Wednesday, July 31, 2013

திகார் சிறையில் வானொலி நிலையம் திறப்பு

நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையான திகார் சிறையில், எப்.எம். வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ‘டி.ஜே. எப்.எம். ரேடியோ’ என்ற இந்த வானொலி நிலையத்தை, சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் விம்லா மேஹ்ரா இன்று தொடங்கி வைத்தார். 

பொழுதுபோக்கு மற்றும் கைதிகளுக்கு ரேடியோ ஜாக்கி பயிற்சி அளிக்கும் வகையில் இந்த வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் தங்களின் படைப்புத் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். கைதிகள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஒலிபரப்ப விரும்பினால், அத்தகவலை முன்கூட்டியே ஆர்.ஜே.வுக்கு அனுப்ப வேண்டும் என்று சிறை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

வானொலி நிலையம் தவிர கைத்தறி பிரிவையும், சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் மேஹ்ரா இன்று தொடங்கி வைத்தார். 10 நைஜீரிய கைதிகள் மற்றும் பிற வெளிநாட்டு கைதிகளும் இந்த கைத்தறி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source: http://www.maalaimalar.com

Thursday, July 25, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 8

விடை பெறுகிறது 

நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, தந்தி சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.

இணையதளம்:தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது.சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் மூலம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி, இ - மெயில் மூலம் விரிவான தகவல் களை அனுப்புதல் போன்றவற்றை, அனைத்து தரப்பினரும் பின்பற்ற துவங்கியதை அடுத்து, தந்தி பயன்பாடு, வெகுவாக குறைந்து விட்டது.

கடந்த, 160 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள இந்த சேவை, இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது.அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சேவை, கடந்த சில ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. வணிகரீதியில், லாபம் தராத இந்த சேவையை, ஜூலை, 15 முதல் நிறுத்திக் கொள்ள, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.இது குறித்து, மத்திய அரசிடம், அந்த நிறுவனம் அனுமதி கோரிய போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே முடிவெடுக்கலாம் என, அரசு கூறிவிட்டது.

சுற்றறிக்கை:@@இதையடுத்து, ஜூலை, 15ம் தேதி முதல், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தந்தி இருக்காது. அடுத்த, ஆறு மாதங்களுக்கு, அரசின் ஆணைகள், சுற்றறிக்கைகள் மட்டுமே, தந்தி சேவை மூலம் அளிக்கப்படும். அதன் பிறகு, முழுமையாக, தந்தி சேவை நிறுத்தப்படும் என, டில்லியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவன, மூத்த பொது மேலாளர், சமீம் அக்தர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, July 22, 2013

படங்களில்: பிபிசியின் புதிய அலுவலகத்தில் பிரிட்டிஷ் மஹாராணி

தமிழோசை உட்பட பிபிசியின் செய்தி ஊடகப் பிரிவுகளின் புதிய தலைமையகமாக விளங்கும் லண்டனிலுள்ள நியு புரொட்காஸ்டிங் ஹவுஸ் கட்டிடத்தை பிரிட்டிஷ் மஹாராணி உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பதற்காக பிபிசி அலுவலகம் வந்தார்.

அருமையான புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்http://www.bbc.co.uk/tamil/global/2013/06/130608_queenbbcpix.shtml

Thursday, July 18, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 7

160 ஆண்டுகள் சேவை

திருச்சி : ''....... சீரியஸ் ஸ்டார்ட் இம்மீடியட்லி'' இந்த வாசகம் ஒரு தலைமுறைக்கு முன்பு வரை ஏக பிரபலம். இதை பரப்பியதில் டெலிகிராம் எனப்படும் தந்திகளுக்குத்தான் முக்கிய பங்கு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதி வடிவம் டெலிகிராம் எனப்படும் தந்தி. ஒரு தலைமுறைக்கு முந்தைய மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போனது இந்த டெலிகிராம். தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், திருமணம், வேலை, வாழ்த்து, இறப்பு என அத்தனை செய்திகளையும் தந்தி கொண்டு சேர்த்திருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டும் இருந்த நடைமுறை பின்னர் முன்னாள் எம்பி நல்லசிவம் நாடாளுமன்றத்தில் எடுத்த முயற்சியால் தமிழிலும் புழக்கத்தில் வந்தது. 

இந்தியாவில் கடந்த 1850ல் சேவையை தொடங்கியது முதல் மகிழ்ச்சி சம்பவங்களையும் அதற்கு நேரான துக்க விஷயங்களையும், அவசர தகவல்களையும் எழுத்துப்பூர்வமாக மக்களிடம் எடுத்துச்சென்றது தந்தி. தந்தி என ஒன்று வந்துவிட்டால் மனம் படபடக்காத மனிதர்கள் இருக்கமுடியாது. மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போன தந்தி சேவை தற்போது தனது இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஜூலை 15ம் தேதி முதல் டெலிகிராம் சேவை நிறுத்தப்பட உள்ளது.

ஆரம்பத்தில் தபால் தந்தித்துறையின் கீழ் இருந்த இந்த சேவை பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் வந்தது. தற்போது ஸ்மார்ட் போன், இ மெயில், எஸ்எம்எஸ், சாட்டிங் போன்ற நவீன தொலை தொடர்பு சேவைகளின் வரவால் டெலிகிராம் ஓரங்கட்டப்பட்டது. இன்றைய இளம் தலைமுறை பலருக்கு தந்தியின் பயன்பாடு, செயல்பாடு கூட தெரியாது. நாளடைவில் டெலிகிராமுக்கு இருந்த வரவேற்பு குறைந்தது. எழுத்துக்களை எண்ணி எண்ணி டைப் அடித்து அனுப்பப்பட்டு வந்த சேவை, வளவளவென பேச வைத்த செல்போன் நிறுவன வரவுகளால் தந்தியின் மகத்துவமும் தேவையும் குறைந்தது. 

இந்த நிலையில்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் தந்தி சேவையை ஜூலை 15 முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. தந்தி புக்கிங் செய்வதற்கு கடைசி நாளும் அதுதான். இதுகுறித்த சுற்றறிக்கையை மூத்த பொது மேலாளர் ஷமீம் அக்தர் இந்தியாவில் உள்ள பல்வேறு தொலைதொடர்பு மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார்.
எனினும், பல்லாண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் தந்தி முறையை நிறுத்தக்கூடாது; அது தொடர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் தந்தி சேவைக்கு முற்றுப்புள்ளி


இந்தியாவின் தந்தி சேவைக்குத் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டதால், அது ஜூலை 14ஆம் நாள் இயங்குவது அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. 163 ஆண்டுகள் வரலாற்றுடைய இந்தியத் தந்தி சேவை வரலாற்று மேடையிலிருந்து இறங்கியது.

கடந்த 20 ஆண்டுகளில் தந்தி சேவைத் துறையில் இழப்பு ஏற்பட்டு வந்தது என்று அரசு தெரிவித்தது. புள்ளிவிபரங்கள் படி, கடந்த 7 ஆண்டுகளில், இத்துறையின் இழப்புத் தொகை 250 கோடி ரூபாயை எட்டியுள்ளது. (நன்றி: சீன வானொலி தமிழ் பிரிவு)

Monday, July 15, 2013

சென்னை வானொலி நிலையத்தில் அதிநவீன ஆவண காப்பகப் பிரிவு


அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தின் பவள விழாவில் முன்னாள் இயக்குநர் பி.வி.கிருஷ்ணமூர்த்திக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.ரகுபதி. உடன், (இடமிருந்து) சென்னை அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் தென் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் (பொறியியல்) எஸ்.கே.அகர்வால், சென்னை வானொலியின் துணைத் தலைமை இயக்குநர் (பொறியியல்) பி.பி.பேபி, முன்னாள் ஊழியர் வி.ஏ.எம்.ஹுசேன், தில்லி பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அலுவலர் ஜவஹர் சர்க்கார், பெங்களூர் அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் தென் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் (நிகழ்ச்சி) ஆர்.வெங்கடேஸ்வரலு.

இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் விரைவில் அதிநவீன ஆவண காப்பகப் பிரிவு அமைக்கப்படும் என தில்லி பிரசார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் ஜவஹர் சர்க்கார் கூறினார்.
அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் புதன்கிழமை (ஜூன் 18) பவள விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஜவஹர் சர்க்கார் பேசியது:
இந்திய வானொலியின் சென்னை நிலையம் ஒரு வானொலி நிலையமாக மட்டுமல்லாமல், பிற வானொலி நிலையங்களைக் காட்டிலும் மிகச் சிறந்த முறையில் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை மக்களுக்கு கடந்த 75 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
இதுபோன்ற சிறந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் டேப்புகளில்தான் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. டேப்புகளில் செய்யப்படும் பதிவுகள் விரைவில் அழிந்துவிடும்.
எனவே, சிறந்த நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிப் பதிவுகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை நிலையத்தில் விரைவில் அதிநவீன ஆவண காப்பகப் பிரிவு அமைக்கப்படும். இந்தப் பிரிவில் நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கருவிகள் இடம்பெறச் செய்யப்படும்.
இதன் மூலம் ஒலிப் பதிவுகள் பாதுகாத்து வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், விரைவாக டிஜிட்டல்மயமும் ஆக்கப்படும். இந்தியாவிலேயே தில்லி நிலையத்துக்குப் பிறகு இரண்டாவதாக சென்னை நிலையத்துக்கு இந்த நவீன தொழில்நுட்பம் கொண்டுவரப்பட உள்ளது என்றார் அவர்.
75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை வானொலி நிலையம் இதுவரை 13,000 மணி நேரங்களில் 25,000-க்கும் மேற்பட்ட ஒலிப் பதிவுகளை செய்துள்ளது. இதில் 700 மணி நேர ஒலிப் பதிவுகள் மட்டுமே இதுவரை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என விழாவில் பேசிய சென்னை நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர். விழாவில் பெங்களூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆர். வெங்கடேஸ்வரலு பேசியது:
சென்னை நிலையம்தான் தென்னிந்தியாவிலேயே முதல் வானொலி நிலையமாகும். பலதரப்பட்ட கலைஞர்களை இந்த நிலையம் சந்தித்துள்ளது. இந்த நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள், தென்னிந்தியாவில் உள்ள பிற வானொலி நிலையங்களில் மட்டுமல்லாமல் லட்சத்தீவு மற்றும் போர்ட் பிளேர் வானொலி நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இடம்பெற்றனர். தமிழ் திரைப்படத் துறைக்கு மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய திரைப்படத் துறை வளர்ச்சியிலும் சென்னை வானொலி நிலையம் பெரும்பங்காற்றியுள்ளது என்றார் அவர்.
விழாவில் அகில இந்திய வானொலி சென்னை நிலைய கூடுதல் தலைமை இயக்குநர் (பொறுப்பு) க.பொ. ஸ்ரீநிவாசன், புதுதில்லி பிரசார் பாரதி உறுப்பினர் (ஊழியர்) பிரிகேடியர் (ஓய்வு) வி.ஏ.எம். ஹுசேன், சென்னை அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குநர் (பொறியியல்) எஸ்.கே. அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
(நன்றி: தினமணி 19 June 2013)

பாரீசில் மறுபடியும் எப்.எம். அலைவரிசையில் தமிழமுதம் வானொலி

ஐரோப்பாவின் புகழ் பெற்ற வானொலி அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜென் அவர்களால் நடாத்தப்படும் தமிழமுதம் வானொலி இன்று 14.07.2013 ல் இருந்து மறுபடியும் பிரான்சிய அரசின் பண்பலை வானொலியாக தன்னை தரமுயர்த்தியுள்ளது.
தினசரி 15.00 மணி முதல் 16.00 மணி வரை தினசரி இந்த ஒலிபரப்பு நடைபெறும், இன்று வானலையில் முதலாவது ஒலிபரப்பு தவழ்ந்து வந்தது.
தமிழமுதம் வானொலி கடந்த 1989 முதல் 1997 வரை பிரான்சின் எப்.எம் அலை வரிசையில் வெற்றிகரமாக தனது ஒலிபரப்பை நடாத்திக் கொண்டிருந்தது.
அதன் பின்னர் சுமார் 16 வருடங்கள் கழித்து இன்று மறுபடியும் தனது பண்பலை ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது.
இந்த ஒலிபரப்பை பாரீசில் 93.1 புள்ளி எப்.எம்மில் FM 93.1MHz ரசிகர்கள் கேட்டு மகிழலாம், சற்லைற் : கொட்பேட் 12597 v
பேசும் போது அழகிய ஒலியால் உள்ளங்களை மயக்கும் உன்னத மொழியாம் பிரெஞ்சு மொழி வலம் வரும் காற்று மண்டலத்தில் தமிழன்னையும் வலம்வருவது மாபொரும் மகிழ்வாகும்.
அதேநேரம் இணையவழியாக 24 மணி நேரமும் முழங்கிக் கொண்டிருக்கிறது தமிழமுதம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Mobile: Tunein / SHOUTCast / DesiRadio / INDRadio / rad.io
Join our official Facebook page on : http://www.facebook.com/Thamizhamutham
 


அலைகள் 14.07.2013 ஞாயிறு மாலை

சர்வதேச வானொலியின் பழைய இதழ்கள்


சர்வதேச வானொலியின் பழைய இதழ்களின் அட்டைபடத்தினை கீழ்கண்ட தொடுப்பில் காணலாம். (நன்றி: பொள்ளாச்சி நசன்)
http://pollachinasan.com/ebook18/18250/18250.htm

ஆப்பிள் ஐடியூன் ரேடியோ வெளியாகிறது

புதுமையான மின்னணு சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள ஆப்பிள் நிறுவனம், அடுத்தபடியாக புதிய ரேடியோ சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

i tunes radio service என்ற பெயரில், இணைய தளத்தின் மூலம் இலவசமாக இசை ஒலிபரப்பு சேவையை ஆப்பிள் தொடங்கியுள்ளது. எனினும் இதில் விளம்பரங்கள் இடம் பெறும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

பல்வேறு விதமான இசை ரசிப்பவர்களுக்கானது இந்த சேவை என ஆப்பிள் கூறியுள்ளது. வாரந்தோறும் புதிதாக வெளியாகும் ஆயிரக்கணக்கான இசை ஆல்பங்களை புத்தம் புதிதாக தாங்கள் வழங்கப் போவதாகவும் ஆப்பிள் கூறியுள்ளது.
நன்றி: http://tamil.webdunia.com

Thursday, July 11, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 6

குட் பை!

முன்னொரு காலத்தில் தந்தி வீடு தேடி வந்தால் இதயம் துடி துடிக்க என்ன செய்தி வந்துள்ளதோ என குடும்பமே பத பதைத்த நியாபகங்கள் பலருக்கும் இருக்கும்..ஆனால் இப்போதைய காலத்தில் செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் மாடர்னாகி விட்ட நிலையில், நமது பாரம்பரியமான, பதை பதைக்க வைக்கும் இந்த தந்தி சேவைக்கு வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் ’குட் பை’ பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இப்போது சகலரும் உபயோகிக்கும் செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 – 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், பெரும்பாலானோர் பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்ததனர்.
இந்தியாவில் 1855-ம் ஆண்டுதான் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் 2003 வாக்கில் 500 ரூபாய்க்கு செல்போன், இன்கம்மிங் கட்டணம் இலவசம், அவுட்கோயிங் ரூ. 1 அல்லது 2 ரூபாய்தான் என தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போன் சேவை சந்தையில் களமிறங்கியதிலிருந்து, குடிசை வீடு முதல் கோபுரங்கள் வரை அங்கிங்கெனாதபடி எல்லார் கையிலும் செல்போன்கள்.
அத்துடன் கம்ப்யூட்டர் புழக்கம் உள்ளவர்கள் இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என தங்களது தகவல் பரிமாற்றங்களை ஹைடெக்க்காக மாற்றிக் கொண்டுவிட்டனர்.
இதன் விளைவு தந்தி என்ற ஒரு சேவை இருப்பதே பெரும்பாலானோருக்கு மறந்துவிட்டதால்,அச் சேவையை வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ( தந்தி சேவை) சீனியர் ஜெனரல் மேனஜர், பல்வேறு தொலைபேசி மாவட்ட மற்றும் சர்க்கிள் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் இந்த அறிக்கை அனைத்து தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கும், வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தந்தி பதிவு அலுவலகங்கள் வரும் ஜூலை 15-ம் தேதிக்கு பின்னர் தந்திகளை பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முழுவதும் நிறுத்துவதற்கு பதிலாக, இதனை இந்திய தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/

Tuesday, July 09, 2013

ஆபத்துகால மேலாண்மையில் "ஹாம்'

ஆபத்துகால மேலான்மையில் ஹாம் வானொலி
 
ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு வகையிலான இயற்கைச் சீற்றங்கள் நமக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுக்கிறது. சுனாமி, என்ற வார்த்தையே நம்மில் பலருக்கு 2001ற்கு பின் தான் அறிமுகம் ஆயிற்று. அவ்வப்போது கடலோர மாவட்டங்களில் ஏற்படும் புயல் மற்றும் கடல் சீர்றங்களின் போது மட்டுமே நாம் ஆபத்துகால மேலான்மை குறித்து சிந்திக்கிறோம். அதுவரை நாம் இது பற்றி தீவிரமாக சிந்திப்பதே இல்லை.
அந்த வரிசையில் இப்பொழுது இணைந்திருப்பது இமாலய சுனாமி. பருவ மழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது  தான் காரணம் என சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதிகளில் நேரடியாக சென்று பார்த்தபோது நமக்கே ஒரு வித பயம் தொற்றிக்கொள்கிறது. மிகப்பெரிய காட்டாற்றின் அருகிலேயே பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வைத்துள்ளனர். கங்கையின் வேகத்தினை நீங்கள் ஒரு முறை ஹரித்வார் சென்றால் பார்க்கலாம். அப்படியான அசுர வேகத்தினை பெரு வெள்ளம் வரும்பொழுது தடுப்பது என்பது மனித சக்திக்கு அடங்காத ஒன்று.

எப்படி அங்குள்ள அரசு இவற்றை அனுமதித்தது என்று நாம் கேட்க வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் எப்படி அனுமதித்தார்களோ அது போன்றே அங்கும் அனுமதி வழங்கியிருப்பர். தமிழ்நாட்டிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அரசே முன் நின்று நடத்திவந்துள்ளது வரலாறு. அதற்கு உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களின் பலப்பேருந்து நிலையங்களைக் கூறலாம். மிகப்பெரிய குளங்களையெல்லாம் இது போன்று ஆக்கிரமிக்கும் பட்சத்தில் அங்கு தேக்கிவைக்கப்படும் நீர் வேறு எங்கு செல்லும் என்ற கேள்வி சாதரண மனிதனுக்கும் கூட எழும். இயற்கை சீரும்பொழுது அய்யோ...அம்மா... எனக் கூக்குரல் இடுவதில் பயன் இல்லை.

இயற்கை சீற்றம் ஒரு புரம், அக்கிரமிப்புகள் மறுபுரம், இடையில் சிக்கித் தவிப்பது மக்கள். சதுப்புநிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டாலே மிகுந்த சிரமப்படவேண்டியுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் என்பது கரடு முரடானது. அதனை கணிப்பது இயலாத காரியம். அப்படிப்பட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தின் போது மீட்பு நடவடிக்கை என்பது பொது மக்களால் இயலாத காரியம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலில் தட்டுப்பாடு உணவுக்கு ஏற்படும். அதன் பின் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயலற்றுப் போகும். இப்படியான சமயங்களில் மீட்புப் பணிகளே ஸ்தம்பித்து போகும். இதனால் அந்தப் பகுதிகள் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாவார்கள்.

நாம் என்ன தான் தொழில்நுட்பங்களில் முன்னேறி இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றைச் சார்ந்தே இருக்கின்றன. உதாரணமாக கம்பியூட்டர் இணைய வசதி இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. கைப்பேசிக்கு சிக்னல் தேவை. வெள்ள பாதிப்பு ஏற்படும் போது டவர்களும் அடித்துசெல்லப்படுவது இயற்கையே. ஆக, கைப்பேசிகளும் இயங்காது. தொலைப்பேசி நிலையங்களுக்கும் இதே கதிதான். தொலைக்காட்சிகளையும் மின்சாரம் இன்றி பார்க்கமுடியாது. வானொலியை பேட்டரி கொண்டு கேட்கலாம். ஆனால் அதுவும் எவ்வளவு காலம் தாங்கும்? ஆக அனைத்து தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் செயலற்று போகும் போதெல்லாம் ஆபத்துக்கு கைக்கொடுப்பவனாக வந்து சேர்வது அமெச்சூர் வானொலி எனப்படுகின்ற ஹாம் வானொலி தான்.

அமெச்சூர் வானொலி மட்டும் எப்படி இந்த சமயத்தில் செயல்படும்? என்ற சந்தேகம் அனைவர்கும் எழுவதுதான். இதற்கும் மின்சாரம் தேவைதானே? பொதுவாக இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் நிச்சயமாக மின்சாரம் இருக்காது. ஆனால் இந்த அமெச்சூர் வானொலிகளுக்கு குறைந்த அளவு மின்சாரம் இருந்தால் போதுமானது. மேலும் இதனைக் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக மின்சாரமே கிடைக்காவிட்டாலும் இந்த ஹாம் வானொலியை சூரிய சக்தி கொண்டும் இயக்க முடியும். அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது ஹாம் வானொலி உபயோகிப்பாளர்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  மின்சாரமே இல்லாத போது அங்கு அவர்கள் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி பல்வேறு உயிர்களை காப்பாற்றினார்கள்.

ஹாம் வானொலியானது சிற்றலைவரிசை மற்றும் மிக உயர் அதிர்வெண்ணில் ஒலிபரப்பப்படுவதால் அதிக தொலைவிற்கு செல்கிறது. இதனால் எளிதாக உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது. ரிப்பீட்டர்களின் துணைகொண்டு மிக உயர் அதிர்வெண்ணில் இந்தியா முழுவதும் ஒலிபரப்ப முடியும். ஆகவே ஹாம் வானொலியானது எந்த ஒரு சூழ்நிலையிலும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு உன்னத சாதனமாகும்.
ஹாம் வானொலி பயன்பாட்டாளர்கள் உத்தரகாண்டில் ஆற்றிய சேவைப் பற்றிய செய்தி பல்வேறு வடநாட்டு ஊடகங்களில் நீங்கள் படித்து இருக்கலாம். பொதுவாக ஹாம் வானொலியை அனைவரும் பயன்படுத்த முடியாது. இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. மாறாக இதற்கென மத்திய அரசு வைக்கும் தேர்வினை எழுதுபவர்களுக்கு முறையான உரிமத்தினை வழங்குகிறார்கள். இந்தத் தேர்வினை எழுத விரும்புபவர்களுக்கு முக்கிய ஊர்களில் ஹாம் கிளப்புகள் உள்ளன.
இந்தியாவில் புகழ்பெற்ற கிளப்பானது ஹைத்திராபாத்தில் உள்ளது. 'நேசனல் இன்ஸ்டிடுயூட் ஆப் அமெச்சூர் ரேடியோ' என்ற அந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் ஹாம் தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு பாடத்திட்டத்தினை வழங்கி தேர்விற்கு தயார்செய்து வருகிறது. இப்பொழுது உத்ரகாண்டில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் இந்த அமைப்பே தேவையான உதவிகளை செய்தும் வருகிறது. எங்கெல்லாம் இதுபோன்ற தொலைத்தொடர்பு சேவைகள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் இவர்கள் ஆஜர்.

ஹாம் வானொலியானது இதுபோன்ற ஆபத்துகாலங்களில் செய்த சேவை ஏராளம். இது போன்ற சேவைகளில் ஏன் பொது மக்களாகிய நாமும் பங்கேற்கக் கூடாது? உலகின் குறைந்த மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் 80 சதவீதம் பேர் ஹாம் வானொலி உரிமம்  பெற்றவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக உலக அளவில் ஜப்பானில் தான் ஹாம் வானொலி உரிமம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது ஒரு சதவீத மக்கள் கூட ஹாம் உரிமம் பெற்றவர்களாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.
இந்தியாவில் இதுவரை 20,000 பேர் மட்டுமே ஹாம் வானொலி உரிமம் பெற்றவர்களாக உள்ளனர். முதல் ஹாம் வானொலி உரிமம் 1921இல் வழங்கப்பட்டது. 1930 வரை இந்தியாவில் 30 ஹாம் உரிமங்களே வழங்கப்பட்டு இருந்தது. இந்திய சுதந்திரத்தில் ஹாம் வானொலி வைத்திருப்போரின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது.

இவர்கள் மறைமுகமாக வானொலி ஒலிபரப்புகளில் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஊட்டினர். நமது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியும் ஹாம் வானொலி உரிமம் பெற்றவர்களே. 1984 வரை ஹாம் வானொலிப் பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், அந்த வானொலிப் பெட்டியின் விலையை விட சுங்க வரி அதிகமாக கட்டவேண்டி இருந்தது.

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கினைப்பு பிரிவின் கீழ் இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஹாம் வானொலி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள்.

ஹாம் வானொலி உரிமம் யார் எல்லாம் பெறலாம்? 12 வயது நிரம்பிய அனைவரும் தேர்வினை எழுதலாம். ஹாம் தேர்வினை எழுதி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனித்துவமான அடையாளக் குறியீடு வழங்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Call Sign என்று கூறுகிறார்கள். ஹாம் வானொலிக்கான தகுதித் தேர்வில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் கோட்பாடுகள் மட்டுமல்லாமல் மோர்ஸ் குறியீடுகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. இரண்டு வைகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் வகைத் தேர்வில் தேர்ச்சி பெருபவர்கள் அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்தலாம்.  இரண்டாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெருபவர்கள் குறிப்பிட்ட சக்தியில் குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே ஒலிபரப்ப அனுமதிக்கப்படுவர்.

இந்தியாவின் சார்பாக சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களுக்கும், இந்தியாவில் ஹாம் வானொலியின் பங்கினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஓர் அமைப்பாக இந்திய அமெச்சூர் வானொலி சொசைட்டி உள்ளது. இன்று உத்ரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் அங்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. அதனை இந்த ஹாம் வானொலியே ஈடு செய்து வருகிறது. ஹாம் வானொலியில் இணைந்து நாமும் நாட்டிற்குச் சேவையாற்றலாமே.

- தங்க. ஜெய்சக்திவேல் 
நன்றி: தினமணி First Published : 08 July 2013 03:37 AM IST

Monday, July 08, 2013

பிபிசி தலைமைமையகத்தை மகாராணி திறந்து வைத்தார்

பிபிசியின் மீளக்கட்டியமைக்கப்பட்ட தலைமை அலுவலகத்தை எலிசபெத் மகாராணியார் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வுக்காக லண்டனின் மையப்பகுதியில் இருக்கின்ற ''நியூ புரோட்காஸ்டிங் ஹவுஸ்'' என்னும் எமது தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்த மகாராணியார், இங்கு நடந்த ஒரு இசைக்கச்சேரியின் நேரடி ஒலிபரப்பை கேட்டு ரசித்ததுடன், எமது செய்தி தயாரிப்பு அறைகளுக்கும் விஜயம் செய்தார்.
அதன் பின்னர் பிபிசி வானொலியின் கலையகத்துக்கும் அவர் வருகை தந்தார்.
அங்கு நேரலையில் உரையாற்றிய மகாராணியார், இந்த நிலையம், எதிர்காலத்தில் பிபிசியின் பணிகளுக்கு மிகவும் சிறப்பாகச் சேவையாற்றும் என்று நம்புவதாகக் கூறினார்.
அத்துடன் அதனை அதிகாரபூர்வமாக திறந்து வைப்பதாகவும் அவர் அறிவித்தார்.
தனது கணவர் இளவரசர் பிலிப் சுகவீனமுற்று லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், மகாராணியார் தனது ஏற்கனவே திட்டமிட்ட பணிகளை தொடர்ந்தும் செய்துவருகிறார்.

அடுத்த வாரம் தனது 92வது வயதில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இளவரசர் பிலிப் அவர்கள் இரு வாரங்கள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜூன், 2013
நன்றி: http://www.bbc.co.uk

Friday, July 05, 2013

சீனா மற்றும் சீன வானொலி நிலையம் பற்றிய கருத்துக் கணிப்பு

அன்பான நேயர்களே, ஜுலை திங்கள் முதல், வெளிநாட்டு நேயர்களுக்கிடையே சீனா மற்றும் சீன வானொலி நிலையம் பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்று துவங்குவதாக சீன வானொலி அறிவித்துள்ளது கிறது.
 
tamil.cri.cn என்ற இணையதளத்தில் வினாத்தாட்களை நிரப்புவது, tamil@cri.com.cn என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை அனுப்புவது ஆகிய வழிமுறைகளின் மூலம், இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ளலாம். நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால், சீனா மற்றும் சீன வானொலி பற்றிய கருத்துக் கணிப்பு என்று தலைப்பில் குறிப்பிடுங்கள். ஜுலை 12ஆம் நாளுக்குள் இதில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து, நினைவுப் பரிசு வழங்க உள்ளது சீன வானொலி. இது பற்றிய மேலதிக தகவல்கள் சீன வானொலி இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பில் உங்கள் பங்களிப்பை பெரிதும் வரவேற்கிறது சீன வானொலி.         
 
கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள்:
1. சமாதான முறையில் வளர்ந்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து, கூட்டாக வெற்றி பெறுவது என்ற தூதாண்மைக் கொள்கை பற்றி உங்கள் கருத்து என்ன                      
 
2. சீனா பற்றிய தகவல்கள் உங்களுக்கு எப்படி கிடைக்கின்றன சீன வானொலி நிலையம், பிரிட்டன் வானொலி நிலையம், அமெரிக்க ஒலிபரப்பு நிலையம் ஆகிய செய்தி ஊடகங்களுக்கிடையில், சீனா பற்றி தகவல்களை அறிந்து கொள்வதில் எந்த ஊடகத்தின் மீது நீங்கள் அதிகமான நம்பிக்கை கொள்கின்றீர்கள்                        
 
3. முக்கிய சர்வதேச நிகழ்ச்சிகள் நிகழும் போது, எந்த செய்தி ஊடகங்களிலிருந்து தகவல்களைப் பெற விரும்புகின்றீர்கள் ஏன்       
 
பெயர், மின்னஞ்சல், தொழில், முகவரி ஆகியவற்றினைத் தெளிவாக எழுதி உடனே அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி: tamil@cri.com.cn

கவர்ந்திழுக்கும் சீனா பற்றிய பொது அறிவுப் போட்டி

அன்புள்ள நேயர்களே, பாரம்பரிய விழாக்கள், உணவு வகைகள், ஓவியங்கள், இசை, கட்டிடவியல் முதலியவை மூலம் சீனா பற்றி மேலும் அறிந்து கொள்ளும் புதிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. சீன வானொலி ஜுலை முதல் நாள் தொடக்கம் ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் வரை கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப்போட்டியை நடத்த இருக்கின்றது. நண்பர்கள் அவர்களின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு அல்லது இணையம் மூலம் இப்போட்டியில் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
 
போட்டிக்கான விதிகள்:
1. ஒவ்வொரு கட்டுரையிலும் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
2. தவிர, கட்டுரைகள் எழுதுதல், சீனா பற்றி ஓவியங்கள் தீட்டுதல், சீன கையெழுத்துக் கலைப் படைப்புகளை படைத்தல், இணையம் மூலம் நீங்களே உழைத்து உருவாக்கிய ஒளிப்பதிவுகளை அனுப்புதல் முதலிய வடிவங்களில் நீங்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த ஒளிப்பதிவில், சீன இசை நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றுதல், சீனப் பாடல்களை பாடுதல், வூ சூ தற்காப்பு கலை அரங்கேற்றத்தில் ஈடுபடுதல், சீன பாரம்பரிய இசை கருவியை இசைத்தல், சீன உணவு வகைகளைத் தயாரித்தல் முதலியவற்றில் உங்களுடைய ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தலாம்.
3. ஒவ்வொரு படைப்புகளிலும் அந்தந்த படைப்புக்களின் பெயர் அல்லது தலைப்பு, உங்களுடைய பெயர், நாடு, தொடர்பு எண், முகவரி, சுருக்கமான விளக்கம் ஆகியவை இடம்பெற வேண்டும்.
4. ஒலிப்பதிவு mp3 வடிவிலும், ஒளிப்பதிவு MPEG அல்லது mp4 வடிவிலும் இருக்க வேண்டும். தவிர, ஒளிப்பதிவின் அளவு 10 நிமிடங்கள் மற்றும் 200 MBக்குள் இருக்க வேண்டும்.
 
போட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். சிறப்புப் பரிசு பெறும் நண்பர் சீனாவில் இலவசப் பயணம் மேற்கொள்ள அழைக்கப்படுவார். கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப்போட்டியில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது சீன வானொலியின் தமிழ் பிரிவு. போட்டி ஜுலை முதல் நாள் தொடக்கம் ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் வரை நடைபெருகிறது
 
பங்கெடுக்கும் வடிவம்:
கேள்விகளுக்குப் பதிலளித்தல். கட்டுரைகள் எழுதுதல். சீனா பற்றி ஓவியம் தீட்டுதல். சீன கையெழுத்துக் கலைப் படைப்புகளை படைத்தல். இணையம் மூலம் நீங்களே படைப்புக்களாக ஒளிப்பதிவுகளை அனுப்புலாம்.
 
அனுப்ப வேண்டிய வான் அஞ்சல் முகவரி:
TAMIL SERVICE CRI-9, CHINA RADIO INTERNATIONAL , P.O.Box 4216, BEIJING , P.R.CHINA 100040, மின்னஞ்சல் முகவரி:
tamil@cri.com.cn

Thursday, July 04, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 5

ஜூலை 15ல் தந்தி சேவை நிறுத்தம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்புக்கு எதிர்ப்பு
தபால் துறை மூலம் அளிக்கப்படும் தந்தி சேவை, ஜூலை 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தந்தி சேவைப் பிரிவின் மூத்த பொது மேலாளர் சமீம் அக்தர், அனைத்து தந்தி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வரும் ஜூலை 15ம் தேதியில் இருந்து தந்தி சேவையை முழுமையாக நிறுத்திவிட வேண்டும் என்றும், மக்களிடம் இருந்து தந்தி பெறவோ, அதனை வினியோகிக்கவோ வேண்டாம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தபால் துறையிடம் கலந்தாலோசித்த பின்னரே, உள்நாட்டு தந்தி சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தந்தி சேவையை நிறுத்தும் பி.எஸ்.என்.எல். முடிவுக்கு தேசிய தந்தி சேவை ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இ-மெயில், எஸ்எம்எஸ் போன்றவற்றின் வரவால் தந்தி அனுப்புவது குறைந்தது. அதனால், 160 ஆண்டு கால தந்தி சேவை நிறுத்தப்படுகிறது.

Monday, July 01, 2013

சான்பிரான்சிஸ்கோவில் பண்பலை வானொலியின் 8ம் ஆண்டு விழா

சான்பிரான்சிஸ்கோ : கலிஃபோர்னியா மாநிலத்தின் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியின் புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் இப்பகுதியில் வாழும் பல்வேறு தரப்பு, பன்னாட்டு மக்களின் நலனுக்காக ஒரு சமூக வானொலியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மூன்று மணி வானொலி நேரத்தையும் ஒவ்வொரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் எடுத்துக் கொண்டு பல்வேறு வகையான வானொலி நிகழ்ச்சிகளை பல உலக மொழிகளிலும் கே.இசட்.எஸ்.யூ 90.1 என்னும் பண்பலை அலை வரிசையில் நடத்தி வருகிறார்கள். இது ஒரு சமூக பயன்பாட்டு இலவச வானொலிச் சேவையாகும். இந்த வானொலிச் சேவையின் ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் காலை 6 மணி முதல் 9 மணி வரையான பகுதியை எடுத்து இட்ஸ் டிஃப் என்னும் இந்திய மொழிகளுக்கான நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக தயாரித்து வழங்கி வருபவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன். இந்த அமைப்பின் சார்பாக இதன் நிறுவனரும் வானொலி நிகழ்ச்சி நடத்துனருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் இப்பகுதி வாழ் இந்தியர்களின் கலாச்சார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக 400 வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியை இப்பகுதி வாழ் மக்களும் உலகெங்கிலும் இருந்து நேயர்களும் www.itsdiff.com தளம் மூலமாகவும் கேட்டு வருகிறார்கள். இட்ஸ் டிஃப் வானொலி நிகழ்ச்சி இப்பகுதியின் பல்வேறு சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து ஏராளமான சமூக சேவைகளிலும் கூட தன்னை ஈடுபடுத்தி வருகிறது. 
இந்த ரேடியோ நேர்காணலில் தமிழ் நாட்டின் அனைத்துப் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர்களும் பங்கு கொண்டிருக்கிறார்கள். பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ் பி பி போன்ற திரையிசைப் பாடகர்களும் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பி ஏ கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி போன்ற இலக்கியவாதிகளும் கிரேசி மோகன் போன்ற நடிகர்களும் இன்னும் ஏராளமான பிரமுகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகள் குறித்தான விமர்சனங்களும் கலந்துரையாடல்களும் இச்சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகின்றன. குழந்தை வளர்ப்பு, உணவு, கல்வி, சுகாதாரம், தியானம், யோகா, ஆளுமை வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், சுய தொழில், வேலை வாய்ப்புகள், திட்டமிடுதல், பொருளாதாரம், நிதி முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்பு, இலக்கியம், புத்தக வாசிப்பு, சினிமா, சங்கீதம் போன்ற ஏராளமான பயன் தரும் நிகழ்ச்சிகளும் இச்சிறப்பு நிகழ்ச்சியில் அளிக்கப்பட்டு வருகின்றன. இட்ஸ் டிஃப் வானொலி கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருவதைக் கொண்டாடும் விதமாக எட்டு வருடங்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஒரு ஆண்டு விழா நிகழ்ச்சியை மே 5ம் தேதி 2 மணி முதல் 6 மணி வரை ஃப்ரீமாண்ட் மிஷன் சான் ஓசே பள்ளி அரங்கத்தில் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கடந்த எட்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தயாரித்தளித்த தயாரிப்பாளர்களும் வானொலியின் நேயர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் பொழுது ஏராளமான கலை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும், உரைகளும் நிகழ்த்தப் பட்டன. 
- தினமலர் வாசகர் ராஜன் சடகோபன்
நன்றி: http://www.dinamalar.com மே 28,2013