‘மனிதன் தெய்வத்தன்மை அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். தெய்வத்தன்மை மனிதனுக்குள்ளே இருக்கிறது. அதை சோபிக்கச் செய்வது தான் இலக்கியத்தின் கடமையாகும். அதற்கான முறைகளிலே தான் எழுத்தைச் சித்திரித்துக் கொண்டு போக வேண்டும். அற்ப விஷயங்களையும் சில்லறைத் தகராறுகளையும் பற்றி எழுத்தில் எதிர்பார்ப்பது, இலக்கியத்தை புண்படுத்துவதாகும்..'
இதுதான் 'மணிக்கொடி' மூலவர்களில் ஒருவரும், பாரதியின் தனிப்பெரும் சீடர்களில் ஒருவராகவும் விளங்கிய வ.ரா என்றழைக்கப்பட்ட வ.ராமசாமியின் இலக்கிய சித்தாந்தமாகும்.
தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் கிராமத்தைச் சேர்ந்த வைணவக் குடும்பமொன்றில் செப்டம்பர் 17,1889-ம் ஆண்டு பிறந்தார் வ.ரா. 1905-ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் நுழைந்த போதே, இந்திய தேசிய விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப் பெற்றார். பிரபல தேசபக்தர் கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரின் தொடர்பால், 1910-ல் பாண்டிச்சேரி சென்று, அங்கிருந்த அரவிந்தரையும், பாரதியையும் சந்தித்தபோது அவரது வயது 21.
1911-லிருந்து 1914 வரை பாரதியின் வீட்டிலும், பின்னர் அரவிந்த ஆசிரமத்திலும் தங்கி அவர்களோடு மிக நெருக்கமாகப் பழகி, அவ்விருவரின் வாழ்க்கைத் தத்துவத்தையும், பணிகளையும் நன்கறிந்துகொண்டு, தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார். பாரதியின் மேல் கொண்டிருந்த மட்டற்ற பற்றினால், பெண் விடுதலை பற்றிய பாரதியின் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பால்ய மணத்தை எதிர்த்தும், விதவை மறுமணத்தை ஆதரித்தும் ‘சுந்தரி' என்கிற தன்னுடைய முதல் நாவலை 1915-ல் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, ‘கோதைத் தீவு, விஜயம்' ஆகிய நாவல்களை அவர் படைத்தார். ‘மகாகவி பாரதி' நூலும், ‘மழையும், புயலும்' கட்டுரைத் தொகுப்பும், ‘நடைச்சித்திரம், வாழ்க்கை விநோதங்கள்' ஆகிய குணசித்திரப் படைப்புகளும், ‘கற்றது குற்றமா?' என்கிற சிறுகதைத் தொகுப்பும், ‘வ.ரா. வாசகம்' என்கிற நூலும், பாரதியின் மெய்யான வழித்தோன்றல் அவர் என்பதை மெய்ப்பிக்கின்றன.
1933-ல் ‘மணிக்கொடி' சீனிவாசன், டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோருடன் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்று, சிறைவாசம் சென்றார் வ.ரா. இவ்விருவருடன் இணைந்து செப்டம்பர் 17, 1933-ல் ‘மணிக்கொடி' எனும் வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியர் குழுவிலொருவராகப் பணியாற்றினார். இவ்விதழின் முதற்பணி பாரதியைப் பற்றித் தமிழுலகத்திற்கு எடுத்துச் சொல்வதேயாகும். ‘மணிக்கொடி' ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், ‘சுதந்திரன், ஸ்வராஜ்யா' போன்ற பத்திரிகைகளில் வ.ரா. எழுதி வந்த போதிலும், வாசகர்களின் சிந்தனையைக் கிளறும் வகையிலே புதிய இலக்கிய ரூபங்களை அவர் ‘மணிக்கொடி'யிலேதான் படைத்தார்.
படைப்புத் துறையில் மட்டுமின்றி, விமர்சனத் துறையிலும் தன்னுடைய கருத்துகளை ஆழ்ந்து சிந்திக்கும் வகையிலேயே அவர் படைத்துள்ளார். துணிவு, கோட்பாட்டு உறுதி, மனத்தை மாற்றும் தன்மை - இவைதான் இலக்கிய விமர்சனத் துறையில் வ.ரா.வின் அணுகுமுறையாகும். எழுத்தாளனின் குறைகளை மட்டும் எடுத்துக்காட்டி அவனை எழுதவிடாமல் அடிக்கக் கூடாது என்பதே வ.ரா.வின் கொள்கை.
1938-ல் சென்னை வானொலி நிலையம் ராஜாஜி அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. நிலையத்தின் இயக்குநராக லண்டன் பி.பி.சி.யில் பயிற்சி பெற்ற விக்டர் பரஞ்சோதியும், துணை இயக்குநராக ஜி.டி. சாஸ்திரியும் பணியாற்றினார். ‘மூட நம்பிக்கைகள்' என்கிற தலைப்பில் வ.ரா. வானொலியில் ஆற்றிய உரை, நிலைய இயக்குநர்கள் இருவரையும் ஈர்க்க, அவரை வானொலியில் தொடர்ந்து உரையாற்ற அழைத்தனர். பின்தொடர்ந்த 12 ஆண்டு காலங்களில், சுமார் 120 சொற்பொழிகளை வானொலியில் ஆற்றினார் பெரும்பாலான உரைகள் கிடைக்காமலேயே போனது தமிழிலக்கிய உலகத்தின் துரதிர்ஷ்டம்.
வா.ர. தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கினார். 62வது வயதில் 1951-ம் ஆண்டில் ஆகஸ்ட் 23-ம் தேதியன்று காலமான வ.ரா., தமிழ்ப் படைப்பாளிகளுக்கு விட்டுச் சென்றுள்ள அன்புக் கட்டளை இதுதான்:
‘மக்களின் முகத்தைப் பாருங்கள்! அதன் துணை கொண்டு நவீன இலக்கியத்தைப் படையுங்கள்!’
- தொடர்புக்கு: narpavi2004@yahoo.com
Source: http://tamil.thehindu.com/