Monday, November 22, 2010

சிற்றலை நேயர்களின் சங்கமம்!





சிற்றலை நேயர்கள் - தோஷிமிச்சி ஹோடாகே
வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, வாழ்க்கையில் அது ஒரு முக்கிய அம்சமாகிப்போனது.  துல்லியமான டிஜிட்டல் ஒலிபரப்பு, இணையதளம் மூலமான ஒலிபரப்பு, செயற்கைக்கோள் மூலமான ஒலிபரப்பு, பண்பலை வானொலி, சிற்றலை வானொலிகளுடன் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளும் சேர்ந்து அறுசுவை விருந்து வைக்கின்றன.  இது குறித்து சர்வதேச வானொலி பத்திரிகை ஆசிரியர் ஜெயசக்திவேலிடம் பேசினோம்...

""வானொலி ஒலிபரப்பில் மத்திய அலை, பண்பலை ஆகியவை மூலம் அதிக தொலைவுள்ள பகுதிகளுக்கு ஒலிபரப்பு செய்ய முடியாது. ஆனால் சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு ஒலிபரப்பு செய்ய முடியும்.

சிற்றலை வானொலி ஒலிபரப்பின் அடிப்படையில் ஹாம் ரேடியோ எனப்படும் அமெச்சூர் வானொலி ஒலிப்பரப்பு முறை உருவாகி உலகம் முழுவதும் பிரபலமானது.

அதனாலேயே, அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்கள் சிற்றலை வானொலி நேயர்களாக மாறுவதும், சிற்றலை நேயர்கள் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்களாக மாறுவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.

மத்திய அலை, பண்பலை ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க சிற்றலை ஒலிபரப்பு அவசியம் என்பதால் எல்லா நாடுகளிலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இத்தகைய ஒலிபரப்புகளை கேட்பவர்கள் அந்த நிகழ்ச்சி மற்றும் அது ஒலிபரப்பான அலைவரிசை, நேரம் உள்ளிட்ட விவரங்களை அந்த நிலையத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்தால் அந்த விவரங்களைச் சரிபார்த்து, அதற்கான அடையாள அட்டை (க்யு.எஸ்.எல்.) சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்தில் இருந்து நேயருக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு, பல்வேறு ஒலிபரப்புகளை கேட்டு, அதற்கான அடையாள அட்டைகளைச் சேகரிப்பது அஞ்சல் தலை சேகரிப்பு போல மிகவும் பிரசித்தமானது.

இத்தகைய சிற்றலை நேயர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் சிற்றலை வானொலி நேயர் மன்றம் தொடங்கப்பட்டது. இதில் தற்போதைய நிலையில் நியுசிலாந்தில் உள்ள நேயர் மன்றம் மிகவும் பழமையானது. அதனை அடுத்து ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படும் நேயர் மன்றங்கள் வருகின்றன.

இந்த நேயர் மன்றங்கள் சார்பில் சர்வதேச அளவிலும், அவ்வப்போது சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களும் நேயர்களின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.

இதில் பென்சில்வேனியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சிற்றலை நேயர்கள் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். உலகில் அதிக எண்ணிக்கையில் சிற்றலை நேயர்கள் பங்கேற்ற கூட்டம் என இது சிறப்பு பெற்றது.

இதுவரை வெளிநாடுகளிலேயே இத்தகைய கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்தியாவில் உள்ள சிற்றலை நேயர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமலேயே இருந்துவந்தது.

தற்போது இப்படிப்பட்ட நேயர்கள் ஒரே இடத்தில் சங்கமித்த அரிய நிகழ்வு அண்மையில் பொள்ளாச்சியின் புளியம்பட்டியில் நடந்தது. அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர் சங்கங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில்  60-க்கும் மேற்பட்டோர் சிற்றலை நேயர்கள் எனப் பதிவு செய்து, கூட்டத்தில் பங்கேற்றனர்.  இவர்களைத் தவிர அமெச்சூர் ஒலிபரப்பில் ஈடுபட்டுள்ள 400-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த சிற்றலை நேயர் மன்ற நிர்வாகிகளும் இதில் பங்கேற்றது சிறப்பாக அமைந்திருந்தது.

அரிதானது எனக் கருதப்படும் தொலைதூரத்தில் உள்ள சிறிய சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற கியு.எஸ்.எல். அட்டைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது'' என்றார்.

""சிற்றலை வானொலி கேட்பது என்பது, வெறும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, முதலில் பல்வேறு மொழிகளை அடையாளம் காண உதவும் ஒரு பெரிய கருவியாக அமைந்துள்ளது. அதற்கு பிறகு, வெவ்வேறு நாடுகளின் கலாசாரம், பண்பாடு மற்றும் தற்போதைய நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் ஊடகமாக அமைந்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட வானொலி நேயர் மன்றங்கள் மூலம் சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் எங்களிடம் பிரபலமானது. ஜப்பானியர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பழக்கம் ஊக்கமளித்தது என்றால் அது மிகையல்ல.

ஆனால், புதிய தலைமுறையினரிடம் போதிய ஊக்கமின்மை காரணமாக சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் மெல்ல மெல்ல நலிந்து வருவது எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது'' என ஜப்பானில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வந்திருந்த ஜப்பான் சிற்றலை வானொலி நேயர் மன்றத்தின் நிர்வாகக் குழு

உறுப்பினர் தோஷிமிச்சி ஹோடாகே கூறினார்.

தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களில் சுமார் 50 லட்சம் பேர் சிற்றலை வானொலி நேயர்களாக உள்ளனர்.

""ஜெயின்ட் ஹெலினா, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, வாய்ஸ் ஆப் துருக்கி, ரேடியோ ருமேனியா உள்ளிட்ட பல நிலையங்களின் ஒலிபரப்புகள் தமிழக சிற்றலை நேயர்களிடம் பிரபலமானதாக உள்ளன. இருப்பினும், புதிய தலைமுறை அமெச்சூர் ஒலிபரப்பாளர்கள் பலரிடம் சிற்றலை வானொலி ஒலிபரப்பு இன்னமும் பிரபலமாகாத ஒன்றாக மாறிவருகிறது. இத்தகைய கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை அடுத்த தலைமுறையினருக்குப் புரியவைக்க முடியும்'' என்றார் ஜெய சக்திவேல்.

No comments: