Monday, April 06, 2009

இலங்கை வானொலி இளம் அறிவிப்பாளர் ராதிகா கலைமணி -சிறப்பு செவ்வி

84 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட இலங்கை வானொலியின் இளம் அறிவிப்பாளர்களில் ஒருவரும், வெகு வேகமாக தனது இளம் பிராயத்திலேயே அறிவிப்பாளர்களில் முன்னணியில் திகழும் ஒருவருமான செல்வி ராதிகா கலைமணி (இச்செவ்வியை எமக்கு வழங்கிக் கொண்டி ருக்கும்போது இவர் செல்வியாக இருந்தார். தற்போது இவரது செவ்வி நமது இதழில் பிரசுரமாகும் காலத்தில் இவர் திருமதியாகி விட்டார். இவரது திருமணம் கடந்த வருடம் 2008 கடைசி பகுதியில் நடை பெற்றது. இவரது கணவர் பெயர் வின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.) அவர்கள் நமது இந்திய திருநாட்டிற்கு தனது அத்தை யாரானா மூத்த ஒலிபரப்பாளர் செல்வி. நாகபூஷணி அவர்களுடன் தமிழகத்தின் தலைநகராம் சிங்கார சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரையும் இலங்கை வானொலியின் நேயர் என்ற வகையில் நேரில் காண ஆவல் அதிகம் இருந்தாலும் தொலைபேசி வழியாக நமது சர்வதேச வானொலி இதழுக்காக பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அறிவிப்பாளர் என்ற பதவிக்கு வந்த பின்னர் இலங்கையில் கூட எந்தவொரு ஊடகங்களுக்கும் செவ்வி அளித்திராத நிலையில் - இந்தியாவில் குறிப்பாக நமது இதழுக்கு மனமுவந்து செவ்வி அளித்தார்.
ராதிகா என்பது இவரது பெயர். தந்தையின் பெயர் கலைமணி. இரு பெயரையும் இணைத்துக் கொண்டு ராதிகா கலைமணி என்ற பெயருடன் வானொலியில் வலம் வருகிறார். இவர் பிறந்தது இலங்கை நாவலப்பெட்டியில், இடையில் சிறிது காலம் ஹம்பளையில் இருந்தார். தற்போது நாவலப்பெட்டி பிரதேசத்தையே வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். தாயார் பெயர் ராஜேஷ்வரி, உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். ஒருவர் மணிகண்டன். படித்துக் கொண்டிருக்கிறார்; மற்றொருவர் விஷ்ணுவர்த்தன். இவர் கத்தாரில் பணியாற்றுகிறார். அக்கா ஒருவர் திருமணமாகி நாவலப்பெட்டியில் வசித்து வருகிறார். இவரது தந்தையுடன் பிறந்த இரு சகோதரியர். ஒருவர் இந்தியாவில் சென்னையில் குடியிருந்து வருகிறார். மற்றொருவர் இலங்கை வானொலியில் புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக திகழ்ந்து வரும் செல்வி. நாகபூஷணி கருப்பையா அவர்கள். சித்தப்பா ஒருவர் பெயர் கருணாநிதி. அம்மாவின் குடும்பத்தினர் எவருமில்லை.
இலங்கையில் =ஏ+ லெவல் என்று சொல்லப்படுகின்ற பொது தர உயர்தரம் (அட்வான்ஸ் லெவல்) வரை கல்வி பயின்றவர். இவரது அத்தை நாகபூஷணி கருப்பையா அவர்கள் இலங்கை வானொலியில் பிரபல அறிவிப்பாளராக இருந்த காரணத்தினால் இவருக்கும் தானும் ஒரு ஒலிபரப்பாளராக வரவேண்டும் என்ற ஆவல் ஏற்படவே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் அறிவிப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தார்.
சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். இலங்கை வானொலி அதன் அறிவிப்பாளர்களை எத்தனை கடுமையான பயிற்சிகளை வைத்து தெரிவு செய்து ஒலிபரப்புத் துறைக்குள் அனுமதிக்கிறார்கள் என்று. அதனால் தானோ என்னவோ இத்தனை வருடங்களாக இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் அதன் தனித்தன்மையை இழக்காமல் இருக்கின்றனரோ!
அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப் பிக்கும் போதே கல்லூரி படிப்பை இறுதி செய்த பின்தான் ஒரு ஆசிரியையாகவும் வரவேண்டுமென்ற ஆவலும் இருந்த காரணத்தினால் ஒரே நேரத்தில் ஆசிரியைப் பணிக்கும் விண்ணப்பித்தார்.
இறைவன் சித்தமென்னவோ இவர் இலங்கை வானொலிக்கு ஒரு நல்ல அறிவிப்பாளினி கிடைக்க வேண்டுமென முடிவு செய்திருந்ததனால் இலங்கை வானொலியிலிருந்து அழைப்பு வரவே - அங்கு சென்றார்.
இவருடன் ஒலிபரப்புத் துறைக்கு வருவதற்காக விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 400 பேர். அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 20 பேர். இவர்களிலும் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வில் தெரிவானவர்கள் ஏழு பேர். அந்த ஏழு பேரில் இவரும் ஒருவர். ஏனையவர்களில் இவரைத் தவிர மற்றொரு பெண்மணி ரம்யா என்பவர் வேறு வேலை கிடைத்துவிடவே அங்கு சென்று விட்டார்.
கிருபா என்பவர் இலங்கையிலுள்ள அரசு தமிழ்த் தொலைக்காட்சியான நேத்ராவுக்குச் சென்றுவிட்டார். ஷாகீர் முகம்மது, ஹாரீஸ், ஜனோஸ் மரைக்காயர், முபாரக் முகைதீன் போன்றோர் தென்றல் பண்பலை வானொலியில் அறிவிப்பாளர் களாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். (இலங்கை வானொலியில் ஏ-லெவல் முடித்திருப்பவர்களையும் அறிவிப்பாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்கின்றனர்.)
அறிவிப்பாளர் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் வானொலி நிலையத்தின் உள்ளேயே நான்கு மாதங்கள் கடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டில் இவர் அறிவிப்பாளர் பணிக்கு தெரிவாகி 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி முதன் முதலாக தனது குரலை வானொலியில் ஒலிக்கச் செய்தார்.
இலங்கை வானொலியில் ஓர் நல்ல வழக்கம் உண்டு. சிரேஷ்ட அறிவிப்பாளர் களுடன் புதிதாக ஒலிபரப்பாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களை இணைந்து பணியாற்ற விடுவர். மூத்த அறிவிப்பாளர் களும் பரந்த மனப்பான்மையுடன் இவர்களது பெயரை கூறி அறிமுகம் செய்து வைப்பர். இவ்வாறு பயிற்சி அறிவிப்பாள ராக இருந்த சில தினங்களுக்குப் பின் 2008-பிப்ரவரி மாதத்திலிருந்து தனது பெயரை வானொலியில் அறிவித்தார். இவருக்கு மூத்த ஓய்வு பெற்ற அறிவிப்பாளரும் தற்போது பணிப்பாளர் குழு உறுப்பினராக இலங்கை வானொலியில் பணியாற்றி வரும் திரு. மயில்வாகனம் சர்வானந்தா மற்றும் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு - தேசிய சேவையின் பணிப்பாளருமான திரு.கே. ஜெயகிருஷ்ண ராஜா, நாகபூஷணி கருப்பையா ஆகியோர் பயிற்சி அளித்துள் ளனர்.
ஒலிபரப்பாளராக வருவதற்கு முன் இவரது குரல் வானொலியில் ஒலித்திரா ததால் இவர் முதன் முதலாக தென்றல் வானொலியில் அறிவிப்பாளராக ஒலிவாங் கியின் முன் அமர்ந்தபோது ஏற்பட்ட பதட்டத்தினால் குரல் நடுங்கியதாகவும் அதை அவதானித்த பிற கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பதற்றம் நடுக்கம் எல்லாம் ஓர் மூன்று மாதங்களுக்குத்தான். அதன் பின் தேறிவிட்டார். இவருக்குத் தமிழ் தவிர, ஆங்கிலமும் சிங்கள மொழியிலும் நன்கு புலமையுண்டு. மூத்த அறிவிப்பாளர்கள் அனைவரையும் தனக்கு பிடிக்கும் என பொதுவாக இவர் கூறினாலும் தான் நேரில் கண்ட வரையிலும், கேட்ட வரையிலும் மூத்த அறிவிப்பாளர்களாக ராஜேஸ்வரி சண்முகம், ஜெயலட்சுமி சந்திரசேகர், நாகபூஷணி கருப்பையா, பி.எச். அப்துல் ஹமீது, ஜெயகிருஷ்ணா, கலிஸ்டா லோக்கஸ் ஆகியோர் தன்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்கிறார்.
மூத்த ஒலிபரப்பாளர் நாகபூஷணி கருப்பையாவினுடைய வழியையும், உச்சரிப் பையும் தான் பின்பற்றி வருவதாக பெருமைபடக் கூறும் இவர், அவரைப்போல தானும் ஒரு பிரபல அறிவிப்பாளராக வருங்காலங்களில் திகழ வேண்டுமென ஆர்வமுடன் உள்ளார். அதனால் தானோ என்னவோ இவரது குரலை இனங்கண்டு கொள்ளும் நேயர்கள் இவரது குரல் அவரது அத்தை நாகபூஷணியின் குரலைப் போலிருப்பதாகவும் தெரிவிப்பதாக பெருமையாகக் குறிப்பிட்டார். - கன்னியாகுமரி சகாதேவன் விஜயகுமார் (9841377947)

1 comment:

பிளாட்டினம் said...

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்