Wednesday, May 18, 2016

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் 'கொழும்பு வானொலி' என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

வானொலி ஒலிபரப்புகள் கேட்பவர்களை வந்தடைய மூல காரணமாக விளங்குபவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள். அறிவிப்பாளர் என்பதை விட ஒலிபரப்பாளர் என்ற சொல் இவர்க ளின் பணியை முழுமையாக எடுத்துக் கூறும்.

'இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்' என்ற நூல் இலங்கை வானொலியின் பல ஒலிபரப்பாளர்கள் பற்றிய விவரங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இலங்கை வானொலியும் உலகம் போற்றும் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கியிருக்கிறது.

ஆங்கிலத்தில் ஜிம்மி பரூச்சா, டிம் ஹாசிங்டன் போன்ற பலரையும் ஹிந்தியில் அமீர் சயானி போன்ற பலரையும் உருவாக்கிய இலங்கை வானொலி, தமிழிலும் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கியிருக்கிறது.

தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர் சோ. நடராசன் என்பவர். இவர் பிரபல யாழ்ப்பாணத்துப் புலவர் சோமசுந்தரனாரின் மகன். தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த நடராசன் சம்ஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர்.

இன்னொரு பிரபல ஒலிபரப்பாளர் சோ. சிவபாதசுந்தரம். இவரைப் பற்றி தமிழகத்தில் பலரும் அறிவார்கள். 'ஒலிபரப்புக் கலை' என்ற நூலை எழுதியவர். அந்த நூலுக்கு அறிமுகவுரை எழுதிய இராஜாஜி அந்த நூலுக்கு 'ரேடியோ வாத்தியார்' என்றே பெயர் வைத்திருக்கலாம் என எழுதியுள்ளார். அந்த அளவுக்கு ஒலிபரப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளன.

இவர்களோடு, தமிழக வானொலி நேயர்கள் நன்கறிந்த மயில்வாகனன், சற்சொரூபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, அப்துல் ஹமீத், கே.எஸ். ராஜா என்று மொத்தம் 50 ஒலிபரப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கூடவே, ஒலிபரப்பாளர்களின் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், நூலாசிரியர், தனது சேகரிப்பில் இருந்த சில அரிய புகைப்படங்களையும் இந்த நூலில் வெளியிட்டுள்ளார். வேறெங்கும் பார்க்க முடியாத படங்கள் அவை.

இந்த நூலை எழுதிய தம்பிஐயா தேவதாஸும் ஒரு ஒலிபரப்பாளரே. ஒலிபரப்பாளர்களைப் பற்றி அவர் தந்திருக்கும் விவரங்களைப் படிக்கும்போதே இலங்கை வானொலி என்ற நிறுவனத்தின் வரலாறு, அந்த மண்ணின் கலாச்சாரம் போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.

- எஸ்.எஸ். உமா காந்தன்

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் 
தம்பிஐயா தேவதாஸ் 
விலை: ரூ. 150 
வெளியீடு: வித்யா தீபம் பதிப்பகம், கொழும்பு / 13 தமிழகத்தில் 
புத்தகம் பெற: ardicdxclub@yahoo.co.in

நன்றி: தி இந்து, நூல் வெளி, 17-5-2016

Tuesday, May 17, 2016

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்


இன்றைய தி இந்து நூல் வெளி பகுதியில் "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" புத்தக விமர்சனத்தை திரு.உமாகாந்தன் அவர்கள் எழுதி உள்ளார்கள்.

Tuesday, May 10, 2016

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில்...

இலத்திரனியல் ஊடகங்களுக்கான சுயாதீன ஒளிபரப்பு அதிகாரசபையொன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கும் இந்த புதிய அதிகார சபைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப்பற்றி யாரேனும் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் நடைமுறையில் இல்லை. ஆனால் பத்திரிகைக்கு இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கூறினார்.
ஊடகங்களின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும், அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்தார்.
Source: http://www.tamilwin.com/

Tuesday, May 03, 2016

பவளவிழா காணும் பிபிசி தமிழோசை

பிபிசி உலக சேவையின் மூத்த மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தொடங்கி இன்றோடு (03-05-2015) 74 ஆண்டுகள் முடிந்து, 75வது ஆண்டு தொடங்குகிறது.
பிரிட்டனின் காலனிய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தனது நீண்ட பயணத்தில் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் ஒலி சாட்சியாக இருந்திருக்கிறது.
காலவெள்ளத்தில் 75 ஆண்டுகள் என்பது ஒரு துளியாக இருக்கலாம். ஆனால் ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தின் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதி.
கடிதமாக கருவாகி செய்தியாக கிளைபரப்பி.....
பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டது 1941 மே மாதம் 3 ஆம் தேதி என்றாலும் அதற்கு பிபிசி தமிழோசை என்கிற பெயர், அது தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே சூட்டப்பட்டது. இதன் பின்னணியை பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழோசையின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவரான சிவபாதசுந்தரம் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
"பிபிசி தமிழோசை யுத்தகாலத்தில் ஆரம்பித்தபோது இலங்கை கடிதம் என்று ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை எழுதிப் படித்தவர் தம்பு என்பவராவர். அவர் இலங்கைக்காரர். ஆனால் இந்திய சிவில் சர்விஸ் சேவையில் சென்னையில் கலெக்டராக பணியாற்றியவர். அவர் தான் அந்த இலங்கை கடிதத்தை எழுதிப் படித்தவர். இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த பின்னர் 1947ஆம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி என்னை (சிவபாதசுந்தரத்தை) அழைத்தது. 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பிபிசிக்கு வந்தேன். 1948ஆம் ஆண்டு ஒரு முறையான சஞ்சிகை நிகழ்ச்சியாக இதை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒரு முறையான முகப்பிசையை உருவாக்கி, இலங்கைக் கடிதம் என்று இருந்ததை உலகக் கடிதமாக, உலக நிகழ்ச்சியாக நடத்துவதற்கு ஏற்பாடாகி, 1948 ஆம் ஆண்டு தான் தமிழ் நிகழ்ச்சிக்கு தமிழோசை என்கிற பெயர் ஏற்பாடாயிற்று” என்று தெரிவித்தார் சோ.சிவபாதசுந்தரம்.
பிபிசி தமிழோசையின் துவக்ககால முகப்பிசை மறைந்த இசைக்கலைஞர் டி.பி.ஜெயராமையர் அவர்களால் தயாரிக்கப்பட்டு தமிழோசையில் கே.பி.ரங்காச்சாரி காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு வரையிலுமே கூட அந்த இசைதான் பிபிசி தமிழோசையின் முகப்பிசையாக இருந்தது.
ஆரம்ப காலகட்டங்களில் வாரமொருமுறையாகவும் பின்னர் வாரமிரு முறையாகவும் ஒலிபரப்பான பிபிசி தமிழோசை, பின்னர் செய்தி மற்றும் நடப்புச் செய்திகள் என்று பரிணமித்தது.
1980களில் தமிழோசை செய்தி மற்றும் சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என மலர்ந்த காலம். அதுவே பிபிசி தமிழோசையின் பல மூத்த நேயர்கள் இன்றும் நினைவுகூறும் காலமாகவும் இருந்துவருகிறது.
சங்கரண்ணா என்று பிபிசி தமிழோசை நேயர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசையின் பொறுப்பாளராக இருந்த அந்தக்காலத்தில்தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல பிபிசி தமிழோசையில் மொழிப்பெயர்ப்பாகி அரங்கேறின.
தேம்சு நதிக்கரையில் இருந்து சங்கரமூர்த்தியின் கணீர்க்குரலில் ஒலித்த அந்த தமிழோசை சிற்றலை மூலமாகவே ஒலிபரப்பாகி வந்தாலும், பல லட்சக்கணக்கான நேயர்களின் பாசத்துக்குரிய ஓசையாக இருந்து வந்தது.
இலங்கை, இந்தியா, உலகம் என்று விரிந்து......
சஞ்சிகை வடிவ நிகழ்ச்சி என்றாலும், இந்திய இலங்கை அரசியல் பிரமுகர்கள், கலைஉலகப்பிரமுகர்கள் என பலரின் குரல்களும் தமிழோசையில் ஒலித்தன.
இலங்கைப்போர் 1980களின் தொடக்கத்தில் பெரிய அளவில் வெடித்தபோது, பிபிசி தமிழோசையின் கவனம் பெருமளவு இலங்கைப் பிரச்சனையின்மீது திரும்பியது.
இலங்கை இனப்பிரச்சனையின் பல்வேறு அரசியல் பரிமாணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்த பிபிசி தமிழோசை பல முறை இலங்கை அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பலரையும் பேட்டி எடுத்தது.
தமிழக முன்னாள் முதல்வர்கள் மு கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் தலைவர்களின் பிரத்யேக பேட்டிகள் பிபிசி தமிழோசையில் இடம்பெற்றிருந்தன.
இலங்கை மோதலின் பக்கசார்பற்ற சாட்சியமாய் நீடித்து....
இலங்கைப்போர் 1990களில் உச்சமடைந்து யாழ்ப்பாணத்திலும், பின்னர் வன்னியிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு துல்லியமான, பக்கசார்பற்ற செய்திகளை வழங்கி முக்கிய பங்காற்றியது பிபிசி தமிழோசை.
பின்னர் 2002ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோது, நாட்டில் ஏற்பட்ட தற்காலிக அமைதியையும், பின்னர் அந்த ஒப்பந்தம் ஏட்டளவில் நின்று மோதல்கள் மீண்டும் வெடித்தபோது, மக்கள் பட்ட துயரங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்தது தமிழோசை.
இலங்கைப்போரின் இறுதிக்கட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப்பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், போர் முனையில் இருந்த மக்கள் மற்றும் அரச மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் குறித்த செய்திகளை உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் அறியத் தந்தது பிபிசி தமிழோசை.
போர்க்காலத்தில் இலங்கையில் கடும் ஒலிபரப்பு நெருக்கடிக்கு ஆளான தமிழோசை, தனது பண்பலை ஒலிபரப்பை சிறிது காலம் நிறுத்தி வைக்க நேரிட்டது. தற்போது அது இலங்கை நேயர்களுக்கு ஐந்து நிமிட உலகச் செய்தியறிக்கையை ஷக்தி எப்.எம் வானொலி மூலம் வழங்கி வருகிறது.
தொழில்நுட்பத் துணையோடு இணையத்தில் நுழைந்து, தொலைக்காட்சியாய் தொடரும் தமிழோசை......
இலங்கைப் போர் முடிந்த கால கட்டம்தொழில்நுட்பத்திலும் பெரும் மாற்றங்கள் உருவாகி வந்த காலம். இணையத்தில் ஏற்கனவே புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் தடம்பதித்த பிபிசி தமிழோசை, மெல்ல மெல்ல வளர்ந்து, பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களிலும் தனது முத்திரையை பதிக்கத் தொடங்கி அந்த ஊடகங்களிலும் புதிய, இளைய நேயர்களைப் பெற்றிருக்கிறது.
இதன் இணையதளச் செய்திகள் இப்போது சென்னையிலிருந்து வெளிவரும் ஹிந்து நாளேட்டின் தமிழ்ப் பதிப்பிலும் இடம்பெறுகின்றன.
பிபிசி தமிழோசையின் வரலாற்றில் 2015ஆம் ஆண்டு மற்றும் ஒரு மைல்கல். இதுவரை வானொலி மற்றும் இணையதளம் என்ற இரு ஊடகங்களில் மட்டுமே செயல்பட்டுவந்த பிபிசி தமிழோசை, இப்போது தொலைக்காட்சி மூலமும் புதிய நேயர்களை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று தொடங்கப்பட்ட பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி, இந்தியாவின் தந்தி தொலைக்காட்சி மூலம் உலகச் செய்திகளை 10 நிமிட நேரம் தமிழக மற்றும் இணையதளம் மூலம் உலக நேயர்களுக்கும் வழங்கி வருகிறது.
பிபிசி தமிழோசை தனது வரலாற்றில் பெரும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. காலத்தின் போக்குக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும், நேயர்களின் தேவைகளுக்கும் ஏற்ப பிபிசி தமிழோசை தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு மாறி, இந்த அளவு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நேயர்களின் ஆதரவோடு பிபிசி தமிழோசை மென்மேலும் வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது செய்திச்சேவையைத் தொடரும்.
நன்றி: பிபிசி தமிழோசை இணையதளம்