Saturday, March 31, 2018

மோர்ஸ் ஒலிபரப்பு




தொடர்பியலின் வகைகள் இன்று பல்கிப் பெருகிவிட்டது. ஹாம் வானொலியில் மோர்ஸ் குறியீட்டில் இன்றும் தொடர்புகொள்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். மோர்ஸ் குறியீடு தெரியாதவர்கள் கூட மோர்ஸ் குறியீட்டில் தனது ஹாம் வானொலியை ஒலிபரப்ப விரும்புகின்றனர். அதற்கு இன்று பல்வேறு மென்பொருட்கள் உதவுகின்றன.

 மோர்ஸ் ஒலிபரப்பு 

மோர்ஸ் குறியீட்டு ஒலிபரப்பானது சிற்றலையில் மட்டுமே செய்யப்படுகிறது. அதற்கு காரணம், இதன் மூலம் பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு குறைந்த சக்தியிலேயே செய்ய முடியும் என்பதே. அடிப்படையில் இந்த ஒலிபரப்பினை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வது அவசியம்.

  1. அழைப்புக் குறியீட்டை குறித்துக் கொள்ளல்: மோர்ஸ் குறியீட்டில் உங்களை யாரே “CQ CQ CQ DE VU3UOM    K” என்று யாரே அழைக்கிறார்கள் என்றால், உடனடியாக நாம் அந்த அழைப்புக் குறியீட்டினை குறித்துக் கொள்ள முடியாது. எனவே இரண்டாவது முறை அழைக்கும் பொழுது முழுமையான கவனத்தினை செலுத்தி குறித்துக்கொள்ள வேண்டும். இதில் DE என்பது from அதாவது இந்த இடத்தில் இருந்து உங்களை நான் அழைக்கிறேன் என்று பொருள். அதே போன்று K என்ற எழுத்திற்கான பொருள் “end of transmission, go ahead” அதாவது “இத்துடன் இந்த ஒலிபரப்பு நிறைவு பெறுகிறது” என்பதையே குறிக்கும். பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்று மோர்ஸ் குறியீட்டில் கிடையாது, எனவே DE, K போன்றவை பெரிய எழுத்துக்களில் இருக்கிறதே என்று குழப்பிக்கொள்ள வேண்டாம்.

  2. வரிசையாக பதில் அளிக்கவும்: குறிப்பாக நீங்கள் மோர்ஸ் ஒலிபரப்பில் ஒரே நேரத்தில்  இரண்டு அல்லது மூன்று நபர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் எப்படி அழைப்பீர்கள்? அந்த மாதிரியான சூழலில் “VU3UOM DE VU2FOT VU2SVF VU3LJX K” என்று அழைக்கலாம்.

  3. கவனியுங்கள்: மோர்ஸ் குறியீட்டில் உங்களுக்கான பதில் இப்படி வரலாம், “VU2FOT DE VU3UOM TKS FOR THE CALL MY NAME IS ….” இதில் TKS என்பது thanks என்பதன் சுருக்கமாகும். UR என்பது your  என்பதன் சுருக்கமாகும்.

  ஹாம்கள் எந்த ஒரு எழுத்தினையோ வார்த்தையையே அனாவசியமாக உபயோகிக்க மாட்டார்கள். தேவையான இடத்தில் தேவையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவர். இப்படியான சுருக்கக் குறியீடுகளை விரிவாக அறிந்துகொள்வதும் அவசியம். அவற்றை விரிவாக http://ac6v.com/moreaids.htm#CW எனும் இணையதளம் வழங்குகிறது. எந்த வித பதிலும் உங்களுக்கு மோர்ஸ் அழைப்பில் கிடைக்கவில்லை என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை விரிவாக இனி காணலாம்.

  தொடர்பியல் சிக்கல்

  நீங்கள் மோர்ஸ் குறியீட்டில் ஒலிபரப்பும் பொழுது, யாரும் உங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால், அதற்கு முக்கியக் காரணம், உங்கள் ஒலிபரப்பானது அவர்களைச் சென்று சேரவில்லை என்று அர்த்தம். உங்களின் சிக்னல் மிகக் குறைவாக இருந்திருக்கலாம். அல்லது ஒரு சில சமயம் சத்தம் அல்லது இடையூறுகள் காரணமாக உங்கள் சிக்னல் சென்று சேராமல் இருக்கலாம். எனவே அதற்கு தகுந்தாற்போல் வேறு ஒரு நிலையத்தினை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். வேறு எந்த மாதிரியான இடையூறுகள் உங்கள் மோர்ஸ் ஒலிபரப்பினை கேட்கவிடாமல் செய்யலாம் என்பதை இதள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

  ஒரே சமயத்தில் பலர் தொடர்பு கொள்ளுதல்: பொதுவாக மோர்ஸ் குறியீடுகளை ஒலிபரப்புவதிலும், கேட்பதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரே சமயத்தில் உங்கள் அலைவரிசையில் வேறு ஒருவரும் தொடர்பு கொள்கிறார் எனில், அவரின் ஒலிபரப்பானது முடிவடையும் வரை பொறுமையாக இருந்து, நீங்கள் ஒலிபரப்ப வேண்டும்.

  நீங்கள் கேட்க முடியவில்லை, உங்களைக் கேட்கிறார்கள்: உங்கள் வானொலிப் பெட்டியில் எதிர்புறம் ஒலிபரப்பும் நிலையத்தினை உங்களால் கேட்க முடியவில்லை. ஆனால் உங்களின் ஒலிரப்பினை எதிர்புறம் உள்ளவர்கள் கேட்க முடிகிறது எனில் அதற்கு என்ன காரணமாக இருக்கும்? இந்த மாதிரியான சூழலில், எதிர் புறம் ஒலிபரப்பும் நிலையத்தினை மீண்டும் ஒரு முறை ஒலிபரப்ப சொல்லி “Station calling, please come again” or “QRZed?” or “Who is the station calling?” போன்ற கேள்விகளில் ஏதேனும் ஒன்றைக் கேட்கலாம்.

  ஏற்கனவே QRZ என்றால் என்ன என்று பார்த்துள்ளோம். சர்வதேச Q சிக்னல் அமைப்பானது இதற்கான விளக்கத்தினை கூறியுள்ளது. “Who is Calling me?” அதாவது “என்னை அழைப்பது யார்?” என்று அர்த்தம். பொதுவாக பிரிட்டிஷ் முறையிலான ஆங்கில ஒலிப்பு முறையே ஹாம் வானொலி ஒலிபரப்பில் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள், உங்கள் அழைப்புக் குறியீட்டினை ஒரு முறைக்கு மூன்று முறை நிதானமாக சொல்வது அவசியம். இதன் மூலம் நீங்கள் யார் என்பதை எதிர்புறத்தில் உள்ளவர் அறிந்து கொள்வார். ஒவ்வொரு தொடர்பின் முடிவிலும் ‘ஓவர்’ (Over) என்று சொல்லி உங்கள் ஒலிபரப்பினை அவருக்கு வழிவிட்டு நிறுத்த வேண்டும்.

  உங்கள் நிலையத்தின் பெயர் தவறாக பெறப்பட்டால்: எதிர் புறம் உள்ள நிலையம் உங்களின் அழைப்புக் குறியீட்டை தெளிவாக அறிந்து கொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சில சமயங்களில் உங்களின் அழைப்புக் குறியைப் போன்றே வேறு ஒரு நிலையமும் அதே ஒலிபரப்பில் இருந்தால், இந்த குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக உங்களின் அழைப்புக் குறி cஎன்று இருந்தால், மற்றும் ஒருவர் VU2UOM என்ற அழைப்புக் குறியில் வந்துவிட்டால், இது போன்ற குழப்பம் ஏற்படுவது இயற்கை தான். அது போன்ற சமங்களில் பொறுமையாக கேட்டுவிட்டு ஒலிபரப்பினைத் தொடர்வது உத்தமம்.

  பல முறை நீங்கள் ஒலிபரப்பியும் உங்கள் ஒலிபரப்பு போகவில்லை எனில், அதற்கான காரணங்களை இதுவரை பார்த்தோம். இதில் முக்கியமாக நாம் சோதிக்க வேண்டியது, நமது வானொலிப் பெட்டி. உங்கள் பகுதியில் உள்ள வேறு ஒரு ஹாமை ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் நிறுத்திவிட்டு, நீங்கள் அந்த அலைவரிசையில் ஒலிபரப்பி சோதிக்கலாம்.  இதன் ஊடாக உங்களின் வானொலி பெட்டியானது, சரியாக ஒலிபரப்பப்படுகிறதா? உங்களின் குரல் தெளிவாக புரிந்துகொள்ளப்படுகிறதா? போன்றவற்றை நீங்கள் சோதிக்கலாம். உங்கள் பகுதியில் ஹாம் உரிமம் இல்லாத நண்பர்கள் இருக்கும் பட்சத்தில், இது போன்று சோதிக்கலாம்.

சரியான அலைவரிசையில் தான் ஒலிபரப்புகிறீர்களா? உங்கள் வானொலிப் பெட்டியில் உள்ள மைக்கையோ அல்லது மோர்ஸ் கீயையோ ஒலிபரப்பும் பொழுது டிஸ்பிளேவை கவனமாக பாருங்கள், அதில் உள்ள இண்டிகேட்டர்கள், நீங்கள் சரியான அலைவரிசையில் தான் ஒலிபரப்புகிறீர்களா என்பதை சுட்டிக்காட்டும். அப்படி இல்லை எனில்,  நீங்கள் வேறு ஏதேனும் ஒரு அலைவரிசையில் ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

சரியான சக்தியில் ஒலிபரப்புகிறீர்களா? நீங்கள் செய்யும் ஒலிபரப்பானது எவ்வளவு சக்தியில் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வது மிக அவசியம் ஆகும். உங்கள் வானொலிப் பெட்டி எவ்வளவு சக்தியில் ஒலிபரப்பும் திறன் கொண்டது என்பதை நீங்கள் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அந்த குறிப்பிட்ட சக்தியில் முழுமையாக உங்கள் வானொலிப் பெட்டி செயல்பட வேண்டியது அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் அதனை உடனே சரி செய்ய வேண்டியது அவசியம்.

ஆண்டனா சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? நீங்கள் பெரும் அனைத்து ஒலிபரப்புகளும் தெளிவாகவோ, ஓரளவு தெளிவாகவோ இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, எதிர் புறம் ஒலிபரப்பும் வானொலிக்கு பதில் கொடுக்க முடியும். இதனை தொழில்நுட்ப மொழியில் 4 முதல் 9 வரை சிக்னல் இருக்கும். உங்களுக்கு கிடைக்கக் கூடிய சிக்னல் மிகவும் சக்தி குறைவாக இருந்தால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக ஆண்டனா அல்லது கேபிளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம்.  உங்கள் வானொலிப் பெட்டியில் இருந்து அனுப்பும் ஒலிபரப்பு முழுமையான சக்தியில் ஆண்டனாவிற்கு செல்கிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு SWR மீட்டர் உங்களுக்கு உதவுகிறது.


Wednesday, February 28, 2018

ஹாம் கால் புக் (Ham Call Book)



அது என்ன கால் புத்தகம், அரைப் புத்தகம்! இதில் ஆங்கிலம் பாதி, தமிழ் பாதி உள்ளதே பிரச்சனை. Directory of Amateur Radio Operators India call book 2018 எனப்படும்  இந்த புத்தகத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து ஹாம்களின் விபரங்கள், முகவரி, தொலைப்பேசி எண் உட்பட அனைத்தும் இந்த புத்தகத்தில் அகர வரிசையில் இடம்பெற்றிருக்கும். இதன் துணை கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து ஹாம்களின் விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.


வரும் மார்ச் 25, 2018 அன்று ஏற்காட்டில் நடைபெற உள்ள டி.சி.டி ஹாம் சந்திப்பில் இந்த புத்தகம் விற்பனைக்கு வரவுள்ளது. டி.சி.டி ரிப்பீட்டர் கிளப் இந்த புத்தகத்தினைத் தயாரித்துள்ளது. நேரில் வருபவர்களுக்கு ரூ.200/-க்கும், தபாலில் பெற விரும்புவர்களுக்கு ரூ.250/-க்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புத்தகம் தேவைப்படுவர்கள் திரு.கல்யாண் (VU2LLL) அவர்களை +91 99421 28326 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, February 27, 2018

குறைந்த செலவில் எஃப். எம் தொடங்கலாம்!


உலகம் முழுவது யாரும் நினைத்தவுடன் வானொலிகளை நடத்திவிட முடியாது. அதற்கு காரணம் வானொலி என்பது எளிதாக அனைவரையும் சென்று அடையும் ஒரு ஊடகம். வானொலி ஒலிபரப்பில் பல்வேறு வகைகள் உள்ளன. சிற்றலை ஒலிபரப்பினை நீங்களோ நானோ நினைத்தவுடன் நடத்திவிட முடியாது. அதற்கு காரணம், சிற்றலை ஒலிபரப்பிற்கு ஒலிபரப்பிகள் பெரியதாக அமைக்க வேண்டும். மின்சாரமும் அதிகம் தேவை. இது போன்றதே மத்திய அலை ஒலிபரப்பும். ஆனால் இதற்கு முற்றிலும் மாறானது பண்பலை எனப்படும் எஃப்.எம் ஒலிபரப்பு. 


இங்கிலாந்து போன்ற நாடுகளில் எஃப்.எம். ஒலிபரப்பினைத் தொடங்குவது எளிதானது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் வானொலி தொடங்குவது என்பது மிகவும் சிரமான ஒன்று. அதற்கு காரணங்கள் பல. தனியார் துறை பண்பலை வானொலிகள் பல கோடிகள் கொடுத்து ஏலம் எடுத்தே தனது எஃப்.எம். ஒலிபரப்புகளை நடத்திவருகின்றன. 

சமுதாய வானொலிகள் தொடங்க வேண்டும் என்றால் கூட, அதற்கு பல லட்சங்கள் தேவைபடுகின்றது. அது மட்டுமல்லாது, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இது வானொலி தொடங்க நினைப்பவர்களுக்கு பெரிய சிரமத்தினை அளிக்கிறது. சமுதாய வானொலிகளையும் தனி மனிதர்கள் தொடங்கி விட முடியாது. கல்வி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ-கள் மட்டுமே இந்தியாவில் சமுதாய வானொலியை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் ஒரு சிறிய எஃப்.எம்.ஒலிபரப்பி விற்பனைக்கு சந்தையில் வந்துள்ளது. இதன் துணை கொண்டு ஐந்து முதல் ஏழு கி.மீ வரை எஃப்.எம் ஒலிபரப்பினை செய்ய முடியும். இந்தியாவில் சமுதாய வானொலிகளின் ஒலிபரப்பினை ஐந்து முதல் பத்து கி.மீட்டருக்குள் தான் கேட்க முடிகிறது. அதற்கு காரணம் 50 வாட் சக்தியில் மட்டுமே அந்த ஒலிபரப்பானது செய்யப்படுகிறது. இப்பொழுது விற்பனைக்கு வந்துள்ள இந்த எஃப்.எம் ஒலிபரப்பியின் விலை  ரூ. 3410 மட்டுமே. மொபைல் போன் விலையில் ஒரு எஃப்.எம். வானொலியைத் தொடங்கிவிட ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது இந்த நிறுவனம்.

இனி மேல் யார் வேண்டுமானாலும் ஒரு வானொலி நிலையத்தினைத் தொடங்கி விட முடியும். ஆனால் அரசின் அனுமதி இல்லாமல் ஒலிபரப்ப முடியாது. இங்கிலாந்தில் வரையறுக்கப்பட்ட வானொலி உரிமத்தினை வழங்குகின்றனர். இதன் துணை கொண்டு கிருஸ்மஸ், ரம்ஜான் காலங்களில் மட்டும் ஒலிபரப்பு செய்ய அனுமதி வழங்குகின்றனர். இந்த வானொலிகள் குறுகிய காலத்திற்கு மட்டும் ஒலிபரப்பினைச் செய்கிறது.


இனி மேல், நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு எஃப்.எம். வானொலியை தொடங்கி நடத்த முடியும். இதன் மூலம், வானொலி மீண்டும் புத்துயிர்பெரும். வேலை வாய்ப்பும் பெருகும்.  ஆனால் அரசின் உதவி இதற்கு கண்டிப்பாக தேவை. அரசு அனுமதி அளித்தால் மட்டுமே இது போன்ற ஒலிபரப்புகளை அனைவரும் ஒலிபரப்ப முடியும். இந்த எஃப்.எம் ஒலிபரப்பி தேவைப்படும் ஹாம்கள் https://goo.gl/39Zben என்ற இந்த இணைய தளத்திற்கு சென்று ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Tuesday, February 20, 2018

சமுதாய வானொலிப் பட்டியல் 2018

List of operational Community Radio Stations in India as on 29 Dec 2017  (214 Nos.) is available in the following link of Ministry of Information & Broadcasting, Govt. of India


(Via Jose Jacob, VU2JOS dxindia yg)

Sent from Yahoo Mail for iPhone

Wednesday, February 07, 2018

“இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ” புத்தக வெளியீடு அழைப்பிதழ்



ஹாம் ரேடியோ வரிசையில் மூன்றாவது புத்தகமான “இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ” புத்தகம் வெளியீட்டிற்கு தயார். வரும் சனிக்கிழமை (10-02-2018) காலை 10.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள மாமல்லா ஹெரிடேஜ் ஹோட்டலில் “வண்டு நெட்” சந்திப்பில் வெளியிடப்படுகிறது! அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Tuesday, February 06, 2018

மஹா மீட் 2018


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று ஹாம் வானொலியினர் மாமல்லபுரத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த வருடத்திற்கான சந்திப்பு வரும் சனிக்கிழமை (10 பிப். 2018) மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் மாமல்லா ஹெரிட்டேஜில்  நடைபெறவுள்ளது. ஹாம் வானொலி பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் ஹாம் வானொலித் தேரிவினை எழுத விரும்புபவர்களுக்கும் இது ஒரு விரும்புபவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள 94457 79232 என்ற கைப்பேசி எண்ணையோ அல்லது vandunetarc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

இதில் ஹாம் பொது அறிவுப் போட்டி மட்டுமல்லாது ஹாம் வானொலிப் பெட்டிகள், ஆண்டனாக்கள், ஹாம் வானொலிக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமல்லாது தின இதழில் தொடராக வெளிவரும் இந்த “இளைஞர்களுக்கான ஹாம் வானொலி” தொடர் தொகுக்கப்பட்டு மூன்றாவது பாகமாக வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் பாகம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிலும், இரண்டாவது பாகம் சென்னை அகில இந்திய வானொலியிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 04, 2018

இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ - பாகம் 3



உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட உலக வானொலி தின வெளியீடாக ஹாம் ரேடியோ புத்தக வரிசையில் மூன்றாவது பாகமாக "இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ" வெளிவர உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

World Radio Day 2018 release no.1
"Ham Radio for Youth" Vol:3