Monday, March 30, 2015

போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் பற்றிய பொது அறிவுப் போட்டி

2015-ஆம் ஆண்டுக்கான போ ஆவ் ஆசிய மன்றத்தின் கருத்தரங்கு, மார்ச் 26ஆம் நாள் முதல் 29-ஆம் நாள் வரை சீனாவின் ஹெய் நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெற உள்ளது. பொது சமூகத்தை நோக்கிச் செல்லும் ஆசியாவின் புதிய எதிர்காலம் என்பது, நடப்புக் கருத்தரங்கின் தலைப்பாகும். இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும், அரசியல், வணிகம், கல்வியியல், ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வல்லுநர்களும் பங்கெடுப்பர். இக்கருத்தரங்கக் கூட்டத்தில் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மண்டல ஒத்துழைப்பு, தொழிற்துறை வளர்ச்சி முறை மாற்றம், தொழில் நுட்பப் புதுமை, அரசியல் பாதுகாப்பு, சமூக வாழ்வுரிமை ஆகிய 6 துறைகள் தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்படும். இதில், மண்டல மற்றும் பாதை நெடுநோக்கு, செய்தி ஊடகத் தலைவர்கள் வட்ட மேசைக் கூட்டம் ஆகியன கவனம் ஈர்க்கும் முக்கிய அம்சங்களாகும். மேலும் சுய தொழில் நடத்துவது, மனித குலத்தின் தொடரவல்ல வளர்ச்சி, நீதி, வீட்டு நிலச் சொத்து, ஆசியப் பொருளாதார செல்வாக்கு முதலிய அம்சங்களும் குறிப்பிட்ட அளவில் கவனிக்கப்படுகின்றன.

பொது அறிவுப் போட்டியின் விதிகள்

மேற்கூறியுள்ள செய்தியும் படங்களும், போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் பற்றிய சில தகவல்கள் ஆகும். இதன் மூலம் போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் பற்றி பொதுவாக அறிந்து கொள்ள முடியும். கீழே, 3 கேள்விகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் சில பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து சரியான விடையை தேர்வு செய்யுங்கள். மின்னஞ்சல் மற்றும் வானஞ்சல் மூலம் எமது வானொலி நிகழ்ச்சியைக் கேட்ட நேயர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். இப்போட்டி மார்ச் 28ஆம் நாள் முதல் ஏப்ரல் 8ஆம் நாள் வரை, நடைபெறும். மின்னஞ்சல் மூலம் அளித்தால், தலைப்பில் போ ஆவ் அறிவு போட்டி என்று குறிப்பிட வேண்டும். வானஞ்சலில் அனுப்பும் நண்பர்கள், ஏப்ரல் 8ஆம் நாளுக்குள் அனுப்புங்கள். வானஞ்சல் மூலம் அனுப்பிய நேயர்களில் மூவரைத் தேர்ந்தெடுப்போம். இதர வழிமுறைகளின் மூலம் பதிலளித்த நேயர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு நினைவுப் பரிசுப் பொருட்களை வழங்குவோம். பரிசுப் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை ஏப்ரல் 30ஆம் நாள் எமது இணையதளத்திலும் வானொலி நிகழ்ச்சியிலும் வெளியிடுவோம்.

வினா-விடை
1. 2015-போ ஆவ் ஆசிய மன்றக் கருத்தரங்கின் தலைப்பு என்ன?
அ. புதிய ஆசியா, புதிய எதிர்காலம்
ஆ. பொது சமூகத்தை நோக்கிச் செல்லும் ஆசியாவின் புதிய எதிர்காலம்
இ. நம்பிக்கையைக் கொண்டு காலடி எடுத்து வைக்கும் ஆசியா

2. மண்டலம் மற்றும் பாதை என்றால் என்ன?
அ. பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை
ஆ. சீன-தெற்காசியப் பொருளாதார மண்டலம் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு பட்டுப்பாதை
இ. 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை மற்றும் பொது முதலீட்டு மண்டலம்

3. பண்டைக்கால பட்டுப் பாதை அமைக்கப்பட்ட காரணம் என்ன?
அ. உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஊக்கம் அளிப்பது
ஆ. குறைந்த செலவில் கட்டுமானத்திற்கான புதிய முறைகளைக் கண்டறிவது
இ. வர்த்தக முதலீடு மற்றும் அவற்றுக்கான தடைகளை அகற்றுவது
ஈ. மேற்கூறிய தேர்வுகள் எல்லாம்

Source: http://tamil.cri.cn/121/2015/03/28/Zt1s152780.htm

Sunday, March 29, 2015

வானொலியின் வடிவம் மாற்றமடைந்துள்ளது

இன்று வானொலியின் வடிவமும் மாற்றமடைந்துள்ளது, 1960களில் நாம் கேட்ட வால்வ் வானொலிப் பெட்டிகள் இன்று இருந்த இடம் காணாமல் சென்றுவிட்டது, 1980களில் கேட்ட டிரான்சிஸ்டர் வானொலிகளும் இன்றில்லை. தற்பொழுது டிஜிட்டல் வானொலிகளின் காலம். வானொலிப் பெட்டிகள் மட்டும் டிஜிட்டல் ஆகவில்லை, இன்று ஒலிபரப்பும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.டி.ஆர்.எம். எனும் புதிய தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதன் மூலம் நேயர்கள் வானொலியில் ஒலிபரப்பினைக் கேட்கும் போதே அந்த நிகழ்ச்சியின் ஸ்கிரிப்டினை அச்சிட்டுக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் கலையகத்தில் உள்ள அறிவிப்பாளரை உங்களது வானொலிப் பெட்டி மூலமே நயா பைசா செலவில்லாமல் தொடர்பு கொள்ளவும் முடியும். மேலும் அவர் கலையகத்தில் என்ன செய்து கொண்டிறிக்கிறார் எனவும் பார்க்கவும் முடியும். இவையெல்லாம் இன்னும் ஓர், இரு வருடங்களில் டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தால் சாத்தியமாக உள்ளது. உலகிலேயே இந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. இதிலும் ஒரு வருத்தம் என்னவெனில், கடந்த ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்டத் திட்டம் என்பதால் இப்பொழுது இதிலும் ஒரு சுனக்கம் ஏற்பட்டுள்ளது. ஆக, ஒன்று மட்டும் புரிகிறது, இந்தியன் எந்த ஒன்றிலும் முதலாவதாக வந்துவிடக்கூடாது என்பதில் கவனத்துடன் உள்ளார்கள்.


இன்றை இளைஞர்களுக்கு வானொலியானது எட்டாக் கனியாக இல்லை. இன்றுள்ள சுமார்ட் போன்களில் வானொலிகளை எளிதாகக் கேட்க பல்வேறு வழிகள் பிறந்துள்ளது. இதனால் ஒரு தனி மனிதனும் வானொலியைத் தனியாகத் தொடங்கி நடத்த முடியும் என்ற அளவிற்கு நம் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘தமிழ்யாழ்‘ (https://soundcloud.com/tamizhyazh) இணைய வானொலியைக் கூறலாம். இதற்கான நிகழ்ச்சிகளை மாணவர்களேத் தயாரித்து சவுண்ட் கிளவுட் எனும் இலவச மென்பொருளின் துணைகொண்டு பதிவேற்றி உலகமெலாம் ஒலிக்கச்செய்கின்றனர். இந்த வானொலிக்கான நிகழ்ச்சிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்களும் அவ்வப்போது தயாரித்து வளங்குகின்றனர்.


பாக்கெட் ஆர்.எக்ஸ் டி.எக்ஸ், எக்கோ லிங்க், ரேடியோ டியுனர்ஸ் மற்றும் ஹாம்ஸ்பியர் போன்ற ஆண்டிராய்ட் செயலிகள் மூலம் ஹாம் வானொலிகளையும் நம் கைப்பேசியிலேயேக் கேட்கவும் ஒலிபரப்பவும் கூடிய வசதி இன்று வந்துள்ளது. மேலும் டியூன் இன் எனும் ஆண்டிராய்ட் செயலி மூலம் இன்று நாம் உலகின் 30,000க்கும் மேற்பட்ட வானொலிகளைக் கேட்கக் கூடிய வசதி கிடைத்துள்ளது. ஆக, இந்த ஆண்டின் உலக வானொலி தினமானது இளைஞர்களை மையப்படத்திக் கொண்டாட யுனஸ்கோ அறிவித்துள்ளது சரியானதே என்று புலனாகிறது. நாமும் யுனஸ்கோவுடன் இணைந்து உலக வானொலி தினத்தினை இளைஞர்களுக்காக கொண்டாடுவோம்.

Sunday, March 22, 2015

தமிழக நேயர்களுக்கு இலங்கை வானொலி

இலங்கை வானொலி தமிழக நேயர்களுக்கு சிற்றலை வரிசை 31 மீட்டரில் ஒலிபரப்பி வருகிறது. இதைப் படிக்கின்ற வாசகர்கள் கூட இலங்கை வானொலியைக் கேட்க ஆசைப்பட்டால் அது நிராசையாகக் கூட வாய்ப்புள்ளது. இன்று பண்பலை எனப்படும் எப்.எம் வானொலிப் பெட்டிகள் தான் எங்கும் வியாபித்துள்ளன. ஏன் நம் கைப்பேசியில் கூட எப்.எம் வானொலிகளை மட்டுமே கேட்க முடிகிறது. ஆனால் மத்தியலை மற்றும் சிற்றலையைக் கேட்க முடியாது.


இன்று இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, வத்திகான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய எட்டு நாடுகளில் இருந்து ஒன்பது வானொலிகள் சிற்றலையில் தமிழ் ஒலிபரப்பினைச் செய்து வருகின்றன. இவை மட்டுமல்லாது மலேசியா மற்றும் சிங்கப்பூர் வானொலிகள் இணையத்தில் 24 மணிநேரமும் தனது சேவையைச் செய்து வருகிறது. ஆனால் இது பற்றி இன்றுள்ள இளைஞர்களுக்கு கண்டிப்பாகத் தெரியாது. இவை அனைத்தும் சிற்றலை மட்டுமல்லாது இணையத்திலும் தனது ஒலிபரப்பினைச் செய்து வருகிறது. ஏன் ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்குதளத்திலும் இந்த வானொலிகளைக் கேட்களாம். ஆனால் அப்படியொரு வானொலி ஒலிக்கிறது என்று அறிமுகப்படுத்துவதற்குக் கூட இன்று ஆட்கள் இல்லை.

இப்படியானதொரு தருணத்தில் நாம் உலக வானொலி தினத்தினைக் கொண்டாடுகிறோம். இன்று தமிழகம் முழுவதும் பண்பலை வானொலிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வருத்தமான செய்தி என்னவெனில் அவை அனைத்தும் வானொலிக்கானப் பணியைச் செய்யவில்லை. இன்றுள்ள தனியார் பண்பலை வானொலிகளில் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளைக் களைந்துவிட்டால் அவர்களிடம் ஒலிபரப்ப சரக்கு இல்லை. இதில் ஒரு சில வானொலிகள் விதிவிலக்கு. ஆனால் இதுவே இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானொலியின் வடிவமே முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது.

உதாரணமாக அங்கு 24 மணி நேரமும் இளைஞர்களுக்கான வானொலி உள்ளது. ஏன் குழந்தைகள், முதியவர்களுக்கு மட்டுமல்லாமல் விளையாட்டு, நாடகம், கலந்துரையாடல், இலக்கியம் என அனைத்துக்கும் தனித்தனியான வானொலிகள் உள்ளது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதானால்,  ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைக்கும் ஒரு வானொலி செயல்பட்டு வருகிறது. அந்த சாலைகளில் செல்லும் வாகனங்களில் அந்த வானொலிகள் ஒலித்தாக வேண்டும். 

போக்குவரத்து காவலர்கள் சோதனையின் போது நீங்கள் அந்த வானொலியைக் கேட்காமல் இருந்தீர்கள் எனில், அபராதத் தொகையைக் கட்டவேண்டியிருக்கும். இன்னும் சொல்வதானால், நீங்கள் அந்த வானொலிகளைச் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது கேட்காமல் செல்லும் பட்சத்தில் விபத்தில் சிக்கிக்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. காரணம் அந்த வானொலியில் உடனுக்குடன் அந்த சாலைப் பற்றியத் தகவல்கள் ஒலிபரப்பாகும். ஆக, வெளிநாட்டு வானொலிகளில் திரை இசையை ஒலிபரப்பாமல் நிகழ்ச்சிளை சுவாரஸ்யமாக வழங்க முடியும்போது, அது ஏன் இந்தியாவில் சாத்தியம் இல்லை? யோசிக்க வேண்டிய விடயம். 

சர்வதேச வானொலிகள் வைத்துள்ள போட்டிகள்

Radio Taiwan International - http://english.rti.org.tw/m/whatsNew/?recordId=8514

KBS World Radio Quarterly Quiz /About KBS World Radio/KBS World Radio - https://world.kbs.co.kr/english/about/about_quiz.htm

Radio Prague - Mailbox - http://www.radio.cz/en/section/mailbox/mailbox-2015-03-21

Radio Prague - http://www.radio.cz/en/static/monthly-quiz/

Competition | The Voice Asia - http://thevoiceasia.com/competition/

Tyger Tyger, burning bright - RFI - http://mobile.english.rfi.fr/culture/Tyger-Tyger-burning-bright

Euromaxx Quiz, March 21, 2015 | euromaxx quiz | DW.DE | 21.03.2015 - http://www.dw.de/euromaxx-quiz-march-21-2015/a-2256549

PopXport Quiz | PopXport | DW.DE | 20.03.2015 - http://www.dw.de/popxport-quiz/a-16311748

Sunday, March 15, 2015

மீண்டும் இலங்கை வானொலி

தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் மொத்தம் நான்கு ஞானவாணி நிலையங்கள் செயல்பட்டு வந்தன. மற்ற நிலையங்களை விட திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து செயல்பட்டு வந்த ஞானவாணிக்கு ஒரு முக்கியச் சிறப்பு உண்டு. அது, நேயர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு ஆண்டும் அது நேயர் சந்திப்பினை ஏற்பாடு செய்து நேயர்களை ஊக்குவித்தது. இதனால் நேயர் கடிதங்களின் எண்ணிக்கை கூடியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அதிக நேயர்களைக் கொண்ட ஞானவாணி நிலையமாக முன்னேறியது.


ஞானவாணி செயல்படுவதற்கான நிதியானது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழத்தின் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த ஒலிபரப்பானது இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டது. சோகம் என்னவெனில் கடந்த பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தப்போது தொடங்கப்பட்டதுதான் இந்த வானொலி. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் முதல் வேலையாக ஞானவாணியை நிறுத்த உத்தரவு இட்டுள்ளது ஆளும் கட்சி. வழக்கமாக கடந்த ஆட்சியில் துவங்கப்பட்டவை தான் நிறுத்தப்படும். ஆனால் ஞானவாணி விடயத்தில் இது வேறு மாதிரி நடந்துள்ளது. ஒரு வேலை ஆளும் அரசிற்கு இவர்கள் ஆட்சி காலத்தில்தான் தொடங்கப்பட்டது என்று எடுத்துச் சொல்ல யாறும் இல்லையோ என்னவோ?!

உலக வானொலி தினத்தில் ஒரே சோகமான செய்தி வேண்டாம். எனவே அடுத்த வானொலித் தகவலுக்கு செல்லலாம். இது வானொலி நேயர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான். அதுவும் தமிழகத்தில் உள்ள இலங்கை வானொலியின் நேயர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை நிச்சயம் வழங்கும். அதற்கு முன் ஒரு சிறு பிளாஷ் பேக். இலங்கை உள்நாட்டு போரின் போது இலங்கை வானொலியின் தமிழ் சேவைகள் தமிழக நேயர்களுக்கு நிறுத்தப்பட்டன. முதலில் மத்திய அலையில் ஒலிபரப்பப்பட்ட கொழும்பு சர்வதேச வானொலியின் வர்த்தகச் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் சிற்றலை வரிசையில் ஒலிபரப்பப்பட்ட தேசியச் சேவை நிறுத்தப்பட்டது. பிற்பாடு தமிழில் ஒலித்துவந்த முஸ்லிம் சேவையையும் தமிழக நேயர்கள் கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. முடிவில் மாலை மட்டுமே ஒலித்து வந்த ஆசியச் சேவையில் தமிழ்ச் சேவையும் நிறுத்தப்பட்டு மற்ற இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் மற்றும் மலையாளச் சேவைகள் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்தது.


இப்படியாக உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட போது இலங்கை வானொலியைத் தமிழத்தில் கேட்டுவந்த நேயர்கள் உண்மையிலேயே தவித்துத்தான் போய்விட்டனர். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி இந்த உலக வானொலி தினத்தின் போது கிடைத்துள்ளது. ஆம், மீண்டும் தான் ஒலிபரப்பிவந்த ஆசிய சேவையில் தமிழ் ஒலிபரப்பினையும் இணைத்துள்ளது. இதன் காரணமாக இனி தமிழக நேயர்கள் பெரிய பெரிய ஏரியல்களையும், சக்திவாய்ந்த பூஸ்டர்களையும் பயண்படுத்தி இலங்கை வானொலியைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் சாதாரண சிற்றலை வானொலிப் பெட்டியிலேயே இலங்கை வானொலியைக் கேட்கலாம். எனவே இதுநாள் வரை பரணில் தூங்கிய சிற்றலை வானொலிப் பெட்டிகளைத் தூசி தட்டி எடுத்து பயண்படுத்துவோமாக.


சிற்றலை வானொலி என்று கூறியவுடன், இன்னொரு தகவலையும் இங்கு இணைத்து சொல்ல வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக இந்தியாவில் வானொலிப் பெட்டிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியத் தயாரிப்புகள் அறவே கிடைப்பதில்லை. இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான வானொலிப் பெட்டிகள் சீனத் தயாரிப்புகளாவே இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு கிடைத்த சீனத் தயாரிப்புகளில் சிற்றலைவரிசைகள் இருந்தன. ஆனால் இப்பொழுது சந்தையில் கிடைக்கும் வானொலிப் பெட்டிகளில் சிற்றலை என்பது ஒரு வாசத்திற்குக் கூட இல்லை. ஏன் மத்திய அலை ஒலிபரப்புகளையும் கூட இனி கேட்பது சிரமம் தான்.

Sunday, March 08, 2015

ஞானவாணி நிறுத்தப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 உலக வானொலி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2011 முதல் இது யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு உலகெங்கும் உள்ள வானொலிகளால் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் இரண்டு முக்கிய வானொலித் தொடர்பான நிகழ்வுகளை நினைவூட்ட வேண்டியுள்ளது. ஒன்று இந்திய வானொலி பற்றியது, மற்றது இலங்கை வானொலி பற்றியத் தகவல்.

முதலில் இந்திய வானொலி பற்றிய செய்தியைக் காண்போம். இந்தியா முழுவதும் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த ஞானவாணி வானொலியை மத்திய அரசு சமீபத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நிறுத்திவிட்டது. இது முற்றிலும் கல்விக்காக மட்டுமே செயல்பட்டு வந்த வானொலி என்பது, இதில் குறிப்பிட்டு கூறவேண்டிய செய்தி. சமுதாய வானொலிகள் போல் அல்லாமல் தனியார் துறை பண்பலை வானொலிகளுக்கு என்ன சக்தியில் ஒலிபரப்ப அனுமதிக்கப்பட்டதோ அதே சக்தியில் கல்வி ஒலிபரப்புக்காக தொடங்கப்பட்டதுதான் இந்த ஞானவாணி.

முதலில் அலகாபாத், பெங்களூர், போபால், விசாகப்பட்டிணம், லக்னோ மற்றும் கோவையில் தனது ஒலிபரப்பினைத் தொடங்கியது ஞானவாணி. அதன் பின் படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஒலிக்கத் துவங்கியது. தமிழகத்தில் முதலில் கோவை ஜி.ஆர்.டி. கலை அறிவியல் கல்லூரியில் ஒலிக்கத் துவங்கியது ஞானவாணி. சென்னையில்  அகில இந்திய வானொலியின் கலையகத்தினையே தொடக்க காலத்தில் ஞானவாணி பயன்படுத்தி வந்தாலும், பிற்பாடு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாற்றிக் கொண்டது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம், ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்ணா எப்.எம் செயல்பட்டு வந்தது. இந்தியாவிலேயே முதல் சமுதாய வானொலி என்ற பெருமை அண்ணா எப்.எம்முக்கு என்றுமே உண்டு. ஒரே கல்வி வளாகத்தில் இரண்டு வானொலிகள் செயல்பட்டதும் இந்தியாவில் வேறெங்கும் நடக்காத ஒன்று. அந்தப் பெருமையும் தமிழகத்திற்கு தான்.


உலக வானொலி தினத்தினில் வானொலித் தொடர்பாக இன்னும் ஒரு சிலவற்றையும் நாம் நினைவில் வைக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் முதல் பண்பலை ஒலிபரப்பும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தான் 23 ஜுலை 1977இல் தொடங்கப்பட்டது. அது மட்டுமல்ல, இந்தியாவின் முதல் உள்ளூர் வானொலி சேவையும் முதன் முதலில் தமிழகத்தின் தென்கோடி நகரமான நாகர்கோவிலில் (1984) தான் தொடங்கப்பட்டது. இப்படி  வானொலித் துறையில் பல முதன்மைகளைக் கொண்டது தமிழகம். ஆக, உலக வானொலி தினத்தினை மற்றவர்களை விட நாம்தான் சிறப்பாக கொண்டாட வேண்டும். 

Tuesday, March 03, 2015

தமிழகத்தில் சமுதாய வானொலிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் சமுதாய வானொலிகளின் பயன்பாடு எண்ணிக்கை அதிகரிக்கும் என வானொலி ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 36-வது பொதுச் சபை கூட்டத்தில் நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் வானொலியை ஒரு ஊடகமாகக் கொண்டு, தகவல் மற்றும் தகவல் சுதந்திரத்தை மேம்படுத்தவும், ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், வானொலி வலையமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் நாளை உலக வானொலி தினமாக அறிவித்தது.
வானொலி என்ற சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனத்தை மார்க்கோனி 20.7.1937-ம் தேதி உலகுக்கு அளித்தார். கடந்த 77 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி கல்வி அளிக்கும் தகவல் களஞ்சியமாகவும் வானொலி செயல்பட்டு வருகிறது.
வானொலிக்கு தனி இடம்
இன்று தொலைக்காட்சி, இணையம், கைபேசி என பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்தாலும் வானொலிக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு என்று கூறுகிறார் இந்திய- இலங்கை வானொலி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன்.
வானொலிகளின் எதிர்காலம் குறித்து `தி இந்து’ செய்தியாளரிடம் ஜெயகாந்தன் கூறியதாவது:
வானொலிகளின் சேவை உச்சக்கட்டத்தில் இருந்த காலங்களில் தனிநபர்கள் வானொலி வைத்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அதை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடங்கிப்போகும் தருணங்களில் வானொலியின் பங்கு அளப்பரியது. இதனால்தான் இன்றும் உலகளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
தொலைக்காட்சி, இணையதளம், கைபேசி போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் வானொலியின் பயன்பாடு குறைந்துள்ளது எனக் கூறுவது தவறானது. மாறாக தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதள வானொலிகள் இயங்கி வருகின்றன. மேலும் வானொலி இல்லாத கைபேசிகள் இன்று வருவதும் கிடையாது.
இந்தியாவில் தற்போது 160-க் கும் மேற்பட்ட சமுதாய வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 25 சமுதாய வானொலி நிலையங்கள் சென்னை, கோவை, திருச்சி, நாகை, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படுகின்றன.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
2014-15-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் மட்டும் சமுதாய வானொலிகளுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சமுதாய வானொலி சேவை வழங்க, அலைக் கற்றை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது, அரசு அங்கீகாரப் பட்டியலில் இடம்பெறும் சமுதாய வானொலி சேவைகளுக்கு அரசு விளம்பரங்கள் கிடைக்க வழிவகை செய்வது குறித்தும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் சமுதாய வானொலிகளின் எண்ணிக்கையும், பயன்பாடும் தமிழ கத்தில் மேலும் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
எஸ்.முஹம்மது ராஃபி
நன்றி தி இந்து 13/2/2015

Sunday, March 01, 2015

33 புதிய எப்எம் வானொலி

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களில் மத்திய அரசின் சேவைகளை எளிய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் 33 புதிய எப்எம் வானொலி சேனல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் எல்லை அருகே வசித்து வரும் மக்களுக்கு மத்திய அரசின் புத்தாண்டு பரிசாக புதிய எப்எம் வானொலி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் 18 சேனல்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களில் 15 சேனல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானொலிதான் எளிய மக்கலை சென்றடையும் ஊடகமாக உள்ளது. தொலை காட்சி ஒளிபரப்பு கிடைக்காத இடத்திலும் வானொலி செயல்படும். மேலும் மின்சாரம் இல்லாத இடத்திலும் வானொலியை கேட்க முடியும் எனவே எளிய மக்கள் வானொலியை விரும்புகின்றனர்.

மேலும் எப்எம் சேனல்களை ஏலத்திற்கு விடுவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.550 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். 

நன்றி ; தினபூமி 19-1-2015

வானொலியில் ‘கிரீன்விச்’ நேரம்

பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இடத்தை சுலபமாக அடையலாம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர். இதில் மையக்கோட்டை '0' டிகிரி என வைத்தனர்.

இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கிரீன்விச்' என்ற நகரின் மீது செல்வதால் இந்த கோட்டிற்கு அதே பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு 'கிரீன்விச் மெரிடியன் டைம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதை சுருக்கமாக கிரீன்விச் நேரம் என்றனர்.

இந்த '0' டிகிரி 'லாங்கிடியூடில்' என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்து தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக்கொள்கின்றன.

இந்தியாவின் கடிகார நேரம் அலகாபாத் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி லாங்கிடியூட்டை வைத்துதான் சொல்லப்படுகிறது. இந்திய நேரத்துக்கும் கிரீன்விச் நேரத்துக்கும் 5.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. அதாவது நமக்கு விடிந்து ஐந்தரை மணி நேரம் கழித்துதான் கிரின்விச்சில் விடியும்.

லண்டனில் இருக்கும் 'வெஸ்ட் மினிஸ்டர்ஸ் கிளாக்' என்பது உலகப் பிரசித்தி பெற்றது. இதை பிக்பென் கடிகாரம் என்றும் கூறுகிறார்கள். இந்த கடிகாரம் காட்டுவது கிரீன்விச் நேரத்தைத்தான். இதில் ஒரு மணிக்கு ஒரு முறை 'டிங்டாங்' என்று மணி அடிக்கும். இந்த மணிக்குதான் 'பிக்பென்' என்று பெயர்.

இந்த மணி ஓசையை பி.பி.சி. வானொலி தவறாமல் ஒலிபரப்பி வந்தது. சர்வதேச பயணம் மேற்கொள்ளும் போது புறப்பட்ட நாட்டின் நேரத்துக்கும், போய்ச்சேரும் நாட்டின் நேரத்துக்கும் வித்தியாசம் இருப்பதால் விமானங்களிலும் விமான நிலையங்களிலும் ஒரேவிதமான நேரத்தை கடைப்பிடிப்பார்கள்.

ஆங்கிலம் எப்படி உலகின் பொது மொழியாக உள்ளதோ அது போல கிரீன்விச் நேரம் உலகின் பொது நேரமாக இருக்கிறது.
Source; Daily Thanh 20-2-2015

காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க

காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை) நிலைய உதவி இயக்குனர் சித்ரலேகா சுகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை 100.3) யில் தாற்காலிக அறிவிப்பாளராக பணியாற்ற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 50 வயதுக்கு மிகாதவராக, குறைந்தபட்சம் பட்டதாரி தகுதியுடையவராக, நல்ல குரல் வளம், கலை இலக்கியம் நாட்டு நடப்புகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் இந்த தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

 ஒரு முழு வெள்ளைத்தாளில் பெயர்,முழு முகவரி,தொலைபேசி எண் ,தங்களின் கலை இலக்கியம் தொடர்பான விபரங்கள்,வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் வழங்கி இருப்பின் அவை குறித்த விபரம், வயது,கல்வித்தகுதி, கணினி பயிற்சி போன்ற விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சான்றுக்கான நகல்களுடன் காரைக்காலிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டும்  நிலைய இயக்குநர்,காரைக்கால் பண்பலை வானொலி நிலையம்,நேரு நகர்,காரைக்கால் 609 605 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 மேலும் குரல் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.300, எஸ்.சி,எஸ்.டி  பிரிவினர் ரூ.225 க்கான வங்கி வரைவோலை (ஈஈ) நிலைய இயக்குனர், ஆல் இண்டியா ரேடியோ,காரைக்கால் என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது அலுவலக நாள்களில் நிலையத்தில் நேரிலும் பணமாக செலுத்தி ரசீது பெற்று ரசீதினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கலாம்.வங்கி வரைவோலையின் நகல் குரல் தேர்வின் போது  சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண சலுகை பெற உரிய சாதி சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும். 

Source; Dinamani 6-1-2015