Monday, December 30, 2013

வானொலி வளர்த்த தமிழ்வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், வானொலி வளர்த்த இசைத்தமிழ், வானொலி வளர்த்த நாடகத் தமிழ், வானொலி வளர்த்த அறிவியல் தமிழ் என விரிந்து செல்கிறது இந்நூலின் ஆய்வுப் பரப்பு.
தில்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ, சென்னை, திருச்சி ஆகிய   ஆறு வானொலி நிலையங்களே நாடு சுதந்திரமடைந்த செய்தியை ஒலிபரப்பின என்பது போன்ற சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வானொலியில் ஒலிபரப்பான  உரைகள், கல்வி ஒலிபரப்பு, சிறுகதைகள், வானொலிக் கவியரங்கங்கள், வாசிக்கப்பட்ட கவிதைகள், நேர்முகங்கள் ஆகியவை இயற்றமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின என்பதை இந்நூல் விளக்குகிறது.
கர்நாடக - ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள், வாத்திய விருந்தா எனும் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசையை வானொலி பயன்படுத்திக் கொண்டவிதம் ஆகியவற்றை "வானொலி வளர்த்த இசைத் தமிழ்' கட்டுரை விளக்குகிறது.
அகில பாரத நாடகங்கள், சரித்திர நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள் உட்பட வானொலியில் ஒலிபரப்பான நாடக வகைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.
விவசாயம், மருத்துவம் பற்றி வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவின என்கிறார் நூலாசிரியர்.
வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய நூலாக இருந்தாலும், இதழியல் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் தனித்தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
வானொலி வளர்த்த தமிழ் - இளசை சுந்தரம்; பக்.260; ரூ.150; 
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 
0452- 2560517.

'காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம்' என, மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது.
தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் என, தனித்தனி அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் வருகைக்கு பின், வானொலி வாழுமா என்ற கேள்விக்கு இளசையின் பதில் சிந்திக்க தூண்டுவது. இந்த புத்தகம் ஒரு வானொலி ஆவணம்.
-ஜிவிஆர் 

Wednesday, December 04, 2013

தமிழ் ஒலி - இதழ் தொகுப்பு

இலங்கையில் இருந்து திரு. உமா காந்தன் அவர்கள் 1980களில் வானொலிக்கென வெளியிட்ட தமிழ் ஒலி இதழ் தொகுப்பு இப்பொழுது இணையத்தில் பதிவு இறக்கம் செய்து படிக்க வசதி செய்யப் பட்டுள்ளது.

அனித்து இதழ்களையும் பதிவு இறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

நெல்லை வானொலி நிலையப் பொன் விழா

திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழாவில் நிகழ்த்தப்பட்ட கிராமிய கலைஞரின் காவடியாட்ட நிகழ்ச்சி நேயர்களை பெரிதும் கவர்ந்தது.
திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையம் 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திருச்சி வானொலி நிலையத்தின் துணை வானொலி நிலையமாக நிகழ்ச்சி ஒலிபரப்பைத் தொடங்கியது. பின்னர், 1977ஆம் வருடம் ஜனவரி 12-ம் தேதிமுதல் தனது முழுநேர ஒலிபரப்பு சேவையைத் தொடங்கியது.
50 ஆண்டு நிறைவு பெறுவதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சங்கீத சபாவில்  பொன் விழா நிறைவு நிகழ்ச்சி பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் பிரிகேடியர் வி.ஏ.எம்.  ஹுசேன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய வானொலி நிலைய  தென்மண்டல தலைமை இயக்குநர் க.பொ. ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி. சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார்.
ஓய்வுபெற்ற திருநெல்வேலி வானொலி நிலைய இயக்குநர் பாலக்காடு எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் வி. அப்பாக்குட்டி, முதல்  அறிவிப்பாளர் வி. நல்லதம்பி ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் க. தெட்சிணாமூர்த்தி, தூர்தர்சன் தொழில்நுட்ப உதவி இயக்குநர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான நேயர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடக்கமாக கிராமிய கலைஞர் கே.பி. முத்துலட்சுமி குழுவினரின்  வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடைபெற்றது. காவடியாட்டம் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தது.
முடிவில் உமா, ராதிகா குழுவினரின் பாட்டு, உஷாராஜகோபாலன் வயலின், ஆர். ரமேஷ் மிருதங்கம், ஆர். ராமன் முகர்சங்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியை வானொலி அறிவிப்பாளர்கள் கரைசுற்றுபுதூர் குருசாமிகவிபாண்டியன், சந்திரபுஷ்பம், உமாகனகராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
 
நன்றி: http://dinamani.com

நெல்லை வானொலி நிலைய பொன் விழா

திருநெல்வேலி : நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை வானொலி நிலையத்தின் பொன்விழா நிறைவை குறிக்கும் விதமாக நெல்லை சங்கீத சபாவில் விழா நடந்தது. பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர் ஹூசேன் தலைமை வகித்தார். நிலைய இயக்குனர் பாலச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் வக்கீல் சுப்பிரமணியன், சென்னை வானொலி நிலையத்தின் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர்(பொறுப்பு) சீனிவாசன் ஆகியோர் பேசினர். விழாவில், நெல்லை வானொலி நிலையத்தின் ஓய்வுபெற்ற முதல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, முதல் ஒய்வுபெற்ற தலைமைபொறியாளர் அப்பாக்குட்டி, வானொலி நிலையத்தின் முதல் அறிவிப்பாளர் நல்லதம்பி ஆகியோருக்கு பிரசார் பாரதி உறுப்பினர் ஹுசேன் பாராட்டி பொன்னாடி போர்த்தி பாராட்டினார்.
நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் தெட்சிணா மூர்த்தி, தூர்தர்ஷன் தொழில்நுட்ப உதவி இயக்குனர் நவநீதன் உட்பட முக்கிய பிரமுகர்கள், வானொலி நேயர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக,முத்துலட்சுமி குழுவினரின் வில்லுப்பாட்டு, இசக்கியம்மாள் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடந்தன. தொடர்ந்து, உமா, ராதிகா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தன.நிகழ்ச்சிகளை குருசாமி கவிப்பாண்டியன், சந்திர புஷ்பம், உமா கனகராஜ் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை நெல்லை வானொலி நிலைய நிர்வாகத்தினர் செய்தனர்.
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013,01:55 IST
நன்றி: http://www.dinamalar.com

Tuesday, November 26, 2013

வானொலி அறிவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை, தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர் மையத்தின் அனுசரணையுடன் வானொலியில் நேரலை” என்ற தலைப்பிலான வானொலி அறிவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை 27 நவம்பர் 2013 புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையின் மாணவர்களுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் நேரலை நிகழ்ச்சிகளை தயாரிப்பது எப்படி? என்ற வகையில் பயிற்சியினை அளிக்கவுள்ளனர்.

திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிலைய இயக்குநர் (பொறுப்பு) பிரபஞ்சம் எஸ். பாலசந்தர் அவர்கள் “நேரடி நிகழ்ச்சிக்களில் தமிழ் உச்சரிப்பு” என்ற தலைப்பிலும், சூரியன் பண்பலையின் மூத்த அறிவிப்பாளர் ச.வள்ளிமணவாளன் அவர்கள் “பொது வெளியில் நேரலை” என்ற தலைப்பிலும், ஹலோ பண்பலையின் அறிவிப்பாளர் வெங்கட்ராமன் “கலையகத்தில் நேரலை” என்ற தலைப்பிலும் மாணவர்களுக்கு நேர்முகப் பயிற்சியினை வழங்க உள்ளனர்.

பயிற்சிப் பட்டறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ. கோவிந்தராஜூ இது பற்றிக் கூறும் பொழுது, “இது போன்ற பயிற்சிகளின் மூலம் எங்கள் தொடர்பியல் துறை மாணவர்கள் படிப்பு முடிந்து வேலைக்கு செல்லும் பொழுது ஏற்படும் சவால்களை திறம்பட சமாளிக்க முடியும்” என்றார்.பயிற்சிப் பட்டறையை திறன் வளர் மையத்தின் அனுசரணையுடன் தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் தங்க. ஜெய்சக்திவேல் ஒருங்கிணைத்துள்ளார்.
Wednesday, November 06, 2013

ஞானவாணி105.6 பண்பலையின் நேயர்கள் சந்திப்பு
திருநெல்வேலி ஞானவாணி105.6 பண்பலையின் நேயர்கள் சந்திப்பு வரும் 10 நவம்பர் 2013 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையில் வைத்து நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Friday, November 01, 2013

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக இந்த வார வானொலி உலகம்

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக இந்த வார வானொலி உலகம் அமைந்துள்ளது. இதில் இலங்கை வானொலியின் கே.எஸ்.ராஜா அவர்கள் எடுத்த சிறப்பு பேட்டியும் அடக்கம். நிகழ்ச்சியை  இந்தத் தொடுப்பில் கேட்கலாம். 
https://soundcloud.com/radioworld/radio-world-a-tamil-weekly

Saturday, October 26, 2013

ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...

நவீன மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள் பல வந்துவிட்ட இக்காலத்திலும் கூட செய்திகளை வானொலியில் கேட்பது என்பதே அலாதி தரும் அனுபவம். அதிலும், ஆகாசவாணி செய்திகள் என்றால் அதன் உச்சரிப்பு, வார்த்தைப் பிரயோகம் யாவுமே தனித்துவமிக்கவை.
 தில்லியில் 1939-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது அகில இந்திய வானொலி எனும் ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவு. தற்போது பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் பவள விழா தொடக்க நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. வசீகரமான குரலால் நேயர்களைக் கட்டிப் போட்ட பழம்பெரும் செய்தி வாசிப்பாளர்கள் பலரும் அங்கு கூடினர்.
 குறிப்பாக முதுபெரும் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் ஆர்.எஸ். வெங்கட்ராமன், சரோஜ் நாராயணசாமி, ராஜாராம் உள்பட தெலுங்கு, குஜராத்தி, மராத்தி என பல்வேறு பிராந்திய மொழி செய்திவாசிப்பாளர்கள் இவ்விழாவில் கெüரவிக்கப்பட்டனர்.
 தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களாகப் பணியாற்றியபோது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆர்.எஸ். வெங்கட்ராமன், சரோஜ் நாராயணசாமி, காலம்சென்ற எம்.ஆர்.எம். சுந்தரம் குறித்து அவரது மகள் ரமாமணி சுந்தர் ஆகியோர் பகிர்ந்துகொண்டவை:
 ஆர்.எஸ். வெங்கட்ராமன்: எனது சொந்த ஊர் தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம். 1945-ஆம் ஆண்டு, பிப்ரவரி முதல் தேதி தில்லியில், ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் செய்தி வாசிக்கும் பணியைத் தொடங்கினேன். 1947-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதுகுறித்த செய்தியை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
 ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 5.30 மணிக்குத் தொடங்கிய செய்திநேரத்தில் நாடு சுதந்திரம் பெற்ற செய்தியை வாசித்தேன். இதற்காக அன்று அதிகாலை 3.30 மணிக்கே அலுவலகம் வந்துவிட்டேன். அந்த நிகழ்வு உணர்வுப்பூர்வமானது.
 ஆகாசவாணியில் இருந்து 1985-ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்றேன். அதன்பிறகு 20 ஆண்டுகள் கேஷுவல் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றி 2007-ஆம் ஆண்டில் விடைபெற்றேன். தமிழ்ச் செய்திப் பிரிவின் பொறுப்பாளராக மட்டும் 20 ஆண்டுகள் பணி
 புரிந்துள்ளேன். 
 அப்போதெல்லாம் செய்தியின் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். பிற மொழிப் பெயர்கள் குறித்த உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள பல்வேறு மொழிகளின் செய்திப் பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ள வாசிப்பாளர்களிடம் உச்சரிப்பைக் கேட்டு வருவோம். உச்சரிப்புப் பிரிவு உண்டு. அங்கு முக்கியமான வார்த்தைகளுக்கு பெயர்கள் மற்ற செய்திப் பிரிவுகளுடன் பரிமாறிக் கொள்ளப்படும். கூடுமான வரை சரியான வார்த்தை உச்சரிப்பு பிரயோகிக்கப்படும். செய்தி வாசிப்பின்போது சார்புத் தன்மையோ, கோபதாபமோ இருத்தல் கூடாது. நான் செய்தி வாசித்தபோது இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தேன்.
 நான் பணியாற்றிய காலத்தில் தலைவர்கள் லால்பகதூர் சாஸ்திரி மரணம், அண்ணாதுரை மரணம் ஆகிய செய்திகளை எழுதித் தந்துள்ளேன். செய்தியை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டும். அது முக்கியப் பணிகளில் ஒன்று.
 ஆகாசவாணி தமிழ்ச் செய்திப் பிரிவில் முதல்முதலில் நடேச விஸ்வநாதன் பொறுப்பாளராக இருந்தார். அவர்தான் காந்தி மரணம் குறித்த செய்தியை வாசித்தார். அவர்தான் என் குரு. என்னை உருவாக்கியவர். நான் கஜமுகன் என்ற பெயரில் நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளேன்
 சரோஜ் நாராயணசாமி : எங்களது பூர்விகம் தமிழகத்தின் தஞ்சை ஜில்லா. நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். எனது கணவர் நாராயணசாமியைத் திருமணம் செய்த பிறகு, தில்லிக்கு வந்தேன். வானிலை ஆய்வு மையத்தில் கணவர் பணியாற்றினார். 
 நாடாளுமன்றச் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை ஒட்டி இருந்த யூகோ வங்கியில் நான் பணியாற்றினேன். எனக்கு வானொலி செய்தி அறிவிப்புப் பணியில் சேர ஆர்வம் ஏற்பட்டது. முறைப்படி தேர்வெழுதி 1963-இல் பணியில் சேர்ந்தேன். 35 ஆண்டுகள் பணியாற்றினேன். அதன் பிறகு என்டிடிவி நிறுவனத்தில் பணியாற்றினேன்.
 அன்றைய காலத்தில் செய்தி வாசிக்கும்போது எனது குரலைக் கேட்டு பலரும் ஆகாசவாணிக்கு கடிதம் எழுதுவார்கள். குரலின் ஏற்ற இறக்கம், உச்சரிப்புமுறை, எடுத்துச்சொல்லும் விதம் ஆகியவை தனித்துவமாக இருப்பதாக நேயர்கள் கூறுவார்கள்.
 எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த அச்சமயத்தில் தில்லியில் திட்டக் குழு கூட்டத்திற்கு வருவார். அப்போது, கூட்டத்தில் அவரது உரையை அங்குள்ள மற்றவர்கள் அறியும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்குவேன். இதற்காக எம்.ஜி.ஆர். என்னிடம் ""பிரமாதம்'' என்று பாராட்டினார். 
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டபோது, இரங்கல் செய்தியை தயாரித்து, வாசித்தேன். இது உருக்கமாக இருந்ததாகக் கூறி பலரும் கடிதம் மூலம் தெரிவித்தனர்.
 இந்திரா காந்தி அம்மையார் என முக்கிய வி.ஐ.பி.கள் பலரையும் பேட்டி கண்டு பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். 2009-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆகாசவாணி வானொலியில் செய்தியில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 
 பவள விழாவில் பங்கேற்க வந்த என்னை நண்பகல் நேர செய்தி வாசிக்குமாறு வானொலி நிலையத்தினர் கேட்டுக் கொண்டனர். பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் செய்தி வாசித்தேன். இச்செய்தியைக் கேட்ட தமிழ் நேயர்கள் பலர் அடுத்த சில நிமிடங்களிலேயே நீங்கள் மீண்டும் வானொலிப் பணியில் சேர்ந்துவிட்டீர்களா என்று தொலைபேசி வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் ஆர்வத்துடன் வினவினர். 79 வயதாகிவிட்டபோதிலும் எனது குரலுக்குக் கிடைத்த வெகுமதியாக இதைக் கருதுகிறேன். 
 எம்.ஆர்.எம். சுந்தரம் குறித்து அவரது மகள் ரமாமணி சுந்தரின் நினைவலைகள்:
 இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் அது. தில்லியில் ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவு தொடங்கப்பட்டது. இப்பணிக்காக திருச்சி வானொலியில் பணிபுரிந்த எனது தந்தை எம்.ஆர்.எம். சுந்தரம் தில்லிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
 சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். 1957-இல் பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக லண்டனுக்குச் சென்று இரண்டரை ஆண்டு காலம் அங்கு பணி புரிந்தார். அதன் பிறகு, மீண்டும் தில்லி அகில இந்திய வானொலிக்கு திரும்பி பணியைத் தொடர்ந்தார். 1971-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற அவர், "சுந்தா' என்ற புனைப்பெயரில் தமிழ் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். 
 தில்லியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றிய காலத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்த பெருமை அவருக்கு உண்டு. ஆரம்ப காலத்தில் அவருடன் பணிபுரிந்தவர்களில் முக்கியமான நபர்களில் ஒருவர் நடேச விஸ்வநாதன் என்ற எம்.என்.விஸ்வநாதன். இவர், தீரர் சத்தியமூர்த்தியின் மருமகன். வானொலிச் செய்தியில் அக்காலக்கட்டத்தில் வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அச்சூழலில் வடமொழிச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தந்தார். உதாரணமாக அஸ்திவாரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக அடிக்கல் நாட்டுதல் என்ற சொல் அவர் உருவாக்கியதுதான். 
 } வே. சுந்தரேஸ்வரன்,  படங்கள் -டி. ராமகிருஷ்ணன்
Source: http://dinamani.com 20 October 2013

தமிழர்களைப் புறக்கணித்த டெல்லி

தமிழ் நேயர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றிருக்கும் 'ஆகாசவாணி'யின் தமிழ்ச் செய்திகள் தொடங்கப்பட்டு 74 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. பவள விழா கொண்டாட்டம் தொடங்கி விட்டது. அதன் தொடக்க விழாவில்தான் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றிய பலரும் புறக்கணிக்கப்பட்டனர்.   பிரசார் பாரதி அமைப்பின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலியின் ஆகாசவாணி செய்திகளுக்கு நாடு முழுக்க கோடிக்கணக்கான நேயர்கள் இருக்கின்றனர். 'ஆகாசவாணி' என்றால் 'வானத்தின் குரல்' என்று அர்த்தம். மைசூரில் வசித்த தமிழரான கோபாலசுவாமி என்பவர்தான் அந்தப் பெயரில் ஒரு வானொலி நிலையத்தை நடத்தி வந்தார். பிற்காலத்தில் அரசும் இந்தப் பெயரையே பயன் படுத்திக்கொண்டது. 1939-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் குஜ ராத்தி ஆகிய நான்கு மொழிகளில் ஆகாசவாணியின் செய்திப் பிரிவு தொடங்கப்பட்டு டெல்லியிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதன்முதலில் தமிழில் செய்தி வாசித்தவர்கள் பி.கே.ராமானுஜம், வி.கிருஷ்ணசாமி ஆகிய இரண்டு பேர். இந்த நான்கு செய்திப் பிரிவுகளும். . .விரிவாக படிக்க...காணவும் ஜூனியர் விகடன் 13 Oct, 2013
  • /

செய்திகளுக்கு இப்போது என்ன அவசியம்?

தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகளை அனுமதிக்கும்போது, ஏன் தனியார் வானொலியில் செய்திகள் வாசிப்பதை அனுமதிக்கக் கூடாது? என்று ஒரு வழக்கில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், தனியார் வானொலி நிலையங்களின் நிர்வாகிகள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைச் செயலரை சந்தித்து இதே கேள்வியைக் கேட்டார்கள். அப்போது அவர் சொன்ன பதில்: முதலில் அகில இந்திய வானொலி நிலைய பண்பலை வரிசையில் தொடங்குவோம். பிறகு படிப்படியாக தனியார் வானொலி நிலையங்களுக்கும் செய்தி வாசிக்க அனுமதி அளிக்கப்படும். அத்தகைய அனுமதி அளிக்கும் திட்டம் அரசிடம் இருக்கிறது என்று மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று வாரியம் (டிராய்) ஏற்கெனவே மிகத் தெளிவாக இது பற்றி கூறியிருக்கிறது. 3வது திட்ட காலத்தில், எப்எம் ரேடியோக்களில் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை ஒலிபரப்ப அனுமதிக்கப்படும். ஒரு மாவட்டத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வானொலி சேவைகள் இருக்குமெனில் கூடுதலாக ஒரு வானொலிக்கு செய்தி ஒலிபரப்ப அனுமதிக்கலாம் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இதன் நோக்கம், மாவட்ட அளவிலான உள்ளூர் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான். தனியார் தொலைக்காட்சி செய்திகள் பெரும்பாலும் மாநில அல்லது தேசிய அளவிலான செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. மிகவும் அரிதான சம்பவங்களில் மட்டுமே மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன. அந்தந்த மாவட்டம், உள்ளூர் தகவல்களுக்கான செய்திகள் கிடைக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவையும்கூட.
இப்போது எப்எம் ரேடியோக்களில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான செய்திகளை, தேர்தல் முடிவுகள் தொடர்பான சிறு தகவல்களை இடையிடையே ரேடியோ ஜாக்கிகள் பேசுகிற பேச்சோடு சொல்லிவிடுகிறார்கள். முழுமையான செய்தி என்று இல்லாத நிலையிலும்கூட, கேட்போருக்கு இந்த செய்திகள் கிடைத்து விடுகின்றன.
மற்றொரு விதத்தில் செய்தியை ஒலிபரப்பும் கலையையும் இந்த எப்எம் ரேடியோக்கள் கற்று வைத்திருக்கின்றன. அதாவது, அந்த தனியார் வானொலியின் துணை நிறுவனமாக இருக்கும் பத்திரிகைக்கு விளம்பரம் கொடுப்பதைப்போன்று, சில செய்திகளை வரிசையாக சொல்லிவிட்டு, மாலையில் அல்லது நாளை இந்த செய்திகளைப் பத்திரிகையில் பாருங்கள் என்கிறார்கள்.
இவ்வாறு செய்திகளை ஒலிபரப்பினாலும் அதில் வருவாய் காண முடியவில்லையே என்பதுதான் எப்எம் ரேடியோக்களின் இன்றைய ஆதங்கம். செய்திகளுக்கு இடையே விளம்பரங்களைப் பெற்று, அதற்கென தனி கட்டணங்களை நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே சட்டப்படி தங்களுக்கும் செய்தி ஒலிபரப்ப அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தற்போது அகில இந்திய வானொலி நிலையம் மட்டுமே செய்திகளை ஒலிபரப்பி வருகிறது. இது அரசு நிறுவனமாக இருப்பதால் அரசு சார்ந்த செய்திகள் மட்டுமே ஒலிபரப்பாகிறது. நாங்கள் செய்திகளை சுவையாகக் கொடுப்போம் என்பதுதான் தனியார் வானொலிகளின் வாதம்.
அகில இந்திய வானொலியின் செய்திகள் சுவை இல்லாததாக இருக்கலாம். ஆனால் உண்மைக்கு மாறானவை அல்ல. மிகவும் கட்டுப்பாட்டுடனும் சமூகப் பொறுப்போடும் செய்திகளை ஒலிபரப்புகிறார்கள். ஆனால் தனியார் வானொலிகளில் இத்தகைய சுயகட்டுப்பாடு இருக்குமா? செய்திக்காக பயன்படுத்தும் சொற்களில் கவனம் செலுத்துவார்களா? சுவை கூட்டுவதற்காக கொச்சையான மொழிநடையைக் கலக்கும் அபாயம் ஏற்படாதா?
இந்தியாவில் 240 தனியார் வானொலிகள் உள்ளன. 3வது திட்ட காலத்தில் இதன் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாகும். இத்தனை பேரும் சரியாக ஒலிபரப்புகிறார்களா என்பதை கண்காணிக்க இயலாது.
தற்போதே தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முழுநேர செய்தி சானல்களில் பல நேரங்களில், தணிக்கையாகாத விபத்து காட்சிகள், தகவல் முழுமை பெறாத செய்திகள் குறித்து மக்கள் கருத்து என்று உடனுக்குடன் போட்டிப்போட்டுக்கொண்டு ஒளிபரப்பும்போது, சமூக வலைதளங்கள் போலவே, கொந்தளிப்புக்கு வழியேற்படுகிறது. இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பிலும் ஒரு சுயகட்டுப்பாட்டுக்கான வழிகாட்டுதல், நிபந்தனை உருவாக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உள்ளது.
அதிகமான கல்வி அறிவும், குறைந்த மக்கள் தொகையும் உள்ள மேலைநாடுகளைப்போல இங்கேயும் தனியார் வானொலிகளை செய்தி ஒலிபரப்ப அனுமதிப்பதில் நிதானமாக, நிபந்தனைகள் தீர்மானித்து பின்பு செயல்படலாம். இதற்கு இப்போது என்ன அவசியம், அவசரம்?
நன்றி: http://dinamani.com 19 அக்டோபர் 2013

Thursday, October 17, 2013

செய்திகளை வெளியிடுவது எப்படி? பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது சீனா

பீஜிங்:சீன அரசு தனது சட்ட திட்டங்கள் மற்றும் தணிக்கை விதிகளுக்கு ஏற்ப ஊடகங்களை வழிநடத்துவது தொடர்பாக அந்நாட்டை சேர்ந்த 2.5 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது.

சீன அரசு பத்திரிகை தொடர்பாக புதிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும், தணிக்கை விதிகளையும் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தனது நாட்டில் உள்ள அனைத்து வகை ஊடகங்களையும் புதிய விதிமுறையின் கீழ் செயல்பட வைப்பதற்காக அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை சீன அரசின் செய்தி ஊடக துறை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி சீனாவின் இரும்பு திரை நாடு என்ற முத்திரை விலகி மேலும் சுதந்திரமாக எழுதவும், செய்திகளை வெளியிடவும் வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

இந்த பயிற்சிக்காக சீன நாட்டில் செயல்படும் முக்கியமான வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை, இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அவர்கள் அனைவருக்கும் ராணுவ சீருடை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி 2013ம் ஆண்டின் இறுதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் சீன கலாசாரம், கம்யூனிஸ்ட் பார்வையில் செய்திகளை எவ்வாறு வெளியிடுவது, சமூகவியல் பார்வை, பத்திரிகை தர்மம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செய்திகளை எவ்வாறு தணிக்கை செய்வது, தவறான தகவல்களை மற்றும் அரசுக்கு எதிரான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் அதன்பிறகு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர பத்திரிகையில் பணிபுரியும் நிர்வாக ஊழியர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmurasu.org

தனியார் வானொலிகளில் செய்தி : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஏற்கனவே தனியார் தொலைக்காட்சிகளுக்கு செய்திகளை வெளியிட அனுமதித்துள்ள போது, தனியார் வனொலிகளில் செய்திகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்திருப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தனியார் வானொலி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

நன்றி: தினமணி, 17 October 2013

வானொலி நிலைய அதிகாரி இடமாற்றம்: ரத்து செய்தது மத்திய நிர்வாக தீர்ப்பாயம்

சென்னை: அகில இந்திய வானொலி நிலையத்தின் அதிகாரியை இடமாற்றம் செய்ததை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

சென்னையில் உள்ள, வானொலி நிலையத்தில், அதிகாரியாக பணியாற்றியவர், விஜயகிருஷ்ணன். நிர்வாக காரணங்களுக்காக, காரைக்காலுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு, கடந்த, பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை அலுவலகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இடமாற்றத்தை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், விஜயகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இடமாற்றத்துக்கு காரணம் தெரிவிக்கவில்லை என்றும் தண்டனை விதிக்கும் விதமாக, இடமாற்றம் நடந்து"ள்ளது என்றும், மனுவில் கூறப்பட்டது. வானொலி நிலையம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'விஜயகிருஷ்ணனின் நடத்தை பற்றி, பெண் ஊழியர்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள் அனைத்தும், விசாரணைக்காக, ஐவர் குழுவுக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில், பெண் ஊழியர்களை அவர் சமமாக நடத்தவில்லை என, தெரிய வந்தது' என, கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர் வெங்கடேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவில், 'வானொலி நிலையத்தின் பெண்கள் பிரிவு அளித்த அறிக்கையின் விளைவாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்தவர்களை, ஐவர் குழு விசாரிக்கவில்லை. இடமாற்ற உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர், அக்டோபர் 09,2013

Wednesday, September 25, 2013

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம்.

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம். இது தமிழின் முதல் டி.எக்ஸ் நிகழ்ச்சியாகும். வானொலியில் ஞானவாணி பண்பலை 105.6, திருநெல்வேலியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8.30க்கும் சனிக்கிழமை காலை 8.30க்கும் ஒலிபரப்பாகிறது. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்கிறோம். கடந்த வார நிகழ்ச்சிகளை www.soundcloud.com/radioworld எனும் இணைய தளத்தில் கேட்கலாம்.

Friday, September 20, 2013

தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் - இலங்கை

1982இல் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் என ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் சார்பில் தமிழ் ஒலி என்ற காலாண்டு சஞ்சிகையை வெளியிட்டேன். மிகுந்த பொருளாதார சிரமத்துக்கு மத்தியிலும் 1986ஆம் ஆண்டு வரை இந்த சஞ்சிகை வெளிவந்தது. மன்றத்தில் இலங்கை, இந்தியா, மலேசியா, ஜெர்மனி உட்பட வேறும் சில நாடுகளிலிருந்து 1000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்திருந்தார்கள். உறுப்பினர்களில் பலர் எனக்கு மிக்க உறுதுணையாக இருந்ததோடு சஞ்சிகை வெளியீட்டிலும் பல உதவிகள் செய்தார்கள். வெரிதாஸ் வானொலி தமிழ் பணி நல்லாதரவு தந்து சஞ்சிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தினார்கள். பின்னர் பி.பி.சி. தமிழோசை, இலங்கை வானொலி, சென்னை வானொலி நிலையங்களும் ஆதரவு தந்தன. தமிழ் ஒலி சஞ்சிகையின் முதல் இதழை யாழ் ஆயர் 1982 ஜனவரி 14 பொங்கல் நாளில் வெளியிட்டு வைத்தார். அப்போது எடுத்த படம் இது. 

இப்போது சஞ்சிகையின் பிரதிகள் ஒன்று கூட என்னிடம் இல்லை. சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் பேராசிரியர் இளம்பூரணன் அவர்களை சந்தித்தபோது தன்னிடம் ஒரு பிரதி இருப்பதாக கூறி 30 வருடங்களாக அவர் பாதுகாத்து வைத்திருந்த ஒரு பிரதியைக் கொடுத்தார். 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் நண்பர் ஜெய்சக்திவேல் அங்கே பல்கலைக்கழகத்தில் ஒரு வானொலி ஆவணக் காப்பகம் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக கூறி இந்த பிரதியை அந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். அங்கே உயர் தொழிநுட்பத்துடன் பாதுகாத்து வைக்கப்படும்.. 

1984ஆம் ஆண்டு மன்ற உறுப்பினர்கள் இளஞ்சுடர் என்ற நிகழ்ச்சியை தயாரித்தார்கள். இந்நிகழ்ச்சி இலங்கை வானொலியில் நான்கு வாரங்கள் ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாக இருந்த திரு விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் நேரில் வந்து ஒலிப்பதிவு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் இங்கே பார்க்கலாம்.

முகநூலில் திரு. உமாகாந்தன், இலங்கை

வானொலி கேட்டால் வலம் வரலாம் சீனாவை

ஆம்.!வானொலி நேயர்களை அழைத்து ,சீனாவை சுற்றிவரச் செய்த பெருமைஉலக அளவில் சீனவானொலி தமிழ்ப் பிரிவையே சாரும் .உண்மை வெறும் புகழ்ச்சியில்லை . அன்றொரு நாள் (1973-களில் )இப்படித்தான் என் வானொலிப் பெட்டியைத் திருகிகொண்டிருந்தேன். (அப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்கென்று இருந்தது வானொலியும் திரைப்படமும் தானே )இரண்டாவது அலைவரிசையில்திடீரென்று பீகிங் வானொலி நிலையம் தமிழ் ஒலிபரப்பு என்று ஒரு மழலைத் தமிழ்க் குரல் கேட்டது .வியந்து போய்,அதச் சரியாகக் கேட்பதற்கு[ tuning]தடவித் தடவிசரிசெய்து கேட்டேன்.இப்பொழுது போல மின்னியல் வானொலிப் பெட்டி அப்போது அறிமுகமாகவில்லை. 

அன்றிலிருந்து ,ஒலிபரப்பைகேட்டு மகிழ்ந்து கருத்துக் கடிதங்கள்எழுதலானேன் என் கடிதத்தைக் கண்ட திரு .சுந்தரன் அவர்கள் (மேனாள் தலைவர்)மற்றும் கலையரசி எனக்கு நேயர் எண் 05-6436 என அளித்து வாழ்த்தும் காட்சிப் படமும் அனுப்பினார்கள் வானொலி கேட்கக் கேட்க ,உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் , நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் ஆற்றலும் என்னுள் முளைவிட்டன 
எல்லோரையும் போல நானும் பரிசுப் பொருள் ஆசையில் தான் தொடர்ந்து நிகழ்ச்சி கேட்டேன்.பின்னர் ஆழமான செய்தி விமர்சனங்களும் .

சீனப் பாரம்பரிய கலாச்சாரங்களின் பரிமாணங்கள்( விருந்தோம்பல், பொதுநோக்கு,இன்முகம், போன்ற 
இவற்றை அறியத் தொடங்கினேன். நிகழ்ச்சியின் பால் அதிக ஈர்ப்பு உண்டாகியது. 
பல்லவி பரமசிவன் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன்.அங்கே பலதரப்பட்ட நேயர்களின் அறிமுகம், .நட்பு கிடைத்தது. என் நட்பு வட்டமும் , மனமும் விசாலமானது நிகழ்ச்சிகள்:
நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்கள் காட்டும் ஆர்வம் ,ஆழம் ,பக்கச் சார்பில்லா பார்வை, நேயர்களை பங்கெடுக்கச் செய்யும் ஊக்கம்,தூண்டுதல் இவைஎல்லாம் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தனித்தன்மை எனலாம்

மேற்கண்ட நிகழ்வுகள் கணினி வருவதற்கு முன் நடந்தவை.
இணைய தளம் தொடங்கியபிறகு நம் வானொலியின் அசுர வளர்ச்சியை சொல்லி மாளாது. கடிதங்கள் அனுப்பிய அடுத்த நாளே பதில் மின்னஞ்சல், இணைய தளம் வழியாக போட்டிகள்,புதிய அறிவிப்புகள் என தமிழ்ப் பிரிவு நாளும் புதிய வடிவம் பெற்று வருகிறது.
அறிவிப்பாளர்கள்;
இளம்தலைமுறையினர் 18 பேர், நிலையத்தில் சுறு சுறு வெனச் சுழன்று பணியாற்றிவருவதை ,நிகழ்ச்சிகள் எங்களுக்குச் சொல்கிறது.
பொன்விழா குறித்த செய்திகள் தமிழக நாளேடுகளில் ,(புதிய தலைமுறை,தீக்கதிர், தினமணி )வலம் வந்துகொண்டிருக்கிறது.
நானும் சிறப்பாக எழுதவேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வளவு நாள் காலம் கடத்திவிட்டேன்.
எனினும் என் பங்களிப்பும் பொன் விழாக் கொண்டாட்டங்களில் ஒன்று கலக்கட்டும் 

முக நூலில் மா.உலகநாதன், திருநீலக்குடிSaturday, September 14, 2013

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம்.

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம். இது தமிழின் முதல் டி.எக்ஸ் நிகழ்ச்சியாகும். வானொலியில் ஞானவாணி பண்பலை 105.6, திருநெல்வேலியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8.30க்கும் சனிக்கிழமை காலை 8.30க்கும் ஒலிபரப்பாகிறது. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்கிறோம். இந்த நிகழ்ச்சியை www.soundcloud.com/radioworld எனும் இணைய தளத்திலும் கேட்கலாம்.

Thursday, September 05, 2013

"இன்று ஒரு தகவல்' பற்றி அந்துமணி

வானொலியில், "இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டு இருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!
நேயர்களுக்கு வானொலி தரும் இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், "இன்று ஒரு தகவல்' தந்து கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி... அவர் யார், எவர் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
என்னுடைய, "லேண்ட் லைன்' தொலை பேசியில் ரெக்கார்டிங் வசதி உண்டு. நான் இல்லாத நேரத்தில் அழைப்பவர்கள் தாங்கள் சொல்ல வந்த சேதியை பதிவு செய்து விடலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி, அப்பெண்மணி தினம் ஒரு ஜோக் - தகவல் - கிசுகிசு - அறிவிப்பு - செய்தி என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து விடுகிறார்.
என் தொலைபேசி எண்ணை எப்படி கண்டு பிடித்தார் அல்லது யார் கொடுத்தது என, கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், கொடுத்தவருக்கு நன்றி; பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே...
அன்று அலுவலகம் வந்ததும், "ஆன்சரிங் மிஷினை' இயக்கினேன். அதே பெண்மணியின் குரல்...
"இன்று ஒரு ஜோக்...' என்றவர், சிறிது இடை வெளி கொடுத்து, ஜோக்கைக் சொல்ல ஆரம்பித்தார்...
"அடல்ட்ஸ் ஒன்லி சர்ட்டிபிகேட் பெற்ற படத்தில் ஒரு காட்சி... நீச்சல் குளத்தில் இறங்கப் போகுமுன், கதாநாயகி, தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்று கிறாள்... கடைசியாக, உள்ளாடைகளை களைய எத்தனிக்கும் சமயம், "விர்'ரென்று ஒரு கார் போகிறது. கார் சென்றதும் பார்த்தால், கதாநாயகி, தண்ணீரில் முகம் மட்டும் தெரிய, நீந்திக் கொண்டிருக்கிறாள்.
"ஒரு சர்தார்ஜி, தினந்தோறும் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தார். ஒரு நாள், "சர்தார்ஜியிடம், "இந்த சினிமா அவ்ளோ நல்லாவா இருக்கிறது! விடாமல் பார்க்கிறீர்களே...' எனக் கேட்டார் தியேட்டர் மானேஜர்.
"அதற்கு, "இல்லை... ஒரு நாளாவது அந்தக் கார், ஒரு நிமிடமாவது தாமதமாக வராதா என்ற நம்பிக்கையில் தான் வருகிறேன்... சொல்லி வைத்தாற்போல, அது எப்போதும் போலத்தான் வந்து தொலைக்கிறது...' என்றாராம் சர்தார்ஜி...'
— இந்த ஜோக்கைச் சொல்லிவிட்டு, "ஜோக் எப்படி?' எனக் கேட்டு கலகலவெனச் சிரித்து, தொடர்பைத் துண்டித்திருந்தார்!
சர்தார்ஜிகளை கிண்டலடித்து இங்கு நாம் ஜோக் அடித்துக் கொண்டிருக்க, பஞ்சாபில், இதே ஜோக்கை, மதராசி - அதாவது, தமிழனை மையப்படுத்தி கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியனுக்கு - அது எந்த மாநிலத்தவனாக இருக்கட்டும்... உண்ண உணவிருக்கிறதோ, இல்லையோ... தமாஷ் உணர்ச்சிக்குப் பஞ்சமில்லை!

மறைந்துவரும் தபால் கடிதக்கலை : முருகபூபதி

மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. தற்காலத்தில் படிவங்களையும் ஒன்லைனில் பூர்த்திசெய்து அனுப்பமுடிந்திருப்பதனால் அதிலும் பேனைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
காசோலைக்கு ஒப்பமிடுவதற்கு மாத்திரம் பேனை உதவும் காலத்தில் வசதிபடைத்தவர்கள் மாறிவிட்டார்கள்.
எழுத்தாணியும் பனையோலை ஏடுகளும் வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச்;சென்றுவிட்டதுபோன்று தபால் முத்திரைகளும் வருங்காலத்தில் ஆவணக்காப்பகத்தில் இடம்பெறலாம். அவுஸ்திரேலியாவில் தபால் நிலையங்களை போஸ்ட் ஷொப் (Post Shop) என அழைக்கிறார்கள். அந்தப்பெயரில்தான் தபால் நிலையம் காட்சிப்பலகையில் துலங்குகிறது.
அங்கே முத்திரை மட்டுமல்ல இனிப்பு சொக்கலெட்ää தண்ணீர்ப்போத்தல் காகிதாதிகள் உட்பட வேறு பொருட்களும் விற்பனையாகின்றன. மக்கள் முத்திரை வாங்குவதும் குறைகிறது. காரணம் கணினிதான்.
வெளிநாடுகளில் வதியும் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இலங்கையில் ஏதாவது ஒரு கிராமத்திலிருந்தும் ஸ்கைப்பின் ஊடாக மணித்தியாலக்கணக்கில் பேச முடிகிறது. இந்த இலட்சணத்தில் யார்தான் கடிதம் எழுதி தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கப்போகிறார்கள்? சம்பிரதாயத்திற்காக திருமண சாமத்தியச்சடங்கு அழைப்பிதழ்கள் தபாலில் வருகின்றன.
இந்தப்பின்னணியிலிருந்துதான் இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன்.
ஒரு காலத்தில் தினகரன் பிரதம ஆசிரியராகவிருந்தவர் கைலாசபதி. 1982 டிசம்பரில் அவர் மறைந்தார். பதினைந்து ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட டிசம்பர் மாதத்தில் – பேராசிரியர் கைலாசபதி வாரம் 06-12-97 முதல் 12-12-97 வரை எனத்தலைப்பிட்டு தினமும் தினகரனில் 6ஆவது பக்கத்தில் (ஆசிரியத்தலையங்கம் பதிவாகும் பக்கம்) கைலாசபதி பற்றிய கட்டுரைகளை அவரை நன்கு அறிந்தவர்களைக்கொண்டு எழுதவைத்தார் அச்சமயம் அதன் பிரதம ஆசிரியராகவிருந்த எனது அருமை நண்பர் ராஜஸ்ரீகாந்தன்.
அச்சமயம் நான் இலங்கை சென்றிருந்திருந்தேன்.
எனது இலங்கை வருகை அறிந்ததும் என்னை உடனடியாக நேரில் சந்தித்து கைலாசபதி பற்றி எழுதித்தருமாறு கேட்டார்.
கணினி அறிமுகமாகியதும் மக்கள் கடிதங்கள் எழுதும் பழக்கம் குறைவாகிக்கொண்டிருந்த காலப்பகுதி. எனக்கு உடனடியாக கைலாசபதியின் அயர்ச்சியற்ற கடிதம் எழுதும் பழக்கம்பற்றி எழுதுவதற்கே பெரிதும் விருப்பமாக இருந்தது.
கடிதக்கலையிலும் பரிமளித்த கைலாஸ் என்ற தலைப்பில் தினகரன் 97 டிசம்பர் 10 ஆம் திகதி இதழில் எழுதியிருந்தேன்.
அதிலிருந்து சில பகுதிகளை இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.
எத்தனையோ வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அவர் தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதவும் – தமக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதவும் தவறவில்லை என்பது வியப்பானது. மல்லிகைப்பந்தல் 1996 இல் வெளியிட்ட ‘எங்கள் நினைவுகளில் கைலாசபதி’ என்ற நூலில் திரு. ரா. கனகரத்தினம் அவர்கட்கு கைலாஸ் எழுதிய சில கடிதங்கள் அதில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கைலாஸ் நண்பர் கவிஞர் முருகையனுக்கு எழுதிய கடிதங்கள் அடங்கிய ஒரு கோவையை பார்த்திருக்கிறேன். முருகையனே எனக்குக் காண்பித்தார்.
பொதுவாக ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களை பிறர் பார்ப்பதும் வாசிப்பதும் நாகரீகம் அல்ல என்பது பண்பு. அந்தரங்கம் புனிதமானது என்பதனால் இந்தப்பண்பு பின்பற்றப்படுகிறது.
ஆனால் iகாலாஸின் கடிதங்கள் அந்தரங்கமான விடயங்களை அலசுவதில்லை என்பதனால் பகிரங்கமாகின்றன. அதற்கு அவற்றில் ‘அந்தரங்கம்’ இல்லை என்பது மாத்திரம் காரணமல்ல. அவை இலக்கியத்தரமானவை பல ஆலோசனைகளை வழிகாட்டல்களை எடுத்துரைப்பவை என்பதனால் பகிரங்கமானவையாகின்றன.
ஆனால் கைலாஸ்- மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்கள் – பதில்கள் என்றாவது ஒருநாள் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்குப் பகிரங்கமாகப் பகிரப்படலாம் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் எழுதப்படவில்லை என்பது சத்தியமானது.
1953 முதல் 1956 வரையில் கைலாஸ் நண்பர் கனகரத்தினத்திற்கு எழுதிய சில கடிதங்கள் தொகுக்கப்பட்ட ‘எங்கள் நினைவுகளில் கைலாசபதி’ என்ற நூலைப்படித்தபொழுதுää பேராசிரியரின் ‘அகம்’ துலாம்பரமாகத்தெரிகிறது. ஆக்க இலக்கியங்களில் படைப்பாளியின் அகத்தை எம்மால் பூரணமாக அறியமுடியாது. ஆனால் கடிதங்கள் அப்படி அல்ல.
ஆக்க இலக்கியங்கள், பத்திரிகைகளில் இலக்கிய இதழ்களில் வெளியாகும். வாசகர் படிப்பர். நண்பர்கள் எழுதும் கடிதங்கள் நண்பர்களின் பார்வைக்கு மாத்திரமே.
ஆனால் அவை இலக்கியத்தரம் கருதி வாசகர் மத்தியில் வலம்வரும்பொழுது அவற்றை எழுதியவரின் அகத்தை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.
மகாத்மா காந்தி, பாரதியார், வ.வெ.சு ஐயர், அரவிந்தர், அறிஞர் அஸீஸ், கி. ராஜநாரயணன் முதலானோர் எழுதிய கடிதங்களை பல ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து தொகுத்து வாசகர்களுக்கு வழங்கினார் எழுத்தாளர் மு. கனகராஜன்.
இந்த வகையில் கைலாஸ் முருகையனுக்கும் கனகரத்தினத்திற்கும் எழுதிய கடிதங்கள் – பதில்கள் கவனத்தைப்பெறுகின்றன.
letters1953 இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் உத்திமுறையில் தாம் ‘ பரிசோதனைக்கட்டத்தில்’ இருப்பதாகவும் சித்தார்த்தன் என்ற தமது நண்பர் ஆங்கிலப்புலமை மிக்கவராக இருப்பதனால் அவரை மொழிபெயர்ப்புத்துறையில் ஊக்குவித்த தகவலையும் கைலாஸ் கூறுகிறார்.
அதே ஆண்டில் அவர் சிறுகதை எழுதியதையும் அதிலும் தாம் பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டதையும் சொல்கிறார். மொழிபெயர்ப்பில் தமக்கு ஏற்படும் சிரமங்களையும் ஒப்புக்கொள்கிறார்.
தாம் படித்த படைப்புகள்ää தமிழக இதழ்களில் பிரசுரமான விமர்சனங்கள் ரசித்து நோக்கிய வானொலி நிகழ்ச்சிகள் நாடகங்கள்… இப்படி பல விடயங்களைக் குறிப்பிட்ட கடிதங்களில் அலசுகிறார் கைலாசபதி.
‘கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என்பதைப்படைப்பாளிகளுக்கு உணர்த்திய பேராசான் கைலாசபதியின் இதர கடிதங்களும் தொகுக்கப்பட்டால் பயனுடையதாக இருக்கும் என நம்புகின்றேன்.
1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்துவிட்டேன். இங்கு வந்து அரைநூற்றாண்டு காலமும் கடந்துவிட்;டது.
இக்காலப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கடிதங்களை எழுதியிருப்பேன். கணினி பரிச்சியமானதும் அதன் ஊடாக மின்னஞ்சலில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதனால் தற்காலத்தில் எனக்கும் கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் குறைந்Jவருகிறது.
எனக்குவந்தகலைஇலக்கியவாதிகள் மற்றும் சமூகப்பணியாளர்களின் கடிதங்களைத்தொகுத்து 2001இல் கடிதங்கள் என்ற நூலையும் வெளியிட்டிருக்கின்றேன். எண்பது பேரின் கடிதங்கள் அதில் பதிவாகியிருக்கின்றன.
இலங்கையிலும் தமிழகத்திலும் மற்றும் அவுஸ்திரேலியா கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளில் வசித்த — வசிப்பவர்களின் கடிதங்கள் அவை. எனக்கு கடிதங்கள் எழுதிய எனது அம்மா உட்பட பலர் தற்பொழுது உயிருடன் இல்லை.
அகஸ்தியர் கே.கணேஷ், ராஜஸ்ரீகாந்தன், கனக செந்திநாதன், மு.கனகராஜன், வாசுதேவன், மாணிக்கவாசகர், என்.எஸ்.எம்.ராமையா, இளங்கீரன், திக்கவயல் தருமகுலசிங்கம், வே. இ. பாக்கியநாதன், நா. சோமகாந்தன், சு. வில்வரத்தினம், உடப்பூர் சோமஸ்கந்தர், சிவராஜலிங்கம், வண. ரத்ணவன்ஸதேரோ, சுந்தா சுந்தரலிங்கம், கோ. குமாரவேலு ஆகியோர் அமரத்துவம் எய்திவிட்டனர்.
ஆனால் அவர்களின் கடிதங்கள் நூலில் தொகுக்கப்பட்டதுடன் பொக்கிஷமாகவும் என்வசம் இன்றும் உள்ளன.
ராஜஸ்ரீகாந்தன் கே. கணேஷ் அகஸ்தியர் எனக்கு எழுதிய கடிதங்கள் அநேகம். ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் பெரும்பாலும் நீண்டவை. இலக்கிய புதினங்களுடன் அரசியல் நிகழ்வு ஆவணமாகவும் திகழ்பவை.
kalasஅவரது மறைவின் பின்னர் எழுதிய ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் அவரது கடிதங்கள் சிலவற்றையும் வெளியிட்டிருக்கின்றேன்.
தமிழகத்தில் கி.ராஜநாராயணன் பல எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்களும் பலர் அவருக்கு எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு நூலாகியிருக்கிறது. அதுபோன்று தலித் இலக்கியப்போராளி கே. டானியல் அ.மார்க்ஸ-க்கு எழுதிய கடிதங்களும் நூலாகியிருக்கிறது.
புதுமைப்பித்தன் தனது மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் நூலாகக்கிடைக்கிறது.
காதல் மனிதவாழ்வில் இரண்டறக்கலந்தது. காதல் கடிதங்கள் எழுதியவர்களின் காதல் வெற்றியிலும் தோல்வியிலும் முடிந்திருக்கிறது.
காதல்கடிதங்களை எழுதியவர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றை எரித்து அழித்துமிருக்கிறார்கள். ஆனால் காதல் அழிவதில்லை. அதுபோலவே கடிதக்கலையும் அழிந்துவிடாது.
தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழ் இலக்கியக்கடிதங்களை வெளியிட்டுவருகிறது.
பண்டிதர் ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்து மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களே பின்னர் ‘ உலக சரித்திரம்’ என்ற விரிவான நூலாக வெளியானது.
“ நேருவின் அந்தக் கடிதங்கள் அடங்கிய உலக சரித்திரம் படித்த பின்னர்தான் கம்யூனிஸத்தில் நம்பிக்கை கொண்டதாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சி தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறார்.
கடித இலக்கியங்கள் குறித்த சிந்தனையை வாசகர்களிடத்தே பரப்பவேண்டும் என்ற தொனியில் சிலவருடங்களுக்கு முன்னர் திக்குவல்லை கமால் மல்லிகையில் எழுதியதும் நினைவுக்கு வருகிறது.
கணினி இந்தக்கடிதக்கலையின் மகத்துவத்தை அழித்து அதனை வேறு ஒரு திசைநோக்கி மோசமாகத்திருப்பிவிட்டது என்றும் சொல்ல முடியும்.
கொமண்ட்ஸ் என்ற பெயரில் மோசமான வார்த்தைப்பிரயோகங்களும் அவதூறுகளும் பரவிவிட்டன. போதாக்குறைக்கு எஸ்.எம்.எஸ் குறுந்தகவல்களும் பரிமாறப்படுகின்றன.
அதனால் கடிதங்களுக்கு இனி என்ன வேலை இருக்கிறது என்றாகிவிட்டது மனிதர்களின் வாழ்க்கை.
எனினும் தபால் கடிதங்களினூடான தொடர்பாடல்கள் அரிதாகிப்போனாலும் வேறு ஒரு வடிவத்தில் கடிதக்கலை வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. தற்பொழுது மின்னஞ்சல் அந்தக்கலையை வளர்க்கிறது. அடுத்த நூற்றாண்டில் இந்தக்கலை வேறு ஒரு வடிவத்தைப்பெறும் என்றும் நம்பலாம்.
-0000-
letchumananm@gmail.com
நன்றி: http://inioru.com/?p=36609

Monday, September 02, 2013

BBC தமிழோசை மாணிக்கவாசகத்திடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

இலங்கையின் வவுனியா பிரதேசத்திற்கான பிபிசி தமிழோசை செய்தியாளர், பொன்னையா மாணிக்கவாசகம், இன்று திங்கட்கிழமை, பயங்கரவாதப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக பிபிசி தமிழ் இணையம் தெரிவிக்கிறது.
.
பிபிசி தமிழோசைக்காக கடந்த சுமார் 15 ஆண்டுகளாக வட இலங்கையிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணிக்கவாசகத்துக்கு, இந்த அழைப்பாணைக்கான காரணங்கள் குறித்து முன்னதாக அறிவிக்கப்படவில்லை.

விசாரணையின் போது அவரது வழக்குரைஞருடன் இருக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

விசாரணையின்போது, மாணிக்கவாசகம் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு விசாரணைக்கைதிகளிடமிருந்து கடந்த சில மாதங்களில் வந்த சில கைத்தொலைபேசி அழைப்புகள், மற்றும் அவர் திரும்ப அவர்களுக்கு விடுத்த அழைப்புகள் பற்றி விசாரிக்கப்பட்டார்.

மகசின் சிறைச்சாலை நீண்ட காலமாகவே அங்கு விசாரணையின்றி மற்றும் நீதி வழிமுறைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் சிறைக்கைதிகள் விஷயத்தில் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கைதிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் மீது முறையான நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் அல்லது அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

ஒரு செய்தியாளர் என்ற வகையில் பல ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து இது போன்ற தொலைபேசி அழைப்புகள் வருவது சகஜம் என்று மாணிக்கவாசகம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அவர்கள் பொதுவாக தங்களது பிரச்சினைகளை விவாதிப்பதுடன், தாங்கள் விரைவாக விடுதலை ஆக ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.

பல தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு, எடுக்கப்படுவதற்கு முன்னர் துண்டிக்கப்படும் போது, அவ்வாறான அழைப்புகளை (missed calls) , தனது தொழில் ரீதியான கடமைகளின் ஒரு பகுதியாக, தான் திரும்ப அழைத்ததாகவும் அவர் கூறினார்.

பிபிசியின் செய்தியாளராக இலங்கையின் வட பகுதியில் நீண்டகாலம் இருப்பதால், தனது தொலைபேசி எண்கள் பலருக்குத் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

மாணிக்கவாசகத்துக்கு எதிராக ஏதேனும் வழக்கு பதியப்படுகிறதா என்பது குறித்தோ அல்லது அவர் மீண்டும் விசாரணைக்காக அதிகாரிகளை சந்திக்கவேண்டியிருக்குமா என்பது குறித்தோ எந்தத் தகவலும் அவருக்குத் தரப்படவில்லை.
(நன்றி:பிபிசி தமிழ் Via http://riskyshareef.blogspot.in/)

Thursday, August 29, 2013

ரேடியோ சிட்டி ஆரம்பித்துள்ள 'தமிழ் ஆன்லைன் ரேடியோ'

பிரபல எஃப்.எம் ரேடியோ நிறுவனமான ரேடியோ சிட்டி, தமிழ் ஆன்லைன் ரேடியோ ஆரம்பித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இசைமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் எஸ்.மதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய புதிய தமிழ் ஆன்லைன் ரேடியோவை துவக்கி வைத்தனர்.

முதல் வலை வானொலி நிலையமான பிளானெட்ரேடியோசிட்டி.காம் (planetradiocity.com) தனது முதல் இராந்திய வலை வானொலியான தமிழ் ரேடியோ சிட்டியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தமிழ் ரேடியோ சிட்டியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் தமிழ்ப் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இத்துடன் நேயர்கள் விரும்பிக் கேட்கும் 'லவ் குரு', 'ரகசிய போலீஸ் போடவா கோபி 911' ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.

இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று (ஜூலை 24) சென்னையில் உள்ள ரேடியோ சிட்டி எஃப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் மதன், ரேடியோ சிட்டி வானொலியின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித், ரேடியோ சிட்டி வானொலியின் டிஜிஜிட்டல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவரான ரச்னா கன்வார் மற்றும் ரேடியோ சிட்டி அலுவலகர்கள் என அனைவரும் கலந்துகொண்டார்கள்.

இனி, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், இனியமையான தமிழ்ப் பாடல்களை இந்த தமிழ் ரேடியோ சிட்டி ஆன்லைன் வானொலியின் மூலம் கேட்கலாம். இதை கேட்கவிரும்புகிறவர்கள், பிளானெட்ரேடியோசிட்டி.காம் (www.planetradiocity.com) என்ற இணையதளத்திற்கு சென்று, அங்குள்ள ரேடியோசிட்டுடமில் (radiocitytamil) லிங்கை கிளிக் செய்தால், தமிழ்ப் பாடல்களையும், மிகச் சிறந்த தமிழ் இசைக் தொகுப்புகளுடன் நகைச்சுவையும், குதூகலமும் நிறைந்த லவ் குரு மற்றும் ரகசிய போலீஸ் படவா கோபி 911 போன்ற நிகழ்ச்சிகளையும் கேட்கலாம்.

இந்த புதிய ஆன்லைன் வானொலி குறித்து ரேடியோ சிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ அபூர்வா புரோஹித் கூறுகையில், "பிராந்திய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை ரேடியோ சிட்டி உணர்ந்தே உள்ளது. ஒரு எல்லைக்குள் தொடங்கப்படும் சேவைகள் சம்மந்தபட்ட பிராந்தியங்களில் சிறப்பாக இருக்கும் என்பது உண்மையே என்றாலும், வலை வானொலி நகரம் மற்றும் நாடு தாண்டி உலகளாவிய சேவைகளை வழங்கும். உலகின் மிகச் சிறந்த இசைகளுள் தமிழிசையும் குறிப்பிடத்தக்கது என்பதால் ஒரு வட்டத்திற்குள் முடங்கிவிடக் கூடாது. எனவேதான் தமிழ் இசையை உலகிலுள்ள அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் எடுத்துச் செல்கிறோம்." என்று தெரிவித்தார்.

ரேடியோ சிட்டி 91.1 எஃப்.எம் டிஜிடல் மீடியா மற்றும் நியூ பிசினஸ் மூத்த துணைத் தலைவர் மற்றும் பிசினஸ் தலைவர் ரச்னா கன்வார் கூறுகையில், "இந்தி ரேடியோ சிட்டு உள்பட 5 வலை வானொலி நிலையங்களைத் தொடங்கி பின்னர் பிராந்திய இசையைக் குறிப்பாக தென் இந்தியப் பிராந்திய இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல விரும்பினோம். இந்த ஆசை இப்போது நிறைவேறி உள்ளது. இந்தியப் பிராந்திய இசை குறிப்பாக தமிழ் இசைக்கு ஆன்லைனில் இருக்கும் இடைவெளியை இணைக்கும் பாலமாக இனி தமிழ் ரேடியோ சிட்டி செயல்படும். பழைய மற்றும் புதிய இசை ஆர்வலர்களுக்கு இதுவொரு சுரங்கமெனில் மிகையில்லை." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)
நன்றி: http://tamil.chennaionline.com

Tuesday, August 27, 2013

K.S..ராஜா பற்றிய ஒரு குறிப்பு: பழைய விகடனில் இருந்து

சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!


ற்பாடு செய்தவர்களே எதிர் பார்க்கவில்லை. மதுரை காந்தி மியூஸிய திறந்தவெளி அரங்கு திணறியது. எங்கெங்கும் ஆரவாரத் துடன் ரசிகர்கள் கூட்டம். 
இலங்கை வானொலியின் அலை வரிசைகளில் ஆதிக்கம் செய்த அபிமான அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சமீபகாலமாகக் கேட்க முடியாமல் தவித்த வானொலி நேயர்களுக்கு, ஈழப் போராட்ட நிதிக்கு அவர் இங்கு நேரடியாக நிகழ்ச்சிகளைத் தரப்போகிறார் என்ற செய்தி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அவர் கம்பீரக் குரலை நேரில் கேட்கவும் அவரைப் பார்க்க வும் ஆர்வத்துடன் பரபரத்தனர்.
'பராக்' சொல்வதுபோல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்... கே.எஸ்.ராஜா' என அறிவிக்க, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான மியூஸிக். மற்றொருவர் வந்து மைக் பிடிக்க, இவரும் கே.எஸ்.ராஜா Posted Imageவருவதை அறிவிக்கிறாரோ என நாம் எதிர்பார்த்து இருந் தோம். மைக்கைப் பிடித்தவுடன், ''வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்...'' என அதே மிடுக்கான குரல் ஒலிக்க, ராஜாவின் குரலை நேரில் கேட்ட மகிழ்ச்சியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
லேசான சாம்பல் நிற சஃபாரியில் சற்றே குள்ளமாக, தொப்பி வைத்துக்கொண்டு, நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமான ராஜாவாக இருந்தார். தேனிசை மழையின் ஆரம்பத்தில் ஒரு மாணவி, கே.எஸ்.ராஜாவிடமே பர்சனாலிடி பற்றிக் கேட்டுவிட... அவர், ''நீங்கள் எப்படி எதிர்பார்த்தீர்கள்?'' என்றவுடன், ''கொஞ்சம் ஹைட்டா, வெயிட்டா அமிதாப் பச்சன் ஸ்டைலில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த் தேன்'' என்றார் அந்த மாணவி. ''அமிதாப்புக்கு என்னைப் போன்று அழகான தமிழ்க் குரல் கிடையாதே'' என்றார் கே.எஸ்.ராஜா. அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. 'பாட்டுக்குப் பாட்டு' இசை நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சூடுபிடித்தது. அதிகாலை 3 மணி வரை பார்வையாளர்களைத் தனது பேச்சிலும் கிண்டலிலும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
மறுநாள் யானைக்கல்லில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்டில் கே.எஸ்.ராஜாவைச் சந்தித்தோம்.
தினமும் வானொலியில், வணக்கம் கூறி விடைபெற்று நழுவிவிடும் ராஜாவைப் பற்றிய முழு விவரம் தெரிய வேண்டாமா?
இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.
''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!)
''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க'னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.
அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.
Posted Image
1970-ல் ராஜாவின் நுழைவுக்குப் பின், வானொலி ஒலிப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிக் கேட்டபோது...
''சாதாரண பொதுமக்களுக்கும் நிலையத்துக்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்தும் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினேன். பி.பி.சி-யில் 'ஹீட்பரேட்' (இசை அணித் தேர்வு) - நிகழ்ச்சி யினை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். 'இசைச் செல்வம்' நிகழ்ச்சிகூட அதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.
நான் அமைக்கும் 'திரை விருந்து' நிகழ்ச்சி யினைத் தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் அவர்களும் அவருடைய துணைவியாரும் 'ஹீட் பரேட்' நிகழ்ச்சியினை மிகவும் ரசித்துக் கேட்ப தாகக் கூறியிருக்கிறார்கள்.
மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும் 'பொது அறிவுக் களஞ்சியம்' நிகழ்ச்சி, மக்களிடையே மிகுதியான வரவேற்பு. 1981-ல் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளே அரசுத் தேர்வுக்கு மிகுதியாக வந்திருந்தன. ''தொலைபேசி மூலம் உரையாடும் 'உங்கள் விருப்ப நிகழ்ச்சி'க்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு'' என்றார்.
''புதுமை என்றாலே எதிர்ப்புகள் இருக்குமே... தங்களுக்கு?''
''இல்லாமலா என்ன... ஆரம்பத்தில், வழக்க மான ஒலிப்பதிவு முறைக்கு எதிராகச் செயல் படுகிறேன் என்று சொல்லி, முழுமையாக இடையூறு செய்தார்கள். ஆனால், ரசிகர்களின் ஏராளமான கடிதங்கள், அதிகாரிகளின் மனத்தை மாற்றிவிட்டு, என்னையும் விருப்பம்போல் செயல்படவைத்துவிட்டது!''
உரையாடல் கவிதை மீது தொற்றியது.
''இலங்கையில் கவியரசர் கண்ணதாசனுக்கு ஏராளமான ரசிகர்கள். கருணா ரத்தின அபய சேகரர் என்பவர் ஒரு சிங்களக் கவிஞர். அவர் கண்ணதாசனின் தமிழ்க் கவிதைகளைச் சிங்களத் தில் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டு, அப்படியே அதனைக் கவியாக வடித்துவிடுவார்'' என்றார் ராஜா.
ராஜா, இலங்கை வானொலியைவிட்டு வெளியேறிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.
Posted Image''நான் எழுச்சிப் பாடல்களாக ஒலிபரப்பி னேன். உடன் இருப்பவர்களே பொறாமையினால் காட்டிக்கொடுத்துவிட்டார்கள். பின் என்ன, இடைநிறுத்தம் செய்துவிட்டார்கள். ராணுவத் தினரிடம் சித்ரவதை. நான்கு மாதக்கஷ்டம். அதைத் தொடர்ந்து வட இலங்கை நோக்கிப் பயணமாகிவிட்டேன். யாழ்ப்பாணம் குடா நாடு முழுமையாகப் போராளிகளின் கட்டுப்பாட் டில் இருப்பதால், பிரச்னை எதுவும் இல்லை.
இயக்கங்கள் அனைத்தும் ஒரு கொடியின் கீழ் இணைய வேண்டும். சமீபத்திய வவுனத் தீவு சண்டை ஒரு ஆரோக்கியமான அறிகுறி'' என்கிறார்.
''இப்போதெல்லாம் ஈழ மக்கள் இலங்கை வானொலியை நம்புவது இல்லை. 'லங்கா புவத்' - என்பதை 'லங்கா பொய்' என்றே கேலியாக அழைக்கிறார்கள்.
இந்தியப் பத்திரிகைகள் மற்றும் இந்திய வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் செய்திகளையே நம்புகிறார்கள்'' என்கிறார்.
''சாகும் வரையிலும் அறிவிப்பாளராகப் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனால், மறுபடியும் இலங்கை வானொலி நிலையம் சென்றால், என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது இல்லையா?''
- அந்தக் கம்பீரமான குரலில், ஓர் இனம் புரியாத சோகம் இழையோடியது!
- பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி

நன்றி: விகடன் பொக்கிசம் Via http://www.yarl.com