்கான முதல் பிரத்யேக வானொலி 'கடல் ஓசை' என முன்னோடி வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் அருகே பாம்பனில் கடல் ஓசை சமுதாய வானொலியின் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை வானொலியின் முன்னொடி வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பி.ஹெச். அப்துல் ஹமீது பேசியதாவது,

'' எண்பதுகளின் தொடக்கத்தில், மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனம் 'மீனவர் விரும்பிக்கேட்ட பாடல்கள்' என ஒரு விளம்பர நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு என்னிடம் கேட்டார்கள். இலங்கை வானொலியில் அப்போதே நீங்கள் கேட்டவை, நேயர் கேட்டவை நிகழ்ச்சிகள் உண்டு, அவற்றில் மீனவர்களும் பாடல்களை விரும்பிக் கேட்பதுண்டு. 

இதனால் மீனவர்களையே நேரில் சந்தித்து அவர்களது வாழ்வியல் மற்றும் தொழில் அனுபவங்களையும் கேட்டறிந்து, அவர்களது கலைத்திறமைகளையும் பதிவு செய்து, ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக வாரந்தோறும் வழங்கலாமே என்று முடிவாகி மூன்று மாதங்கள் மட்டும் நிகழ்ச்சியை வழங்குவது என ஒப்பந்தம் ஆனது.

இதற்காக தமிழ் மீனவர்கள் வாழும் பகுதிகளுக்கெல்லாம் நேரில் சென்று மீனவ நண்பர்களைச் சந்தித்து, ஒலிப்பதிவு இயந்திரத்தையும் சுமந்துகொண்டு, அவர்களோடு படகிலேறி, ஆழ்கடல் வரை சென்று, அவர்கள் தொழிலில் ஈடுபடும்போது பாடும், பாரம்பரிய பாடல்களை அலைகடல் ஓசையின் பின்னணியில் ஒலிப்பதிவு செய்ததுவும். அவர்களது வரலாற்றின் தொன்மை, மற்றும் தொழில் அனுபவங்களைக் கேட்டறிந்து பதிவு செய்யப்பட்டது. 
அந்த நிகழ்ச்சி மீனவ நண்பன் என்ற பெயரில் ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து ஒலிபரப்பானது. இப்போது முப்பது ஆண்டுகள் கழித்து தென்னிந்தியாவின் கடைக்கோடியில் புகழ்மிகு ராமேசுவரத்தில் மீனவ நண்பர்களை இன்று சந்திக்கிறேன். 

உலகத்திலேயே மீனவர்களுக்கென்று முதலாவதாக பிரத்யேமாக வானொலி இன்று துவங்கப்பட்டுளளது. எனவே இன்று வானொலி வரலாற்றிலேயே மிக முக்கியமான நாள் ஆகும். வானொலி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம். பெரும்பாலான வானொலிகள் வெறும் பாட்டுப் பெட்டிகளாக உள்ளன. அல்லது அவசியமற்ற தொலைப்பேசி உரையாடல்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றன. பேரிடர் காலங்களில் ஹாம் வானொலி நிலையங்கள் அமைத்து எத்தனையோ உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. கடல் ஒசை வானொலி ஒரு முன்னோடி வானொலியாக அமைய வேண்டும். கடல் ஓசை வானொலி பொங்கம் அலையோசை வானொலியாக உலகெங்கும் பரவ வேண்டும், என்றார். (நன்றி: எஸ்.முஹம்மது ராஃபி, தி இந்து, 4 பிப். 2017)