Saturday, August 30, 2008

டி.எக்ஸிங் பற்றிய அடிப்படைத் தகவல்கள்

வானொலி உலகம்
 • இலவசமான ஆடியோ எடிட்டரை download.com ™ wavepad audio editor என்ற மென்பொருளைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 • அகமதாபாத் அகில இந்திய வானொலி புதிய இணையதளத்தினைத் தொடங்கியுள்ளது.முகவரி: http://www.airahmedabad.in/
 • இந்தியன் ஆன்லைன் குழுமத்தில், ஜூலை முதல்வாரத்தில் இருந்து ரேடியோ தைவான் தனதுஅமெரிக்கஒலிபரப்பியை நிறுத்த உள்ளது.
 • அகில இந்திய வானொலி புதிதாக லட்சத் தீவுகளில் உள்ள கவரட்டி என்னுமிடத்தில் புதிதாக உள்ளூர் வானொலியைத் தொடங்க உள்ளது.
 • புகழ் பெற்ற சோனி 2010 (ஐ.சி.எப்) விற்பனைக்கு வந்துள்ளது. தொடர்புகளுக்கு: friedheim@juno.com
 • உலக அளவில் உள்ள ஒலிபரப்பிகளை ஒரு சேர ஒரே இணையதளத்தில் காணhttp://www.shortwavesites.googlepages.com/
 • தொலைக்காட்சி அலைவரிசையில் ஒலிபரப்பும் வானொலிகளின் விபரங்களை அறிய http://www.vhfdx.net/
 • டி.எக்ஸிங் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் காண சொடுக்கவும் http://www.dxworld.com/
 • டி.எக்ஸிங் பற்றி உடனுக்குடன் அவ்வப்போதைய தகவல்களைப்பெற http://www.dxinfocentre.com/
 • உலகெங்கும் உள்ள தீவிர சிற்றலை வானொலி நேயர்களைப் பற்றிய விபரங்களுக்குhttp://www.maps.dxers.info/
 • வானொலிகளில் ஒலிபரப் பான முக்கிய நிகழ்ச்சிகளைக் கேட்க http://www.broadcastdialoge.com/
 • ரேடியோ மியான்மார் ஆங்கிலப் பிரிவை மாலை 5.30 க்கு 5040, 5915, 5985 அலை எண்களிலும், மியான் மார் இராணுவ வானொலியை 5770 அலை எண்களிலும் கேட்கலாம்.
 • இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் பண்பலை வானொலிகளின் விபரங்களைக்காண www.qsl.net/vu2jos/pvt/commercial.htm
 • ரேடியோ பிராக் 85வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைக் கேட்க www.radio.cz/en/issue/103758
 • சீன வானொலி தமிழ்ப்பிரிவு அன்றாட சீன மொழி எனும் புதிய நிகழ்ச்சியை (வியாழன், சனி) தொடங்கியுள்ளது. - தொகுப்பில் உதவி: கா.அருண்

Friday, August 29, 2008

இலங்கை வானொலியின் அறிய புகைப்படம்

மீபத்தில் இலங்கை வானொலி வெளியிட்டுள்ள நிகழ்ச்சிகள் பற்றிய விபர அட்டையில் இந்த அறிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது. 1940-களில் எடுக்கப்பட்ட இந்த புகைபடத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் முகப்பு மிக அழகாக கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்பட உதவி: சிவராஜா தக்கீசன்

Thursday, August 28, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி - பாகம் 3

தாங்கள் சமுதாய வானொலிக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தினீர்கள், அது எந்தஅளவில் உள்ளது?
சமுதாய வானொலி தொடர்பாக வேலைகளில் இருக்கும் பொழுது தான் நான் ‘திருவாசகத்தினை சிம்பொனியில்’ தயாரிக்கத் துவங்கியிருந்தோன். இளையராஜாவோடு இணைந்து செயல்பட்ட அந்தக்கால கட்டத்தில் அவரால் ஏராளமான பொருள் இழப்புக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த சமயத்தில் நான் திருவாசகத்தினை எடுக்காமல் சமுதாய வானொலித் துறையில் இறங்கி இருந்தால், இன்று தமிழ் நாட்டில் ஒரு தாக்கத்தினை நிச்சயமாக ஏற்படுத்தி இருந்திருப்பேன். அதன் பின் தமிழ் மையத்தினூடாக மரபுச் சார்ந்த கலைகளில் ஒரு கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதனுடைய விளைவாகத்தான் இன்று நமக்கு ‘சென்னைச் சங்கமம்’ கிடைத்தது. பாரம்பரிய மரபுக்கலைகளுக்கு ஒரு புத்துயிரும், புத்தெழிச்சியும் கிடைத்தது.

தமிழ் மையம் வேறு எந்தப் பணிகளைச் செய்து வருகிறது?
அடித்தட்டு மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக ஏழைகளுக்கான கல்வி, நவீனத்துவத்தின் கனிகளை ஏழை மாணவர்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்ப்பது போன்ற வகையில் இயங்குகின்றோம். மனதிற்கு திருப்தியான வகையில் இந்தப் பணிகள் சென்று வருகிறது.

வேரித்தாஸ் - சென்னைச் சங்கமம் : எது மகிழ்ச்சி அளிக்கிறது?

வேரித்தாஸ் தமிழ்பணி என்னை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது, குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு எனக் கூறலாம். திருவாசகமும், சென்னை சங்கமமும் தமிழக மக்களுக்குக் என்னை அறிமுகப்படுத்தின.

தங்களால் தொடங்கப்பட்ட Intamil24.com இணைய வானொலி எந்த அளவிற்கு உள்ளது?
Intamil24.com நன்றாக தொடங்கி, நன்றாகவேச் செயல்பட்டது ஒரு குறுகிய காலம். ஆனால் மீண்டும் அதில் ஒரு கவனம் செலுத்தி அதனைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ‘சென்னை சங்கமம்’ போன்ற புதிய செயல்பாடுகளில் இறங்கிவிட்டதால், நேரமின்மைக் காரணமாக நிறுத்த வேண்டியதாக ஆனது.

சென்னைச் சங்கமம் வானொலியோடு இணைந்து செயல்படுமா?
இந்த கேள்வியை வானொலிகளிடம் கேட்க வேண்டும். வானொலி நிலையங்கள், இதனை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும், இதைப் பற்றிய திறணாய்வுகள், விமர்சனங்கள் மற்றும் புதிய பார்வைகளை வானொலிகளும் நேயர்களுக்கு வைக்கலாம். நேயர்களும் வானொலி ஊடாக எங்களுக்கு வைத்திருக்கலாம். உலக வானொலிகளோடு ஒன்றிணைந்து, ஒரு சுற்றுலா நிகழ்வாக, உலக தமிழர்கள் தாழ் தமிழகத்தோடு ஒரு நிகழ்வாக ஒவ்வோரு வருடமும் நடத்தலாம். சர்வதேச தமிழ் வானொலிகளுக்கு இதன் மூலம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

சிற்றலை வானொலியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நீங்களும் நானும் முடிவு செய்கின்ற விசயமாக இந்தக் கேள்வி இருக்காது. தொழில்நுட்பம்தான் இதனை முடிவு செய்யும். தொழில் நுட்பம் எளிமைப்படுவதோடு மலிவானதாகவும் மாறும். வரும் காலத்தில் தொலைக்காட்சி, வானொலி, இணையம், செய்தித்தாள் போன்ற அனைத்தும் ஒரு வாயில் வழியாக வெளிவரும் நிலைமை வெகு சீக்கிரத்தில் வரும்.

வருங்காலத்தில் சமுதாய வானொலித் தொடங்கும் எண்ணம் உள்ளதா?
Community Radio எனப்படும் ‘சமுதாய வானொலி’ இன்னும் என் மனதை விட்டு முழுமையாகப் போகவில்லை. மனதில் ஆசை இருக்கிறது. ஆனால் ஆண்டவன் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தான் தந்திருக்கிறான். முன்னர் 18 மணிநேரம் உழைக்க முடிந்தது, இப்பொழுது 12 மணிநேரம் தான் உழைக்க முடிகிறது. சந்திப்பு : தங்க ஜெய்சக்திவேல் -98413 66086.

Wednesday, August 27, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 2

வானொலிகளுக்கு இன்று பல்வேறு வகைகளில் போட்டி உள்ளது. இது பற்றி தங்களின் கருத்து?
என்னைப் பொருத்தவரையில், இதனை இரண்டு கோணங்களில் பார்க்க விரும்புகிறேன். ஒன்று, நான் ஏற்கனவே சொன்னது போன்று எதிர்வரும் 50 அல்லது 100 நூறு ஆண்டுகளில் பிரச்சனைகள் தீரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சுதந்திரமான தேசிய வானொலிகள் அல்லது தள வானொலிகள் எனப்படும் Local Radios சென்று சேர முடியாத இடங்களுக்கு சிற்றலை சென்று சேர முடியும்.இதற்கு இராணுவத் தடைகள் மட்டு மல்லாது எல்லாத் தடைகளையும் ஊடுறுவிக் கொண்டு போகும் ஆற்றல் இதற்கு உண்டு.

அந்தக் களத்தில் சிற்றலை தொடர்ந்து வாழும். உதாரணமாக தமிழ் ஈழ நிலப்பரப்பினை எடுத்துக் கொள்ளலாம். அங்கே உள்ள அரசு ஊடகங்களும் பொய் சொல்கிறது. இங்கே உள்ள இந்திய ஊடகங்களும் பொய் சொல்லும் போது, இந்த சிற்றலை வானொலிகள் உண்மையின் உரைகல்லாகத் திகழ்கிறது. இந்த பணியைச் செவ்வனேச் செய்தால் நிச்சயமாக வரும் காலத்திலும் அதற்கு ஒரு இடம் இருக்கிறது.

இரண்டாவது, எளிதாக அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றால், பண்பலை வானொலிகளோடு ஒரு புரிந்துணர்வு அவசியம் தேவைப்படுகிறது. சிற்றலையினுடையத் தரமான உள்ளீடுகளை (Content) இது போன்ற பண்பலை மற்றும் மத்திய அலை வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யலாம். உதாரணமாக வேரித்தாஸின் நிகழ்ச்சிகளும், பிபிசியின் நிகழ்ச்சிகளும் சூரியன் எப்ஃஎம்மில் ஒலிபரப்பலாம். இது போன்றதொரு ஒப்பந்தம் விரைவில் வரும், அப்படி பண்பலை வானொலிகளோடு கைகோர்த்துச் செல்லாவிடில், வரும் காலம்,சிற்றலை வானொலிகளுக்கு ஒரு கேள்விகுறியாக ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

வேரித்தாஸ் தமிழ்பணியில் பெற்ற அனுபவம் ‘தமிழ் மையத்திற்கு’ எந்த அளவில் பயன்படுகிறது?
வேரித்தாஸில் பணியாற்றியபோது எனக்கு கிடைத்தப் பரந்து விரிந்த அறிவு, உலகத்தைப் பார்கின்ற விதம், மானுடப் பிரச்சனைகளை அனுகுகின்றவிதம், என்னுடைய உலகப் பார்வையையே மாற்றிப்போட்டது என்றால் அது மிகையில்லை. தமிழ் மக்களினுடையப் பிரச்சனைகளைக் கூட, உலக அரங்கிலே நின்று கொண்டு பார்க்கின்ற பொழுது, புதிய பரிமாணங்கள் நமக்கு கிடைக்கிறது. அந்த வகையில் என்னைக் கேட்டால் வேரித்தாஸ் அனுபவம் என்பது, எனக்கு விலைமதிக்க முடியாதஅனுபவமாகத் தான் உள்ளது.

தமிழ்பணியில் பணியாற்றிய காலந்தொட்டு இன்று வரைத் ஏதேனும் நேயர்கள் உங்கள் தொடர்பில் உள்ளனரா?
நேயர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க எனக்கும் ஆசை இருந்தது. ஆனால் வாழ்க்கை என்பது புதிய பணிகளை நம் மீது சுமத்துகிறது. அவற்றை நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது, மனித உறவுகளைப் பேணுவதில் ஒரு பின்னடைவு வரத்தான் செய்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இப்பொழுது யாருடனும் தொடர்பு இல்லை. ஆனால் மானசீகமாக நினைக்கையில், இப்படியெல்லாம் நல்ல நேயர்கள் அப்பொழுது இருந்தார்கள், இன்றைக்கும் கூட போடிப்பட்டிபுதூர்செல்வராஜ், மோப்பிரிபாளையம் தங்கராஜ் போன்றவர்கள் நினைவில் நிற்கிறார்கள், பத்தாண்டுகள் கடந்து விட்டாலும் கூட ஒரு சில நேயர்கள் எழுதியக் கடிதங்களை இன்றும் என்னால் மனப்பாடமாகச் சொல்ல முடியும். உதாரணமாக கழுவாஞ்சிக்குடி ஒந்தாச்சி மடம் காந்தகுமார் ஆகட்டும், அண்மையில் படுகொலைச் செய்யப்பட்ட தர்மரத்தினம், வவுனிக்குளத்தில் இருந்துஎழுதிய பேதுரு பிள்ளை ஆகியோர் எழுதிய கடிதங்கள் இன்றும் எனது மனதில் நிழலாடுகிறது. (தொடரும்..)

Tuesday, August 26, 2008

பிக் எப்.எம் ஆர்.ஜே தீனா


சென்னை பிக் எப்.எம் ஆர்.ஜே தீனா கின்னஸ் புத்தகத்தில்

கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் படி இதுவரை இத்தாலியில் உள்ள ரேடியோ பிபிஎஸ் ஐ அறிவிப்பாளர் ஸ்டெபெனோ வெனேரி 135 மணி நேரம் தொடர்ந்து அறிவிப்பு செய்ததே சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையைச் சென்னை பிக் எப்.எம்மின் அறிவிப்பாளர் தீனா 26 ஆகஸ்ட் 2008 இரவு 8 மணிக்கு முறியடிக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே லிம்கா சாதனைப் புத்தகத்தில் 97.2 மணி நேரம் தொடர்ந்து அறிவிப்பு செய்து இந்திய சாதனைப் படைத்துள்ளார். கனடாவில் ஒலிபரப்பாகி வரும் கீதவானி தமிழ் வானொலியில் சுரேஸ் எனும் தமிழர் தொடர்ந்து 120 மணி நேரம் அறிவிப்பு செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு

சர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-2

ஜப்பான் : ரேடியோ ஜப்பான் (இந்திப் பிரிவு) : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வண்ண அட்டைகள்.
தைவான் : ரேடியோ தைவான் இண்டர்நேசனல் : 2008 நேயர் கருத்தாய்வுப் படிவம், நிகழ்ச்சி நிரல்பட்டியல்.

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல் (ஆங்கிலப் பிரிவு): மெசன்ஜர் இரு மாத இதழ், வண்ணஅட்டைகள், நிகழ்ச்சி நிரல் பட்டியல், இலவச கடித உறைகள், சீன மொழி பாடத்தின் மூன்று சிடிக்கள், ஒலிம்பிக் பொம்மைகளின் காகித கத்தரிப்புகள்.

லிபியா : வாய்ஸ் ஆஃப் ஆப்பிரிக்கா : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், தர ஆய்வுப் படிவம், தபால் தலைகள், வண்ண அட்டை. (Listeners Affairs, Voice of Africa, P.O. Box: 4677, Tripoli, Libya, E.mail:africavoice@hotmail.com)

ஸ்பெயின் : ரேடியோ எக்ஸ்டிரியர் டி எஸ்பனா: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வண்ண அட்டை, மூன்று வெவ்வேறு ஸ்டிக்கர்கள்.

துருக்கி : வாய்ஸ் ஆஃப் துருக்கி: வண்ண அட்டை, துருக்கி மேப், புத்தக அடையாள அட்டை, 70-வது ஆண்டு ஸ்டிக்கர் முத்திரை ஸ்டிக்கர், தபால் தலைகள், சுற்றுலா இலக்கியம், மற்றும் புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஸ்வீடன் : ரேடியோ ஸ்வீடன் : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்வீடன் வானொலியின் 70 ஆண்டுவரலாறு, வண்ண அட்டை.

சிங்கப்பூர் : அட்வெண்டிஸ்ட் உலக வானொலி : புத்தக அடையாள அட்டை, ஸ்டிக்கர், உலக நேரகண்டுபிடிப்பான், 2008 பாக்கெட் நாள்காட்டி, வேவ்ஸ்கேன் வண்ண அட்டை, ஒலிம்பிக் தபால் தலைகள்.

இந்தியா : அகில இந்திய வானொலி (வெளிநாட்டு சேவை) : வெளிநாடு மற்றும் உள்நாட்டுச்சேவைகளுக்கான நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

அமெரிக்கா : பேமிலி ரேடியோ : பொது விவாத மேடை ஆங்கில சிடி, பைபிள் சிடிக்கள், நிகழ்ச்சி நிரல் பட்டியல், வண்ண அட்டை, கிருஸ்துவ இலக்கியங்கள், பேமிலி ரேடியோ காலாண்டு செய்தி இதழ்.

ஈரான் : ஜ.ஆர்.ஜ.பி ரேடியோ : நிகழ்ச்சி நிரல் பட்டியல், மாஹ்ஜுபா மாத இதழ்.

அமெரிக்கா : ரேடியோ ஃபிரீ ஆசியா : ஹென்ரிச் ஹெர்ட்ஸின் வரலாறு அடங்கிய வண்ண அட்டை.

கொரியா : கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ்: விண்வெளி வீரர்களை மையப்படுத்திய வண்ண அட்டை,நிகழ்ச்சி நிரல் பட்டியல், வானொலி வரலாற்றுப் புத்தகம்.

தொகுப்பில் உதவி : மீனாட்சிபாளையம் கா. அருண், நாமகிரிப்பேட்டை கவித்துளி சக்தீஸ்வரன்,எடப்பாடி க.சி.சிவராஜ், தலைஞாயிறு பி.எஸ். சேகர்.

Monday, August 25, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 1

வேரித்தாஸ் தமிழ்பணியின் ஊடாக சிற்றலை நேயர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர்,இன்று ‘திருவாசகம்’ மற்றும் ‘சென்னை சங்கமத்தின்’ ஊடாக வானொலி கேட்காத நேயர்கள் மத்தியிலும் வெகுவாக அறியப் பட்டவர், அருட்பணி ஜெகத் கஸ்பார் ராஜ்.தமிழ் பணியில் ஏழு ஆண்டுகாலம் பணியாற்றிய போது பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டார்.அதில் மிக முக்கியமானது ‘உறவுச் சங்கம’ விழாக்கள். நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சங்கம விழாக்கள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. ‘நாம் நண்பர்கள்’ எனும் நேயர்களின் முகவரிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டது தமிழ் சிற்றலை வானொலி வரலாற்றில் முதல் முறை எனலாம். அதன் மூலம், இன்றும் தொடர்பில் உள்ள நேயர்கள் ஏராளமானோர், ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு நன்றி சொல்லக் காத்திருக்கின்றனர். தனது பல்வேறு அவசரப் பணிகளுக்கு இடையிலும், நமது இதழின் ஆண்டு மலருக்கு அவர் வழங்கியச் சிறப்புச் செவ்வி இதோ......

இன்றைய சூழ்நிலையில் சர்வதேச வானொலிகளின் முக்கியத்துவம் எந்த அளவில் உள்ளது?
எனக்கு, நிபுணத்துவ ரீதியாக இதற்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால் ஒரு அனைத்துலகவானொலியில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகாலம் கடமையாற்றினேன் என்ற வகையில், பதில் சொல்லமுடியும். வெகுஜன ஊடகங்கள் கையில் எடுத்துக்கொள்ளாத, அணுகாத மானுடப் பிரச்சினைகளை,சமூகப் பிரச்சினைகளை அணுகினால் அவை தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதாக இருக்கும்.அவற்றுக்கு என ஒரு சிறு தளத்தினை வரையறுத்துக் கொண்டோ, அல்லது வெறும் செய்தியைதருவதோ அல்லது விளம்பரங்களுடன் கூடிய போழுதுபோக்கு நிகடிநச்சிகளைத் தருவது என்றால்,அதைத் தருவதற்கு இங்கு வெகுஜன வானொலிகள் நிறையவே இருக்கின்றன. அவற்றை விரும்பிக் கேட்பவர்கள், அறிவுத்தகவல்களைக் கூட ஒரு புதிய கோணத்தில் இருந்து திறனாய்வுடன் ஆழமாக ஒரு விசயத்தினைப் புரிந்து கொள்வது இங்கு சாத்தியமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிற்றலை வானொலி கேட்கும் நேயர்கள் இன்று எங்கு அதிகமாக உள்ளனர்?பொதுவாகவே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கக்கூடிய நேயர்கள் பெரும்பாலும் பிரச்சனை நடக்கின்றப் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளனர். குறிப்பாக யுத்தங்கள் நடக்கின்றப் பகுதிகளில் நேயர்கள் மிக அதிகமாகக் கேட்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள நேயர்களுக்காகச் சரியாகப் பணியாற்றினால் சிற்றலை வானொலிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. (தொடரும்..)

Sunday, August 24, 2008

சர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-1

இந்தியா : ஃபீபா வானொலி: சகோதரி செல்வி அவர்களின் கடிதம், மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஜெர்மனி : வாய்ஸ் ஆப் ஜெர்மனி : Margot Forbes அவர்களின் கடிதம் , ஜெர்மனி வானொலிப் பற்றிய புதிய பாக்கெட் புத்தகம், கைப்பை, பேட்ஜ், பேனா, ஜெர்மனி Map, டி.சர்ட், பாட்டில் திறப்பான், கீ செயின் உலகப் பந்து, செல்போன் தொங்கான், மாணிட்டரிங் படிவம்.

செக் குடியரசு : ரேடியோ பிராக்: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், 85-ஆவது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை மற்றும் பென்சில் சீவும் கத்தி.

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல் (தமிழ் பிரிவு): சீனத் தமிழொலி இதழ், ஒலிம்பிக் வண்ண அட்டை, சகோதரி மீனா அவர்களின் கடிதம், இலவச கடித உரைகள்.

இந்தியா : டிராண்ஸ் உலக வானொலி: கிருஸ்துவ இலக்கியப் புத்தகம், நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஆஸ்திரேலியா : சி.வி.சி. வானொலி : டி.சர்ட், தொப்பி, டவல், கங்காரு பொம்மை, பேனா, கைப் பட்டை ரப்பர்-2, 2008 நாள்காட்டி, பூமராங், ஸ்டிக்கர், கிருஸ்துவ இலக்கிங்கள் , சி.டி .

அமெரிக்கா : வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா : புதிய நிகழ்ச்சி நிரல் புத்தகம், புத்தக வடிவ நாள்காட்டி.

வத்திகான் : வத்திகான் வானொலி : தமிழ் மற்றும் ஆங்கில மாத இதழ்கள்.

ஆஸ்திரேலியா : ஹெச்.சி.ஜெ.பி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், இலவச கடித உரை, செய்தி இதழ், வண்ண அட்டை, தபால் தலைகள்.

இங்கிலாந்து : ஃபீபா வானொலி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

கனடா : ரேடியோ கனடா இண்டர்நேசனல் : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர்.

அமெரிக்கா : கிறிஸ்துவ அறிவியல் சென்டினல் ரேடியோ : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், சென்டினல்இதழ்கள்.

இங்கிலாந்து : பிபிசி உலக சேவை (ஆங்கிலப் பிரிவு) : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

நெதர்லாந்து : ரேடியோ நெதர்லாந்து : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வெவ்வேறு வண்ணங்களில் மூன்று சிறிய ஸ்டிக்கர்கள்.

Saturday, August 23, 2008

விவித பாரதி பொன்விழாப் பாடல் - கவிஞர் வைரமுத்து

பல்லவி

பாட்டுக்கொரு புலவன்பாரதி-
திரைப்பாட்டுக்கு எங்களது
விவித பாரதி
பொன்விழாக்காணுகின்ற
விவித பாரதி-நாங்கள்பூத்தூவி வாழ்த்துகிறோம்
வாழ்க பாரதி.

சரணம்-1

மறக்காத நிகழ்ச்சியெலாம் கேட்டுக் கேட்டு
மரக்காது கொண்டவரும் இனிக்கு தென்றார்
சுரக்காதா தேன் கிண்ணம் நெஞ்சுக் குள்ளே
சுவைக்காதா என்று பலர் காத்திருப்பார்

இருகாது கொண்டவர்நம் நிகழ்ச்சி கேட்டால்
இனிக்காது தேனென்பார்; மேலும் கேட்க
இரு காதாபோ தாதாமேனி எங்கும்
இருக்காதா செவிகளென ஏங்கிப் போவார்.

சரணம்-2

தமிழ்க்குலமே! தமிழ்க்குலமே!
தங்கமகன்வேண்டுகிறேன்
நமக்காக நாளெல்லாம் இமைக்காமல் பணியாற்றும்
நிலையத்தார் மனம்போல நினைவோடு உறவாடிக்

கலைத்தேரில் வலம்வருவோம் காலமகள் வீதியிலே!
செவியெல்லாம் நாவாகச் செந்தமிழில் சிந்திவிழும்
கவியெல்லாம் தேனாகக் காலமெலாம்
வாழ்ந்திருப்போம் பொன்விழாக் காணுகின்ற
புதிய விவித பாரதியை
எண்ணத்தில் ஏற்றி எந்நாளும் மகிழ்ந்திருப்போம்.
____________
* சென்னை அகில இந்திய வானொலியின் விவித பாரதி தனது பொன் விழாவினைக் கொண்டாடிவருகிறது. அதனை ஒட்டி கவிஞர் வைரமுத்து இயற்றிய பாடல் இது. இவர் 1970-களில் இங்கு பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நன்றி: விவித பாரதி நிலைய இயக்குனர்

Friday, August 22, 2008

ஹாம் வானொலியின் கலங்கரை விளக்க நிகழ்ச்சி: புகைப்படங்கள்

கடந்த 15/8/2008 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச ஹாம் வானொலியின் கலங்கரை விளக்க நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கி காணலாம்.

Thursday, August 21, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 4)

நேஷனல் மாடலில் இன்னொரு வசதியும் உள்ளது. வானொலிப்பெட்டியைக் கேட்கும்போது மற்றவர் களுக்குத் தொல்லை ஏற்படாத வண்ணம் நாம் மட்டும் ஒலியைக் கேட்க இயர்ஃபோன் எனப்படும் செவிபேசியைப் பொருத்துவதற்கு 3.5 மி.மீ அளவுள்ள ஒரு துளை உள்ளது. இதில் செவிக்கானகருவியைப் பொருத்திவிட்டால், ஸ்பீக்கர் வழியாக வரும் ஒலி தடைசெய்யப்பட்டு, நம் காதுகளுக்குமட்டும் அந்தக் கருவிமூலம் கேட்கும். இரவு நேரங்களில் மற்றவர்கள் தூங்கும்போது நாம் சிற்றலையில் அலை எண்தேடல் (Scan) செய்யும் போது இது உதவியாக உள்ளது.

உதாரணமாக ரேடியோ அர்ஜென்டீனா தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்காக ஆங்கிலம், இத்தாலியன், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் போன்ற சேவைகளை இந்திய நேரப்படி இரவு 00.30 மணிமுதல் அதிகாலை 03.30 வரை வழங்கி வருகிறது. இதனை 19 மீட்டரில் 15,345 KHz கேட்கலாம். இதற்கு வெளி ஏரியலும், இயர்ஃபோன் வசதியும் மிகவும் உதவுகின்றன. இதேபோல் நியூஜிலாந்து ரேடியோ (RNZI), ரேடியோ ஆஸ்திரேலியா (ABC) போன்றவை இரவு 11.30 மணி முதல் 01.30 வரை ஒலிபரப்பு செடீநுவதை 31 மீட்டரில் கேட்கலாம்.

இரவு நேரங்களில் 45 நிமிடஒலிநாடாவில் ஒலிப்பதிவு செய்யும்போது, இயர்போன் பயன்படுத்தினால் ஒலியைத் தடைசெய்துஒலியையும் மிகவும் குறைத்துவிடலாம். ஒலிப்பதிவு முடியும்போது Auto Stopஉள்ளதால், காசெட்முடிவுக்கு வந்ததும் நின்றுவிடும். ஆனால் வானொலிப் பெட்டி தொடர்ந்து வேலை செய்து கொண்டுஇருக்கும். இந்த முறையில் இரவு நேரங்களில் நாமும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. தீவிர Dxers அதிகாலை அல்லது இரவு நேரங்களில் சிற்றலையில் புதிய வானொலிகளைத் தேடுவதை எளிதாகக் கருதுகின்றனர். அந்த சமயத்தில் உள்நாட்டு சேவைகளின் பாதிப்பும் இருப்பதில்லை.

“நேஷனல்” மாடல் AC மின் ஆற்றலிலும், 6W DC மின்னாற்றலிலும் இயங்கக்கூடியது. ஹஊAC தடை ஏற்படும் போது நாம் நான்கு பெரிய 1. 5 டார்ச்சு பேட்டரிகளை பொருத்தி வைத்தால், மின்தடை ஏற்படும்போது, மின்னாற்றல் ஒயரை நீக்கிவிட்டபின், வானொலிப்பெட்டி பேட்டரியின் மின்னாற்றலில் தொடர்ந்து இயங்கும். இதனால் மிக முக்கிய நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்யும்போதும், கேட்கும் போதும் மின்தடை பாதிப்பினால் ஏற்படாது. மேலும் ஒவ்வொரு நாட்டிலும் பயன் படுத்தப்படும் மின் அழுத்தத்திற்கு ஏற்ப 110-127/ 200-200/ 230-250 Volt மின் அழுத்த வசதி உள்ளதால் சரியான மின் அழுத்தத்தைத் தேர்வு செய்யலாம். இந்த மாடலின் அளவு 29.4x129x99.5 cm ஆகும். இதன் எடை பேட்டரி இல்லாமல் 1.5 கிலோவும், பேட்டரியுடன் 2 கிலோவும் ஆகும். (தொடரும்..) - சென்னை வி. பாலு

Wednesday, August 20, 2008

QSL வண்ண அட்டை போட்டி

தைவான் : ரேடியோ தைவான் இண்டர்நேசனல்: ஒவ்வொரு ஆண்டும் இந்த வானொலியானதுநேயர்களிடம் ஏதேனும் ஒரு வகையில் கருத்தாய்வினை நடத்தும், அந்த வகையில் இந்த வருடத்திற்கான கருத்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. கருத்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்க உள்ளது. கருத்தாய்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களும்,கருத்தாய்வுப் படிவத்தினைப் பெற்றவர்களும் உடனே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டியமுகவரி. English Section, Radio Taiwan International, P.O Box: 4914, Safdarjung Enclave, NewDelhi - 110 029.

அமெரிக்கா: அட்வெண்டிஸ்ட் உலக வானொலி: சிற்றலை நேயர்கள் மத்தியில் புகழ் பெற்ற ‘வேவ்ஸ்கேன்’ நிகழ்ச்சி இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய போட்டியை அறிவித்திருந்தது. போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களிடம் உள்ள QSL வண்ண அட்டையில் A to Z வரிசையில் 26 எழுத்துக்களை கொண்டதாகத் திரட்ட வேண்டும். உதாரணமாக A என்றால் என்றால் Australia, B என்றால் Bangaladesh என்ற வகையில் திரட்டி அனுப்ப வேண்டும். புதுமையான இந்தப் போட்டிக்கு உலக அளவில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. http://www.awr.org/

இந்தியா : ஃபீபா வானொலி : நம்மில் பலருக்கு இந்த வானொலி தமிழில் ஒலிபரப்பி வருவது தெரியும். அதே போன்று தமிழில் வெளிவரும் ‘செய்திமடல்’ பற்றியும் தெரியும். ஆனால் பெரும்பாலான நேயர்களுக்கு, இவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பிவரும் News Letter பற்றித் தெரியாது. முற்றிலும் இலவசமாக நேயர்களுக்கு அனுப்பப்படும் இந்த இதழைப்பெற ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : News Bullettin, FEBA India, P.O.Box: 25066, Bangalore- 560 025. E.Mail : febaindia@vsnl.com

Tuesday, August 19, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 3)


சிற்றலை வானொலிகளைக் கேட்க டெலஸ்கோப்பிக் ஆன்டெனா மிகவும் உதவுகிறது. சிலவீடுகளில் ஜன்னல் மூலைகளில் வானொலிப் பெட்டியை வைத்துக் கேட்கும் போது, ஒலியின் தரம்உயர்ந்து காணப்படும். இதனை அட்டெனுவேஷன் (Attenuation) என்கிறோம். எனவே சிற்றலை கேட்பவர்கள் “பேட்டரி” மூலம் வானொலி பெட்டியை இயக்கி, வீட்டின் பல பகுதிகளில் வைத்து சோதனை செய்தால் ஒலியின் தரம் சில மூலைகளில் அதிகமாகவும், தெளிவாகவும் இருக்கும்.

பொதுவாக, நமது நாட்டுக்கு நல்ல திறனுடன் ஒலிபரப்பப்படும் வானொலிகளைக் கேட்க டெலஸ்பிக் ஆன்டெனா போதுமானது. ஆனால் சில வெளிநாட்டு வானொலிகள் சக்தி உள்ளவைகளாக இருந்தபோதும், வெகு தொலைவிலிருந்து எந்த வித அஞ்சல் வசதியில்லாமல் நேரடியாகஒலிபரப்பு செய்யும் போது வெளி ஏரியல் தேவைப் படுகிறது. உதாரணமாக ரேடியோ அர்ஜென்டீனா,பிரான்ஸ், நியூஜிலாந்து, ஈக்வடார், ஸ்வீடன் போன்ற நாடுகளின் வானொலிகளை வெளி ஏரியில் மூலம்தெளிவாகக் கேட்கலாம்.

சிலசமயம் வானொலிகள் மற்ற நாடுகளுக்கான சேவைகளை ஒலிபரப்பு செய்யும்போது அவை நமக்காக இல்லாவிட்டாலும் நாம் வெளி ஏரியல் மூலம் தெளிவாகக் கேட்கலாம். சிற்றலை நேயர்களுக்கு QSL எனப்படும் அத்தாட்சி அட்டை சேகரிக்கும் ஆர்வம்உள்ள அவர்கள் அவசியம் வெளி ஏரியலைத் தேர்ந்தெடுத்து வெகுதொலைவில் உள்ள வானொலிகளைத் தேடலாம். வெளி ஏரியல் டெலஸ்கோப்பிக் ஆன்டெனாவுடன் இணைத்ததும் பல மடங்கு தெளிவாகக் கேட்கும். சிற்றலை நேயர்கள் வானொலி கேட்கும் போது கணினி, தொலைக் காட்சி, ட்யூப் லைட், மிக்ஸி போன்ற சாதனங்களை நிறுத்திவிட்டால் அவை எழுப்பும் மின்காந்த அலைகளின் இடையூறு குறையும்.

வெளி ஏரியல் உபயோகிக்கும்போது ‘எலக்ட்ரானிக் சோக்’ பொருத்தப்பட்ட ட்யூப்லைட்டு களைத் தவிர்ப்பது நல்லது. “எலக்ட்ரானிக் சோக்” வானொலியின் சமிக்ஞைகளை (Signal) அழுத்துவதால், சிற்றலை வானொலிகள் சரிவரக் கேட்பதில்லை,அடிக்கடி மின்னிக்கொண்டு இருக்கும் ட்யூப்லைட்டுகள் ரேடியோ ஒலிகளைப் பெரிதும் பாதிக்கும்.“சோக்” பழுதடைந்தால் “பர்ர்ர்” என்ற “வண்டு பறக்கும்” சத்தம் கேட்கும், பொதுவாக இவைகளை“மனித இடையூறுகள்” என அழைக்கலாம். (தொடரும்..) - சென்னை வி. பாலு

Monday, August 18, 2008

சென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை: பாகம்- 2

ரேடியோ மிர்ச்சியும், சூரியன் எப்.எம்மும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஆரம்பிக்கப் பட்டவைதாம். சூரியனை விட மிர்ச்சி முன்னணியில் இருப்பதற்கு நேயர்களுக்கு அதிக அளவில் அவர்கள் கொடுக்கும் பரிசுகளைக் காரணமாகச் சொல்லலாம். ரேடியோ மிர்ச்சி பண்பலை பிரபல ஆங்கில நாளேடான 'டைம்ஸ் ஆப் இந்தியா' நிறுவனத்திற்குச் சொந்தமான தாகும். அதுவும், அவர்கள்முன்னணியில் இருப்பதற்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், மிர்ச்சியின் சென்னை மண்டலத் துணைத் தலைவர் சந்தீப் சுத் இதுபற்றிக் கூறுகையில் "டைம்ஸ் ஆப் இந்தியா இதழ், பிரபலமான நாளேடு என்பதனை மறுப்பதற்கில்லை. அதே சமயம், நாங்கள் தமிழகத்தில் பண்பலையை ஆரம்பிக்கும் போது 'டைம்ஸ் ஆப் இந்தியா' தமிழகத்தில் கிடையாது. உண்மையைச் சொன்னால், நாங்கள் தான் 'டைம்ஸ் ஆப் இந்தியா' சென்னையில் பிரபலமாக உதவி இருக்கிறோம்" என்கிறார்.

2008 எப்.எம் கருத்துக்கணிப்புகளின் முடிவுகளில் சில பின்வருமாறு:
Top '5' FMs in Chennai
1.Radio Mirchi (98.3)
2.Suriyan FM (93.5)
3. FM Rainbow
4. Radio One, Big FM
5. Hello FM & Aahaa FM

ஆண்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த RJ-வாக தீனாவைத் தேர்வு செய்துள்ளனர். பெண்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த RJ-வாக அனுவைத் தேர்வு செய்துள்ளனர். சூரியன் பண்பலை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த வெற்றி குறித்து கருத்துக்களை அறிய முற்பட்டோம். எவ்விதமான பதிலும் இல்லை. சினிமா போஸ்டர்களையும், அரசியல் கட்சி பேனர்களையும் மட்டுமே கண்டு ரசித்த பொதுமக்களின் பார்வைக்கு ரேடியோ ஒன் பண்பலை முதன்முறையாகத் தங்கள்நிகழ்ச்சிகளைப் பற்றிய சுவரொட்டிகளை விளம்பரத் திற்குப் பயன்படுத்தியது.

தொடர்ந்து மற்ற பண்பலைகளும் இதே யுக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியதைப் பெருமையாகக் கருதுகின்றனர், நிறுவனத்தினர். "எங்களுடைய நிறுவனம் வட மாநிலத்தவருக்கு சொந்தமானதாக இருந்தாலும்கூட, தமிழ்ப்பண்பலைகளின் வரலாற்றில் தமிழனின் பெருமையை முன்னிறுத்தி ஆங்கிலக் கலப்பில்லாமல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்" என்கிறார் பிக் எப்.எம்மின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளரான சுசித்ரா.

பிக் எப்.எம் அண்மையில் நடத்திய போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவர்களைத் தமிழ் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது- விரைவில் பிக் எப்.எம்மின் நேயர்களின் குரலை தமிழ் சினிமாவில்ஒலிக்கக் காத்திருக்கிறது. ஆஹா பண்பலையின் விளம்பரமான 'பொழுதுபோக்கின் உச்சகட்டம்' என்ற வாசகங்கள் சென்னை வீதிகளை வியக்க வைத்தன. ஆஹா பண்பலை பிரபலங்களின்அணிவகுப்போடு நேயர்களுக்கு இசை விருந்து படைத்துவருகிறது என்கிறார்கள் நேயர்கள்.

இளைய ராஜாவின் மகள் பவதாரணி வழங்கும் நிகழ்ச்சி நேயர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'சர்வதேச வானொலி இதழ்' நடத்திய கருத்துக் கணிப்பு இனி வரும் காலங்களிலும் எவ்வித விருப்பு வெறுப்புகள் இன்றி தொடரும். இதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பண்பலை நிலையங்களுக்கும் எங்களின் மனப்பூர்வமான நன்றிகள். (தொடரும்)

Sunday, August 17, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 2)

நேஷனல் RX-M50 என்ற மாடலில் ரேடியோ பகுதி, கேசட் ரெக்கார்டர் பகுதி என இருவகையான பகுதிகள் உள்ளன. முதலில் வானொலிப் பகுதியைப் பார்ப்போம்.
ரேடியோ பகுதியில் நான்கு அலை வரிசைகள் உள்ளன.

FM - பண்பலை வரிசை 88 Mhz முதல் 108 Mhz வரை.
MW - மத்தியஅலை அலை வரிசை 530 KHz - 1600 KHz
SW 1 – சிற்றலைவரிசை 1 - 2.3 MHz - 2.5 MHz (120 மீ), 3 MHZ - 3.9 MHz (90 மீ), 4 MHz - 5 MHz (75 மீ), 5 MHz - 5.9 MHz (60 மீ), 6 MHz - 6.9 MHz (40 மீ) (120,90,75 மீட்டருக்கான அலைரிசை (2 MHz to 5MHz) ட்ராபிகல் பேண்டு என அழைக்கப்படும். இது வெப்ப மண்டல நாடுகளின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது)
SW 2 - சிற்றலைவரிசை 2 - 7 MHz (120 மீ), 9 MHz (31 மீ), 11 MHz (25 மீ), 13 MHz (22 மீ), 15 MHz (19 மீ), 17 MHz (16 மீ), 21 MHz (13 மீ) ஆகியவை அடங்கியது. 26 MHz (11 மீ) இதில் இல்லை.

இந்த அலைவரிசைகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளதால், தற்சமயம் உபயோகத்தில் உள்ள சில புற அலைவரிசையில் உள்ள அலை எண்களையும் எளிதில் ட்யூன் (திருத்தம்) செய்யலாம். சில அலைவரிசைகளுக்கு இடையே ஹாம் வானொலிகளுக்கான அலை எண்களில் அவர்கள் பேசிக்கொள்வதையும் கேட்கலாம். எந்த ஒரு வானொலியையும் எளிதில் கண்டறிய டயலும் “முள்” போன்ற நிலைக்காட்டியும் உள்ளதால் ட்யூனிங் திருகை அல்லது குமிழை பயன்படுத்தி நமக்குத் தேவையான வானொலியை அடையலாம். சிற்றலை வரிசையில் பலவானொலிகள் மிக நெருக்கமாக செயல்படும்போது நமக்கு விருப்பமான வானொலியைத் துல்லியமாகக் கண்டறிய ஃபைன்ட்யூனிங் எனப்படும் (துல்லிய திருத்தம்) திருகும் உள்ளது. இதன் மூலம் மிகத் துல்லியமாக ட்யூன்செடீநுது நாம் வானொலியின் ஒலியை தேவையற்ற ஒலிகளிலிருந்து பிரித்துத் தெளிவாகக் கேட்கலாம்.

ரேடியோ, கேசட் ரெக்கார்டர் பகுதிகளைத் தனித்தனியே இயக்க ஒரு ஸ்லைடிங் பட்டன் அல்லதுசறுக்கும் பொத்தான் உள்ளது. அதேபோன்று, அலைவரிசைகளை நம் விருப்பம்போல் தேர்ந்தெடுக்க மற்றொரு சறுக்கும் பொத்தான் உள்ளது. ஒலியின் தரத்தை கூட்டவோ குறைக்கவோ ஒரு திருகு அல்லது குமிழ் உள்ளது. இதைத்தவிர ஒலியின் தரத்தை மிருதுவான, மெல்லிய ஒலி தரத்திலிருந்து கனமாக வெளிப்படும் ஒலியாக மாற்ற ‘குரல்வள’ திருகு உள்ளது. ரேடியோ அல்லது ஒலிநாடாவிலிருந்து வரும் ஒலியை வெளிப்படுத்த 10 செ.மீ. அளவுள்ள மோனோ ஸ்பீக்கர் உள்ளது.

இந்த மாடல்-10 வாட்ஸ் திறன் கொண்டது பானாசோனிக் மாடலில் “18 வாட்ஸ்” ஸ்பீக்கர் உள்ளது.“நேஷனல்” மாடலில் நீட்டி மடக்கக் கூடிய டெலஸ்கோப்பிக் உணர்தண்டு உள்ளது. மத்தியஅலைவரிசைக்கு வானொலிப் பெட்டியின் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபெர்ரைட் இரும்புத்தண்டு உள்ளது. வானொலிப் பெட்டியை மெதுவாக சுழற்றினால் ஒரு நிலையில் மத்திய அலை வானொலி தெளிவாகக் கேட்கும். அந்த நிலையை தேர்ந்தெடுத்து அந்தக் கோணத்தில் வானொலிப் பெட்டியை வைக்கவேண்டும். (தொடரும்..) - சென்னை வி. பாலு

Saturday, August 16, 2008

ஹாம் வானொலி: சர்வதேச கலங்கரை விளக்க வாரம்

வ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15 அன்று அமெச்சூர் வானொலி எனப்படும் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் சர்வதேச கலங்கரை விளக்க வாரத்தை உலகெங்கும் கொண்டாடுவர். அதன் ஒரு பகுதியாக கடந்த 15 ஆகஸ்ட் 2008 அன்று மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலங்கரை விளக்கத்தில் காஞ்சிபுரம் ஆட்சியர் திரு. மிஸ்ரா அவர்கள் முறைப்படி சர்வதேச கலங்கரை விளக்க வாரத்தை துவக்கி வைத்தார்கள்.

16 முதல் 19 ஆகஸ்ட் வரை உள்ள நாட்களில் உலகெங்கும் உள்ள ஹாம் ரேடியோ உபயோகிப்பாளர்களை மாமல்லபுரத்தில் இருந்து தொடர்பு கொள்ள உள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு:
திரு. அஜய்: 098453 55773
திரு.அரசு: 093426 67388

Mr. Arasu, VU2UR Awards Manager, Contest Manager, Monitoring Systems Coordinator of Amateur Radio Society of India (ARSI).

Mr. Ajay, VU2JHM
QSL Manager for VU2LH.
For receiving special QSL card do send your address label with Rs.10/- postage stamp - NOTE no envelop required as we would be sending you QSL thru Special Envelop duly stamped and Pictorial Cancellation which is a collector’s item. Details are on http://www.qrz.com/AT8LH

Note for Editor:

The official working frequencies for the ARLHS are as follows: SSB: 1950-1990: 3950-3990, 7250-7290, 14.250-14.290, 21.350-21.390, 28.350-28.390CW: 1810-1850: 3510-3550, 7010-7050, 14.010-14.050, 21.010-21.050, 28.010-28.050

Friday, August 15, 2008

சென்னையில் அதிக நேயர்கள் கேட்கும் எப்.எம்

அதிகம் பேர் கேட்கும் எப்.எம்

1. ரேடியோ மிர்ச்சி
2. சூரியன் எப்.எம்
3. எப்.எம் ரெயின்போ
4. ரேடியோ ஒன், பிக் எப்.எம்
5. ஹலோ எப்.எம், ஆஹா எப்.எம்

அதிகம் பேர் விரும்பும் நிகழ்ச்சிகள்

1. சுச்சி சபா (சுசித்ரா, ரேடியோ ஒன்)
2. ஹலோ சென்னை, (அஜய், ரேடியோ மிர்ச்சி)
3. ஆஹா காபி கிளப் (சின்மயி, ஆஹா எப்.எம்)
4. ராஜாங்கம் (பாலாஜி-பவதாரிணி: ஆஹா எப்.எம்)
5. நினைத்தாலே இனிக்கும் (அருண்-சூரியன்)

அதிகம் நேயர்கள் விரும்பும் ஆண் RJ

1. தீனா (பிக் எப்.எம்)
2. சங்கர் (சூரியன் எப்.எம் )
3. முரளி (எப்.எம் ரெயின்போ) , சுரேஷ் (ஹலோ எப்.எம்)
4. முத்தமிழ் செல்வன் (எப்.எம் ரெயின் போ)
5. அஜய் ( ரேடியோ மிர்ச்சி), பாலாஜி(ஆஹா எப்.எம்)

அதிகம் நேயர்கள் விரும்பும் பெண் RJ

1. அனு (ரேடியோ ஒன்)
2. சுசித்ரா (ரேடியோ ஒன்)
3. டொசிலா (சூரியன் எப்.எம்)
4. சின்மயி (ஆஹா எப்.எம்)
5. பிரியதர்ஸினி (சூரியன் எப்.எம்)

SMS அனுப்புவர்கள்

1. 90% இல்லை
2. 10% ஆம், அனுப்புகிறோம்

தொலைபேசி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள்

1. 55 %பேசுகிறோம்
2. 45 % பேசுவதில்லை

செல்போனில் எப்.எம் கேட்பவர்கள்

1. 60% கேட்கிறார்கள்
2. 30% கேட்பதில்லை
3. 10% உண்டு, கேட்பதில்லை

நேயர்களைக் கவர்ந்த விளம்பரங்களை ஒலிபரப்பிய வானொலி

1. ரேடியோ மிர்ச்சி
2. ரேடியோ ஒன்
3. பிக் எப்.எம்
4. ஹலோ எப்.எம்
5. ஆஹா எப்.எம்

நேயர்களுக்கு அதிக பரிசுகள் தரும் வானொலி

1. ரேடியோ ஒன்
2. ரேடியோ மிர்ச்சி
3. ரேடியோ சிட்டி
4. பிக் எப்.எம்
5. ஆஹா எப்.எம்

(விரிவான விபரங்கள் 'சர்வதேச வானொலி' ஜூலை-ஆகஸ்ட் 2008 இதழில்) இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
தொடர்புகளுக்கு: தங்க. ஜெய்சக்திவேல் 98413 66086

Thursday, August 14, 2008

சென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை

சர்வதேச வானொலி இதழ் வெற்றிகரமாக தனது புதிய பரிமாணத்தோடு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதழ் படிப் படியான வளர்ச்சியையும், பாராட்டுகளையும், பலதரப் பட்ட மக்களிடமிருந்து பெற்று வருகிறது. நாளுக்கு நாள் பண்பலைகளின் எண்ணிக்கையும், பெருகிக் கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் தனியார், அரசுப் பண்பலைகளின் எண்ணிக்கை பத்து. ஒவ்வொரு பண்பலையும் தன்னை முதன்மைப் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சூரியன், ரேடியோ மிர்ச்சி போன்ற பண்பலைகளானாலும் சரி, புதிதாக தொடங்கப்பட்ட ஹலோ,ஆஹா பண்பலையானாலும் சரி. சர்வதேச வானொலி இதழ் முழுக்க, முழுக்க வானொலி சார்ந்த செய்திகளையும், வானொலியின் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி குறித்த கட்டுரைகளை மட்டுமேவெளியிட்டு வரும் ஒரே தமிழ் இதழ் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். நமது இதழ் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிமையான நேரத்தில் சென்னையில் பண்பலைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பினை அறிய முதன்முறையாக எவ்வித விருப்பு, வெறுப்புகளும் இன்றி, சுமார் ஆயிரம் பேரிடம் நேரடியாக சில வினாக்களுடன் தொடர்பு கொண்டோம். அதன்படி, ரேடியோ மிர்ச்சி 98.3 எப். எம், அதிக அளவில் மக்கள் விரும்பும் பண்பலையாக உள்ளது. மக்களுக்கு அதிக அளவில் பரிசுகளைத் தரும் பண்பலையாக ரேடியோ ஒன் மற்றும் ரேடியோ மிர்ச்சியைத் தேர்வு செய்துள்ளனர். தனியார் பண்பலைகளின் படையெடுப்புகளுக்கு இடையேயும், மத்திய அரசின் ரெயின்போ எப்.எம் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இன்னும்முனைப்புடன் செயல்படவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ரெயின்போ எப்.எம். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதன்படி வானொலியில் தாங்கள் கேட்கும் நிகழ்ச்சியானது வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ, அல்லது நேரத்தை வீணடிக்கிற நிகழ்ச்சியாக மட்டுமோ இருந்தால் போதாது என்பதைப் பிரதிபலிப்பதாகவேமக்களின் மதிப்பீடு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ ஆண்டாண்டுகளாக கோலோச்சி வந்த சூரியன் பண்பலையை மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மறக்கத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. (தொடரும்)

Wednesday, August 13, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50

ண்பர்களை நாடுகிறோம். ஆனால் நண்பர்கள் எப்போதுமே நம் அருகில் இருப்பதில்லை. எனவேநாம் வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, கணினி போன்ற சாதனங்களை நாடுகிறோம். நான்சிறுவனாக இருந்தபோது வானொலிப் பெட்டியைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி மகிழ்ந்தனர். நான் உங்களுக்கு ஒரு நண்பனை அறிமுகம் செய்ய உள்ளேன். அந்த நண்பன் வேறு யாருமில்லை.

நான் பயன்படுத்தி வரும் “நேஷனல்/பானாஸோனிக் ரேடியோ-கேசட் ரெக்கார்டர்” ஆகும். அதன் மாடல் எண் “RX-M50 ” இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான “சர்வதேச வானொலி” இதழில் முத்திரை நேயர்கள்வரிசையில் என்னைப்பற்றியும், இளமைக்காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களைப் பற்றியும் ஒருகட்டுரை வெளியானது. இதன் மூலம் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். சிலர் என்னைநேரிலும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கேட்ட கேள்வி என்னவெனில் “நான்ஏதேனும் விலை உயர்ந்த, பல வசதிகள் கொண்ட டிஜிட்டல் வானொலிப்பெட்டி வைத்துள்ளேனா?”என்பதுதான்.

நான் வெகுதொலைவில் உள்ள வானொலிகளான ரேடியோ நார்வே, °ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, ஈக்வடார், ஆஸ்திரியா, ஜெர்மனி,நெதர்லாந்து போன்றவைகளை கேட்டுள்ளதால் அவ்வாறு எண்ணினார்கள். சிலர் நான் பதிவு செய்துவைத்திருந்த ஒலிநாடாக்களை (கேசட்டுகளை) கேட்டுவிட்டு மிகவும் வியந்தனர். இன்னும் சிலர் நான்பயன்படுத்திவரும் ஆன்டெனாவைப் பற்றி அறிய விரும்பினார்கள். எனவே பலரது ஐயங்களை நீக்கிடஇந்த நண்பனின் தகவல்களை வழங்குகிறேன்.

நேஷனல் RX-M50 (NATIONAL RX-M50) ரேடியோ கேசட் ரெக்கார்டரில் அனலாக் (ANALOG)எனும் டயல்முறை ட்யூனிங் (அலை எண் திருத்தும் முறை) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு அலைவரிசைகள் (Wave Band) உள்ளன. பண்பலை, ஆறு மத்திய அலை சிற்றலை 1 & 2ஆகியவை உள்ளன. இன்றும் ஒருசில நாடுகள் நெட்டலையை உள்நாட்டுச் சேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு வானொலிகளைக் கேட்க சிற்றலை வரிசை மிக முக்கியமானது.

நேஷனல் RX-M50 மாடல் ஜப்பானில் உள்ள ஒஸாகா நகரில் மாட்ஸீ ஷீட்டா எலக்ட்ரிக் இன்ட°டிரியல் கம்பெனியால் தயார் செய்யப்பட்டதாகும். முதலில் “நேஷனல்” என்ற பெயரிலும், பிற்காலத்தில் “பானாசோனிக்” என்ற பெயரிலும் பல மாடல்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றது. (தொடரும்..)
- சென்னை வி. பாலு

Tuesday, August 12, 2008

இலங்கை வானொலியில் தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்: கடலூர் நேயர்கள் கண்டனம்

லங்கை வானொலியில் தமிழ்ஒலிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு கடலூர் நேயர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

திடீர் நிறுத்தம்
இலங்கை சர்வதேச வானொலியில் 84 ஆண்டுகளாக தமிழ் ஒலிபரப்பு நடந்து வந்தது. இந்த ஒலிபரப்பை தமிழக நேயர்கள் விரும்பி கேட்டு வந்தனர். இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு கடலூர் வானொலி நேயர் மன்றத்தைச்சேர்ந்த சிதம்பரம் ரமணி ராஜேஷ், கே.தமிழ்வாணன், பெரியசாமி ராஜா, வைத்தீசுவரன்கோவில் தாமரைச்செல்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.

முதல் தமிழ்ஒலிபரப்பு
கடந்த 1924-ம் ஆண்டு இலங்கை சர்வதேச வானொலி தொடங்கப்பட்டது. தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை உருவாக்கிய பெருமை இலங்கை வானொலிக்கு உண்டு.

சர்வதேச அளவில் லண்டன் பி.பி.சி., சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன என்றாலும், முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கிய பெருமையும் இலங்கை வானொலிக்கு உண்டு.

டி.வி.க்கள் இல்லாத காலத்தில் பட்டிதொட்டியெங்கும் இலங்கை வானொலி தான் பொழுது போக்கு சாதனமாக இருந்தது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் ஒலிபரப்பை இலங்கை வானொலி நிறுத்தியது நேயர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மீண்டும் தமிழ்ஒலிபரப்பை தொடங்க வேண்டும் என்று தினமும் எஸ்.எம்.எஸ். மூலமாக வற்புறுத்தி வருகிறோம்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Thanks to முதுவை ஹிதாயத், http://satrumun.com/localnews/?p=660

Monday, August 11, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 3

முதாயத்தில் நேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் வழிகாட்டியாக, அறிவு புகட்டும் கருவிகளாகப் பண்பலைகள் செயல்படுத்தல் அவசியமாகின்றது. அதனைக் கருத்தில் கொண்டு ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில் சிந்தித்து நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்குதல் வேண்டும்.

வணிகமயமாகிவிட்ட பண்பலைகள் மொழி, பண்பாடு, சமூகக் கண்ணோட்டம், இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் யதார்த்த வாழ்க்கை உறவுகள் ஆகியவற்றைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. ஆனால் இனிமேலாவது தன்னம்பிக்கையை வளர்க்கும் சிந்தனையின் புதிய பரிமாணங்களை இளைஞர்களுக்கு உணர்த்திடும் வகையிலும், உணர்வுகளை, உறவுகளைக் கொச்சைப்படுத்தா நிலையிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தன் நிகழ்ச்சிகளை மாற்றியமைக்கவேண்டும்.

அந்த வகையில் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக திரைப்படப் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பாமல் மாற்றாக பொதுவிவாத மேடை, இலக்கிய நிகழ்வுகள், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள், பொது அறிவு போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கிடும் வேலையில் இடையிடையே பொழுது போக்கு நிகழ்வுகளும் இருப்பதில் தவறில்லை.

பண்பலைகளின் பண்பாட்டுச் சிதைவுகளைத் தடுத்து நிறுத்தி சமூக அரங்கில் அதன் மீதான மதிப்பும், பார்வையும் சரித்திரமாகப் பதிவு செய்யப்படவேண்டுமானால் பண்பலை ஒலிபரப்பைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்திடவும் ஒருகட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். அதற்கென ஒழுங்கு முறை அமைப்போ தனி வாரியமோ அமைப்பது சாத்தியமா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும் பண்பலைகள் தன்னளவில் சமூகக் கட்டுப்பாட்டுணர்வுடன் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுதல் கட்டாயமாக்கப்படவேண்டும்.

“பசுமை பண்பலை” போல கருத்தாழமிக்க நிகழ்ச்சிகளை, இளைஞர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் நிகழ்ச்சிகளை வழங்கிட முன் வருமானால் பொழுதுபோக்கிற்காக பண்பலை கேட்கும் நேயர்களைக் குறிப்பாக இளைஞர்களை அறிவுசார் நிகழ்ச்சிகளையும் கேட்க வைத்த பெருமை பண்பலைகளுக்கு உண்டு என்று எதிர்காலச் சமூகம் பாராட்டினை நல்குவதோடு மக்கள் மத்தியில் பண்பலைகளின் செல்வாக்கும், மதிப்பும் நாளும் உயரும் என்பதில் ஐயமில்லை.
- ரா. வெங்கடேஷ். (ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...)

Sunday, August 10, 2008

உங்களுக்காக..

தைவான் : ரேடியோ தைவான் இண்டர்நேசனல்: ஒவ்வொரு ஆண்டும் இந்த வானொலியானதுநேயர்களிடம் ஏதேனும் ஒரு வகையில் கருத்தாய்வினை நடத்தும், அந்த வகையில் இந்த வருடத்திற்கான கருத்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. கருத்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்க உள்ளது. கருத்தாய்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களும்,கருத்தாய்வுப் படிவத்தினைப் பெற்றவர்களும் உடனே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி. English Section, Radio Taiwan International, P.O Box: 4914, Safdarjung Enclave, New Delhi - 110 029.

அமெரிக்கா: அட்வெண்டிஸ்ட் உலக வானொலி: சிற்றலை நேயர்கள் மத்தியில் புகழ் பெற்ற ‘வேவ்ஸ்கேன்’ நிகழ்ச்சி இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய போட்டியை அறிவித்திருந்தது. போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களிடம் உள்ள QSL வண்ண அட்டையில் A to Z வரிசையில் 26 எழுத்துக்களை கொண்டதாகத் திரட்ட வேண்டும். உதாரணமாக A, என்றால் என்றால் Australia, B என்றால் Bangladesh என்ற வகையில் திரட்டி அனுப்ப வேண்டும். புதுமையான இந்தப் போட்டிக்கு உலக அளவில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.

இந்தியா : ஃபீபா வானொலி : நம்மில் பலருக்கு இந்த வானொலி தமிழில் ஒலிபரப்பி வருவது தெரியும். அதே போன்று தமிழில் வெளிவரும் ‘செய்திமடல்’ பற்றியும் தெரியும். ஆனால் பெரும்பாலான நேயர்களுக்கு, இவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பிவரும் News Letter பற்றித் தெரியாது. முற்றிலும் இலவசமாக நேயர்களுக்கு அனுப்பப்படும் இந்த இதழைப்பெற ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : News Bullettin, FEBA India, P.O.Box: 25066, Bangalore - 560 025. E.Mail : febaindia@vsnl.com

Saturday, August 09, 2008

சீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ)

தென்னிந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக இணைப்புகள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9 ஆவது, 13 ஆவது நூற்றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலோருக்குத் தொ¢யாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன காலவடிவத்தில் - அதாவது சிற்றலை வானொலியில தொடர்கிறது - அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ), ஒவ்வொரு நாளும் மாலையில் பெய்ஜிங்கிலுள்ள தனது கலைக்கூடத்திலிருந்து - ஒரு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பைச் செய்கிறது - இதன் வாயிலாகக் கடந்த பல ஆண்டுகளில் இந்த வானொலி, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின், மிகவும் சிறப்பாக, தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசும் மக்களிடையில் ஆர்வம் மிக்க கேட்பாளர்களின் ரசிகர் மன்றங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த வானொலி நிலையம் முதன் முதலில் 1941 இல் தமிழ் ரசிகர்களுக்கு உலகெங்கும் சீனச் செய்திகளையும், கருத்துகளையும் ஒலிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வானொலி நிலையத்தின் தமிழப் பி¡¢வு ரசிகர்களிடமிருந்து திகைக்க வைக்கும் மிகப் பொ¢ய அளவான 5 இலட்சத்து 30 ஆயிரம் கடிதங்களைப் பெற்றது. சிஆர்ஐ - யின் தமிழ்ப் பி¡¢வில் 15 சீனர்களும், 2 தமிழர்களும் இருந்து வருகின்றனர். இந்தப் பி¡¢வில் உள்ள சீனர்கள் தூய தமிழில் பேசுவது வியக்க வைக்கிறது. இவர்கள் பேசுகிற தமிழ் இலக்கணச் சுத்தமாக, கலப்பற்ற தூய்மையான தமிழக இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சீன தமிழ் ஒலிபரப்புகளைக் கேட்கலாம்
நன்றி : தென் ஆசியச் செய்தி - சூலை 2008 Thanks to Pollachi Nasan http://www.thamizham.net/web190708/suvai52.htm

Friday, August 08, 2008

உங்களுக்காக..

பல்கேரியா : ரேடியோ பல்கேரியா சமீபத்தில் தனது நேயர்களுக்கு ஒரு கருத்தாய்வினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அனைத்து நேயர்களுக்கும் இது, பல்கேரிய இசையினை மையப்படுத்திய குறுவட்டினை அனுப்பியது. தற்பொழுதும் தனது நேயர்களுக்கு அந்த குறு வட்டினை அனுப்பிவருகிறது. தேவைப்படும் நேயர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: English Section, Radio Bulgaria, P.O.Box: 900, 1000 Sofia, Bulgaria. E.Mail: radiobulgaria@bnr.org

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல்: இந்த வானொலி ஒவ்வோரு முறையும் நேயர்களுக்குப் புதுமையான வகையில் நினைவுப்பரிசுகளை அனுப்பிவருகிறது. அந்தவகையில் ஆங்கிலப்பிரிவானது தற்பொழுது தனது நேயர்களுக்கு சீனாவின் வரைபடத்தினை போஸ்டர் வடிவில் அனுப்பிவருகிறது. தேவைப்படும் நேயர்கள் உடனே அவர்களை வான் அஞ்சலில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். முகவரி: English Section, China Radio International, 16A, Shijing shan Road, Beijing 100 040, P.R. China, E.mail : crieng@crifm.com

Thursday, August 07, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 2

‘காதல் காதல்’ என்றொரு நிகழ்ச்சி, இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளும் நேயரிடத்தில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாகக் காதலிக்கின்றீர்கள்? யார் காதலை முதலில் வெளிப்படுத்தியது? காதல், திருமணம் வரை வெற்றி பெறுமா? காதலை வெளிப்படுத்தியவுடன் கிடைத்த முதல் பரிசு என்ன? முதன்முதலாக அழைத்துச்சென்ற இடம் என்ன? இருவரும் பார்த்து மகிழ்ந்த முதல் திரைப்படம் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்.

இறுதியில் வாழ்த்துகளுடன் முடிவுறுகிறது. ஒருவேளை தோல்வி ஏற்பட்டிருக்குமானால், அல்லது காதல் பிணக்குகளில் நின்று போயிருக்குமானால் நேயரிடத்தில் வருத்தமும் ஆறுதலும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகளால் இன்றைய வளரும் தலைமுறை எதைக் கற்றுக் கொள்ளப்போகிறது? பண்பலைகள் சமுதாயத்திற்கு எதைக்கற்றுத்தரப் போகின்றது? இதுபோல் எத்தனையோ நிகழ்ச்சிகள்.

உதாரணமாக இரகசிய சினேகிதி, வயாராகா, பிளேடு நம்பர் ஒன், ஊர் சுற்றலாம் வாங்க,டோட்டல் உடான்ஸ், கூட்ஸ் வண்டி. வெவ்வேறு தலைப்புகளில் ஒரே பாணியிலானநிகழ்ச்சிகளை வழங்குவதோடு மட்டுமன்றி 24 மணிநேரமும் திரைப்படப் பாடல்கள், திரைப்படம்தொடர்பான செடீநுதிகளை ஒலிபரப்பி இளைஞர்களின் சிந்தனையைத் திசைதிருப்பும் தீர்க்கமானபணியைத் திறம்படச் செடீநுது வருகின்றன.

மேலைநாடுகளில் வானொலிகள் அந்தந்த நாடுகளுக்குரிய பண்பாடு மற்றும் கலாச்சாரப்படிபொழுதுபோக்கு, ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு முன்னுரிமை தந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்துஒலிபரப்புகின்றன. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றிற்கு சிதைவுகளை ஏற்படுத்திடும் எந்தவொரு நிகழ்ச்சியும், மேலைநாடுகளில் இடம்பெற இயலாது. மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி இடையிடையேதான் ஒலிக்கின்றதே தவிர நம் பண்பலைகளைப்போல் இடைவிடாமல் ஒலிப்பதுமில்லை.

செறிவான ஆற்றல் கொண்ட இளைஞர்களை வெறும் பொழுதுபோக்குச் சிந்தனை உடையவர்களாக, உணர்ச்சிப் பிழம்புகளாக மாற்றி இச்சமூகத்திற்குப் பயனற்றவர்களாகச் செய்யும் பண்பலைகள் தொடர்ந்து பயணிக்கும் பாதையில் மாற்றம் தேவைப்படுகின்றது. அதற்காக பொழுதுபோக்கும், கேளிக்கை நிகழ்வுகளும் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை, அவற்றிற்கு ஒரு வரைமுறை வேண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம்.
(தொடரும்...)
- ரா. வெங்கடேஷ் ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...

Wednesday, August 06, 2008

ஆன்டனாவைப் பற்றி...

மெரிக்கன் ரேடியோ ரிலே லீக் (ARRL) 21-ஆவது பதிப்பாக The Antenna Book-ஐ வெளியிட்டுள்ளது. ஆன்டனாவைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டதே இந்தப் புத்தகம். இந்த ஆண்டு முழுமையான புத்தக மாக வெளிவந்துள்ளது.

வானொலி நிலையத்தில் பணியாற்றுவோருக்கு மட்டுமின்றி, வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பவர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் இந்த புத்தகம் தயா ரிக்கப்பட்டுள்ளது. எளிமையான ஆன்டனா முதல் சமீபத்தில் வெளிவந்த ஆன்டனா வரை அனைத்து வகை ஆன்டனாக்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

சிற்றலை ஒலிபரப்பினைக் கேட்கத் தேவையான ஆன்டனா முதல் ஹாம் வானொலியினைக் கேட்கப் பயன்படும் ஆன்டனா வரை இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ‘ஸ்குரு டிரைவ்’ (Screw driver) ஆன்டனா அனைவரையும் கவர்ந்துள்ளது.

புத்தகத்தில் உள்ள அனைத்துத் தகவல் களும் குறுந்தகடு வடிவிலும் வெளியிடப் பட்டுள்ளதால் தேவையான நேரத்தில் நகல் எடுத்துக் கொள்ள வசதியாக உள்ளது. மேலும் இந்த சி.டியில் Yagi for windows, Antenna modeling for windows போன்ற கூடுதல் தகவல்களும் உள்ளன.

ரூ. 1800-க்கு விற்பனைக்கு வந்துள்ள இந்தப் புத்தகத்தினைப் பெறத்தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
American Radio Relay League Inc.,
225, Main Street,
Newington,
CT 06111 – 1494,
USA.
E.Mail: tis@arrl.org

Tuesday, August 05, 2008

நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு

கோடை காலத்தில் இதமாக இருந்த நாளான கடந்த 25 மே 2008 ஞாயிறு அன்று திருச்சி தூயவளனார் கல்லூரி அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு சார்பில் நேயர் சந்திப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு ரோமிலிருந்து அருட்சகோதரி தெரேசா அவர்களும், வத்திக்கான் வானொலி இந்தியஅலுவலகத்தின் இயக்குனர் அருட்பணி சேவியர் ராஜன் மற்றும் திரு. ஜார்ஜ் அவர்களும் வருகை தந்து சிறப்புற நடத்தினர். நீண்டகால நேயர்கள், வளமையான நேயர்கள், பிற மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த நேயர்கள் மற்றும் புதிய அறிமுக நேயர்கள் என பல தரப்பு நேயர்களும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து கொடுக்கும் முகமாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.


தொடர்ந்து நிகழ்ச்சிகள் பற்றிய பொதுவான விமர்சனக் கருத்துக்களை நேயர்கள் நேரடியாக பகிர்ந்து கொண்டனர். நேயர்களின் ஐயங்களுக்கு அருட்சகோதரி தெரேசா அவர்களும், திரு. சேவியர் ராஐன் அவர்களும் உடனுக்குடன் விளக்கமாக பதில் அளித்தனர்.


இதற்கிடையே விழா அரங்கிற்கு வெளியே வத்திக்கான் தலைமை கலையகத்திலிருந்து தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட திரு. கிருஸ்டோபர் அவர்கள், விழா நடைபெறும் விதம் பற்றி கேட்டறிந்து, சிறப்பு நிகழ்ச்சிக்காக நேயர்களின் கருத்துக்களை தொலைபேசி வழியாகஒலிப்பதிவு செய்து கொண்டார்.


ஒலிபரப்பு தரம் பற்றி நேயர்கள் விவாதித்த வேளையில் வானொலி கேட்பதில் நீண்டகால அனுபவம்பெற்ற விழுப்புரம் திரு. ஜமீல்அகம்மது அவர்கள் சிற்றலை ஒலிபரப்பின் தன்மை குறித்தும் தொழில் நுட்பம் சார்ந்தும் பலவித விசயங்களை விரிவாக விளக்கிக் கூறினார்.
மேலும் சிற்றலை ஒலிபரப்பை கேட்பதில் அனைத்து நேயர்களும் அறிய வேண்டிய அடிப்படைநுணுக்கங்கள் பற்றி தனது நேரடி அனுபவங்களுடன் எளிமையாக எடுத்துக் கூறியது சிற்றலையில் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ உண்டு என்பதை அறிய முடிந்தது.


அடுத்து உரையாற்றிய திருச்சி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் புலவர் கோ.சந்திரசேகர் அவர்கள் ஏறக்குறைய 48 ஆண்டுகள் தன் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்ட வானொலி ஊடகம் பற்றிய பல அரிய தகவல்களை நகைச்சுவை நயம்பட எடுத்துக் கூறியது, கலந்து கொண்ட நேயர்களின் மனதில் வானொலி கேட்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இதுபோல வானொலி செவிமடுப்பது தொடர்பான விளக்கங்களை விழா நடத்தும்ஒவ்வொரு வானொலியும் தனது விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து கொடுத்தால், வானொலிநேயர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். மேலும் பல புதிய நேயர்களை உருவாக்கவழிவகுக்கும்.


நிறைவாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தூய வளனார் கல்லூரியின் அருட்பணி திரு. லாசர்அவர்களின் ஆசியுடன் கூடிய நிறைவுரை மற்றும் சிதம்பரம் திரு. விஜயராகவன் அவர்களின் நன்றியுரை யுடன் மாலை 4 மணிக்கு விழா இனிதே நிறை வடைந்தது.

- மின்னகல் செல்வராஜ்.

Monday, August 04, 2008

வானொலி உலகம்

லண்டன் ஐ.பி.சி. தமிழ் வானொலி தனது 11 ஆண்டுகளை நிறைவுச் செய்து கடந்த 9 ஜூன் 2008 ல் 12-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.


 • இங்கிலாந்தில் இருந்து ஒலிபரப்பாகிவரும் ரேடியோ கரோலின் இண்டர்நேசனலைத் தொடர்பு கொள்ள.
  studio@radiocaroline.co.uk

 • காரைக்கால் பண்பலையை தொடர்பு கொள்ள 04368-231500, 231550

 • வத்திகான் வானொலி தமிழ் பிரிவின் புதிய மின் அஞ்சல் முகவரி vradio@loyolacollege.edu

 • வேரித்தாஸ் தமிழ்பணியின் தொலை நகல் எண் 0063 293 81940

 • ஏற்காடு பண்பலை 5 ஜூன் 2008 முதல் 90.4 மெகா ஹெர்ட்சுக்கு பதிலாக 103.7 மெகா ஹெர்ட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

 • வானொலி, தொலைகாட்சி மற்றும் செயற்கைக்கோள் பற்றிய புதிய செய்திகளுக்கு சொடுக்கவும்
  http://www.mediaworldasia.dk/

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை

உலகை உள்ளங்கைக்குள் அடக்கும் உன்னதக் கணிப்பொறித் தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சியில் வியத்தகு முன்னேற்றம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகின்றஊடகத்துறையில் எத்தனையோ மாற்றங்கள்.
இவற்றிற்கிடையில் இன்றும் வானொலியின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது வானொலிக்குக்கிடைத்த வெற்றியாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிரான விடுதலைப் போராட்டத்தில் மண்ணின் மைந்தர்களிடையே தேசப்பற்றை, விடுதலை வேட்கையை ஊட்டி உணர்வு பெறச் செய்ததில் வானொலிக்கு அளப்பரிய பங்கு உண்டு.
அந்த வகையில் ஏழை, எளிய மக்களின் உயிர்மூச்சாக, செய்திப் பெட்டகமாக விளங்கிய வானொலி அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப புரட்சி காரணமாக தன் உண்மை முகத்தை இழந்து அல்லது மறைத்து பொழுதுபோக்கு எனும் முகமூடி அணிந்து ‘பண்பலை’ என்னும் புதிய அவதாரம் எடுத்துள்ளது.
வானொலியின் புதிய அவதாரமான பண்பலைகளின் எண்ணிக்கை கிராமங்கள், நகரங்கள்,பெருநகரங்கள் என்ற வேறுபாடின்றி பல்கிப் பெருகிய தோடு மட்டுமன்றி ‘வானொலி ஒலிக்காதவீடே இல்லை’ என்ற நிலையை மாற்றி ‘பண்பலை ஒலிக்காத வீடே இல்லை’ என்ற சூழல் தற்போதுஉருவாக்கி உள்ளது.
இதன் காரணமாகவோ என்னவோ, எப்படி கடிவாளம் இல்லாத குதிரை தாறுமாறாக ஓடுகின்றதோ அதைப் போல கட்டுப்பாடு எனும் கடிவாளம் இல்லாமல் தனியார் பண்பலைகள் சமூகத் தளத்திலிருந்து விலகி இளைஞர்கள் மத்தியில் சிந்தனைச் சிதறல்களை உருவாக்கி பண்பாட்டுச் சிதைவுகளைப் பதியவைக்கும் வரம்பு மீறிய நாகரிக மோசடியை நாளும் நிகழ்த்தி வருவது வானொலியின் உண்மை நேயர்களை வேதனைக்குள்ளாக்குகின்றது.
கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, இசை, இலக்கியம், நாடகம், நாட்டியம், பொழுதுபோக்கு என்று பல்துறை நிகழ்ச்சிகள் பண்பாட்டு, கலாச்சார சீரழிவின்றி வானொலியால் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் எந்த அளவிற்குப் புதிது, புதிதாக பண்பலைகள் (தனியார்) உருவாகின்றதோ அதேபோல்எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுவதால் பண்பாடும், கலாச்சாரமும் இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளன.
மக்களின், இளைஞர்களின் பொழுதை எவ்வாறேனும் போக்கடிப்பது குறிக்கோள் என்ற ரீதியில் 24 மணி நேரமும் பண்பலைகளின் குரல் ஓய்வின்றி ஒலித்து வருகின்றது. புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் ஆர்வத்தில் மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளை அப்படியே தங்களுக்கேற்ற பாணியில் மாற்றம் செய்து ஒலிபரப்புகின்றனர்.
மேலும் வணிக ரீதியிலான போட்டி, ஒலிபரப்பில் முன்னணி பெற்றிட முயலும் துடிப்பு காரணமாகபண்பலைகள் அடிக்கும் லூட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது கவலையளிப்பதாகஉள்ளது.
எந்த பண்பலையானாலும் இளைஞர்கள்தான் அதன் மையப்புள்ளி. இளைய சமுதாயத்தைச் சுற்றியேஅனைத்து நிகழ்ச்சிகளும் உருவாக்கப் படுகின்றன. இளைஞர்களைக் கவர்வதற்காகப் பொருந்தாத நிகழ்ச்சிகளைக்கூடப் பண்பலைகள் ஒலிபரப்பத் தயங்குவதில்லை,
கேலிக்கூத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் ‘ரேடியோ ஜாக்கிகள்’ எனும் தொகுப்பாளினிகளின் புன்னகை கலந்த புரிதலற்ற பேச்சு, ஆங்கிலக்கலப்புடன் கூடிய வார்த்தை ஜாலம், சிந்திக்கத்தூண்டாதபுதிர் வினாக்கள் பொது அறிவிற்குப் பொருந்தாக் கேள்விகள்...இப்படிப்பல!
பேசுபவர்க்கும் கேட்பவர்க்கும் என்னவென்று புரியாமல் போகும் நிகழ்ச்சிகளால் சமூகத்திற்கு என்ன பயன் கிட்டும் என்பது தெரியவில்லை. இளைஞர்களைத் தங்கள் பண்பலை நோக்கி கவரஇப்படிப்பட்ட பண்பாட்டுச் சீர்குலைவு நிகழ்ச்சிகளை வழங்கிட இவர்களிடம் யார் கேட்டது?
(தொடரும்...)
- ரா. வெங்கடேஷ் ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...

Saturday, August 02, 2008

தெரிந்தே தொலைத்த பொக்கிஷம்

காலம் காலமாக தமிழர்களின், தமிழ்ப் பாடல்களின் அடையாளமாக இருந்த இலங்கை வானொலி (கொழும்பு சர்வதேச வானொலி) கடந்த 31-05-2008 அன்று நிறுத்தப்பட்டுவிட்டது. ஏதோ ஒரு வானொலிக்கு எதையோ ஒன்று எழுதிப் போட்டுவிட்டு ‘டி’சர்ட் வாங்குவதற்காக அல்லாமல், ‘டூர்’ கூட்டிட்டு போவாங்க’ என்று அலையும் கூட்டமாகவும் அல்லாமல், ‘கலாச்சாரத்தை’ தெரிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சம்பந்தமே இல்லாமல் எங்கோ சென்று சந்தோசத்தில் வாழ்க்கையை நான்கு நாட்களில் அனுபவித்து முடித்த சிரிப்பை சிந்துகின்ற, அரிதாரங்கள் பூசியவர்களாக அல்லாமல், கொடுக்கிற நாலணா பேனாவில் நாட்கள் முச்சூடும் போற்றிப் பாதுகாக்கிற
கூட்டமாகவும் அல்லாமல் இருந்த ஒரு பண்பாட்டு வட்டம், பாட்டுக் கூட்டம் காலக் கொடுமையில் கால எல்லைகளைக் கடந்து கற்கால மனிதன் போல நடந்து கொண்ட விதம் இன்று, தான் எந்த ஜென்மத்திலும் திரும்ப பெறமுடியாத தெய்வ வரத்தை இழந்து தவிக்கிறது.
என்னதான் விளம்பரங்கள் மூலம் கிடைத்த கணிசமான வருமானங்கள் குறைந்து போனாலும், இத்தனை வருடங்களாக நம்மை நம்பியிருக்கும் தமிழக நேயர்களை ஏமாற்றக் கூடாது என்ற ஒரே உள்ளக்கிடக்கையில் 1990-களில் “கொழும்பு சர்வதேச வானொலி” அற்புதமான பல நிகழ்ச்சிகளை வழங்கியது, அதில் “கவிதை செண்டு, முத்தமிழ் ஆரம், இன்றைய நேயர், உங்கள் விருப்பம், வானொலி மலர், நெஞ்சில் நிறைந்தவை, ஆனந்த கானங்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், கதம்பம், இசை இன்பம், பாட்டும் பதமும்” ஆகியவற்றை நேயர்களை மனதில் வைத்து ஒலிபரப்பியது. (உலக தமிழ் வானொலிகளில் இந்த மாதிரி பெயரையாவது யாருக்காவது வைக்கத் தெரியுமா?)
இதற்கொரு பெரிய சரித்திரம் இருக்கிறது, 1956-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் மத்திய அலை ஒலிபரப்பு, 1980-களில் இனப் பிரச்னையின் போது நிறுத்தப்பட்டது. பிறகு அது சிற்றலை மற்றும் பண்பலைக்கு சென்று அங்கு நிலை கொண்டது. அதற்கு பெயர் “வர்த்தகச் சேவை”, அதன் பிறகு “தென்றல்” ஆனது. இது இப்பொழுதும் வந்து கொண்டுள்ளது. ஆனால், இண்டெர்நெட்டில் நமக்கு தற்பொழுது www.slbc.lk-ல் கேட்கலாம்.
அன்று “வானொலி பிதாமகன்” எ°ஸ்.பி. மயில்வாகனன், கே.எ°ஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் அமீது, திருமதி ராஜேவரி சண்முகம் ஆகியோர் கலக்கிக்கொண்டு இருந்த இலங்கை வானொலி அதன் பிறகு வர்த்தகச் சேவை என பெயரிடப்பட்டது. முன்பே குறிப்பிட்ட, மத்திய அலையில் நமது தமிழக நேயர்களுக்காக 1990-களில் ஆரம்பிக்கப்பட்ட ஒலிபரப்பு, ‘பரீட்சார்த்த ஒலிபரப்பு’ “மத்திய அலை சிறப்பு ஒலிபரப்பு என மருவி, 90- களின் மத்தியில் “கொழும்பு சர்வதேச வானொலி”
என கொடிகட்டி பறந்து, நான்கைந்து வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சூரியன் எப். எம் தாக்கத்தினாலும், அரசு பண்பலையான எப். எம் ரெயின்போவினாலும் சாரம் இழந்தது. இருப்பினும், தொடர்ந்து இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச வானொலியின் நிகழ்ச்சிகள் நமக்கு நேரம் குறைக்கப்பட்ட நிலையில் வந்து கொண்டே இருந்தன. அப்பொழுதுதான் இந்த ஆபத்து வந்தது.
நமது நாட்டின் பண்பலைகளில் நாகரீகமாகவும், ஒழுங்காகவும் பேசிக்கொண்டு இருக்கும் நமது நேயர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களுடன் பேசும்போது மட்டும் எங்கோ மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டு செல்கிறார்கள்.இது மட்டும்தான் காரணமா என்றால், ஆமாம் இதுவே பிரதான காரணம். இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் நேயர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். ஆள் இல்லாமல் பாட்டுகூட போடுவார்கள், நிகழ்ச்சி நடத்துவார்கள் ஆனால் நேயர்கள் வாய்க்கு வந்தமாதிரி பேசுவதை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டார்கள்....
தமிழா.... உனக்கு என்னவொரு நல்ல பழக்கம்.... காலங்காத்தால எழுந்தவுடன் 7.00 மணிக்கு இண்டர்நேஷனல் கால் போட்டு வாய்க்கு வந்த மாதிரி பேசுவது! இதில் அரசியல் வேறு “அவரின் பெயர் இத்தனை தடவை வந்து விட்டது. என் பெயர் மட்டுமே இனி வர வேண்டும், அவனை அழுத்தி வைக்க என்ன சூழ்ச்சி செய்யலாம்”.
தாங்காது சாமி, கொழும்பு சர்வதேச வானொலி மட்டுமல்ல, எந்த ஊடகமும் தாங்காது. சரி , உங்களுக்கு Phon-லாவது பேசத் தெரியும!? செலவாயிடும் என்றால் ஏன் பேசுறீங்க? எதிரில் இருக்கும் அறிவிப்பாளரை பேச விடாமல், பெரும்பாலான நேயர்கள் மூச்சை கட்டி பேசி தன் சொந்த பந்தம், சிநேகிதம், உலகில் உள்ள அத்தனை பேரையும் சொல்லி முடிச்சு, சொல்லாமல் கொள்ளாமல் ‘கட்’ செய்து விடுகிறார்கள், இவற்றையெல்லாம் இத்தனை நாள் அவர்கள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
நான் இந்தக் கட்டுரையில் சொல்லியதெல்லாம் கொஞ்சம் தான். முழுவதும் எழுதினால் தாங்காது நெஞ்சம்!! நேயர்களுக்காக வானொலி நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் என்றால் நேயர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம்., எல்லாவற்றையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்ன?
இதற்கு அந்த ‘டி’ சர்ட் வாங்குபவரும், ‘கலாச்சார’ டூர் போகிறவரும் எவ்வளவோ பரவாயில்லை. ஒழுங்காக ழைய பாடல்கள் வழங்கி, அரிதான முத்துச்சரங்கள் கோர்த்து அழகு பார்த்து நேயர்களை தலைமேல் தூக்கிவைத்த ஒரு வானொலியை, உலகிலேயே பழமை வாய்ந்த பெரும் அமைப்பை சிதைத்து சின்னாபின்னாபடுத்திவிட்டு, சில்மிஷ சிரிப்பை உதிர்த்து கொண்டிருக்கிற இந்த மூடுவிழா மன்னர்களுக்கு மன்னிப்பேகிடையாது.
இலங்கை வானொலி சாதித்ததும்ஏராளம், நேயர்களை சாதிக்க வைத்ததும் ஏராளம்.இப்பவும் கூறுகிறேன், ஒலிபரப்பை நிறுத்தி விட்டதால் தரத்தில் மட்டும் இலங்கை வானொலி எப்பொழும் தாழ்ந்துவிடாது. இதற்கு இணையான வானொலி இப்பொழுது மட்டுல்ல, எப்பொழுதும் இல்லை. காலம் நம்மை மன்னிக்கட்டும் - விஜயராம் எ. கண்ணன்.

ரேடியோ ஆஸ்திரேலியாவில் தமிழ்

1975 வரையில் ரேடியோஆஸ்திரேலியாவில் தமிழ் ஒலிபரப்பானது 41 மீட்டரில் செய்யப்பட்டு வந்தது. உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், ஆங்கில இசை, அறிவியல் செய்திகள், நேயர்களின்மடல்களுக்கு பதில் வழங்குதல், தமிழ்திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலிய வானொலி ஒலி பரப்பியது. ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிந்தவர் தமிழகத்தைச் சார்ந்த வி.எம்.சக்ரபாணி ஆவார். இவருடைய குரல் வளத்தில் அனுதினமும்இந்திய நேரப்படி இரவு 9.55 முதல் 10.15 மணி வரையில் தமிழ்திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி சிறப்புச் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி எம்.ஜி.ஆர் பாடல்களைக்கேட்கலாம். அதிலும் குறிப்பாக அடிமைப் பெண்,குடியிருந்த கோயில், ஆயிரத்தில் ஒருவன், காதலிக்க நேரமில்லை போன்றப் படப் பாடல்களை ஒலிபரப்பினார். உலகிலுள்ள வெளிநாட்டு வானொலி நிலையங்களிலிருந்து நேயர்களுக்கு தரச் சான்று அறிக்கை தவறாதுஅனுப்பி வைப்பார்கள். அவ்வறிக்கையைப் பூர்த்திச் செய்து நேயர்கள் திருப்பி அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து நேயர்களுக்கு ஸ்டிக்கர், நாள்காட்டி, டைரி, கீ-செயின்மற்றும் புத்தகங்களையும் அனுப்பி மகிழ்விப்பார்கள்.1975-ஆம் ஆண்டு ரேடியோ ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. பின்பு மாஸ்கோ வானொலியும், சமீபத்தில் பாகிஸ்தான் வானொலியும் தமிழ் ஒலிபரப்பினை நிறுத்தி விட்டன. 31-05-2008-டன் இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. கடந்த 84 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி ஒலிபரப்பி வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. - பத்தமடை எஸ். கந்தசாமி (+91 94872 44449)