Showing posts with label ஈரான். Show all posts
Showing posts with label ஈரான். Show all posts

Sunday, March 29, 2026

நெருக்கடி காலத்தில் சிற்றலை வானொலியின் முக்கியத்துவம்

 

நெருக்கடி காலத்தில் சிற்றலை வானொலியின் முக்கியத்துவம்: ஈரானில் பிபிசியின் புதிய முன்னெடுப்பு

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முதன்மையான வழிகளாக இருந்தாலும், நெருக்கடி காலங்களில் பழைய தொழில்நுட்பமான சிற்றலை வானொலி இன்னும் ஒரு உயிர்நாடியாகச் செயல்பட்டு வருகிறது என்பதை ஈரான் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில், கடந்த ஜனவரி 8 முதல் அங்கு இணைய முடக்கம் அமலில் உள்ளது. பிபிசி நியூஸ் பெர்ஷியன் ஊடகத்தின் செய்திகளுக்கு ஈரானில் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்குள்ள நான்கு பேரில் ஒருவர் இந்தச் சேவையைப் கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் தளங்கள் முடக்கப்படும்போது, மக்களுக்குத் துல்லியமான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்க சிற்றலை வானொலி ஒரு சிறந்த கருவியாகத் திகழ்கிறது.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, பிபிசி உலக சேவை ஈரானிய மக்களுக்காக ஒரு தற்காலிக அவசர கால வானொலித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தினமும் 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகும் இந்தத் வானொலி, ஈரானின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை விரிவான பகுப்பாய்வுடன் வழங்குகிறது.

இந்தச் செய்திகளை ஈரான் மக்கள் பின்வரும் அலைவரிசைகளில் கேட்கலாம்:

*   சிற்றலை (Shortwave): 9465kHz மற்றும் 5935kHz 

*   மத்திய அலை (Mediumwave): 702kHz 

நெருக்கடி காலங்களில் வானொலிச் சேவைகளைத் தொடங்குவது பிபிசிக்கு இது முதல் முறையல்ல. சிற்றலை மற்றும் மத்திய அலை வானொலிகள் போர் அல்லது இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றன என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன: 2025 ஏப்ரலில் மியான்மர் நிலநடுக்கத்திற்குப் பிறகு பர்மீஸ் சேவை விரிவாக்கப்பட்டது. 2024 டிசம்பர் மாதம் சிரியா மக்களுக்காக மேம்படுத்தப்பட்ட வானொலி சேவை தொடங்கப்பட்டது. 2023ல் காசா மற்றும் சூடான் மோதல்களின் போது அவசர கால வானொலி சேவைகள் தொடஙகப்பட்டது. 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பின் போது நீட்டிக்கப்பட்ட செய்தி அறிக்கைகள் ஒலிபரப்பப்பட்டது..

நவீன தொழில்நுட்பங்கள் தோல்வியடையும் இடத்தில்தான் வானொலியின் உண்மையான வலிமை வெளிப்படுகிறது. எல்லைகளைத் தாண்டி, தணிக்கைகளைத் தகர்த்து செய்திகளைக் கொண்டு சேர்க்கும் சிற்றலை வானொலி, இன்றும் உலகின் மிகவும் நம்பகமான செய்தி ஊடகங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. ஈரானில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை, உண்மையானத் தகவல் தேவைப்படும் மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அது யாருக்கான உண்மையான தகவல்?

Friday, April 24, 2009

இஸ்லாமிய குடியரசின் ஈரான் வானொலி

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒரு வேறுபட்ட நாள்காட்டியை ஈரான் வானொலி தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த வருடம் - ஈரானில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களை மையப்படுத்தியதாக வெளிவந்துள்ள அந்த நாள்காட்டியானது பெரிய போஸ்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழு வழு தாளில் அச்சிடப்பட்டுள்ள அந்த நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய முகவரி: Mr. M. Safdari, English Section, Voice of the Islamic Republic Iran, 5, Barkhamba Road, New Delhi - 110 001. E-mail: englishradion@irib.ir