Tuesday, February 25, 2014

வானொலி ஆர்வலர்

வானொலி ஆர்வலர்கள் (Radio Enthusiasts[1]) எனப்படுவோர் பூமிப் பந்தின் பல்வேறு நாட்டு வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து (DXing)[2], அந்தந்த வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகள் பற்றி கருத்துப் பரிமாறுவோர், ஒலிபரப்பின் தொழிநுட்ப தரம் பற்றி அறிக்கைகள் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவோர் (DXers)[3], வானலைகளூடாக இருவழித் தொடர்பு ஏற்படுத்தி உரையாடுவோர் (HAM Radio)[4] என பலதிறப்பட்ட, வானொலி பயன்பாட்டில் துடிப்புள்ள, பயனர்களாவர். மேலும் விரிவாக படிக்க....
நன்றி: https://ta.wikipedia.org

பொன்விழா சிறப்பிதழ் வெளியிடப்பட்டது!

2013ஆம் ஆண்டு, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன்விழா ஆண்டாகும். இதற்காக சீன வானொலி தமிழ்ப்பிரிவு, சர்வதேச வானொலி இதழுடன் ஒத்துழைத்து, சீனத் தமிழொலி என்னும் பொன்விழா சிறப்பிதழை வெளியிட்டது. இந்த பொன்விழா இதழ் வெளிவர உதவியளித்த தங்க. ஜெய்சக்திவேல் அவர்களுக்கும், கவுதம் பதிப்பகத்துக்கும் மிக்க நன்றி.

சீனத் தமிழொலி என்னும் பொன்விழா சிறப்பிதழ் பெற விரும்பும் நேயர்கள், 9597280064 என்ற கைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம், அஞ்சல் முகவரியை அனுப்புங்கள். இந்தக் கைபேசி, குறுந்தகவல் மூலம் இதழ் பெற விரும்பும் நேயர்களின் முகவரிகளைச் சேகரிப்பதற்கு மட்டுமே. கைபேசி எண்ணை மீண்டும் சொல்கின்றோம்:9597280064. தயவு செய்து அழைக்கவேண்டாம்.
 
மேலும், கடந்த ஜனவரி 25ஆம் நாளன்று, அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு ஈரோடில் நடைபெற்றது. தமிழ்ப்பிரிவின் இணையதளத்தில் இக்கருத்தரங்கின் ஒலிப்பதிவு, புகைப்படம் முதலியவை நிறைய வைக்கப்பட்டுள்ளன. கண்டு இரசியுங்கள். (நன்றி; சீன வானொலி)

Friday, February 14, 2014

'சுத்த' தமிழில் அசத்திய சீனப்பெண்கள்: 'தங்லீஷ்' நபர்களுக்கு 'பாடம்


திருநெல்வேலி: நெல்லை பல்கலை விழாவில் பங்கேற்ற, சீன வானொலியின் பெண் அறிவிப்பாளர்கள், 'சுத்த' தமிழில் பேசி அசத்தினர்.
ஐ.நா., சபையின் 'யுனெஸ்கோ' சார்பில், பிப்., 13 அன்று 'சர்வதேச வானொலி தினம்' கொண்டாடப்படுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தொடர்பியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சீன அரசு வானொலியின், தமிழ் ஒலிபரப்பு பிரிவு, பெண் அறிவிப்பாளர்கள் ஷன்ஷிங், ஷோசின் பங்கேற்றனர். துறைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் தொகுத்து வழங்கினார். ஷன்ஷிங், ஷோசின் இருவரும், ஒரு வார்த்தை கூட வேறு மொழி கலக்காமல், 'சுத்த' தமிழில் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

எங்கள் நாட்டில் பட்டப்படிப்பு முடித்த கையோடு, தமிழையும் எழுத, பேசக் கற்றுக்கொண்டோம். சீன அரசு வானொலியில், அறிவிப்பாளர் பணி கிடைத்தது. தற்போது, தமிழை மேலும் கற்றுக்கொள்வதற்காக, தமிழகம் வந்துள்ளோம். வானொலி நேயர்களுக்காக எங்களது பெயரை, இலக்கியா (ஷன் ஷிங்), ஈஸ்வரி (ஷோ சின்) என, மாற்றினோம்.சீன வானொலியில், 61 மொழிகளில் ஒலிபரப்பு உள்ளது. இந்திய மொழிகளில் தமிழ், இந்தி, வங்காளம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தமிழ்ப் பிரிவில் 16 பேர் உள்ளோம்; அதில், 13 பேர் பெண்கள். நாங்கள் தமிழகம் வருவதற்கு முன், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்த செய்திகளை அறிந்து, பெற்றோர் பயந்தனர்; ஆனால், இங்கு மக்கள் நன்றாக பழகுகிறார்கள். இவ்வாறு கூறினர்.

ஷோசின், புதுச்சேரியில் தங்கி தமிழ் பயின்றுள்ளார். பரதம், கர்நாடக இசை பயின்று வருகிறார். தமிழ்- சீன பழமொழிகளுக்கு உள்ள ஒற்றுமை குறித்து ஒப்பீட்டு நூல் ஒன்றை, தமிழில் எழுதி வருகிறார். ஷன்ஷிங், பாரதியார் பல்கலையில், தமிழ் மொழி குறித்து, மேலும் கற்று வருகிறார். நிகழ்ச்சியில், அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் உமா கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
Source: Dinamalar 14-2-2014

பெண்களும் வானொலியும்


சீனா, தமிழகத்தில் உள்ள பழமொழிகள் ஒன்றாகவே உள்ளதாக சீன வானொலி நிலைய பெண் பணியாளர்கள் தெரிவித்தனர்.
உலக வானொலி தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு “பெண்களும் வானொலியும்” என்ற தலைப்பினை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி பெண்களைக் கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக வானொலி தின விழாவில், சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சோ சின் (ஈஸ்வரி) பேசியதாவது:
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் புத்தகத்தைப் படித்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாறு, அழகு, தமிழர் பண்பாடு குறித்து அறிய முடிந்தது. அதைபடித்த பின்பே தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கும் எண்ணம் எனக்குள் தோன்றியது. சீனாவில் 4 ஆண்டுகள் தமிழ் சிறப்புப் பாடத்தை பயின்று, சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் சேர்ந்தேன். இப்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ் பயின்று வருகிறேன். சீன அரசு தமிழ் படிக்க ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
சீனா-தமிழ் பழமொழிகள் ஒன்றாகவே உள்ளன. சீன இளைஞர்களைக் காட்டிலும், இந்திய இளைஞர்கள் மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. வேலைவாய்ப்புக்காக மட்டுமன்றி, ஆர்வத்துடன் கற்பதால்தான் தமிழ் எளிதாகப் புரிகிறது என்றார்.
சன் குயிங் (இலக்கியா) பேசுகையில், தமிழ் முதுநிலை படிப்பை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வருகிறேன். சீன வானொலி 1963-ம் ஆண்டில் தமிழ்ப் பிரிவைத் தொடங்கியது. இப்போது 61 மொழிகளில் சேவையாற்றி வருகிறது. படிப்பை முடித்துச் சென்றதும், வானொலி நிலையப் பணியுடன் சேர்த்து சீனப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதே எனது முக்கியப் பணியாக இருக்கும் என்றார்.
இந்த விழாவில்,  தொடர்பியல் துறைத் தலைவர் பி.கோவிந்தராஜு, பேராசிரியர்கள் டி.ஜெய்சக்திவேல், மாணவர்-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
Source: Dinamani 14-2-2014

Tuesday, February 04, 2014

நெல்லையில் கரிசல் திரை விழா: 350 மாணவர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கரிசல் திரை விழாவில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 350 மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையின் கீழ் செயல்படும் மனோ மீடியா கிளப் சார்பில் ஆண்டு தோறும் கரிசல் திரை விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான விழா திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்பியல் துறையின் தலைவர் பி.கோவிந்தராஜு வரவேற்றறார்.
கரிசல் திரை விழாவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆ.கு.குமரகுரு தொடங்கி வைத்து பேசியதாவது:
கரிசல் மண் நிலத்தில் அமைந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் கரிசல் திரை விழா, திருவிழாவாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. காலத்திற்கு ஏற்ப சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது திரைத்துறை. அதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.திரைத் துறை உருவாகிய ஆரம்ப கட்டத்தில் குடும்பம், நல்லொழுக்கம் போன்ற கருத்துகளைப் பரப்பும் வகையில் திரைப்படங்கள் உருவாகின. சிறிது காலத்தில் அந்த நிலை மாறி புரட்சிகர கருத்துகள் மையப்படுத்தப்பட்டன.
ஆனால், இப்போது திரைத்துறை சரியான பாதையில் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியம். சமூகம் பயன்படத்தக்க உயர்ந்த கருத்துகளை திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். திரைத் துறையையும் ஆராய்ச்சி மனப்பான்மையோடு மாணவர்கள் பார்த்து, இன்றைய தேவைக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்தி நல்ல கருத்துகளை எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
கலைப்புல முதல்வர் பி.மரியஜான், மொழிப் புல முதல்வர் ஏ.ராமசாமி, எழுத்தாளர் மனுஷயபுத்ரன் ஆகியோரும் பேசினர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகத்தில் உள்ள 20 கல்லூரிகளைச் சேர்ந்த 350 மாணவர்-மாணவிகள் இந்தத் திரைவிழாவில் பங்கேற்றுள்ளனர். மாலையில் குறும்படம் திரையிடல், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல் போட்டிகள் நடைபெற்றன.
நன்றி: http://www.dinamani.com/

நெல்லை பல்கலையில் கரிசல் திருவிழா துவக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறை சார்பில் கரிசல் திரைவிழா நேற்று துவங்கியது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை சார்பில் ஆண்டுதோறும் தொடர்பியல் மற்றும் காட்சி ஊடகவியல் மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திறன் போட்டிக்கான விழா கரிசல் திரைவிழா என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதில் தமிழகம் மற்றும், புதுச்சேரி, பெங்களூரு ஆகிய
பகுதிகளில் இருந்து 30 கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்
பங்கேற்கின்றனர். நேற்று காலையில் நடந்த விழாவில் பல்கலை துணைவேந்தர் குமரகுரு விழாவை துவக்கிவைத்தார். மனோ மீடியா கிளப் நிர்வாகிகள் வரவேற்றனர். துறைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். விழாவில் சிறந்த வானொலி அறிப்பாளர், குறும்படம், டாக்குமெண்டரி பிலிம், மீடியா வினாடி வினா, நாட்டுப்புற நடனங்கள், புகைப்படம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. ஒட்டுமொத்த போட்டிகளில் முதலிடம் பெறும் கல்லூரிக்கு கேடயம் வழங்கப்படுகிறது. துவக்க விழாவில் பல்கலைக்கழக டீன் மரிய ஜான், தமிழ்த்துறை பேராசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பங்கேற்றார். நாளை 5ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.
நன்றி: தினமலர்