Sunday, November 01, 2009

வானொலியின் எதிர்காலம்


வானொலி பதில்

நவீன மின்னணு தொழில் நுட்பக் கருவிகளால் வானொலி பாதிக்கப்படுமா?

வானொலியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?மின்னணுத் துறையும், தகவல் தொழில்நுட்பத் துறையும் கணினியின் உதவியுடன் மிகவும் விரைவாக முன்னேறி வருகின்றன. கணினி, இணையதளம், செல்பேசி, ஐபாட், எம்.பி3, எம்பெக்4, பாட்காஸ்ட் போன்ற முறைகளில் மிக விரைவில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இவை சிற்றலை வானொலிகளைப் போல் இயற்கையின் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியதில்லை.

வால்வ் வானொலிகள் இருந்த காலத்தில் (1940-1960) மின் ஆற்றலும், வெளி ஏரியலும் தேவைப்பட்டன. எங்கும் எடுத்துச் செல்லத்தக்கவாறு டிரான்ஸிஸ்டர் வானொலிப்பெட்டி வந்த போது (1960-1980) பேட்டரியால் இயக்கப்பட்டன. பின்னர் ஐ.சி (இன்டகிரேடேட் சர்க்யுட்) எனப்படும் மைக்ரோ சிப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதும், கையடக்கமாக வானொலிப்பெட்டிகள், ஒலிப்பதிவு சாதனங்கள் விற்பனைக்கு வந்தன.

ஒலி, ஒளி இரண்டையும் சேர்த்து அளிக்கவல்லத் தொலைக்காட்சி பெட்டியால் மக்கள் வரவேற்பு அதிகமாகவே, மனமகிழ்வுக்கு வானொலியை விட டிவியை பெரிதும் விரும்புகின்றனர். இது மக்களின் மனநிலையைப் பொறுத்தது.

காலத்திற்கு ஏற்ப மனிதன் அறிவியலில் முன் னேறும்போது வாழ்க்கைத் தரம் உயர மனப்பான்மையும் வேறுபடுவது இயற்கை, எனினும் தற்சமயம் வந்துள்ள அனைத்து மின்னணு சாதனங் களை வாங்கி மகிழ் வடைய நாம் பணம் செலவழித்தே ஆகவேண்டும். வானொலி மூலம் நாம் இசை, தகவல்கள், செய்திகள் ஆகியவைகளை இலவசமாகப் பெறமுடியும்.

எனவே எல்லோராலும் எப்போதும் பயன்படுத்தக்கூடியது வானொலி. அது உடனடியாக புதிய ஒலிபரப்பு முறைக்கு மாறிவருவதால், வருங்காலத்தில் (2020க்குள்) வானொலிப்பெட்டியும் டிஜிட்டலாக மாறிவிடும். தற்போது உள்ள அனலாக் வானொலிப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துவிடும். இணையதளம் மூலம் வானொலிகளைக் கேட்கும் வசதி வந்துவிட்டதால் பல சிற்றலை வானொலி நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

மத்தியஅலை, பண்பலை வரிசைகளில் வழக்கம்போல் வானொலியை நாம் பல ஆண்டுகள் இலவசமாகக் கேட்க இயலும்.மனிதனின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்போது, பழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கையே. இசைத்தட்டுகள் இயக்கும் கிராமப்போன் மறைந்து இன்று சி.டி, டி.வி.டி, சாதனங்கள் மூலமாகவும், எம்.பி3, ஐபாட், செல்போன் மூலமாகவும் நாம் இசையைக் கேட்டு மகிழ்கிறோம்.

வால்வு வானொலிகள் மறைந்துவிட்டன. செல்போன் வந்ததும், யாரும் அடிக்கடி கடிதம் கூட போடுவதில்லை, தந்தி கொடுப்பதில்லை, இருப்பினும் அஞ்சல் நிலையங்கள் இன்றும் செயல்பட்டுத்தான் வருகின்னறன. அதுபோல் வானொலிகளும் மக்கள் ஆதரவைப் பெறும்பட்சத்தில் எளிதில் மறையக்கூடிய வாய்ப்பு இல்லை. - வி. பாலசுப்பிரமணி +91 99520 67358


No comments: