Friday, August 24, 2012

80 வயதை எட்டும் பிபிசி உலக சேவை

பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ஜிய சேவையாக 1932ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. அந்தக் காலத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ சுவாரஸ்யமாகவோ இருக்காது என்று பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தாலும், அக்கணிப்பு பொய்யாகிப்போய் லண்டனின் பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்து ஒலிபரப்பபட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.
இந்த வானொலி ஆரம்பிக்கப்பட்டு ஆறே நாட்களில் பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்த வானொலியில் சாம்ராஜ்ஜியத்து மக்களுக்கு தனது நத்தார் வாழ்த்துக்களை வழங்கினார்.

பிரிட்டிஷ் மாமன்னரோ மஹாராணியோ தமது சாம்ராஜ்ஜியப் பிரஜைகளிடம் பிபிசி உலக சேவை மூலமாக கிறிஸ்துமஸ் உரையாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமாகவே மாறிப்போனது.

பிபிசியின் சரித்திரத்தில் மாபெரும் வெற்றி கிடைத்த நிகழ்ச்சிகளாக மன்னர் மக்களுக்கு ஆற்றிய உரைகள் அமைந்தன.
1940ல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகளிடம் பிரான்ஸ் சரணடைய நேர்ந்தது. அப்போது பிரான்ஸை விட்டு வெளியேறிய பிரஞ்சு இராணுவத் தளபதி சார்ல் த கோல் லண்டன் பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்தபடிதான் பிரஞ்சு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.

ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் என தொடர்ச்சியாக நான்கு வருடங்களுக்கு அவரது உரை பிபிசி உலக சேவையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தினால் பிபிசி சாம்ராஜ்ஜிய சேவை பிபிசியின் கடல் கடந்த வானொலிச் சேவையாக புதிய பெயர் பெற்றது. அரபு மொழி, தென்னமெரிக்கர்களுக்கான ஸ்பானிய மொழிச் சேவை, ஜெர்மன், பிரஞ்சு, போர்ச்சுகீஸியச் சேவை மற்றும் பல புதிய மொழிகளில் ஒலிபரப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1940 ஆண்டின் இறுதியில் பிபிசி கடல் கடந்த சேவையில் மொத்தம் 34 மொழிச் சேவைகள் இருந்தன.
பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு வெளியே 1940 டிசம்பரில் ஒரு நிலக்கண்ணி வெடித்து தீ மூண்டு, கட்டிடம் சேதம் அடைய, பிபிசி கடல் கடந்த சேவை புஷ் ஹவுஸுக்கு 1941ல் இடம் மாறியது. அந்த மாற்றத்தை ஒட்டி புதிதாக தமிழ் சேவையான தமிழோசையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அது முதல் கடந்த 71 வருடங்களாக இந்நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கிவருவது புஷ் ஹவுஸ்தான்.

1960களில் டிரான்ஸிஸ்டர் தொழில்நுட்பத்தின் வரவால் கையில் சுமந்துசெல்லக்கூடிய அளவுக்கு சிறியதாகவும், மின் கலங்களின் சக்தியைக் கொண்டே இயங்கக்கூடியதாகவும் வானொலிப் பெட்டிகள் உருமாறின. சமானியர்கள் எல்லோர் கைகளிலும் ரேடியோ புழங்க ஆரம்பித்தது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான புதிய நேயர்கள் கிடைக்க கடல் கடந்த சேவை பிபிசியின் உலக சேவையாக புதுப் பெயரும் புதுப் பொலிவும் பெற்றது.


பிபிசி உலக சேவையானது தனது எண்பது வருட சரித்திரத்தில் 68 மொழிகளில் ஒலிபரப்புகளைச் செய்துள்ளது. இந்த எண்பது வருடத்தில் உலக சரித்திரத்தை திசை திருப்புவதாக நடந்த பல சம்பவங்கள் பற்றியும் அந்தந்த இடங்களில் இருந்து உடனடியாக செய்தி வழங்கும் ஒரு சேவையாக பிபிசி உலக சேவை விளங்கிவந்துள்ளது. பெர்லின் சுவர் விழுந்த சமயத்தில் அங்கும் பிபிசி உலக சேவையின் செய்தியாளர் இருந்தார்.
1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோவியத் ஒன்றியத்தின் அப்போதைய அதிபரான மிக்காயல் கோர்பஷெவ் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் அங்கமாய் மூன்று நாள் முற்றுகையிடப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் வெளியுலகில் நடப்பதை அறிந்துகொள்வதற்கான ஒரே வழியாக இருந்தது பிபிசி உலக சேவையின் ரஷ்ய மொழி ஒலிபரப்பு மட்டும்தான். பிபிசி நிகழ்ச்சிகள் தனக்கு மிக முக்கிய சேவையை வழங்கியதாக பின்னர் கோர்பஷெவ் குறிப்பிட்டிருந்தார்.

கோர்பஷெவ்வின் கருத்து பிபிசி உலக சேவையின் நிகழ்ச்சித் தரம் மற்றும் ஒலித் தரத்துக்கு ஒரு பெரிய பாராட்டாக அமைந்தது.
பிபிசி உலக சேவை எண்பதாவது வருடத்தில் கால் பதிக்கும் இந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் மீண்டும் லண்டனின் பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு இடம் மாறவுள்ளன. பழைய பிராட்காஸ்டிங் ஹவுஸ் உள்ள இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்துக்கு பிபிசியின் ஏனைய அங்கங்களைப் போல உலக சேவையும் செல்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் பிபிசி தமிழோசையும் இந்தப் புதிய கட்டிடத்திலிருந்து செயல்படும்.


ஏராளமான புதிய வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என உலகில் தகவல் ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்டன என்றாலும், சுதந்திரமான, நடுநிலையான, துல்லியமான செய்திகளுக்கு உலகின் பல பாகங்களிலும் மக்கள் சார்ந்திருக்கின்ற ஒரு முக்கிய செய்தி ஆதாரமாக இன்றளவும் பிபிசி உலக சேவை விளங்குகிறது.

No comments: