Sunday, December 27, 2009

சர்வதேச அரங்கில் வானொலி


 இந்தியா: அகில இந்திய வானொலி – எழுபது ஆண்டுகளை அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவை கொண்டாடி வருகிறது. 1 அக்டோபர் 1939ல் ஆப்கானிஸ்தானுக்காக பாஸ்டு மொழியில் தனது சேவையைத் தொடங்கியது. தற்பொழுது 27 மொழிகளல் ஒலிபரப்பி வருகிறது.

 ஸ்வீடன்: ரேடியோ ஸ்வீடன் – ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிய வடிவில் நிகழ்ச்சி நிரல் பட்டியலை இனி அனுப்பாது. அது மட்டுமல்லாமல் இனி நேயர்கள் அனுப்பும் நிகழ்ச்சி தர அட்டவணைக்கு வண்ண அட்டைகளையும் அனுப்புவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது வண்ண அட்டை சேகரிப்பாளர்களுக்கு ஒரு வருத்தமான செய்திதான்.

 மலேசியா: ரேடியோ டிவி மலேசியா – உலகின் பெரும்பாலான வானொலிகள் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறிவரும் காலத்தில் மலேசிய வானொலியும் அடுத்த கட்ட ஒலிபரப்புக்கு தயார் ஆகிவிட்டது. டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை சிற்றலை ஒலிபரப்பிற்கும், டி.ஏ.பி. தொழில்நுட்பத்தினை பண்பலை ஒலிபரப்பிற்கு மாற்றாக செயல்படுத்தப் போவதாக அதன் இயக்குனர் கூறியுள்ளார். (அலோக்கேஷ் குப்தா, புது தில்லி)

 இந்தியா: பி.பி.சி. உலக சேவை – டெல்லி, மும்பை, லக்னோ, ஜலந்தர் மற்றும் கான்பூரில் உள்ள அகில இந்திய வானொலிகளோடு இணைந்து பி.பி.சி. உலக சேவை டிரஸ்ட் 156 வாரங்களுக்கான ஹிந்தி நாடகத்தினைத் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இது ஒலிபரப்பாகி வருகிறது. ஆண் பெண் சமுத்துவத்தினை மையக்கருவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நாடகம்.

Sunday, December 13, 2009

அகில இந்திய வானொலியின் ராஜாராம் - சிறப்பு செவ்வி


வானொலித் துறையானது பல்வேறு வடிவங்களில் மாற்றம் அடைந்து வருகிறது. ஒப்பீட்டு அளவில் உங்களின் கருத்து?
வானொலி மற்றும் ஒலிபரப்பு நுட்பங்கள் முன்னேறி வருகிறது. அன்மையில் எங்களுக்கு அகில இந்திய வானொலியில் ஒரு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வானொலியில் இருந்து அந்த பயிற்சியை வழங்கினர். வானொலித் தொடர்பான பல வேலைகளை ஒருவரே எப்படி செய்வது என்பது தான் அந்தப் பயிற்சியின் நோக்கம்.

உதாரனமாக ஒரு விவசாய நிகழ்ச்சியை அந்த விவசாயி இருக்கும் பகுதிக்கே சென்று நிகழ்ச்சியை பதிவு செய்து அங்கேயே அதனை எடிட் செய்து செயற்கைக்கோள் மூலம் நிலையத்திற்கு அனுப்பி அப்படியே ஒலிபரப்பும் வகையில் அந்தப் பயிற்சி இருந்தது.

அந்தப் பயிற்சியின் நிறைவில் கூறினேன், பயிற்சி நன்றாக இருக்கிறது ஆனால் இதனை செயல்படுத்தினால் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். ஆனால் பயிற்சி அளித்தவர் கூறினார், இதன் மூலம் பல புதிய செய்திகனை உடனுக்குடன் வழங்கலாம். ஆனாலும் அதற்கான நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் தற்பொழுது சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆள்பற்றாக்குறை, புதிய ஆட்களையும் சமீபகாலமாக நியமிப்பதில்லை.

தமிழ் செய்தி அறிக்கையில் தங்களின் அனுபவம் குறித்து கூறுங்கள்?
டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளில் ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய செய்தி அறிக்கைகள் மட்டுமல்லாமல் தமிழ் செய்திகளும் இணையத்திலும் கேட்கலாம். நியூஸ் ஆன் டிமான்ட் இணையதளத்தில் தமிழ் செய்திகளை கேட்பதோடு படிக்கவும் செய்யலாம்.

தமிழ் செய்திப் பிரிவில் நானும் சபீதா குமாரும் முழு நேர ஊழியர்கள். மற்றவர்கள் அனைவரும் பகுதி நேர பணியாளர்கள். தமிழில் டைப் செய்வதற்கு உதவியாக ஒரு மென் பொருளை ஹிந்திப் பிரிவில் கொடுத்தார்கள். அதன் துணை கொண்டு தமிழிலேயே தட்டச்சு செய்து படிக்க ஆரம்பித்தோம். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

இணையம் தங்களுக்கு எந்த அளவிற்கு செய்தி தயாரிப்பில் பயன்படுகிறது?
சென்னை வானொலி நிலையம் காலை தயாரிக்கும் மாநிலச் செய்திகள் மற்றும் திருச்சி வானொலி நிலையம் மதியம் தயாரிக்கும் முக்கியமான மத்திய செய்திகளை தற்பொழுது இணையத்தில் பார்த்துக்கொள்வதால் அவற்றையெல்லாம் மத்திய செய்திப்பிரிவுக்கு எடுத்துக்கொள்வோம். இது எங்களது செய்திப் பிரிவு டைரக்டருக்கு பிடித்துவிட்டது.

பொங்கல் விழாவின் போது எங்களால் தொடங்கப்பட்ட இந்த சேவை மற்ற மொழி பிரிவினர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் எங்களது இயக்குனர் தமிழ் பிரிவினர் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக உள்ளனர் என்றது தான். அங்கு வந்த குஜராத்தி மொழி பிரிவின் தலைவர் “நாங்கள் இந்த பணியினை ஏற்கனவே செய்து வருகிறோம்” என்றார். அதற்கு இயக்குனர் “தமிழ் பிரிவினர் அதனை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அறிந்துள்ளனர்” என்றது மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது எனலாம்.

புது தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவு எப்படி செயல்படுகிறது?
முதலில் செய்திகள் “பொது செய்திப்பிரிவு அறைக்கு” வரும். அதனை அங்குள்ள எடிட்டர் பெற்று மொழிப்பிரிவுக்கு அனுப்புவார். அவர் நல்ல எடிட்டராக இருந்தால் முக்கிய செய்திகள் அனைத்தினையும் எங்களுக்கு அனுப்புவார். ஒரு சிலர் தமிழ் நாடு என்று வந்தால் மட்டுமே அந்த செய்தியை எங்களுக்கு அனுப்புவர். இப்படி ஒவ்வொரு பிரிவாக கடந்து வரும்பொழுது, ஒரு சில முக்கியச்செய்திகள் விடுபட்டுவிடும். ஆனால் இந்த இணையதள வசதி வந்த பிறகு அது ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுவிட்டது எனலாம்.

வானொலி பணிக்கு தாங்கள் எந்த ஆண்டில் நுழைந்தீர்கள்?
1973 மே மாதம் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு பிரிவில் செய்தி எழுத்தராக பணியில் சேர்ந்தேன். அதற்கு முன் திருநெல்வேலி தினமலரில் பணியில் இருந்தேன். அதன் பின் மதுரை மற்றும் சென்னை தினமலரில் பணியாற்றினேன்.

தங்களின் படிப்பு எங்கே தொடங்கியது?
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னடப்பள்ளி. எனது உயர் நிலைப்படிப்பு எங்கள் ஊரின் அருகேயேத் தொடங்கியது. அதன் பின் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய பேராசிரியர் தா. வளனரசு, அவர் என்னை வழிநடத்திடா விடில் நான் ஏதேனும் ஒரு அரசு அலுவலகத்தில் கிளர்க்காக பணியை முடித்திருப்பேன். தமிழ் மேல் ஒரு பற்றுதலை உருவாக்கியவர் எனலாம். காரணம் அவர் ஒரு நல்ல பேச்சாளர். நான் இளங்கலை பொருளாதாரம் படித்துவிட்டு வேலைத் தேடிக்கொண்டு இருந்த சமைத்தில் இவர் தான் என்னை தினமலரில் சேர்த்துவிட்டார். (தொடரும்)

Sunday, December 06, 2009

சமுதாய வானொலி செய்தி

 குஜராத் பல்கலைக் கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையால் வளாக சமுதாய வானொலி யானது தொடங்கப் பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தினர் செய்துள்ளனர்.

 ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் புதிய வளாக சமுதாய வானொலியை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. “திபெத்திய குழந்தைகளின் கிராமியப் பள்ளி” இந்த வானொலியை இயக்க உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 “ஜகோ மும்பை” என்ற பெயரில் புதிய வளாக சமுதாய வானொலி Union Park Residents Association என்ற அமைப்பால் Khar Bandra, Mumbai பகுதியில் தெடங்கப் பட்டுள்ளது.

 தமிழகம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.ஆர் கல்லூரியில் வளாக சமுதாய வானொலி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 ஹரியானாவில் உள்ள குர்கானில் இருந்து செயல்பட்டுவரும் The Restoring Force (TRF) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சமுதாய வானொலியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, December 01, 2009

செயிண்ட் ஹெலினா வானொலியில் ஒலித்த தமிழ்


நன்றி: தினமணி கதிர் - 27 நவம்பர் 2009,

தனியார் பண்பலைகள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்
கல்கி வார இதழில் சமீபத்தில் வெளிவந்த பேட்டி

Sunday, November 29, 2009

அகில இந்திய வானொலியின் வண்ண அட்டை

இந்தியா: அகில இந்திய வானொலி – உலகம் முழுவதும் உள்ள சர்வதேச வானொலிகள் பலவற்றின் வண்ண அட்டைகள் நம்மில் பலர் பெற்றுள்ளோம். ஆனால் நம்மில் பலரிடம் அகில இந்திய வானொலியின் வண்ண அட்டை இல்லை. அதனைப் பெற இதுவே தகுந்த தருணம். தற்பொழுது இந்திய நேயர்களுக்கும் வண்ண அட்டைகளை அனுப்பி வருகிறது. அதனைப் பெற நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: All India Radio, Spectrum Management, Room: 204, Akashvaani Bhavan, New Delhi – 110 001, Email: spectrum-manager@air.org.in

Thursday, November 26, 2009

புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்பு

தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில்

எமது இணைய தளத்திலும் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம்.
மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5மணி தொடக்கம் 22மணி வரை ஒலிக்கவுள்ளது

இணைய முகவரி:
www.pulikalinkural.com

செய்கோள்
அலைவரிசை விபரம்:
Name: NTR- Tamil
Satellite: Eurobird 9
Frequency: 11919
Polarization: Vertical
Symbol Rate : 27500
Fec : 3/4

அதே நேரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையூடாக தமிழீழம்,சிறிலங்கா,இந்தியா மற்றும் அனைத்து ஆசியா நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்,18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.

வருகின்ற மாவீரர் நாள் சிறப்பு ஒலிப்ரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்
18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற அலைவரிசையிலும்
20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற அலைவரிசையில் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.

தமிழீழத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை மேற் கூறப்பட்ட அலைவரிசைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்

இவ்வண்ணம்
புலிகளின்குரல் நிறுவனம்
info@pulikalinkural.com
(Via Kalyan kumar, Trichy)

Wednesday, November 25, 2009

பிரபாகரன்: மாவீரர் தின உரை 2009

ஐ.பி.சி. தமிழ் வானொலியின் மாவீரர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்


25, 26, மற்றும் 27 நவம்பர் 2009 ஆகிய தினங்களில்
இந்திய நேரம் மதியம் 03.30 முதல் 06.30 வரை சிற்றலை 16 மீட்டர் 17560 அலை எண்களிலும்
இந்திய நேரம் மாலை 06.30 முதல் 07.30 வரை சிற்றலை 25 மீட்டர் 11510 அலை எண்களிலும் கேட்கலாம்

27 நவம்பர் 2009 மட்டும்
இந்திய நேரம் இரவு 07.30 முதல் 08.30 வரை சிற்றலை 25 மீட்டர் 11510 அலை எண்களிலும் கேட்கலாம்
இந்திய நேரம் இரவு 08.30 முதல் 11.30 வரை சிற்றலை 49 மீட்டர் 6225 அலை எண்களிலும் கேட்கலாம்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் லன்டனில் இருந்து நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது.
இதற்கான சிற்றலை ஒலிபரப்பிகள் ஜெர்மனியில் உள்ள Nauen எனும் இடத்தில் இருந்து செயல்படுகிறது.

வழமையான காலை ஒலிபரப்பினை தினமும் 05.30 - 0630 வரை 49 மீட்டர் 6045 அலை எண்களில் கேட்கலாம்.
(Source: WRN UT Nov 25, DX LISTENING DIGEST)

Sunday, November 22, 2009

சீன வானொலி: 55 புதிய QSL வண்ண அட்டைகள்

சீனா: சைனா ரேடியோ இண்டர்நேசனல் - சீனாவில் ஏராளமான சிறு குறு இனங்கள் உள்ளன. அவற்றை மையப்படுத்தி 55 புதிய QSL வண்ண அட்டைகளை தற்பொழுது சீன வானொலி தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. முதல் முறையாக ஒரே நேரத்தில் மிக அதிக வண்ண அட்டைகளை வெளியிடுவது இதுவே முதல் முறை ஆகும். China Radio International, 16, Shijingshan Road, Beijing, China, Zip Code 100040, Email: crieng@cri.com.cn

Wednesday, November 18, 2009

ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்


ஐ.பி.சி. தமிழ் தனது காலை ஒலிபரப்பினை கடந்த நவம்பர் 4, 2009 முதல் 6045 கி.ஹெட்சில் ஒலிபரப்புவதை நிறுத்திக்கொண்டது என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாலையில் ஒலிபரப்பு தொடரும் என்று கூரியும், அது இடம்பெறவில்லை. இணையதளமும் செயல்படவில்லை. மேலதிக விபரங்கள் எதிர்பார்கப்படுகிறது

Sunday, November 15, 2009

கொரிய மொழி - முற்றிலும் இலவசமாக

கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ் – தற்பொழுது தனது நேயர்களுக்கு கொரிய மொழியைக் கற்றுக்கொடுக்கிறது. அதற்காக தனது நேயர்களுக்கு 300 பக்கங்கள் கொண்ட புத்தகம் மற்றும் டி.வி.டி ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக அனுப்பி வருகிறது. புத்தகம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Korea Broadcasting System, 150-790, International Broadcasting, #18 Yeouido-dong, Yeongdeungpo-gu, Seoul, Korea. Email: english@kbs.co.kr

Thursday, November 12, 2009

பெங்களூர் ஹாம் திருவிழா 2009

கடந்த நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் பெங்களூரில் நடைபெற்ற Hamfest எனப்படும் ஹாம் திருவிழாவில் கலந்து கொண்டோம். அதில் வெளியிடப்பட்ட
ஹாம் திருவிழா மலர்

ஹாம் திருவிழாவை ஒட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் தபால் உரை

ஹாம் திருவிழா அடையாள அட்டை

ஹாம் திருவிழாவில் உணவு டோக்கன்

Some of the goodies which I bought there.
ஹாம் திருவிழாவில் விற்கப்பட்ட வண்ண அட்டை

ஹாம் திருவிழாவில் விற்கப்பட்ட மோர்ஸ் குறுந்தகடு by VU3SQY

Sunday, November 08, 2009

வோல்ட் ரேடியோ - மாத இதழ்

அமெரிக்கா: வோல்ட் ரேடியோ – ஹாம் வானொலி உபயோகிப்பாளர் களுக்காக பல்வேறு மாத இதழ்களை வெளியிட்டு வரும் பாப்புலர் கம்யுனிகேசன் தற்பொழுது –வோல்ட் ரேடியோ- எனும் தனது ஆங்கில மாத இதழை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகைச் செய்துள்ளனர். 84 பக்கங்கள் கொண்ட இந்த மாத இதழ் பல்வேறு பயனுள்ளத் தகவல்களை வழங்குகிறது. முகவரி: World Radio Online, Editorial Department, 25 Newbridge Road, Hicksville, NY 11801, Email: worldradioeditor@cq-amateur-radio.com

Friday, November 06, 2009

Dxers Guide and B09 Booklet available for saleDear Dxers,

Now you will get the wonderful issues of Dxers Guide and B09 Booklet available for sale. Which contain the new B09 schedules and lot of Dx related information in a pack of Two books. Annual subscription is Rs. 80/- only. For more details contact ardicdxclub (at) yahoo.co.in

Sunday, November 01, 2009

வானொலியின் எதிர்காலம்


வானொலி பதில்

நவீன மின்னணு தொழில் நுட்பக் கருவிகளால் வானொலி பாதிக்கப்படுமா?

வானொலியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?மின்னணுத் துறையும், தகவல் தொழில்நுட்பத் துறையும் கணினியின் உதவியுடன் மிகவும் விரைவாக முன்னேறி வருகின்றன. கணினி, இணையதளம், செல்பேசி, ஐபாட், எம்.பி3, எம்பெக்4, பாட்காஸ்ட் போன்ற முறைகளில் மிக விரைவில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இவை சிற்றலை வானொலிகளைப் போல் இயற்கையின் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியதில்லை.

வால்வ் வானொலிகள் இருந்த காலத்தில் (1940-1960) மின் ஆற்றலும், வெளி ஏரியலும் தேவைப்பட்டன. எங்கும் எடுத்துச் செல்லத்தக்கவாறு டிரான்ஸிஸ்டர் வானொலிப்பெட்டி வந்த போது (1960-1980) பேட்டரியால் இயக்கப்பட்டன. பின்னர் ஐ.சி (இன்டகிரேடேட் சர்க்யுட்) எனப்படும் மைக்ரோ சிப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதும், கையடக்கமாக வானொலிப்பெட்டிகள், ஒலிப்பதிவு சாதனங்கள் விற்பனைக்கு வந்தன.

ஒலி, ஒளி இரண்டையும் சேர்த்து அளிக்கவல்லத் தொலைக்காட்சி பெட்டியால் மக்கள் வரவேற்பு அதிகமாகவே, மனமகிழ்வுக்கு வானொலியை விட டிவியை பெரிதும் விரும்புகின்றனர். இது மக்களின் மனநிலையைப் பொறுத்தது.

காலத்திற்கு ஏற்ப மனிதன் அறிவியலில் முன் னேறும்போது வாழ்க்கைத் தரம் உயர மனப்பான்மையும் வேறுபடுவது இயற்கை, எனினும் தற்சமயம் வந்துள்ள அனைத்து மின்னணு சாதனங் களை வாங்கி மகிழ் வடைய நாம் பணம் செலவழித்தே ஆகவேண்டும். வானொலி மூலம் நாம் இசை, தகவல்கள், செய்திகள் ஆகியவைகளை இலவசமாகப் பெறமுடியும்.

எனவே எல்லோராலும் எப்போதும் பயன்படுத்தக்கூடியது வானொலி. அது உடனடியாக புதிய ஒலிபரப்பு முறைக்கு மாறிவருவதால், வருங்காலத்தில் (2020க்குள்) வானொலிப்பெட்டியும் டிஜிட்டலாக மாறிவிடும். தற்போது உள்ள அனலாக் வானொலிப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துவிடும். இணையதளம் மூலம் வானொலிகளைக் கேட்கும் வசதி வந்துவிட்டதால் பல சிற்றலை வானொலி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

மத்தியஅலை, பண்பலை வரிசைகளில் வழக்கம்போல் வானொலியை நாம் பல ஆண்டுகள் இலவசமாகக் கேட்க இயலும்.மனிதனின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்போது, பழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கையே. இசைத்தட்டுகள் இயக்கும் கிராமப்போன் மறைந்து இன்று சி.டி, டி.வி.டி, சாதனங்கள் மூலமாகவும், எம்.பி3, ஐபாட், செல்போன் மூலமாகவும் நாம் இசையைக் கேட்டு மகிழ்கிறோம்.

வால்வு வானொலிகள் மறைந்துவிட்டன. செல்போன் வந்ததும், யாரும் அடிக்கடி கடிதம் கூட போடுவதில்லை, தந்தி கொடுப்பதில்லை, இருப்பினும் அஞ்சல் நிலையங்கள் இன்றும் செயல்பட்டுத்தான் வருகின்னறன. அதுபோல் வானொலிகளும் மக்கள் ஆதரவைப் பெறும்பட்சத்தில் எளிதில் மறையக்கூடிய வாய்ப்பு இல்லை. - வி. பாலசுப்பிரமணி +91 99520 67358


Thursday, October 29, 2009

சர்வதேச வானொலி - அக்டோபர் & நவம்பர் 2009சர்வதேச வானொலி இதழ்கள் வெளிவந்துவிட்டது. அக்டோபர் இதழ் மிகவும் தாமதமாகவே வெளிவந்துள்ளது. காரணம் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் நினைவாக அந்த இதழைத் தயாரித்து உள்ளோம். நவம்பர் இதழ் வளமையான இதழாக மலர்ந்துள்ளது. இதழ் தேவைப்படுவோர் பக்கவாட்டில் உள்ள முகவரியைத் தொடர்பு கொள்ளவும். தனி இதழ் ரூ.10/-

Wednesday, October 28, 2009

வவுனியாவில் இலங்கை வானொலி


வவுனியாவுக்காக செய்து வந்த சேவையினை 2002 ஆண்டு போரின் காரணமாக நிறுத்தியிருந்த இலங்கை வானொலி தற்பொழுது மீண்டும் அந்த சேவையை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது. வவுனியாவில் உள்ள இரட்டைப்பெரியகுளத்தில் இருந்து இந்த சோதனை ஒலிபரப்பு தற்பொழுது செய்யப்பட்டு வருகிறது. (சிவராஜா தக்கீசன், இலங்கை)

Sunday, October 25, 2009

சூரியப் புள்ளியின் சுழற்சி


ஆராய்சியாளர்கள் பல்வேறு நலன் மற்றும் முன்னேற்பாட்டு விடயங் களுக்காக சூரியப் புள்ளிகளின் எண்ணிக்கை, சுழற்சியில் ஏற்படுத்தும் மாற்றங்களின் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு வருகின்றது. அமெரிக்கா வின் சிற்றலை சிற்பங்களை (நேயர்களை) செதுக்கும் ARRL என்ற நிறுவனமானது அவ்வப்போது வலைத்தளம் மூலம் உலகம் முழுமையும் இது பற்றிய செய்திகளை கொண்டு செல்கின்றது. அதன் சிறு கீற்றினை இப்பொழுது காண்போம்.


வரும் 2013ம் ஆண்டின் மத்தியில் சூரிய சுழற்சியின் 24 என்ற நிலை உச்சத்தை அடைய உள்ளது. வருடாந்திர சுழற்சியில் நடைபெறும் விண்வெப்பக் குழுவின் சந்திப்பானது இரு மாதங்களுக்கு முன் கொலராடோ மாகாணத்தில் நடைபெற்றது. “Solar Cycle 24” அதாவது “சூரிய சுழற்சி 24” 2013ல் புவியை நோக்கி நகரும் பொழுது அப்புள்ளிகளின் என்ணிக்கை 90 என்ற அளவில் இருக்குமாம். எனில் அந்த நாளில் நம் சிற்றலைகளின் மீதான தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதே நம் போன்ற வானொலி நேயர்களின் எதிர்பர்ப்பு.


விஞ்ஞானிகளின் கருத்து உண்மையாகும் நிலையில், இதற்கு முன் 1928ம் ஆண்டில் வந்த ‘சூரியப்புள்ளி 16’ என்ற நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 78 சூரியப்புள்ளிகளின் தாக்கம் நம்மை அடைந்த நிலையே மிகவும் குறைவானது, என்ற கருத்தையும் அவர்கள் கூறுகின்றனர். இந்த குறைவான நிலையினை அடந்த சூரியப்புள்ளிகளின் தாக்கம் 1928ம் ஆண்டானது, 1750ஆம் ஆண்டுகளில் இருந்து வந்த கணக்கின் படி 9ம் நிலை ஆண்டாகும்.


இவ்வாறாக சூரிய சுழற்சி 23ஆனது 2008ம் ஆண்டின் இறுதியில் சூரியப்புள்ளிகள் குறைவான சூரிய சுழற்சியின் தோன்றலாகும். அதே ஆண்டு டிசம்பர் மாதம் சூரியன் குறைந்த அளவு புள்ளிகளுடன் நீண்ட நாட்கள் இருந்ததாம். இதன் கணக்கை வரிசைப்படுத்துகையில் 1823ல் இருந்து முதன் முறையாகவும் 1755ல் இருந்து மூன்றாவது முறையாகவும் வருகிறதாம்.


சூரிய சுழற்சியின் நீட்சியானது சுமார் 11 ஆண்டுகளைக் கொண்டது. அதாவது குறைவான புள்ளிகளைக் கொண்ட சுழற்சியில் தொடங்கி மற்றொரு குறைவான புள்ளிகளைக் கொண்ட சுழற்சிக்காலம் வந்தடையும் வரை உள்ள காலமாகும். 2007ம் ஆண்டில் நலிவுற்றிருந்த காலத்தில் கூடிய இந்த ஆய்வுக்குழு 2008 மார்ச் மாதம் முதல் சூரிய சுழற்சியில் சூறாவளி தோன்றும் எனவும் அதன் தாக்கம் 2011ன் இறுதி மற்றும் 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நிலையை அடையும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.


எதிர்பாராமல் சூரிய புள்ளிகளின் தீவிரம் குறைவுற்றிருந்த நாளில் கூடிய குழுவானது அவர்களின் 2007ம் ஆண்டின் அறிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தச் செய்துள்ளது. அதன்படி அக்குழுவின் மத்தியில் ஒரு பொதுக்கருத்தும் உறருவாகியுள்ளது. சூரிய சுழற்சியின் பொழுது புள்ளிகளின் அடர்வும், தீவிரமும், புவியின் அளவிற்குக் கூட தோன்றும்.


சூரியப் புள்ளிகளின் காந்த வீச்சின் தாக்கமும் மேலும் அதிக எண்ணிக்கையிலான புள்ளிகளின் சூறாவளி பெரும் மாற்றத்தினைக் கொண்டு வரும். காந்த அலைகளை சுழற்றும் நிலை போன்ற எண்ணுதற்கரிய மாற்றங்கள் அடையும் ஆண்டாக வரும் வருடங்கள் அமையலாம்.
- ARRLல் இருந்து தமிழில் ADXC 2131 வேதாரண்யம் ஏ. ரகு. ragu-a@in.com

இலங்கை வானொலியை டிஸ் ஆண்டனா துணைகொண்டேக் கேட்கலாம்


தற்பொழுது இலங்கை வானொலியை நமது சாதாரன டி.டியின் டிஸ் ஆண்டனா துணைகொண்டேக் கேட்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழ்கண்டவாறு உங்களது டிஸ்சினை அமைக்கவேண்டும். 45 டிகிரி மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் டிஸ்சினை வைக்க வேண்டும் Satellite: 10,600 Frequency: 11,673 Symbol Rate: 27,689 Verticle, 22K on or off. Address: Dialog Telecom, 275, Nawala Road, Nawala, Sri Lanka, Telephone +94 (0)11 460 6060 / (0)77 767 9679, Telefax +94 (0)11 460 6069, Home Page http://www.dialog.lk/en/tv/ Satellites: Intelsat 12 (Dialog TV)

Sunday, October 18, 2009

விமானங்கள் பயன்படுத்தும் அலைவரிசை

The Worldwide Aeronautical Communication Frequency Directory எனும் நூலைப் பற்றி இந்த மாதம் காணலாம். ராபர்ட் ஈவம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் ஒரு சுவாரஸ்யமான விடயத்தினைத் தெரிந்து கொள்வோம். நம்மில் எத்தனைப் பேர் நமது வானொலிப் பெட்டியை உற்று கேட்டுள்ளீர்கள்?!

அறிவிப்பாளர்களின் குரல்களைத் தவிர்த்து வரும் வேறு ஒலிகளை நம்மில் பெரும்பாலோர் கண்டுகொள்வதே இல்லை. அதற்கு காரணம் அவைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. அப்படி உங்கள் வானொலிப் பெட்டியில் கேட்கும் ஒவ்வொரு ஒலியும் ஒரு சில அர்த்தங்களுடன் பயனிக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவ்வாறு பயனிக்கும் ஒலிகளுக்கு என்ன? அர்த்தம் இருக்க முடியும் என நீங்கள் எண்ணினால் உடனே நீங்கள் படிக்க வேண்டிய நூல் தான் The Worldwide Aeronautical Communication Frequency Directory.

உங்கள் வீட்டின் மேல் உள்ள வானத்தில் விமானங்கள் பறப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், ஆனால் செயற்கைகோள்களைப் பார்த்து இருக்கிறீர்களா?! அதனால் என்ன, அவை அனுப்பும் ஒலிகளையாவது கேட்கலாமே.. அதற்கு பயன்படுவது தான் இந்த நூல். 2350 அலைஎண் விபரங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூலின் துணை கொண்டு அவற்றைக் கேட்கலாம். பயணிகள் விமானம் மற்றும் இராணுவ விமானங்கள் பயன்படுத்தும் அலைவரிசைகளையும் இதில் வழங்கியுள்ளது கூடுதல் சிறப்பு. ரூ. 1115க்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும் sales@universal-radio.com எனும் மின் அஞ்சல் முகவரியை.

Sunday, October 11, 2009

டிஜிட்டல் பக்கம்


ஜெர்மனியின் புகழ்பெற்ற வானொலித் தயாரிப்பாளர்களான Grundig நிறுவனத்தினால் சமீபத்தில் ஒரு புதிய வானொலி வெளியிடப்பட்டது. Grundig G8 Traveler II எனும் பெயர் கொண்ட அந்த வானொலி பற்றி இந்த மாதம் காணலாம். இந்த வானொலியில் மத்திய அலை (520-1700), பண்பலை (88 – 108) சிற்றலை (3190-3450, 3850-4050, 4700-5100, 5700-6300, 7080-7600, 9200-10000, 11450-12200, 13500-13900, 15000-15900, 17450-17900, 18850-19100, 21430-21950) ஆகியவற்றுடன் நெட்டலை வரிசையையும் கேட்கலாம். அனலாக் சர்க்கியூட், ஆனால் டிஜிட்டல் டியுனிங் வசதியுடன் வந்துள்ளது. 24 மணி நேர கடிகாரம் மற்றும் அலாரம் வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. 500 அலைவரிசைகளை இதில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். மூன்று ஏஏ பேட்டரியில் இயங்கக்கூடிய இந்த வானொலிப் பெட்டியுடன் லெதர் பவுச் மற்றும் ஸ்டிரியோ ஹெட்போனும் வழங்கப்படுகிறது. 12.2 அவுன்ஸ் எடை கொண்ட இந்த வானொலிப் பெட்டியை மின்சாரத்திலும் இணைத்துக் கேட்கலாம். விலை ரூ. 2550/-, மேலதிக விபரங்களுக்கு www.universal-radio.com எனும் இணைய முகவரியை பார்க்கவும்.

Sunday, October 04, 2009

இலங்கை வானொலி செய்தி

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் இலங்கை வானொலியின் சேர்மேன் ஹட்சன் சமரசிங்கே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார். புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாரு இலங்கை வானொலி மாற்றம் அடைய உள்ளதாம். அதன் முதல் கட்டமாக இலங்கை வானொலியில் உள்ள ஒலிக்களஞ்சியமானது டிஜிட்டல் தொழில்நுட்பதிற்கு மாற்றப்படுகிறதாம். அதுமட்டுமல்லாமல் புதிதாக ஆறு ஒலிபரப்பிகளை கொழும்பு-க்கு அருகில் நிறுவப்பட்டுள்ளதாம். இன்னும் பல்வேறு மாற்றங்களையும் எதிர்பார்களாம் என்றும் அவர் கூறியுள்ளார்

Friday, October 02, 2009

பி.பி.சி தமிழோசையில் சீன வானொலி தலைவர் கலையரசியின் பேட்டி

சீனாவில் கம்யூனிஸ ஆட்சியின் மணி விழா கொண்டாட்டங்கள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 60 வருட ஆட்சியின் பூர்த்தியை முன்னிட்டு தமது இராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் கொண்டாட்டங்களை சீனா நடத்தியுள்ளது.

தலைநகர் பீஜிங்கில் நடந்த பேரணியில், நீண்ட வரிசையில் யுத்த தாங்கிகளும், ஏவுகணைகளும் சிப்பாய்களும் அணிவகுத்துச் சென்றனர்.

பின்னதாக தியானமன் சதுக்கத்தில் கண்கவர் வாண வேடிக்கை மற்றும் தேசபக்த பாடல்கள், நடனங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதேவேளை, திபத்தில் சீன ஆட்சிக்கு எதிராக இந்த தினத்தை முன்னிட்டு எதிர்ப்புக் காட்டிய 70 நாடுகடந்த திபெத்தியர்களை நேபாளத்தில் பொலிஸார் கைது செய்தனர்.

சீனாவில் கம்யூனிஸ ஆட்சியின் மணிவிழா கொண்டாட்டங்கள் குறித்து சீன சர்வதேச வானொலியின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த கலையரசி தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

கலையரசியின் பேட்டியியைக் கேட்க இங்கே சொடுக்கவும்

Sunday, September 27, 2009

ஹாம் கப்பல் பயணம்

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்றது போன்று இந்த ஆண்டு கேரளாவில் உள்ள கடலூரில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து சிறப்பு கலங்கரை விளக்க ஹாம் வானொலி AT8LHC என்ற பெயரில் செயல்பட்டது. அந்த சிறப்பு நிலையத்தின் புகைப்படங்களைக் காண சொடுக்கவும் http://picasaweb.google.co.in/lionajoy/AT8LHCKadalurPointLightHouseCentenaryILLW#

Ham Radio Cruise 2010 ஆண்டுக்கான ஹாம் கப்பல் பயணத்தினை அமெரிக்க நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து நாட்கள் கப்பலிலேயே செல்லும் போதே வானொலிகளை உபயோகப்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். வித்தியாசமான இந்த நிகழ்வு பற்றி விரிவாக அறிந்து கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Cruises by Ashley, 505, New Zealand Reach, Chesapeake, VA 23322, USA. Alt: 757-410-2510, Fax: 757-410-2510, or MOAA Vacations at 1-800-211-5107, Email: ashleytravel@cox.net, http://www.hamradiocruises.com/Contac-2010.html

ஆனைமலை அமெச்சூர் ரேடியோ கிளப்

ஆனைமலை அமெச்சூர் ரேடியோ கிளப் வரும் அக்டோபரில் ஹாம் தேர்வினைப் பொள்ளாச்சியில் நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ANAMALAI AMATEUR RADIO CLUB, SHRI KRISHNAA VITHAYAALAYAM MATRIC SCHOOL, Divansha pudur (Post), Pollachi, Coimbatore (Dt), Tamilnadu. (K.Ibrahim, VU3IRH – 98420 63686)

Sunday, September 20, 2009

ஹாம் பக்கம்

திருச்செங்கோடு அமெச்சூர் சொசைட்டி சமீபத்தில் ஏற்காட்டில் உள்ள ரிபீட்டரை எக்கோ லின்க்குடன் இணைத்துள்ளது. இதன் மூலம் இனி உலக நாடுகளின் ஹாம் உபயோகிப்பாளர்களும் இந்த ரிபீட்டரைப் பயன்படுத்தலாம். அதேப் போன்று இந்த ரிபீட்டரைப் பயன்படுத்தும் ஹாம்களும் பல்வேறு நாடுகளின் ஹாம்களைத் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பாக இது இருக்கும். Echo Link is connected to VU2TCD Repeater.VU2TCD Morning Net 07:00 am to 07:45 am, Evening Net 09:15 pm to 09:45 pm. VU HAM's Thank OM.Paneer VU2PCP taking more efforts to connect the Repeater on Echo Link Round a clock. (VU3IRH- Ibrahim)

Friday, September 18, 2009

நாமக்கல் மாவட்டத்தில் பி.ஜி.பி சமுதாய வானொலி

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.ஜி.பி கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசானது சமுதாய வானொலி தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. "பி.ஜி.பி சமுதாய வானொலி" என்ற பெயரில் இயங்க உள்ள இந்த வானொலியானது சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளது. இந்த வானொலி பற்றிய மேலதிக விபரங்களுக்கு..

PGP GROUP OF EDUCATIONAL INSTITUTIONS
NH-7, Namakkal - Karur Main Road,
Namakkal - 637207
Tamilnadu, India
Phone : 00 91 4286 267592
E-mail : contact@pgpedu.ac.in

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் மறைந்தார்

பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னைில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.

தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.

இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தார். மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''
(Source: http://thatstamil.oneindia.in)

அம்பலம் மின்னிதழுக்கு கொடுத்தப் பேட்டி

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் இலட்சக்கணக்கானவர்கள் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தோம். அவரது நேர்காணல் இங்கே.

தென்கச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரத்துச் சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். காஞ்சி பல்லவ மன்னனின் படைவீரர்களின் ஒரு பகுதியினர் குடியேறி உருவான ஊர் இது என்று எங்கள் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பழங்கால கத்திகள் கேடயங்கள் இப்போதும் எங்கள் வீடுகளில் உண்டு.

தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் பகுதியில் சுவாமிநாதன்கள் நிறையபேர் உண்டு. சுவாமிமலை பக்கத்தில் இருப்பது ஒரு காரணம்.

கும்பகோணத்தில் படிக்கிறபோது ஒரே வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்தோம். அடையாளம் தெரிவதற்காக வகுப்பு ஆசிரியர் ஊர்ப் பெயரையும் சேர்த்துவிட்டார்.

'இன்று ஒரு தகவல்' - என்ற சிந்தனை எப்படி வந்தது?

இந்த சிந்தனை எனக்கு வரவில்லை. சென்னை வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம் அவர்களுக்கு வந்தது.

இதுவரைக்கும் எத்தனை இன்றுகளைக் கடந்திருக்கிறீர்கள்?

இதுவரைக்கு 11 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன்.

மறக்க முடியாத இன்று எது?

இன்று ஒரு தகவலை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று என்றைக்கு என்னுடைய அதிகாரிகள் சொல்கிறார்களோ அன்றுதான் எனக்கு மறக்கமுடியாத இன்று.

கதை இல்லாமல் தகவலே சொல்வதில்லையே. தனியாகச் சிறுகதையோ நாவலோ எழுதியதுண்டா?

ஆரம்பகாலத்தில் என்னுடைய இளம் வயதில் ஒருசில சிறுகதைகள் எழுதியது உண்டு. என்னைவிட சிறப்பாக பலபேர் எழுதுவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்சம் இழுத்துப் பேசுகிற இந்த கிராமிய பாணிப்பேச்சு எப்போது வந்தது?

இழுத்துப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெரியுமா? மூச்சு வாங்குகிறது. அவ்வளவுதான்.

உங்கள் கிராமிய வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

கிராமிய வாழ்க்கையில் பட்டணங்களைக் கனவு கண்டு கொண்டிருந்தேன். பட்டண வாழ்க்கையில் கிராமங்களைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

உங்கள் கிராமத்தில் உங்களை மிகவும் கவர்ந்த மனிதர் யார்?

அப்படி ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவரைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் - நிலைக்கண்ணாடியில்!

அரசியலில் கூட்டணி பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?

அரசியலைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:

"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"

கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"

அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"

உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட பாடல் எது? ஏன்?

"பத்தினிப்பெண்' என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கிற 'உலகம் என்பது ஒரு வீடு' என்கிற பாடல். காரணம் : அதன் அருமையான கருத்து அற்புதமான இசை.. இனிமையான குரல் எல்லாமும்தான்!

உண்மையைப் போன்ற ஒரு கற்பனையையும் கற்பனையைப் போன்ற ஓர் உண்மையையும் சொல்ல முடியுமா?

இது, விசு அல்லது அறிவொளி ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் யார்? எந்தக் காட்சியில் நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்தீர்கள்?

நாகேஷ்.

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' என்கிற படம் பார்த்தபோது அப்படிச் சிரித்த அனுபவம் உண்டு.

நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏதேனும் ஜோக் அடித்ததுண்டா?

ஜோக் அடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதுண்டு.

உங்கள் திரையுலக அனுபவம் எப்படி இருந்தது?

திரையுலகத்தில் நீண்ட அனுபவம் ஏதுமில்லை. 'பெரிய மருது' - என்கிற படத்தில் டணால் தங்கவேலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'காதலே நிம்மதி' - என்கிற படத்தில் நீதிபதியாக கொஞ்சநேரம் வந்தேன்.

அதன் விளைவு -
அதற்குப் பிறகு யாருமே என்னை நடிக்கக் கூப்பிடுவதில்லை!

உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?

எனக்கு.. கேட்பது பிடிக்கும்! பேசுவது பிடிக்காது!

உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாமிநாதன் யார்? பேச்சாளரா? எழுத்தாளரா? உதவிநிலைய இயக்குநரா? குடும்பத் தலைவரா? நடிகரா?

படுத்துத் தூங்குகிற சுவாமிநாதனைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவரால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இல்லை!

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 31-10-1999)
Via
http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_112399634088432220.html

Monday, September 14, 2009

சர்வதேச வானொலி - செப்டம்பர் 2009இந்த இதழில்...
  • இலங்கை வானொலி− ஹட்சன் சமரசிங்கே சிறப்பு செவ்வி
  • ஜெகத்கஸ்பரின் வீரம் விளைந்த ஈரம் - விமர்சனம்
  • விமானங்கள் பயன்படுத்தும் வானொலி அலைவரிசைகள்
சந்தாதாரர்களுக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது
முழுமையான இதழைப் படிக்க தொடர்பு கொள்ளவும் +91 98413 66086

Sunday, September 13, 2009

புதிய ஐ.ஆர்.சி அறிமுகம்

சர்வதேச வானொலி கேட்கின்ற பெரும்பாலான நேயர்கள் கடிதம் எழுதும் பொழுது இந்த ஐ.ஆர்.சி-யை இணைத்து அனுப்புவர். அது சரி, ஐ.ஆர்.சி என்றால் என்ன? ஆங்கிலத்தில் இண்டர்நேசனல் ரிப்ளே கூப்பன் என்பதன் சுருக்கமே ஐ.ஆர்.சி. இதனை ஐக்கிய நாடுகள் சபையினர் வெளியிடுகின்றனர். உலகின் அனைத்து நாடுகளின் தபால் துறையினரும் இந்த ஐ.ஆர்.சி-யை ஏற்றுக்கொண்டு அந்த அந்த நாட்டின் தபால் தலையை வழங்குவர்.ஒரு சில வானொலிகள் ஐ.ஆர்.சி-யை அனுப்பினால் மட்டுமே வண்ண அட்டை மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்களை அனுப்புவர். காரணம் பொருளாதார நெருக்கடி காரணமாக இவை ஐ.ஆர்.சி-யை நேயர்களிடம் கேட்கின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் இருந்த ஐ.ஆர்.சி தற்பொழுது தபால் அட்டை அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. சமீப காலமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஐ.ஆர்.சி-யை வெளியிட்டு வருகின்றது.பாப்புவா நியு கினியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளின் வானொலிகளுக்கு எழுதும் போது ஐ.ஆர்.சி-யை இணைத்து அனுப்பினால் மட்டுமே பதில் அனுப்புவர். தற்பொழுது உள்ள ஐ.ஆர்.சி வரும் டிசம்பர் 2009-டன் நிறைவடைகிறது.இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களில் ஒரு ஐ.ஆர்.சி-க்கு ரூ. 15-க்கான தபால் தலைகளை வழங்குவர்.

ஆனால் அதே ஐ.ஆர்.சி-யை இங்கு வாங்க வேண்டும் என்றால் ரூ. 50 கொடுக்கவேண்டும். ஆனால் தற்பொழுது ரூ. 50 கொடுத்தாலும் ஐ.ஆர்.சி கிடைப்பதில்லை.மாநிலத்தின் தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் கூட இன்று ஐ.ஆர்.சி கிடைப்பது அரிதாக உள்ளது. அடுத்த ஆண்டு வெளி வருகின்ற புதிய ஐ.ஆர்.சி-யாவது இந்தியாவில் கிடைக்குமா?வெளிநாடுகளில் உள்ள ஹாம்கள் இந்த ஐ.ஆர்.சி-யை விற்பனை செய்கின்றனர். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்: Emails: EA5KB@telefonica.net, EA7FTR@gmail.com, EB7AEY@gmail.com

Thursday, August 27, 2009

பார்டு வானொலி 91.2 திருமங்கலத்தில்


மதுரை மாவட்டம், டி.புதுபட்டியில் செயல்பட்டுவரும் பார்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் வரும் 8 செப்டம்பர் 2009 அன்று "பார்டு வானொலி"-யைத் தொடங்க உள்ளது. இதுவே தமிழகத்தின் முதல் சமுதாய வானொலி ஆகும். இதுநாள் வரை தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வானொலிகளும் வளாக சமுதாய வானொலிகளாகவே செயல்பட்டு வந்தன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

Tuesday, August 25, 2009

நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...


MGR INTERVIEW IN CEYLON RADIO ON I-03-1959
CLICK HERE

[நன்றி-'நேயர் திலகம்' விஜயராம் ஏ.கண்ணன்,14, தாயுமானவர் தெரு,ஆத்தூர் 636102, posted by யாழ் சுதாகர்]

Tuesday, August 11, 2009

பொள்ளாச்சியில் ஹாம் தேர்வு.

சர்வதேச வானொலி நேயர்கள் இந்தத் தேர்வினை எழுத விரும்பினால், கீழ்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

M.K.Ananthaganesan, President. VU3GPF.
K.Ibrahim, Addl- Secretary, VU3IRH, (98420-63686)
ANAMALAI AMATEUR RADIO CLUB
SHRI KRISHNAA VITHAYAALAYAM MATRIC SCHOOL
Divansha pudur (Post),
Pollachi..
Coimbatore ( Dt)
Tamilnadu.

Note: - ஹாம் தேர்வுக்கான விண்ணப்பத்தினை பதிவு இறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்கவும்
If need of application download here

Saturday, August 08, 2009

வேரித்தாஸ் உறவுச் சங்கமம் 2009 - திருச்சி


வேடந்தாங்கல் சரணாலயத் திற்கு சீசனுக்கு பல நாடுகளிலிருந்து பறவைகள் வந்து சேரும். அது போல் பல மாவட்டங்களிலிருந்து வந்த நேயர்கள் திருச்சி நகரில் சங்கமித்தனர். திருமண விழாவில் உறவினர்கள் ஒன்று கூடி நலம்விசாரித்து மகிழ்வது போல் பங்கேற்றனர்.

காலையில் குன்றக்குடி ஆதீனம் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு நேயர்களால் தரப்பட்டது. அதேபோல் வரவேற்புரைக்கு பின்பு திருச்சி கலைக் காவிரியின் இசை, நாட்டிய நிகழ்வுகள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டன. பயணக் கலைப்பில் வந்து சேர்ந்த நேயர்களை குன்றக்குடி அடிகளாரின் பேச்சு உற்சாகமடையச் செய்தது.

ஜெரோம், டெனிஸ் வாய்ஸ் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
பின்பு இந்த ஆண்டுக்கான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றி தழும், நினைவுப் பரிசும் வழங் கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு நேயர்கள் கூறிய நிறை, குறை, ஆலோசனைகளை ஆர்வத்துடன் குறித்துக் கொணடார் திரு. டிவோட்டோ அவர்கள்.

இரண்டு ஆண்டுக்கு முன்பு உறவு சங்கமத்தில் திரு. தாய் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மொழிப் பிரிவு காலை வேளையில் நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தை தமிழ்பிரிவின் மாலை நேர நிகழ்ச்சியை காலை நேரத்தில் மறு ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினார். இதுவரை நிறைவேறவில்லை.

அதே போன்ற அறிவிப்பு மீண்டும் இந்த ஆண்டு விழா மேடையில் உறுதியாக கூறப்பட்டது. இதுவாவது நிறைவேறுமா?! நேயர்களின் பல்வேறு கேள்வி களுக்கு டென்னில் வாய்ஸ் அவர்கள் சிறப்பாக பதிலளித்தார். வேரித்தாஸ் தமிழ்க் குயில் சந்தோஷினி விழாவில் மிஸ்சிங். மற்றபடி விழா உற்சாகத்தோடு சிறப்பாக நடைபெற்றது.

வழக்கமாக உறவு சங்கம விழாவில் நேயர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் போதே நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். இம்முறை நிகழ்ச்சி முடிந்து மாலையில் தான் தரப்பட்டது. இதற்காக நேயர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்படுத்தி கலக்கமடையச் செய்து விட்டனர். வேண்டாம் இந்த விபரீதம். 
- வானொலி நேசன், வண்ணை கே. ராஜா,

Wednesday, August 05, 2009

வானொலித் துணைவன்

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வானொலி நேயர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அருமையான அகராதி ஆகும். ஆங்கிலம் - தமிழ் அகராதிகளை மட்டுமே பயன்படுத்தி வரும் பெரும்பாலோர்க்கு இது புதிய அகராதியாக இருக்கும். காரணம் தமிழ் தமிழ் ஆங்கிலம் என்ற வகையில் 10 ஆண்டுகள் கடுமையான உழைப்பின் பயனாக வெளி வந்துள்ளது.

நம்மில் பலர் ஆங்கில வானொலிகளுக்கு கடிதம் எழுதும் பொழுது, சரியான ஆங்கில வார்த்தைகள் கிடைக்காமல் திணறு வதுண்டு. அதன் காரணமாக ஒரு சிலர் கடிதங்களைக் கூட எழுதுவதில்லை. அப்படிப்பட்ட வர்களுக்கு இந்த அகராதி பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் கூட தெரியாதத் தமிழ் வார்த்தைகள் பல இதில் உள்ளன. ஒரு தலைசொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை விரிவாக விளக்கி யுள்ளதால், பல பயனுள்ள தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றது.

இலங்கைத் தமிழ் சொற்கள், இஸ்லாமிய தமிழ் சொற்கள், அறிவியல் தமிழ் சொற்கள் எனப் பலப் பயனுள்ளச் சொற்களை இதில் விரிவாக விளக்கியுள்ளனர். 1600 பக்கங்களுக்கும் மேல் உள்ள இந்த நூலின் விலை ரூ. 495 சர்வதேச வானொலி வாசகர்களுக்கு சிறப்பு சலுகை விலையில் கிடைக்கும் மேலதிக விபரங்களுக்கு: Cre-A, H-18, South Avenue, Tituvanmiyur, Chennai – 600 041, Tel: 044-24411086

Saturday, August 01, 2009

டிஜிட்டல் பக்கம்

இந்த மாதம் நாம் பார்க்கவுள்ள டிஜிட்டல் ரேடியோ, கிரண்டிக் நிறுவனத்தின் தயாரிப்பாகும். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வானொலியின் மாடல் எண் எம்400 ஆகும். இதில் மத்திய அலை (520-1410) பண்பலை (87-108) மற்றும் சிற்றலை (5..9 - 18) ஆகியவை உள்ளன.

இதன் சர்கியூட் அனலாக்கில் இருந்தாலும், டிஸ்பிளே டிஜிட்டல் வடிவில் உள்ளதால் எளிதாக ஒலிபரப்புகளை கேட்க உதவுகிறது. ஒவ்வொரு கிலோ ஹெர்ஸôக நகரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த வானொலி, அலாரம் மற்றும் கடிகாரத்துடன் கிடைக்கிறது. அரை இஞ்ச் பருமனே கொண்ட இந்த வானொலிப் பெட்டியை எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடிகிறது. இரண்டு சிறிய பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த வானொலிப் பெட்டியுடன் லெதர் பை மற்றும் இயர் போனும் வழங்கப்படுகிறது. இந்திய விலை ரூ. 4500. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை www.universal-radio.com எனும் இணைய முகவரியில் காணலாம்.

Friday, July 31, 2009

ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் ஐம்பெரும் விழா


ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பாக ஐம்பெரும் விழா வரும் ஆகஸ்ட் 1, 2009 அன்று பெருந்துறை அருகில் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு அழைப்பிதழைக் காணவும்.

Wednesday, July 29, 2009

பாஸ்கர் நெப்போலியன்


தஞ்சை மண்ணின் உயர்ந்த மனிதன் நீ!
உலக சிற்றலை வானொலியின் காதலனும் நீ!
ஓய்வு நேரத்திலும் ஓய்வின்றி வானொலி கேட்கும் ரசிகனும் நீ….!
வானொலி உலகின் முத்திரை நேயரும் நீ!
உன் வாழ்க்கை ஒரு தொடர் வண்டி பயணம்
உன் வாழ்வோடு இணைந்து வந்த இணைப்பு பெட்டிகளை கழட்டி விட்டு சென்றது ஏனோ?!
ஆம்! ஓயாது உன் காதோரம் ஒலித்த வானொலிப் பெட்டி உன்னை காணாமல் ஏங்குகிறது!
விண்ணோக்கி செல்லும் டிஸ்கவரி ஓடம்கூட பத்திரமாய் பூமி வந்திறங்குகிறது
நீ சென்ற வாகனமோ உன்னை விண்ணோக்கி அனுப்பிவிட்டு வீதியில் கிடக்கிறதே?
திருச்சி உறவு சங்கமத்திற்கு வந்து அனைவருக்கு ஹாய்…! என்றாய்
நிரந்தரமாய் பூமியை விட்டுச் சென்று விடுவாய் எனத் தெரியாமல் யாருக்கும் பை… பை… சொல்ல மறந்து போனாய்!
வாழ்க்கைப் பயணம் அலுத்துவிட்டதா?
உன் வானொலி தேடல் களைத்து விட்டதா?
காற்றுள்ள வரை ஒலி இருக்கும்
நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்!
ரயில் சிநேகம் பயணம் முடியும் வரை
உன் வானொலி சிநேகம் எங்கள் வாழ்வு முடியும் வரை
கடல் அலை ஓயாது
உன் நினைவலை மறையாது
நிதம் உன்னை நினைத்து பார்க்க நாங்கள் இருக்கிறோம்
நேரில் பேச நீ இல்லையே!
- வானொலி நேசன் வண்ணை கே. ராஜா

Saturday, July 25, 2009

எல்லையில்லா வானம்

புதுடில்லி விஞ்ஞான் பிரசார் அமைப்பும், அகில இந்திய வானொலியும் இணைந்து 'எல்லையில்லா வானம்' என்ற 54 வார அறிவியல் தொடர் நிகழ்ச்சியை 4.4.2009 அன்று தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி இந்தியா முழுவதும் 19 மொழிகளில் 118 அகில இந்திய வானொலிகளில் ஒலிபரப்பப் படுகிறது. இந்த அறிவியல் நிகழ்ச்சியை தமிழில் மதுரை அகில இந்திய வானொலி வழங்குகிறது.

சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு சென்னை ஏ, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய வானொலிகள் மத்திய அலைவரிசையிலும், காரைக்கால் பண்பலை வரிசையிலும் கேட்கலாம்.

வானிலை தொடர்பான எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் இந்நிகழ்ச்சி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச வானொலி நேயர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க விரும்பு பவர்கள், உங்களது கேள்விகளை மதுரை வானொலிக்கு அனுப்பலாம்.

முகவரி: நிலைய இயக்குனர்,
எல்லையில்லா வானம்,
அகில இந்திய வானொலி நிலையம்,
லேடி டோக் கல்லுôரிச் சாலை,
சொக்கிகுளம்,
மதுரை – 625 002.

கேள்விகளுக்கான பதில்களை 9,18,28,37,47 மற்றும் 53வது பகுதிகளில் நிபுணர்கள் மூலம் வழங்கப்படும். சிறந்த கேள்விகள் கேட்கும் நேயர்களுக்கு பரிசுகளும் உண்டு. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொடரின் நிறைவிலும் இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.

அதற்கு சரியான பதில் அனுப்பும் நேயர்களில் இருந்து ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா மூன்று நேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விஞ்ஞான் பிரசார் வெளியிட்டுள்ள அறிவியல் புத்தகங்கள் மற்றும் மாத இதழ்கள் பரிசாக அனுப்பப்படும். சென்னை-பி அலைவரிசையில் இந்த நிகழ்ச்சியின் ஆங்கில நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

VIGYAN PRASAR,
A-50, Institutional Area,
Sector-62, Noida - 201307,
U.P. , INDIA.
Telephone No:0120-2404430,31,35,36
Fax : +91-120-2404437
General Info.: info[at]vigyanprasar.gov.in,
Sales Info.:sales[at]vigyanprasar.gov.in
- மீனாட்சி பாளையம் கா. அருண் (ADXC - 2006) 94885 75462

ஊட்டியில் பி.கண்ணன்சேகர் அவர்களுக்கு பாராட்டு விழா

08.07.2009 அன்று ஊட்டியில் நடைபெற்ற முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அவர்களுக்கு பாராட்டு விழாவில். படத்தில் முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர், கீழ்குந்தா போஜன், ஊட்டி சுரேந்தர், தென்பொன்முடி மணிகண்டன், சேந்தமங்கலம் ரவிச்சந்திரன், பலாயூர் நாச்சிமுத்து, மற்றும் நேயர்கள்.

Wednesday, July 22, 2009

என் வானொலியை கேட்டீர்களா....!!


எந்த ஒரு மின்னணு சாதனங் களின் இடையூறுகளும் சக்தி வாய்ந்த ஒலி அலைகளின் தடங்களும் இல்லாமல் தெளிவான வானொலி நிகழ்ச்சிகள் என் ஊர் போன்ற அமைதியான கிராம சூழலுக்கு பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் எங்கள் வீட்டிலும் வானொலி இருந்தது.

வீட்டில் உள்ள வானொலி எப்பொழுது இருந்து இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. அந்த பழைய வானொலிக்குப் பதிலாக புதிதாக ஒன்று வாங்கும் எண்ணம் வந்தபொழுது, வானொலியின் வடிவம், வண்ணம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் கூடிப் பேசியது, ஏதோ ஒரு கல்யாணத்தை செய்து முடிப்பதற்கான திட்ட மிடுதலாய் நீண்ட நேரம் போனது. அனைவரின் பேச்சின் முடிவில், அடுத்தநாள் புதிய வானொலி பெட்டி ஒன்று வரப்போகிறது என்று ஆவலோடு இருந்தேன். மாமாவும் வந்தார் கையில் வானொலிப் பெட்டி அளவிற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. சிறிது நேரத்தில் சட்டைப் பையில் இருந்து நான்காக மடிந்த ஒருதாளை எடுத்து விரித்தார். இந்த காலத்து ஜெராக்ஸ் காப்பி போல இருந்தது. வானொலி பெட்டி களுக்கான விபர அட்டவணை இருந்தது. அதில் அச்சிடப்பட்டிருந்த வானொலி படங்கள் மட்டும் எனக்குப் புரிந்தது.
அனைவரும் கலந்து பேசி புதிதாக வந்திருந்த மற்ற வானொலி பெட்டிகளினும் வித்தியாசமாக இருந்த படுக்கைவச வானொலி பெட்டியை தெரிவு செய்தார்கள். அடுத்தநாள் அந்தப் படுக்கைவச வானொலி பெட்டி வந்தது.

வந்தபின்தான் அதன் அசௌ கரியங்கள் புரிய வந்தது. அதை வைப்பதற்கு தனி மேசை தேவைப்பட்டது. அலைவரிசை தேடும்பொழுது கையில் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. வானொலிப் பெட்டியின் ஒலி பெருக்கி வீட்டின் கூரையைப் பார்த்து இருந்ததால் ஒலியின் அளவை கூட்டி வைத்தால்தான் சுற்றி உள்ளவர்களுக்கு கேட்கக் கூடியதாக இருந்தது.
ஆகையால் விரும்பாத விருந்தாளியாக நான்கு நாட்களுக்கு மேல் திருப்பி அனுப்பி விட்டு வளமையான நிற்கும் வச வானொலியே வீட்டிற்கு வந்தது. நல்ல மெலிதான தோலினால் தைக்கப்பட்ட உறையுடன் தோளில் தொங்கவிடக் கூடிய பட்டையுடன் இருந்தது.

பின்னாட்களில் வானொலியை சுத்தம் செய்ய அந்த உறையை கழட்டும்பொழுது எனது தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு பஸ் கண்டக்டர் என்று சொல்லி வீட்டில் உள்ளவர்களுக்கு டிக்கெட் கொடுத்து விளையாடு வேன். வீட்டுச் சுவற்றில் நல்லதொரு இடமாக தேடி உறுதியான ஆணி ஒன்றை அடித்து தொங்கவிட்ட பொழுது சரியாக எனது காது அளவிற்குத் தொங்கியது.

வீட்டார் அனைவரும் வெளியில் இருக்கும்பொழுது மெதுவாக உள்ளே சென்று தூங்கும் குழந்தையை கிள்ளி விடுவது போல் அமைதியாக தொங்கிக் கொண்டி ருக்கும் வானொலியின் குமிழை திருகி காதை வைத்துக் கேட்பேன். பெரும்பாலான நேரங்களில் கிர்ர்ர்....ர்.. எனும் சப்தம் மட்டும் கேட்கும். பல நேரங்களில் அவசரத்தில் குமிழை திருகி அணைக்காமல் விட்டு விடுவதால் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு முன் பாகவே பேட்டரி பலவீனமாகி விடும். அதற்கு தண்டனையாக பேட்டரியை உச்சி வெயிலில் வீட்டுக் கூரையின் மேல் ஏற்றி விடுவார்கள். வெயில் சூடு ஏறினால் அதற்கு பலம் வந்து விடும் என்று ஒரு நம்பிக்கை. விரைவிலேயே எனது திருட்டுத்தனம் கண்டு பிடிக்கப்பட்டு, வீட்டுச் சுவற்றில் பலகை அடித்து அதன் மேல் வைத்து விட்டார்கள். இப்பொழுது என் கண்ணுக்கு மட்டுமே கிட்டியது. கைக்கு எட்டவில்லை.
காலை நேரத்தில் மாநிலச் செய்திகள் முடியும் வரை பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி அதன்பிறகு இளைஞர்களின் செயல் 'பாட்டு' க்கு வந்து விடும்.
வானொலி யார் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது ஒரு நேரத்தை உணர்த்தும் சாதனமாகத்தான் என்னை போன்ற சிறுவர்களுக்கு உதவியது.

காலையில், டி.எம். சௌந்திரராஜன், "பிறந்த நாள், இன்று பிறந்த நாள்" என்று பாடினார் என்றால் குளிக்கச் செல்ல வேண்டிய நேரம். குளத்துக்குப் போய் குளித்து விட்டு திரும்பினால், புல்லாங்குழலை முதன்மையாக்கி வரும் தலைப்பு இசையுடன் "பொங்கும் பூம்புணல்" என்று கூறுவார்கள். இலங்கை வானொலியில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும், "விவிதபாரதியின்" உங்கள் விருப்பம் நிகழ்ச்சிக்கு மாற்றி விடுவார்கள். காரணம் உள்ளூர் வானொலியின் தெளிவான ஒலிக்காக. உங்கள் விருப்பம் முடியும்பொழுது "பள்ளிக் கூடத்துக்கு நேரமாச்சு கிளம்பு" என்று வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அனைவரும் சொல்லி முடித்து விடுவார்கள்.

புறப்பட்டுப் போனால், பள்ளிக்கு அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் முதல் அலைவரிசை ஒலிபரப்பாகும். ஏதோ ஒரு கர்நாடக இசை வந்து கொண்டிருக்கும். காலையில் பணியாளர் அந்த வானொலிப் பெட்டியை எழுப்பி அறையை பூட்டி விட்டு ஊரில் உள்ள மேல் நிலைத் தொட்டியில் நீரேற்றி முறை வைத்து ஒவ்வொரு பகுதியாக குழாய்களுக்குத் தண்ணீர் திறந்துவிட சென்று விடுவார். பெரும்பாலான நாட்களில் பள்ளி தொடங்கும்பொழுது, கிர்ர்...ர்.... எனும் ஓசை வானொலியில் கேட்கும், அதனுடன் "டேசன் மூடி எவ்வளவு நேரமாச்சி, இந்தப் பய வந்து நிறுத்துரானா பாரு..." எனும் வசவு எங்கள் பள்ளியின் உதவியாளரின் வெள்ளைத் தாடியின் இடையே இருந்து வெளிவரும்.

மதியம் பனிரெண்டு மணி ஆகப் போகிறது என்றால் எனக்கு ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். காரணம் ஐந்தாம் வகுப்பு ராஜு வாத்தியார், மெயின் ரோட்டில் உள்ள தங்கப்பன் கடைக்கு சுண்டல் வாங்க யாராவது ஒருவரை தேர்வு செய்வார். அவர் கொடுக்கும் நாலனாவை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தால் எதிரில் இருக்கும் போஸ்ட் ஆபிஸ் வீட்டில், இங்கலிஸ் நியூஸ் கேட்கும்.

நான்காக கிழிக்கப்பட்ட செய்தித் தாளில் வாழைத் துண்டை வைத்து சுடச்சுட மசாலா சுண்டலை போட்டு மடித்து சணல் போட்டு கட்டி பத்து பைசா போக மிதி பதினைந்து பைசாவை கையில் திணிக்கும்பொழுது மசாலாவின் மணமும் அதன் சூட்டில் இளகும் வாழை இலையின் வாசனையுடன், தொழிலாளர்களுக்கான நிகழ்ச்சி என்று தங்கப்பன் கடை வானொலியில் இருந்து காற்றில் கலந்து வரும்.

பள்ளி வந்த சிறிது நேரத்தில் மதிய உணவு இடைவேளைக்கு வெளியே வரும்பொழுது 'ஆகாசவானி' என்று டில்லியிலிருந்து தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் வீடு போய் சாப்பிடும் பொழுது தேசபக்திப் பாடல்களோ மெல்லிசையோ பாடிக் கொண்டிருக்கும்.
அடுத்த அரை மணி நேரத்திற்கு பல்சுவை நிகழ்ச்சி அல்லது மகளிர் நிகழ்ச்சி முடிந்தவுடன் "தம்பி நேரமாகிடுச்சு! கிளம்பு.." என்று கட்டளை வருகையில் "நேரம் இப்பொழுது ஒரு மணி முப்பது நிமிடம்" என்று நேர அறிவிப்பு வரும்.

பள்ளியின் பிற்பகல் வேளையில் சில சமயம் அமைதியாக இருக்கும் பொழுது அருகில் உள்ள பானை செய்பவரின் வீட்டில் இருந்து வளைந்த பானையை ஈரபதத்துடன் கட்டை வைத்து தட்டும் பத்.. .பத் ... சத்தத்துடன் இலங்கை வானொலி யில் ஒலிக்கும் திரைப்படப் பாடல்கள் மெலிதாக கேட்கும்.

பஞ்சாயத்து ஆபிஸ் வானொலிப் பெட்டி பாட ஆரம்பித்து விட்டால், பள்ளி விடும் நேரம், எல்லாம் தயாராகி மணி அடித்தவுடன் மாணவர்களின் 'ஓ….ஓ….' என்னும் சத்தத்திற்கு இடையிலும், இலங்கை வானொலியின் காட்சியின் கானமும், மங்கையர் மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கு பவர்களின் மென்மையான குரலில் இனிமையான தமிழ் என் காதுகளில் கேட்கும்.

மாலை நேர விளையாட்டு நேரங்களில் வீட்டார் சொல்லும் சிறு, சிறு வேலைகளை செய்வ தற்காக வீட்டினுள் வந்து போகும்பொழுது மாலை நேர 'விவத பாரதியில்' தமிழ் பாட்டு பாடிக் கொண்டிருக்கும். அவ்வாறு இல்லா மல் முதல் அலை வரிசையின் மாநிலச் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் எனது விளையாட்டு நேரம் முடியப் போகிறது என்று அர்த்தம்.

செய்திகள் முடிந்தவுடன் பெரிய வர்களின் கவனம் என் மீது விழ "கால் கைய கழுவிட்டு உட்கார்ந்து படி" என்று உத்தரவு வரும். படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் ஆகாசவானி என்று டில்லி செய்திகள் வாசிக்க ஆரம்பித்தால் எனக்கு தாலாட்டுவது போன்று இருக்கும். அரைகுறை தூக்கத்தில் இருக்கும் என்னை எழுப்பி சாப்பிட வைக்கும் பொழுது "மண்ணை எல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம். அதில் பன்மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம்" என்று விவசாய நிகழ்ச்சிப் பாடலை கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தால், "உடனே படுக்கக் கூடாது கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு படு" என்னும் பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து விட்டு படுக்கும்பொழுது மீண்டும் விவித பாரதிக்கு மாற்றப்பட்டு தேன் கிண்ணத்தின் ஓரிரு பாடல்கள் மட்டும் என் காதுகளில் தூக்கத்தில் கரைந்து விடும்.
இரவு வண்ணச்சுடரில் இடம் பெற்ற நாடகத்தைப் பற்றி மறுநாள் காலை பெரியவர்கள் பேசிக் கொள்ளும்பொழுது தான் வானொலியில் அப்படி ஒரு நிகழ்ச்சி உள்ளது என்பதே தெரியும்.
ஒருநாளின் ஒவ்வொரு பொழு தையும் வானொலி உணர்த்திக் கொண்டிருந்தபோது உயர்நிலைப் பள்ளியின் கடைசி மூன்று வகுப்புகளை முடிப்பதற்காக விடுதியில் தங்க நேரிட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பொழுது, நீள் செவ்வக வடிவத்தில் மின்சாரத்தால் இயங்கக் கூடிய பெரிய வானொலி பெட்டி இருந்தது. பேட்டரி தீர்ந்து விடுமே என்ற கவலை இல்லாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று ஆவல் கூடுதலானது. தட்டச்சு வகுப்பிற்கு போன நேரம் போக மீதி நேரத்தை இந்த வானொலியில் செலவிடலாம் என்று திட்ட மிட்டேன்.

காலை நேரத்தில் வானொலியை இயக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே "தம்பி ரேடியோவை ஆஃப் பண்ணு. மிக்சி போடணும்" எனும் குரல் வரும். சொல்லி விட்டு ஓடும் எங்கள் வீட்டு மிக்சிக்கும் சொல்லாமல் ஓடும் பக்கத்து வீட்டு மிக்சிக்கும் நிறுத்த வேண்டி இருந்தது. பகல் நேரங்களிலோ, "இந்த கேசட்ட போடுப்பா நல்லா இருக்கும்" என்று ஒலி நாடாக்களுக்கு ஆதரவு கூடும். இரவு நேரத்தில் குழல் விளக்குகளால் 'கிர்ர்ர்...' என்ற ஓசையும் உறுத்தலாக இருக்கும்.

எனவே, பழைய சின்ன வானொலிப் பெட்டி எங்கே என்று கேட்டபொழுது ஏதோ ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு பேட்டரியை போட்டு விடுமுறையை கழித்தேன். மீண்டும், கூடுதல் இரண்டு வகுப்புகளுக்காக விடுதிவாசம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் சாம்பல் நிற கண்ணாடி திரையுடன் தொலைக்காட்சி பெட்டி ஒன்று தனி சிம்மாசனத்தில் வீற்றிருந்தது.

இப்பொழுதெல்லாம், காலை நேரத்தில் ஊரில் யாரும் வானொலிப் பெட்டியை தொடுவதாகக் கூடத் தெரியவில்லை. பெரும்பாலான வீடுகளில் அவரவர் விருப்பத் திற்கேற்ப டி.எம்.எஸ். சீர்காழி, எல்.ஆர். ஈஸ்வரி என யாராவது ஒருவர் ஒலி நாடாவில் பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.

மாலை நேரங்களில் அந்த சாம்பல் நிற கண்ணாடி திரை உமிழ்ந்து கொண்டிருந்த கறுப்பு, வெள்ளை உருவங்களை பார்த்துக் கொண்டிருந் தார்கள். யாருக்கும் வானொலி ஞாபகமில்லை.
நான் எனது வானொலி பெட்டியை தேடிப் போனேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வைத்த அதே இடத்தில் தூசி, ஒட்டடையுடன் படுத்திருந்தது. உள்ளே பேட்டரி இருப்பதற்கான அடையாளமாய் கனமாய் இருந்தது. குமிழை திருகினேன். டிக்டிக் எனும் சப்தம் மட்டும் கேட்டது. அவசரமாய் உறைகளை கழட்டி னேன்.

பேட்டரி திரவமாக கசிந்து அதன் உட்பாகமெல்லாம் திராவக புற்றுக் களாய் பரவி இருந்தன. யாரும் மதிக்காமல் வீட்டில் இருக்கக் கூடாது என்று எண்ணி கொடுத்த உணவையே விஷமாக்கி உறைந்து போயிருந்தது.

என்னை எழுப்பி குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்பி சாப்பாடு ஊட்டி உறக்கத்திற்குத் தாலாட்டுப் பாடிய அந்த வானொலி மௌனித்துக் கிடந்தது. அதற்கு செவி சாய்க்க யாரும் தயாராயில்லை ஓசை அதிகமாகிப் போன இக்கிராமமும் அதற்கு ஒத்துழைப்பதாய் இல்லை. கல்லூரியில் சேர்ந்தபொழுது வாழ்த்துச் சொல்ல வராமல் போன அந்த என் வானொலியை, உங்களுடைய ஊரில எங்காவது கேட்டீர்களா?.. - திருச்சி ஆர். கல்யாண்குமார் (9842412363)

Saturday, July 18, 2009

கொல்லம் ஹாம் சந்திப்பு


ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் உள்ள கொல்லத்தில் ஹாம் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனை கொல்லம் அமெச்சூர் ரேடியோ கிளப் நடத்தி வருகின்றது. QARL என்ற பெயரில் நடந்து வரும் இந்த மன்றமானது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள ஒரு சில மன்றங்களில் இதுவும் ஒன்றாக ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களால் கருதப்படுகிறது.

நாம் பெரும்பாலும் இதுபோன்ற சந்திப்பு என்றால் ஏதேனும் ஒரு மண்டபத்திலோ பள்ளியிலோ அல்லது ஹோட்டல்களிலோ மட்டுமே நடக்கும், ஆனால் இந்த ஆண்டு சந்திப்பினை சற்றே வித்தியாசமாகச் செய்திருந்தனர்.

கொல்லம், கடற்கரையோர ஆறு களால் புகழ்பெற்ற ஒரு நகரம் ஆகும். இங்கே உள்ள அஸ்தமுடி ஏரி படகுச் சவாரிக்கு பெயர் போனது. இந்த ஆண்டின் சந்திப்பினை படகிலேயே வைத்திருந்தனர். ஒவ்வொரு படகும் பிரம்மாண் டமானதாக இருந்தது என்றால் அது மிகையில்லை. நிலத்தில் உள்ள வீட்டினைப் போன்றே அந்தப் படகுகளை அழகாகக் கட்டி யிருந்தனர்.

Hamfair என்றே இந்தச் சந்திப்பினை இவர்கள் அழைத்து வருகின்றனர். காரணம் இந்தச் சந்திப்பில் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களுக்குத் தேவை யான பல புதியதும் பழையதுமான பொருட்களை வாங்கலாம் விற்கலாம். மகாபலிபுரம், ஏற்காடு ஹாம் சந்திப்புகளுக்குப் பிறகு நாம் கலந்து கொள்ளும் இந்த சந்திப்பு உண்மையில் வேறுபட்டு இருந்தது.

நமது சர்வதேச வானொலி இதழில் இது பற்றி ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தபடியால், ஒரு சிலர் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வருவதாகக் கூறினர். ஆனால் மற்ற சந்திப்புகளைப் போன்ற நினைத் தவுடன் கலந்து கொள்ள இயலாது. காரணம், படகில் சந்திப்பு நடைபெறுவதால் முன் கூட்டியே பதிவு செய்யுமாறு கூறியிருந்தனர். திருநெல்வேலி தியாகராஜ நகர் செல்வகுமார் அவர்களும், நானும் நமது இதழின் சார்பாக இதில் கலந்து கொண்டோம்.

நான் சென்னையில் இருந்து 17 ஏப்ரல் 2009 அன்று கொல்லம் புறப்பட்டேன். சனிக்கிழமை முழு வதும் திருவனந்தபுரத்தில் உள்ள வானொலி நிலையம் மற்றும் வானொலி நேயர்களை சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால், முன் கூட்டியே திட்டமிடாததால் அனைத் தும் நடக்கவில்லை.

முதலில் திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள பத்மநாபா கோவிலுக்கு சென்றேன். ஆண்கள் மேலாடை இல்லாமல், வெள்ளை வேஷ்டியுடன் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அதன் பின் அருகில் இருந்த அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். மதியம் அருகில் உள்ள கோவலத் திற்குச் சென்று வந்தோம்.

மாலை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் புறப்பட்டு சென்றோம். இரவு இங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே சென்றபின்தான் தெரிந்தது பல ஹாம்கள் சென்னையில் இருந்து வந்துள்ளனர் என்பது.


ஞாயிறு காலை 9 மணியளவில் நாங்கள் Backwaters எனப்படும் பின்னோக்கிய நீரோட்டத்திற்கு சென்றோம். அப்போது எங்களுடன் பெங்களூர் அமெச்சூர் கிளப்பின் லயன் அஜய் அவரது மகளுடன் இணைந்து கொண்டார். சரியாக 10.45க்கு புறப்பட்ட படகு 1 மணிக்கு அஸ்தமுடி ஏரிக்கு அருகில் உள்ள ஒரு கரையோர ரிசார்டில் இறக்கி விடப்பட்டோம்.

முதலில் அங்கே ஆண்டு விழா மலர் மற்றும் ஹாம் வானொலியில் நுழைய விரும்புபவர்களுக்கான அடிப்படை பாட புத்தகம் வெளியிடப்பட்டது. இவர்கள் அஞ்சல் வழியில் ஹாம் வானொலித் தேர்வுகளுக்கு பாடம் எடுக்கின்றனர் என்பதையும் இங்கே கூறியே ஆக வேண்டும்.

படகில் நீண்ட கால வானொலி நேயர்கள் பலரைச் சந்திக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக சனில் தீப்பைக் கூறலாம். VU3SIO எனும் அடையாள குறியீட்டை கொண்ட இவர் BC DX NET ன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் ஆவார்.


எனது வானொலி கேட்டலின் தொடக்க காலத்தில் இவர்கள் 40 மீட்டரில் (7085 அலை எண்கள்) ஞாயிற்றுக் கிழமை 7.30 முதல் 9.30 வரை ஏராளமான வானொலித் தொடர்பானத் தகவல்களை வழங்கி வந்தனர். அதன் துணை கொண்டே இன்று உலகின் பல வானொலி களைக் கேட்கும் ஆர்வம் ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை.

சனில் அவர்கள், அவரது குடும்பத்தாருடன் இதில் கலந்து கொண்டார். நீண்ட நாட்களாகச் சந்திக்க வேண்டும் என எண்ணி யிருந்த ஒருவரை சந்தித்ததால், அவருடன் என்ன பேச வேண்டும் என எண்ணியிருந்தோமோ அவை அனைத்து மறந்து விடும். அந்த அளவிற்கு அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருந்தன.

மதிய உணவு அந்த ரிசார்டிலேயே அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதன் பின் புறப்படத் தயாரானபோது, படகின் என்ஜினில் சிக்கல், என்றனர். எங்களுக்கோ மாலையில் தொடர்வண்டியைப் பிடித்தாக வேண்டிய கட்டாயம். எனவே, பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த VU2DX அவர்களின் குழுவினரோடு இணைந்து நாங்களும் பேருந்தில் புறப்படத் தயாரானோம். முதல் முறையாக படகிலேயே வானொலி நேயர்களை சந்தித்தது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அடுத்து மீண்டும் இதே போன்றதொரு சந்திப்பானது அடுத்த ஆண்டும் நடக்கவுள்ளது. அனை வரும் தவறாமல் அதில் கலந்து கொண்டு புதிய தகவல்கள் மட்டுமின்றி, புதிய நண்பர்கள் பலரையும் பெறலாம்.

QARL President: Shri. K.G. Nadarajan VU2KGN, Tel: 0474-2742661
Secretary Shri P. Surendran. VU2 SYT, Tel: 0474-2552749
Repeater Frequency:
Receiving (Rx): 145. 350 (MHz), Transmitting(Tx): 144.750 (MHz)
Address: Quilon Amateur Radio League, P.O. Box: 335, Kollam - 691001 Kerala.

Thursday, July 16, 2009

சீனா சென்று வந்தார் செல்வம்


சமீபத்தில் அகில இந்திய சீன வானொலி மன்றத்தின் தலைவர் செல்வம் அவர்கள் சிறப்பு நேயராக தேர்வு செய்யப்பட்டு சீன வானொலியின் சார்பாக இலவசமாக சீனா மற்றும் நமது அண்டை நாடன திபெதிற்கும் சென்று வந்தார். 13 நாள் சுற்றுப் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் அவரது அனுபவங்களை படிக்க மற்றும் அவரது குரலிலேயேக் கேட்க இங்கே சொடுக்கவும்