Thursday, August 07, 2014

இலங்கை வானொலி மன்னன் நடராஜசிவம்

‘விடை பெறுவது நடராஜ, சிவம், இந்தக் கம்பீரமான குரலைக் கேட்காத, சட்டென அடையாளம் காணாத இலங்கைத் தமிழனே இருக்க முடியாது. அவ்வளவுக்கு ஆழமான தனித்துவமான, ஆழமான, ‘பேஸ்’ குரல் அவருடையது. நேரில் பார்த்தால் குரலைப் போலத்தான் இளமையாக, தோற்றத்திலும் பேச்சிலுமாகத் தெரிகிறார் நடராஜ சிவம். இவர் குரல் வளம் கொண்ட அறிவிப்பாளர், வானொலித்துறை சார்ந்தவர் மட்டுமல்ல; நடிகர், கலைஞர் எனப்பல்வேறு முகங்கள் இவருடையது. இவர் இறுதியாக நடித்த காதல் கடிதம் திரைப்படம் தற்போது ஒளித்தட்டாக வந்திருக்கிறது. அதில் இவரது பண்பட்ட நடிப்பைக் காணலாம்.

40 வருடங்களுக்கும் மேற்பட்ட வானொலி அனுபவங்களைக் கொண்டிருக்கும் இவர்தான் சூரியனின் உதயத்துக்கும் அது உச்சிக்கு போவதற்கும் பின்புலமாக நின்றவர். அது அஸ்தமிக்கலாம் என்றிருந்த போதுமீள் உதயத்துக்கு வித்திட்டவரும் இந்தச் சிவம்தான் காரணம் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல. கலைஞன் என்பவன் உள்ளுக்குள் சதா இயங்கிக் கொண்டிருப்பவன்; தரையில் தூக்கிப் போட்ட மீனாக அவன் இருக்க விரும்பவும் மாட்டான் என்பார்கள். இதனால்தான் நமது இவ்வாரப் பிரமுகரும், எந்த தளர்ச்சியுமின்றி இயங்கியும் இயக்கியும் கொண்டிருக்கிறார். பழைய வானொலிக் கலைஞர்களில் இப்போதும் பிரகாசித்துக் கொண்டிருப்பவர்களில்
நடராஜ சிவமும் ஒருவர். அவர் தன் அனுபவங்களை புத்தகமாகத் தர வேண்டும்.
f-4-4.jpg
இடம்: பி. எச். வலம்: நடராஜசிவம்
பள்ளி வாழ்க்கையில் எல்லோருக்கும் வருவதுதான் ஒருதலைக்காதல். அதுவாகவே வந்துவிட்டு அதுவாகவே போய்விடும். பள்ளி காதல் படலை வரை என்று சொல்வாங்களே அதுமாதிரித்தான். நான் ஒரு கலை விழாவுக்கு போனால் அங்கே ஒரு பெண் நம்மைப் பார்க்க அவளை நான் பார்க்க அதை மற்றொருவன் பார்க்க பிறகு அந்த பெண்ணின் பெயரைச் சொல்லி என்னை அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த பிள்ளையின் பெயரை என் பாடக் கொப்பியில் எழுதிவைப்பேன். அப்படி நான் எழுதி வைக்காவிட்டாலும் பக்கத்தில இருக்கிறவன் எழுதி வைப்பான். இப்படி எத்தனையோ 'காதல்'! அந்த பிள்ளைகளின் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை.........." என்று தனது பள்ளி வாழ்க்கையின் காதல் அனுபவங்களை சுருக்கமாக கூறிவிட்டு தனது பூர்வீகம் பற்றி பேசத் தொடங்குகிறார் நடராஜசிவம்.
"எனது அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். கொட்டாஞ்சேனை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்தார். சின்னையா சிவம் என்பதுதான் அவர் பெயர். சிவம் மாஸ்டர் என்றால் எல்லோருக்கும் தெரியும். என்னை இந்த துறைக்கு அழைத்துவர பிள்ளையார் சுழி வித்திட்டவர் என் அப்பாதான். சின்ன வயதிலேயே என்னை பேச்சு போட்டிக்கும் கட்டுரைகள் எழுதுவதற்கும் ஊக்கப்படுத்தியவரும் அவர்தான். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுண்கலை பட்டப்படிப்புக்காக அப்பாவும் அம்மா சிவபாக்கியமும் தமிழ் நாட்டில் சிதம்பரத்தில் தங்கியிருந்த போதுதான் நான் பிறந்தேனாம்.
சிதம்பரத்தில் பள்ளிக்கொண்டு இருப்பவர்தானே நடராஜர்! அதனால்தான் எனக்கும் நடராஜ சிவம் என்று பெயர் சூட்டினார்கள். அதன் பிறகு கொட் டாஞ்சேனை புதுச்செட்டித்தெரு எனது வதிவிடமானது.
"தேர்ஸ்டன் கல்லூரியில் ஒரு தமிழ் பிரிவு இருந்தது. அதிலதான் எனது முதல் பாடசாலை பிரவேசம். முதல் நாள் அப்பாதான் என்னை தேர்ஸ்டன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே திருமதி திருநாவுக்கரசு என்ற ஆசிரியையிடம் என்னை ஒப்படைத்தார். பிறகு பாடசாலை முடியும் வரை வெளியிலேயே நின்று கொண்டிருந்த அவர் பாடசாலை முடிந்ததும் என் கரங்களை பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற அந்த நாள் இன்றும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
f-4-3.jpg
சுப்பர் அறிவிப்பாளர் மயில்வாகனத்துடன் (மத்தியில்) நமது பிரமுகர் மற்றும் கலைஞர் உதயகுமார்.

ஐந்தாம் ஆண்டுவரை நான் தேர்ஸ்டனில் கல்வி பயின்ற போது எனக்கு பள்ளித்தோழனாக இருந்தவர்தான் ரட்ணம் வைத்தியசாலையின் உரி மையாளர் கணேஷ். நாம் இருவரும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் இன்றும் கூட அந்த பசுமையான நாட்களை அசைபோடுவோம். தேர்ஸ் டனில் படிக்கும் போது பாடசாலை முடிந்ததும் நேராக வீட்டுக்கு செல்லாமல் பின்னேர ஆங்கில வகுப்புக்கு சென்றுவிடுவேன். அந்த வகுப்பு முடிந்த பிறகுதான் அப்பா என்னை வந்து அழை த்துச் செல்வார். சில நாட்களில் அப்பா வர லேட்டாகி விட்டால் எனக்கு ஆத்திரம் வந்து விடும். பள்ளி முடிந்து வீட்டுக்குப் போக முடியவில்லையே என்ற கோபம் தலைக்கேற பாடப் புத்தகத்தை கிழித்து போட்டு விடுவேன்.
பிறகு அப்பா வந்து ஏன்டா பாடப்புத்தகத்தை கிழித்தாய் என்று கேட்டு இரண்டு அடிபோட்டு அழைத்துச் செல்வார். அதன் பிறகு தேர்ஸ்டனில் தமிழ் பிரிவு நிறுத்தப்பட்டுவிட நான் டார்லி ரோட்டில் உள்ள சென்ஜோசப் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் தமிழ் இலக்கிய மன்றங்களில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. என் முதல் மேடை அனுபவமும் அங்குதான் தொடங்கியது. நான் நடித்த அந்த முதல் நாடகத்தின் பெயர் ஞாபகத்தில் இல்லை.
ஆனால் எனக்கு மேக் அப் போட்டவர் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞர் சுப்பையா என்பது என் ஞாபகத்தில் இருக்கிறது. என் முகத்தில் தாடியை ஒட்டி வைத்தார். நான் ஏற்ற பாத்திரம் என்னவென்றே எனக்குத் தெரியாத வயது. எனது அப்பா இலங்கை வானொலியில் சைவ நற்சிந்தனை என்ற நிகழ்ச்சியை செய்து வந்தார். அதனால் சின்ன வயதிலேயே இலங்கை வானொலிக்கு சென்று அங்கு நடக்கும் ஒலிபரப்பு விடயங்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
f-4-1.jpg
இளமையில்...

அப்போது இலங்கை வானொலியில் பாலர் நிகழ்ச்சி நடக்கும். அதை செந்தில் மயில்வாகனம் நடத்தி வந்தார். அவரிடம் அப்பா கேட்டுக்கொண்டதற்கு அமைய எனக்கு ஒரு பாடல்பாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எங்க வீட்டுக்கு யாராவது வந்தால் நான் பாடிக்காட்டும் "டடடா டடடா..." என்ற பழைய சினிமா பாட்டையே இலங்கை வானொலியிலும் பாடினேன்.
கொட்டாஞ்சேனையில் எனது வீட்டுக்கு பக்கத்தில ஒரு நாடக எழுத்தாளர் இருந்தார். இக்னேசியஸ் மொறாயஸ் என்பது அவர் பெயர். அவரை நான் அண்ணா என்றுதான் அழைப்பேன். அவருடன் நாடகம் சம்பந்தமான நிறைய விடயங்களை கேட்டு அறிந்திருக்கிறேன். அதன் பிறகு சரவணமுத்து மாமா நடத்திய சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றினேன். சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு புதிதாக வரும் மாணவர்களுக்கு மாமா ஒரு கடிதத்தை கொடுத்து படிக்கச் சொல்வார். நாங்கள் கடிதத்தை வாசிக்கும் விதத்தை வைத்தே அந்த மாணவன் திறமையான ஆள்தானா என்பதை கண்டுபிடித்து விடுவார். நானும் போஸ்ட்கார்ட் வாசித்துதான் சிறுவர் மலரில் தொடர்ந்து பங்குபற்றும் வாய்ப்பை பெற்றேன்.
சிறுவர் மலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் குட்டி நாடகங்களை அப்போது பாலாம்பிகை நடராஜாதான் எழுதி வந்தார். அவரின் நாடகத்தில் தான் நான் முதல் முதலாக சிறுவர் மலரில் நடித்தேன். நான் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நாட்களில் அந்த நிகழ்ச்சியில் பி.எச். அப்துல் ஹமீத், உபாலி செல்வசேகரன், ராமதாஸ், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அதில் வீரகேசரி பிரதம ஆசிரியர் கே. பி. ஹரனின் மகன் சந்திரசேகரும் என்னோடு சிறுவர் மலரில் பங்கு பற்றினார். ரொம்பவும் திறமையான மாணவர். அப்போது அவருக்கு குட்டி நாடகங்களில் நல்ல கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டன. நாங்களே அவரின் நடிப்பை பார்த்து வியப்போம். அதுபோல் எங்களுக்கும் பிரதான பாத்திரங்கள் வழங்கப்பட்டன. பிறகு நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு நடித்து திறமையை நிரூபித்தோம். இப்படியான திறமையான கலைஞர்களுடன் இணைந்து நடித்து பழகியதால்தான் நாங்கள் கலைத்துறையில் வளர்ச்சி பெறவும் இன்று வானொலியில் நிலைத்து நிற்கவும் முடிந்திருக்கிறது.
f-4-2.jpg
மனைவி மகனுடன்

திருமணம் பற்றி கேட்டபோது "என்னோடு இலங்கை வானொலியில் ஒன்றாக அறிவிப்பாளராக பணிபுரிந்தவர்தான் புவனலோஜினி. ஒரே நிர்வாக பீடத்தில் ஒரு துறை சார்ந்த தொழிலை ஒரு ஆணும், பெண்ணும் செய்தால் இருவர் மனமும் இணைவது சகஜம் தானே! அது மாதிரிதான் நானும் புவனலோஜினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இரு வீட்டார் சம்மதத்தோடு நாரஹேன்பிட்டியில் எனது இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு எனது உறவினர்கள் ரிsதிருந்தார்கள். கல்யாணப் போட்டோவை ஒருவர் வீட்டிற்கு வந்து எடுத்துத் தந்தார். அதன் பின்னர் கூட்டு குடித்தனம் ஆரம்பமானது" என்கிறார் நடராஜ சிவம்.
வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டு இருக்கிaர்களா?
"வாழ்க்கையில் எதையுமே நான் தவறவிடவில்லை. கடவுள் நான் கேட்டதை எல்லாம் தந்திருக்கிறார். இப்போ வேண்டாம், வேண்டாம் என்றாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார்" என்று சிரிக்கிறார் சிவம்.
அது ஒரு காலம் என்று ஏங்குவது?
"எனக்கு கலையுலகில் நிறைய நண்பர்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் ஜோர்ஜ் சந்திரசேகரனை கட்டாயம் குறிப்பிட வேண்டும். நானும் ஜோர்ஜியும் நகமும், சதையும் போல இருந்தோம். நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றி இருக்கிறோம். அனுபவ ரீதியாக எவ்வளவோ கற்றிருக்கிறோம். அந்தக் காலத்தில் நான், ஜோர்ஜ் மற்ற நண்பர்களும் மேடை நிகழ்ச்சிகளை வெளியிடங்களில் செய்து விட்டு வருவோம்.
அப்படி வரும்போது நள்ளிரவாகி விடும். பஸ்ஸ¤ம் இருக்காது. அந்த நேரங்களில் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்போம். தூக்கம் வந்து விட்டால் பிளாட்பாரத்தில் ஒரு பேப்பரை விரித்து அப்படியே படுத்து தூங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் பஸ் ஏறி சென்றிருக்கிறோம். எல்லாம் கலைக்காகத்தான். நள்ளிரவு நேரங்களில் நானும் ஜோர்ஜ் சந்திரசேகரனும் கொழும்பின் பிரதான வீதிகளில் சுதந்திரமாக கதைபேசி திரிந்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்...

ஏதோ ஒரு இனம் புரியாத இன்பமும் சோகமும் என் தொண்டையை அடைத்துக் கொள்கிறது" என்று பெருமூச்சு விடுகிறார் நடராஜ சிவம்.
இப்போதும் பயப்படுகிற விசயம்?
"மனிதனென்றால் மனசாட்சிக்கு பயப்பட வேண்டும். இல்லையென்றால் அவன் மனிதனாக இருக்க முடி யாது" என்று நச்சென்று பதிலளிக்கும் நமது பிரமுகரிடம் உங்கள் இலக்கு என்ன என்று கேட்டதற்கு,
"எங்கட இந்து சமயத்தில் பேரானந்தம் என்று சொல்வார்கள். ஆன்மீக ரீதியாக அந்த ஆனந்தத்தை அடைய வேண்டும். அந்த பேரானந்தத்தை அடைய வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் அந்த இலக்கை நான் எட்டவில்லை" என்று சொன்னார்.
மறக்க முடியாத மனிதர்?
"பிரபல நாடக கலைஞர் சி.சண்முகம். அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகத்தின் கணவர். அவரை மறக்க முடியாதவர்களின் பட்டியலில் முதல் ஆளாக நான் குறிப்பிட வேண்டும். நான் இந்த அறிவிப்பாளர் துறைக்கு விரும்பி வரவில்லை. முயற்சியும் செய்யவில்லை. ஆனால் சி. சண்முகம் எனக்காக அறிவிப்பாளர் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து என்னை அறிவிப்பாளர் சோதனை நிலையத்தில் அமரச் செய்து அந்த தேர்வில் என்னை வெற்றிபெறச் செய்து, எனக்கு இந்த அறிவிப்பாளர் வேலை கிடைக்க உந்து சக்தியாக இருந்தார். அதோடு நாடக உலகில் நான் பிரபலமாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவர்தான். அவரின் நினைவுகள் என் நெஞ்சில் பசுமரத்தாணி" என்று சொல்லும் அவரிடம் தங்களின் நாடக வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டோம்.
"லடீஸ் வீரமணியின் நாடக குழுவில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒரு தடவை அவரின் 'யாருக்காக அழுதான்' நாடகத்தில் எனக்கு பாதிரியார் வேடம். பாதர் வேடம் போட வெள்ளை அங்கி வேண்டுமே! உடனே லடீஸ் வீரமணி என்னிடம், "செக்கடித்தெருவில் பாதர் சவரிமுத்து இருக்கிறார். அவரிடம் கேட்டால் வெள்ளை அங்கியை இரவல் வாங்கலாம்" என்று யோசனை சொன்னார். பாதர் சவரிமுத்து செக்கடித்தெருவில் ரொம்பவும் பெயர் பெற்ற குருவானவர்.
கருஞ்சுருட்டை புகைத்துக் கொண்டிருந்த அவரிடம் சென்று வெள்ளை அங்கியை இரவல் கேட்டேன். லடீஸ் வீரமணியின் நாடகமா? சரி கொண்டுபோய் பத்திரமாக திருப்பித்தர வேண்டும் என்ற நிபந்தனையோடு வெள்ளை அங்கியை என்னிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு வந்தேன். நாடக அரகேற்றம் முடிய அந்த அங்கியை சலவைக்கும் போட்டேன். அத்தேடு அந்த அங்கியை மறந்து தொலைத்துவிட்டேன்.
அதன் பிறகு பாதிரியாருக்குப் பயந்து கொண்டு நான் செக்கடித் தெரு பக்கமே போவதில்லை. எங்கே அங்கியை கேட்டு விடுவாரோ என்ற பயம். வழியில் பாதரை கண்டால் ஒளிந்து கொள்வேன். பாவம் பாதர். அவர் இப்போது உயிருடன் இல்லை. ஆனாலும் பாதரிடம் வாங்கிய அங்கியை திருப்பி கொடுக்காமல் போய்விட்டேனே என்ற ஆதங்கம் இப்போதும் என்னுள் இருக்கத்தான் செய்கிறது"
முதல் சினிமா பார்த்த அனுபவம்?


"கெயிட்டி தியேட்டர்லதான் அந்தப் படம் பார்தேன். 'அண்ணி' என்ற படம். மாந்தர் என்பவர் இவர்தானா.... என்ற பாடலை ஒரு சின்னப்பையன் காந்தி சிலையை பார்த்து பாடிக் கொண்டுபோவான். அந்த காட்சி இன்றும் என் ஞாபகத்தில் அப்படியே கருப்பு, வெள்ளைப் பாடமாக பதிந்து கிடக்கிறது. அந்தக் காலத்தில கிங்ஸ்லி, செல்லமஹால் உள்ளிட்ட சில தியேட்டர்களில் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது வெளியில் ஒரு ஸ்பீக்கரை பொருத்தி அந்த பட வசனங்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள்.
அந்த திரைப்பட வசனங்களை கேட்பதற்காகவே சினிமா தியேட்டர்களுக்கு எதிரில் கால்கடுக்க நின்று பட வசனங்களை பாடமாக்கியிருக்கிறேன். பராசக்தி, ராஜாராணி, மனோகரா வசனங்கள் எல்லாம் நான் அப்படி வெளியே நின்று பாடமாக்கியதுதான். வீட்டில் படவசனங்களை பேசிக் கொண்டி ருப்பதை பார்த்த அப்பா படிப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா வச னம் பேசுவதாக சொல்லி என்னை அடித்திருக்கிறார். பாடசாலையில் எனக்கு குட்டி சிவாஜி என்ற பட்டப் பெயரையும் சூட்டி இருந்தார்கள். ஆனால் அந்த வசனங்கள்தான் பிற்காலத்தில் எனக்கு வசனங்கள் பேசி நடிக்கவும் தமிழை சரியாக உச்சரிக்கவும் உதவியது.
வாழ்க்கையை பற்றிய தங்களின் புரிதல் என்ன என்று நடராஜ சிவத்திடம் கேட்டோம்.
"வாழ்க்கை ஒரு மனிதனுக்கு அனைத்து உணர்வு, உணர்ச்சிகளுடன்தான் தொடங்குகிறது. பலம், பலவீனம், இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்க்கை. நானும் அவை அனைத்தையும் அனுபவித்தும் கடந்தும் தான் வந்திருக்கிறேன். மனிதன் என்பவன் தனது கடைசி காலகட்டத்தில். எல்லாவற்றையும் கடந்து ஒரு நிலைக்கு வந்த பிறகு தீமைகளை வடிகட்டி தூர எறிந்துவிட்டு நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு புள்ளியில் வந்து நின்று விட வேண்டும். அந்த இடத்திலிருந்து தான் உண்மை ஒளியை காணவேண்டும். அப்படி அவன் அந்த இடத்திற்கு வராவிட்டால் தொடர்ந்தும் அவன் இருளில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றுதான் அர்த்தம்.
நான் அந்த உண்மை ஒளியை தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறேன்..." என்று எம்மை கூர்ந்து பார்க்கும் நடராஜசிவத்தின் கண்களில் வாழ்க்கையை பொருள் கொண்டதாக அனுபவித்து, அந்த திருப்தியின் நிறைவைக் காணமுடிகிறது.

நன்றி http://www.thinakaran.lk/
http://www.yarl.com/ ஊடாக

No comments: