Sunday, April 12, 2015

சென்னை லயோலா கல்லூரி சார்பில் திருநங்கைகள் உள்பட 12 பேர்களுக்கு இலவச ரேடியோ வழங்கப்பட்டன

சென்னை லயோலா கல்லூரி செயலாளர் பாதிரியார் ஆல்பர்ட் வில்லியம், கல்லூரியின் முதல்வர் பாதிரியார் ஜோசப் அந்தோணி சாமி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை லயோலா கல்லூரி கல்விக்கோவிலாக விளங்கி வருகிறது. கல்லூரியின் நோக்கம் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்ல. சமுதாயத்திற்கு சேவை செய்வதும்தான்.

முதலில் கல்லூரியைச்சுற்றி சூளைமேடு, சூசைபுரம், மாகலிங்கபுரம், நெல்சன் மாணிக்கம் சாலை, சேத்துப்பட்டு, எழும்பூர் , பூபதி நகர், நரசிங்கபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

அந்த ஏழை மக்களுக்காகவும் அந்த பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சமுதாய வானொலி தொடங்கப்பட்டது. அந்த வானொலி மூலம் கல்விச்செய்திகள், மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பரப்பி வருகிறோம். பார்வைற்ற மாணவர்கள் பலருக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பை தரக்கூடிய பட்டப்படிப்பை கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் சூளைமேட்டைச்சேர்ந்த திருநங்கைகள் அஸ்வினி, அனுஸ்ரீ மற்றும் பூ விற்கும் பெண்கள் நாகம்மாள், சாந்தி உள்பட மொத்தம் 12 பேருக்கு இலவச ரேடியோ கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி, பேராசிரியர்கள் எஸ்.வின்செண்ட், பாதிரியார் ஜேக்கப், பேராசிரியைகள் ரேவதி ராபர்ட், அமலி உள்பட பலர் பேசினார்கள்.

No comments: